Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’’இப்போதாங்க தாலி கட்டினேன்... அவங்க பேரு தேன்மொழி... ..!’’ - கல்யாண குஷி ராம்தாஸ்

''இப்போதாங்க என் மனைவிக்கு வடபழனி முருகன் கோவிலில் தாலி கட்டினேன். வீட்டுக்கு காரிலே போயிட்டிருக்கேன். உங்க வாழ்த்துகளுக்கு நன்றி'' என்று மகிழ்ச்சியாக பேச ஆரம்பிக்கிறார் கல்யாண மாப்பிள்ளை ’முண்டாசுப்பட்டி’ ராம்தாஸ்.

நடிகர் முண்டாசுப்பட்டி ராம்தாஸ் திருமணம்

'முண்டாசுப்பட்டி', 'மாநகரம்',  'வேலைக்காரன்' படங்களில் காமெடி கேரக்டரில் நடித்திருந்த ராம்தாஸூக்கு கல்யாணம்னு சேதி கேட்டு அவரிடம் பேசினேன். '' ரொம்ப நாளாவே எனக்கு கல்யாணம் பண்ணணும்னு வீட்டிலே பொண்ணு பார்த்திருந்தாங்க. அவங்க பொண்ணு பாக்கட்டும் நம்ம டூட்டியா பார்ப்போம்ன்னு படங்களில் நடிச்சிட்டிருந்தேன். அப்போ, தீடிரென்னு வீட்டிலிருந்து, ’ஒரு பொண்ணு வேலூர் பக்கம் பார்த்திருக்கோம். போட்டோ பாரு’னு நீட்டுனாங்க. எனக்கு போட்டோ பார்த்தவுடனே பிடிச்சிருந்துச்சு. ஆனா, பொண்ணுக்கு நம்மள பிடிக்கணும்ல. அதனால நேருல பார்ப்போன்னு சொன்னேன். 'கலகலப்பு 2' ஷூட்டிங் ஸ்பாட்டிலிருக்கும் போது வீட்டிலிருந்து தங்கச்சி போன் பண்ணி, ’பொண்ணு பாக்க போலாம்’னு சொன்னாங்க. நான் ஷூட்டிங்கில் பிஸியாயிருந்தனால, ’பத்து நாள் கழித்து போகலாம்; மதுரைக்கு வரேன்’னு சொன்னேன். மதுரை பக்கத்துலதான் என் சொந்த ஊர். ஷூட்டிங் பத்து நாளையும் தாண்டி எக்ஸ்ட்ரா ரெண்டு நாள் போச்சு. வீட்டுல சொன்னா திட்டுவாங்களேனு பயந்துக்கிட்டே சொன்னேன். ’நீ எப்போ வந்தாலும் ஓகே. ஆனா, வந்துரு'னு தங்கச்சி சொல்லுச்சு. ஷூட்டிங் முடிச்சவுடனே முத வேலையா பொண்ணு பாக்க போனேன். எனக்கு நேருல அவங்களை பார்த்தவுடனே ரொம்ப பிடிச்சிருந்துச்சு.சரி, பொண்ணு வீட்டு சைடிலிருந்து என்ன சொல்றாங்கனு வெயிட் பண்ணுனா, அவங்களும் என்னை பிடிச்சிருக்குனு சொல்லிட்டாங்க. உடனே, வீட்டில கல்யாணம் வேலையை ஆரம்பிச்சுட்டாங்க. ஆ... சொல்ல மறந்துட்டேனே அவங்க பேரு, தேன்மொழி. நல்ல தமிழ் பேர். 

நடிகர் ராம்தாஸ் திருமணம்

'ராஜா ராணி' படத்துல நயன்தாரா ஜெய்கிட்ட, ''உனக்கெல்லாம் வாய்க்க வரப்புல தேன்மொழி, கனிமொழினு எவளாவது சுத்திட்டுட்டு இருப்பா.. அவதான் செட் ஆவா’னு ஒரு டயலாக் சொல்லுவாங்களே, அதே மாதிரி எனக்கு தேன்மொழிதான் செட்டானாங்க. அவங்களை செல்லமா கூப்பிட்டாலும் முழு பேரை சொல்லிதான் கூப்பிடுவேன். அவங்க என்னை எப்படி செல்லமா கூப்பிடணும்னு இனிமேதான் ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசி முடிவு பண்ணனும். 

ராம்தாஸுன்னு ஒரு நடிகர் இருக்கிறதே அவங்களுக்கு தெரியலைங்க. நீங்க யாரு, என்ன படத்துல நடிச்சிருக்கீங்கனு கேட்குற மாதிரிதான் அவங்க பார்வை ஃபர்ஸ்ட் இருந்துச்சு. இப்படி நிறையப் படத்துல நடிச்சிருக்கேன்னு அவங்ககிட்ட சொன்னேன். ஆனா, அவங்க நான் நடிச்ச எந்தப் படத்தையும் பார்க்காம இருந்திருக்காங்க. அப்புறம் அவங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் சொல்லி படம் பார்த்தாங்க. அதுவும் பார்த்தீங்கன்னா, படத்தை ஓட்டி ஓட்டி நான் வர சீன்ஸ் மட்டும் பார்த்திருக்காங்க. அந்த சீனையும் முழுசா பார்த்தாங்களா இல்லை ஓட்டி விட்டுடாங்களானு தெரியல. ஆனந்த விகடன் விருது நான் வாங்கியிருக்கேன்னு அவங்ககிட்ட சொல்லி புக் வாங்கி பார்க்கச் சொன்னேன். அதையும் அவங்க உடனே பண்ணலை. அப்புறம் நானே புக் வாங்கி கொடுத்துட்டேன். ஆனா, இவங்க என் மேல ரொம்ப பாசமானவங்க. பொங்கலுக்கு எனக்கு ஒரு ட்ரெஸ் எடுத்து கொடுத்தாங்க. நானும், அவங்களுக்கு ஒரு ட்ரெஸ் எடுத்து கொடுத்தேன். ஃபர்ஸ்ட் அவங்கதான் கிஃப்ட் பண்ணுனாங்க. இவங்களுக்கு நானொரு கிஃப்ட் வாங்கி வெச்சியிருந்தேன். அவங்களை ஊரிலப் போய் பார்த்து நேரா கொடுக்கணும்னு வெயிட் பண்ணுனேன். ஆனா, ஷூட்டிங்யில் பிஸியாயிருந்தனால கொடுக்க முடியல. அவங்க என்ன கிஃப்ட் சொல்லுங்கனு சொன்னாங்க. ஆனா, கொடுக்கும் போது நீயே பார்த்துக்கோனு சொல்லிட்டேன். அந்த கிஃப்ட் சர்ப்ரைஸ். இப்போதானே கல்யாணம் முடிஞ்சிருக்கு; இனிமே கொடுக்கலாம்னு இருக்கேன்.  அவங்க நல்ல படிப்பாளி. பி.எஸ்.சி. மேக்ஸ் படிச்சிருக்காங்க. ஷேர் மார்க்கெட்யில் வேலை பண்ணிட்டிருந்தாங்க. ''கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போறது உன் இஷ்டம். ஆனா, எனக்கு நீ வேலைக்கு போகணும்னு அவசியமில்லை''னு சொன்னேன். உடனே வேலையை விட்டுட்டாங்க. இப்போவே விட்டு கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. நானும், அவங்க சொல்றதை கேட்டுப்பேன்.

நடிகர் ராம்தாஸ் திருமணம்

எனக்கு கல்யாணம் பிக்ஸ் ஆனவுடனே காளி வெங்கட்கிட்டதான் ஃபர்ஸ்ட் சொன்னேன். ’ரொம்ப சந்தோஷம் நண்பா’னு சொன்னார். முதல் பத்திரிக்கையை 'முண்டாசுப்பட்டி' டைரக்டர்கிட்ட கொடுத்தேன். அவருக்கும் ரொம்ப சந்தோஷம். நேத்து எங்களுக்கு ரிசப்ஷன் நடந்துச்சு. நடிகர் சிவகார்த்திகேயன் வந்து வாழ்த்து சொல்லிட்டு போனார். 'வேலைக்காரன்' ஷூட்டிங்யில் இருக்கும் போது எப்போ அண்ணா கல்யாணம்னு சிவா விசாரிச்சிக்கிட்டேயிருப்பார். நிறைய சினிமா பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்துனாங்க. ஹாப்பியாயிருக்கு. ஸ்டிரைக் முடிஞ்சவுடனே ஷூட்டிங் ஆரம்பிச்சிருவாங்க. அதனால, இப்போதைக்கு தேன்நிலவு போகுற பிளான் இல்லை. சீக்கிரமே ப்ளான் பண்ணி மனைவியை கூப்பிட்டு வெளியே போகலாம்னு இருக்கேன். யாருக்கும் கல்யாணம் பத்தி சொல்லலைனு கோபப்படாதீங்க. எங்களை மனசார வாழ்த்துங்க’’ என்று சிரிக்கிறார் நடிகர் ராம்தாஸ். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்