Published:Updated:

``கமல் சொன்னா தேர்தலில் நிற்க நான் ரெடி..!’’ - சினேகன்

பிர்தோஸ் . அ
``கமல் சொன்னா தேர்தலில் நிற்க நான் ரெடி..!’’ - சினேகன்
``கமல் சொன்னா தேர்தலில் நிற்க நான் ரெடி..!’’ - சினேகன்

``நேத்துதான் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தது மாதிரியிருக்கு. அதற்குள் இத்தனை நாள்கள் ஓடிருச்சு. ஆனா, பிக்பாஸ் வீட்டிலிருந்த யாரையும் நான் மிஸ் பண்ணவில்லை. இன்னும் அவர்களுடன் தொடர்பில் இருக்கேன். அதுவும் நேரடி தொடர்பில். நடிகர் சங்கம் சார்பா மலேசியாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அங்கே எல்லோரையும் சந்திச்சுப் பேசினேன். தற்போது மூணு படங்களில் ஹீரோவாக கமிட்டாகிருக்கிறேன். ஷூட்டிங் போயிட்டிருக்கு''னு எனப் படபடவென பேச ஆரம்பிக்கிறார் பிக்பாஸ் சினேகன். 

`` 'சைக்கிள்', 'பனங்காட்டு நரி', மற்றும் இன்னும் பெயர் வைக்காத ஒரு படத்தில் நடிச்சிக்கிட்டிருக்கேன். `சைக்கிள்’ படத்தில் எனக்கான ஷூட்டிங் போஷனை ஊட்டியில் எடுத்திருக்காங்க. மற்றப்படி படத்தில் நடிப்பவர்கள் எல்லோரும் புதுமுகம்தான். `பனங்காட்டு நரி' படத்தை `யமுனா' படம் எடுத்த கணேஷ் பாபு டைரக்‌ஷன் பண்றார். இது ஒரு த்ரில்லர் கதைக்களம் . சென்னையில் படம் ஆரம்பித்து ஃபாரின் வரைக்கும் ஷூட்டிங் போகும். என் கேரக்டர் வித்தியாசமா இருக்கும். 

இந்தப் படத்தில் நடிக்கவிருக்கும் பிற நடிகர்கள் அனைவரும் உங்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள்தான். பெரிய நடிகர்களையும் படத்தில் பார்க்கலாம். முக்கியமா எனக்கு ஜோடியா நடிக்க ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடந்துக்கிட்டிருக்கு. அவங்க இன்னும் ஓகே சொல்லலை. ஓவியா முடிவு பண்ணிட்டால், எங்க ரெண்டு பேரையும் ஒண்ணா ஸ்கீரினில் பார்க்கலாம்'' என்றவரிடம் இன்னும் சில கேள்விகளைக் கேட்டேன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலுடன் இருந்ததால்தான் அவரது கட்சியில் இணைந்தீர்களா? 

``பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டதுனால மட்டும் கமலின் கட்சியில் சேரவில்லை; அவருடன் பயணம் செய்ய பிடிக்கும். அதனாலதான் அவருடைய கட்சி பெயரை மதுரை மாநாட்டில் அறிவித்தப்போது அதில் நானுமிருந்தேன். அவரது கட்சியில் இணைவது பற்றி நானும், கமலும் சேர்ந்து பேசிதான் முடிவு பண்ணினோம். அவரது கட்சியில் உறுப்பினராய் சேர்ந்து அவருக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய கொள்கைகள் எனக்குப் பிடிச்சிருந்துச்சு; என்னை ஈர்த்தது. ஆளுமையும், அறிவும் சேர்ந்தவர் கமல். உலகளாவிய பார்வை அவரிடம் இருக்கு. நிறைய புதுமைகளை சினிமாவில் கொடுத்தவர். அதேபோல் நிறைய புதுகட்டமைப்புகளை அரசியலிலும் கொண்டு வருவார். 

கமல் அரசியலுக்கு வந்தது பற்றி?

``கமல் அரசியலுக்கு வந்தது அவரின் தனிப்பட்ட விருப்பம். ரொம்ப காலமா அவர் யோசித்துதான் முடிவு எடுத்திருப்பார்னு நினைக்கிறேன். மக்களுடைய மிகப்பெரிய ஆதரவு கமலுக்கு இருக்கு.’’

ரஜினியும் அரசியலுக்கு வந்துவிட்டாரே?

``வரட்டும். யார் வேண்டுமானலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், என் ஆதரவு கமலுக்குத்தான். ஏன்னா, அவருடன் பயணம் செய்ய ஆசையாகயிருக்கிறது.''

கமல் அவரது தொகுதியில் வேட்பாளராக நிற்கச் சொன்னால் நிற்பீர்களா?

``கண்டிப்பாக நிற்பேன். அப்படியில்லாமல், அவர் கட்சியில் சாதாரண தொண்டனாகயிருந்தும் மக்களுக்கு நல்லது செய்வேன். மக்களுக்கு நல்ல அரசியல் மாற்றம் தேவை.''

வேறு எந்த பிரபலங்கள் கமலின் கட்சிக்கு ஆதரவு தரவேண்டுமென்று நினைக்கிறீர்கள்?

``மக்கள் சேவையை விரும்புவர்கள் அவர்களாவே `மக்கள் நீதி மய்யத்துக்கு' வருவார்கள். யாரையும் வரச்சொல்லி நம்ம கட்டாயப்படுத்த அவசியமில்லை.’’

மதுரை மாநாட்டில் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் அறிவித்தப்போதுதான் உங்களுக்கும் கட்சி குறித்த அதிகாரபூர்வ தகவல் வந்ததா?

``அவர் கட்சியில் உயர்மட்டக்குழு இருக்கிறது. அவர்கள் எல்லோரும் சேர்ந்துதான் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் உள்ளிட்டவற்றை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. தொடர்ந்து கமல் கட்சியில் உறுப்பினராகப் பணியாற்றுவேன்.’’

இயக்குநர் அமீரை மீட் பண்ணுனீங்களா?

``பிக் பாஸூக்கு அப்புறம் ஒரு மீட்டிங்கில் இருவரும் சந்தித்தோம். அதற்கு பிறகு இருவரும் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேச அவருக்கும், எனக்கும் நேரம் கிடைக்கவில்லை. சந்திக்கணும் விரைவில்.’’

பிர்தோஸ் . அ

Make others happy by being happy ! “ Its my favorite quote. And I live towards it. I want to talk talk talk even if..