வெளியிடப்பட்ட நேரம்: 13:06 (27/03/2018)

கடைசி தொடர்பு:17:07 (27/03/2018)

ஓர் ஆண்டில் 18 படங்கள்... 100வது படம் ஹிட்... விஜயகாந்த்தின் 40 வருட சினிமா..! #40YearsOfVijayakanth

விஜயகாந்த்!

சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற ஆசையைத் தவிர இவரிடம் சிவப்பு நிறமில்லை, சிலிர்க்க வைக்கும் உடற்கட்டில்லை, நாடகங்களில் நடித்த முன் அனுபவங்கள், சினிமா பின்புலமும் இல்லை... ரஜினி ஸ்டைலில் தன் புகைப்படங்களை தயார் செய்து அதை எடுத்துக்கொண்டு சென்னை வந்தவரின் பெயர் விஜயராஜ். அப்படி வந்தவரிடம் தயாரிப்பாளர் புகழ்ந்த முதல் பாராட்டு வார்த்தைகள் என்ன தெரியுமா, `அதான் இங்க ஒரு ரஜினி இருக்காரே, அப்புறம் நீ எதுக்கு... எடுத்துட்டு ஊருக்குக் கிளம்பு' என்ற இந்த வார்த்தைகள்தான் அவர் பெற்ற முதல் பாராட்டுகள். அப்பொழுது சினிமாவுக்குள் நுழைந்த இவர் இந்த வார்த்தைகளைக் கேட்டு (சினிமாவுக்குள் கால்பதித்து) 39 ஆண்டுகள் நிறைவாகி நாற்பதாவது வருடம் தொடங்கியுள்ளது. அந்த புகைப்படங்களைக் காண வேண்டுமென்றால், மதுரை கரிமேடு மீன் மார்கெட்டுக்கு அருகில் இருக்கும் `ராசி டிஜிட்டல் ஸ்டுடியோஸ்' என்ற கடையில் காணலாம்.  

விஜயகாந்த்

2500 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஊர், பாண்டி மன்னர்களின் தலைமையிடம், மீனாட்சியம்மனின் குடியிருப்பு, சித்திரைத் திருவிழா, திருமலை நாயக்கர் அரண்மனை, ஜல்லிக்கட்டு எனப் பல தொன்மையான வரலாற்றுப் பக்கங்கள் மதுரை நகருக்கு உண்டு. அதே ஊரைச் சேர்ந்த திருமங்கலம் எனும் இடத்தில் ஆகஸ்ட் மாதம் 25-ம் நாள் 1952-ம் ஆண்டில் பிறந்தவர் நாராயணன். அந்தப் பெயர் தனது தாத்தாவின் பெயர் என்பதால் விஜயராஜ் அழகர்சாமி என இவருக்குப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1965-ல் வெளியான எம்.ஜி.ஆரின் `எங்க வீட்டுப் பிள்ளை' படத்தை 70 தடவைகளுக்கும் மேல் மதுரை சென்ட்ரல் தியேட்டரில் பார்த்துள்ளார். அங்குதான் இவருக்குள் இருந்த சினிமா ஆசை கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் தமிழ் சினிமாவின் மேலிருந்த ஈர்ப்பு, கடைசிவரை தமிழ் மொழிச் சினிமாக்களில் மட்டுமே நடிக்க வைத்தது. அந்த சமயத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் இவரைக் கலந்துகொள்ள வைத்தது. `இனிக்கும் இளமை' எனும் படத்தின் மூலம் விஜயராஜாக இருந்த இவரை விஜயகாந்தாக அறிமுகம் செய்துவைத்தார், எம்.ஏ.கஜா. 

`சினிமாவைப் பிடிக்கும்' என்றவொரு பின்புலத்தைத் தவிர இவரிடம் எந்தவித தகுதியும் இல்லை. ரஜினி - கமல் என்ற இந்த இரு கூர் வாள்களும் தமிழ் சினிமாவை ஆட்சி செய்துகொண்டிருந்த காலம். சினிமாவில் இவரது வருகை, இருவரின் ரசிகர்களையும் உலுக்கியதோடு நில்லாமல், தனது தனித்துவ நடிப்பின் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தையே  திரட்டியது. 1980-களில் இவர் வீட்டில் இருந்த நேரத்தைவிடப் படப்பிடிப்புகளில் இருந்த நேரம்தான் அதிகமாக இருக்க வேண்டும். இவர் ஸ்டைலிலே இவரின் புள்ளி விவரத்தை விவரிக்கிறேன். 1980-களில் இவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 90, 1984-ம் வருடத்தில் மட்டும் இவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 18. 80களில் விஜயகாந்த் நடித்த  ஹிட் படங்களின் எண்ணிக்கை 13. பல கஷ்டங்களைக் கடந்து சினிமாவுக்குள் நுழைந்த விஜயகாந்த், மன்சூர் அலிகான், ஆனந்தராஜ், அருண் பாண்டியன் எனப் பல நடிகர்களையும் அறிமுகம் செய்துள்ளார். 

விஜயகாந்த்

குறுகிய காலத்தில் பல படங்களில் நடித்ததைப் போல், பல அற்புதமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்திருக்கிறார் விஜயகாந்த். வெற்றி இயக்குநர்கள் அனைவரும் ரஜினி, கமல் என்று தேடி ஓட, சிறு இயக்குநர்கள் பலருக்கும் வாய்ப்பளித்துப் பல வெற்றிப் படங்களில் நடித்து அறிமுக இயக்குநர்கள் வளர வழிசெய்தார். 1980ம் ஆண்டு முழுவதும் தமிழ் சினிமாவில் விஜயகாந்த் ராஜ நடை போட்டுவந்த காலம். 1991-ல் `கேப்டன் பிரபாகரன்'  எனும் மிகப் பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்த பின் ஒட்டுமொத்த தமிழ்நாடும் இவரை `கேப்டன்' என்று புகழ்பாடியது. அதுமட்டுமின்றி கமல், ரஜினி, பிரபு, கார்த்திக், சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுக்குக் கூட அவர்கள் நடித்த 100-வது படம் கைகொடுக்கவில்லை. ஆனால், இவரின் 100-வது படமான `கேப்டன் பிரபாகரன்', வெள்ளி விழா கண்டு சாதனைப் புரிந்தது. பல சாதனைகள் படைத்ததோடு ஓயாமல், நடிகர் சங்கத்தின் தலைவராகப் பதவியேற்று அங்கு நிகழ்ந்த சோதனைகளையும் தீர்த்து வைத்தார். 1999-ல் இருந்து 2004 வரை இவர்தான் நடிகர் சங்கத்தின் தலைவர். அந்தப் பொறுப்பில் இருக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்த விஜயகாந்த், அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்துப் பல நாடுகளில் நட்சத்திர கலை விழாக்களை நிகழ்த்தி, அதில் வந்த தொகையை வைத்து நெடுங்காலமாகக் கட்ட முடியாத கடனைக் கட்டி முடித்தார். 

விஜயகாந்துக்கு மிகவும் பக்கபலமாக நின்று கைகொடுத்தவர் அவரது நண்பர் இப்ராஹிம் ராவுத்தர். விஜயகாந்தின் ஆரம்பக்காலத்து சினிமா வாழ்க்கை அவ்வளவு சுலபமானதாக அமையவில்லை. பல அவமானங்களையும், தோல்விகளையும் சந்தித்த விஜயகாந்துக்கு ஆறுதல் சொன்னதோடு நில்லாமல், `ராவுத்தர் ஃபிலிம்ஸ்' என்றவொரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, அதில் இவர் படங்களைத் தயாரித்து,  ஆபாவாணன், அரவிந்தராஜ், செல்வமணி, செந்தில்நாதன் போன்ற இயக்குநர்களைத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்துவைத்தார். சினிமாவில் வாய்ப்புகள் தேடி அலைந்த 100-க்கும் மேற்பட்டவர்களின் பசியையும் ஆற்றியது `ராவுத்தர் சினிமா கம்பெனி'. `புலன் விசாரணை' படத்தின் மூலம் சரத்குமார் என்ற இளைஞனையும் முதன்முதலாகத் தமிழ் சினிமாவுக்கு அடையாளம் காட்டினார்.  ஐயப்பன் கோவிலுக்கு பதினெட்டு வருடங்களாகச் சென்று வந்துபோவதைப் பார்த்த ரசிகர்கள் அவரின் காலில் விழுந்து வணங்கத் தொடங்கினர். அதிலிருந்து அங்கு போவதையும் நிறுத்திவிட்டார் விஜயகாந்த். 

விஜயகாந்த்

இப்படிப் பல சோதனைகளைக் கண்டு சாதனை புரிந்த மனிதர்தான் விஜயகாந்த். கலையின் மீதிருக்கும் ஈர்ப்புக்கும், உதவும் குணத்துக்கும், செய்யும் தொண்டுகளுக்கும் என்றென்றும் தமிழ் சினிமா இவருக்கு கடமைப்பட்டிருக்கும். வாழ்த்துகள் கேப்டன். 


டிரெண்டிங் @ விகடன்