ரஜினியைச் சந்திக்கிறார், மு.க.அழகிரி? | Azhagiri to meet Rajinikanth soon

வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (23/03/2018)

கடைசி தொடர்பு:19:16 (23/03/2018)

ரஜினியைச் சந்திக்கிறார், மு.க.அழகிரி?

தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரிக்கும் ரஜினிகாந்துக்கும் இளம் வயதிலிருந்தே நல்ல நட்பு உண்டு. கோபாலபுரத்தில் இருந்தபோது அடிக்கடி ரஜினியை அழகிரி சந்தித்துப் பேசுவது வழக்கம். பிறகு அவர் மதுரைக்கு இடம்பெயர்ந்தபிறகும் அந்த நட்பு தொலைபேசி வாயிலாகத் தொடர்ந்தது. சென்னைக்கு வரும்போது ரஜினியை அவர் நேரிலும் சந்திப்பது உண்டு. தனது மகன் தயாநிதியின் திருமணத்துக்கு மதுரை வரை வந்து வாழ்த்த வேண்டும் என்று அழைத்தார் அழகிரி. அவரின் அன்பு வேண்டுகோளை மறுக்கமுடியாத ரஜினி, மதுரையில் நடந்த திருமணத்துக்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்திவந்தார். 

மு.க.அழகிரி - ரஜினி

திருமணத்துக்குப் பிறகு தன் மகன் தயாநிதியை போயஸ்கார்டனில் உள்ள வீடொன்றில் தனிக்குடித்தனம் வைத்தார் அழகிரி. அந்த வீட்டில் தயாநிதி குடியேறியபோது அங்கு வந்த அழகிரி அருகிலிருந்த ரஜினி வீட்டுக்குச் சென்றார். சினிமா, அரசியல் குறித்து சிறிதுநேரம் பேசிவிட்டு கிளம்பிய அழகிரி 'நீங்க இருக்குற போயஸ் கார்டன்லதான் தயாவை குடிவெச்சிருக்கேன். நீங்க கொஞ்சம் கவனிச்சுக்கங்க' என்று சொல்ல, ‘டெஃபனெட்டா... நான் இருக்கேன் டோன்ட் வொரி' என்று ரஜினி பதில் சொல்ல... நெகிழ்வோடு விடைபெற்றுச் சென்றார், அழகிரி. பிறகு ஒருவரின் பிறந்தநாளுக்கு மற்றவர் வாழ்த்துச் சொல்வது என்று ரஜினி-அழகிரி நட்பு தொடர்ந்து வருகிறது. 

MK Stalin with Rajini

இந்த நிலையில், `அரசியலில் இறங்குகிறேன்’ என்று கடந்த டிசம்பர் 31ம் தேதி ரஜினி பகிரங்கமாக அறிவித்தார். தமிழகம் உள்பட அனைத்து இந்திய அரசியல் தலைவர்களும் ரஜினியை வாழ்த்தினர். திடீரென ஒருநாள் சென்னைக் கோபாலபுரம் சென்று கருணாநிதியைச் சந்தித்து தனது அரசியல் பிரவேசத்துக்கு ஆசீர்வாதம் வாங்கினார் ரஜினி. அந்தச் சந்திப்பின்போது ரஜினியுடன் இருந்த தி.மு.கவின் செயல் தலைவர் ஸ்டாலின், பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில், `இது பெரியார் பிறந்த மண், இங்கே ஆன்மிக அரசியலுக்கு இடமில்லை. தி.மு.க-வை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது' என்றார். ஸ்டாலினின் இந்தப் பதிலுக்கு ரஜினி பதில் சொல்லவில்லை. அதன்பிறகு நடிகர் கமல்ஹாசனும் கோபாலபுரம் சென்று கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். ஆனால் கமலுடனான சந்திப்பின்போது சிரித்துப்பேசி இயல்பாக இருந்த ஸ்டாலின் நம் தலைவர் ரஜினியுடனான சந்திப்பின்போது மட்டும் இறுக்கமாக இருந்தது ஏன் என்று ரஜினி ரசிகர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக்கொண்டனர். 

Rajini & Kamal meets Kalaignar

அரசியல் பிரவேச அறிவிப்பு, ரஜினி மக்கள் மன்றத்துக்கு உறுப்பினர் சேர்ப்பு, விரைவில் கட்சிப் பெயர், கொடி... என்று ரஜினியிடம் பரபரவென அரசியல் பணிகளில் வேகமெடுத்துக்கொண்டிருக்கும் சூழலில் அவரை ஆர்வமாகக் கவனித்துக்கொண்டிருக்கிறார் மு.க.அழகிரி. இந்த நிலையில் கடந்த 22-ம்தேதி மதுரையில் உள்ள தனது அலுவலகத்தில் மதுரை முன்னாள் மேயர் தேன்மொழியின் கணவர் கோபிநாதன், முன்னாள் துணைமேயர் மன்னர், முன்னாள் எம்.எல்.ஏ ஹவுஸ் பாட்சா உள்ளிட்ட தனது ஆதரவாளர்களுடன் முக்கியமான ஆலோசனை நடத்தியிருக்கிறார் அழகிரி.

அப்போது, `நான் இம்முறை மெட்ராஸ் போகும்போது தயா வீட்டுக்குப்போயிட்டு அப்படியே ரஜினிசார் வீட்டுக்கும்போய் அவரின் அரசியல் பிரவேசத்துக்கு வாழ்த்துச் சொல்லப்போறேன்யா’ என்று உற்சாகமாகச் சொல்லியிருக்கிறார். மு.க.ஸ்டாலினுடன் மனக்கசப்பில் இருக்கும் மு.க.அழகிரி, ரஜினியைச் சந்தித்து என்ன பேசுவார்... இதற்கு முன் இவர்கள் பலமுறை சந்தித்திருந்தாலும் இன்றைய சூழலில் அது அரசியலில் என்னமாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்