Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

’’ஜெயந்தி மேடம் நல்லாயிருக்காங்க; வதந்தியை நம்பாதீங்க..!’’ - ஹேமா செளத்ரி

தமிழ், கன்னடத்தில் நடித்த பிரபல நடிகை ஜெயந்தி உடல்நலம் குறைவால் பெங்களூரூவில்  உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில நாட்களாக ஜெயந்தி குறித்து தவறான வதந்திகளை செய்திகளாக பரப்பி வருகிறது. இந்த சூழ்நிலையில் ஜெயந்தியுடன் நீண்டகாலமாக நடித்தவரும், தற்போது அவருக்கு துணையாக மருத்துவமனையில் இருப்பவருமான பிரபல கன்னட நடிகை ஹேமா செளத்ரியிடம் பேசினோம்.  

ஜெயந்தி

''ஜெயந்தி மேடம் ஆஸ்துமா பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். உணவு, பழக்க வழக்கங்களில் டயட் முறையை கடைபிடித்து வந்தார். பெங்களூருவில் குளிர் அதிகமாக இருந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுவாசக்கோளாறால் கஷ்டப்பட்டவரை, கடந்த 28-ம்தேதி பெங்களூரூவில் இருக்கும் விக்ரம் ஹாஸ்பிடலில் சேர்த்தோம். அப்போதே ஐசியூ பிரிவில் இருந்தவரை நான் போய் பார்த்தபோது  ஆஸ்துமா தொல்லை அதிகமாகி மயக்க நிலையில் இருந்தார். நேற்று ஜெயந்தி மேடத்தின் மகன் கிருஷ்ணகுமார் எனக்கு போன்செய்து, 'இப்போது அம்மாவின் உடல்நலம் தேறி வருகிறது. ஆனால் என்னிடம் ஒரு வார்த்தைக்கூட விளக்கம் கேட்காமல்,  பத்திரிகை, டிவி செய்திகளில் அம்மாவைப்பற்றி தவறான செய்தி பரப்பி வருகிறார்கள். என்னால் வேதனையை தாங்க முடியவில்லை' என்று  வருத்தப்பட்டார். கர்நாடகவிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி உண்மைநிலையை தெரிந்துக்கொள்ள ஜெயந்திமேடம்  சம்மந்தப்பட்ட உறவுகளிடம் விசாரித்து வெளியிடாமல் உயிரோடு இருப்பவரை மறைந்து விட்டதாக செய்தி வெளியிடுவதைப் பார்த்து வேதனையாக இருக்கிறது. 

செளகார் ஜானகி, சச்சு,  கே.ஆர்.விஜயா, காஞ்சனா, வாணிஶ்ரீ, ராஜஶ்ரீ என்று எல்லோரும் போன்செய்து 'என்னதான் ஆச்சு?' என்று பதற்றமாக என்னிடம் விசாரித்தனர்.  'நீங்கள் கேள்விப்பட்ட அனைத்தும் பொய். ஜெயந்திமேடம் நல்லா இருக்காங்க' என்று சொன்ன பிறகே அனைவரும் அமைதியானார்கள். 27-ம்தேதி இரவு 10 மணிக்கு ஜெயந்தி மேடம் மறைந்து விட்டதாக தெலுங்கு சேனலில் பகிரங்கமாக அறிவித்துவிட்டு; அவரது வாழ்க்கை வரலாற்றை தொகுத்து வெளியிட்டனர்.  தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் சாருக்கு போன்செய்து, 'என்னசார் நடக்குது. உயிரோடு இருக்குற ஒரு நடிகையை இறந்து போனதாக டிவி, ட்விட்டர், வாட்ஸ் அப் என்று எல்லாவற்றிலும் தப்புதப்பா செய்தி போடுறாங்க. தயவுசெய்து நீங்க அவர்களுக்கு உண்மைநிலைமை என்னன்னு எடுத்துச் சொல்லுங்க' என்று கேட்டுக் கொண்டேன்.  

ஜெயந்தி

ஜெயந்தி மேடம் எங்களுக்கு சீனியர்; மிகச்சிறந்த நடிகை.  ' இருகோடுகள்', வெள்ளி விழா' , 'சர்வர் சுந்தரம்'  படங்களில்  ஜெயந்தி மேடத்தின் நடிப்பை மறக்க முடியாது. திரைப்படத்தில் நடிக்கும்போதும் சரி, தனிப்பட்ட முறையிலும் சரி ரொம்ப ரொம்ப அன்பாகவும், பண்பாகவும் பழகக்கூடியவர்.  தமிழ்சினிமாவில் வெளிவந்த 'டீச்சரம்மா' திரைப்படத்தை கன்னடத்தில் ரீ-மேக் செய்தனர். அதில் விஜயகுமாரி நடித்த வேடத்தில் ஜெயந்திமேடமும், வாணிஶ்ரீ நடித்த கேரக்டரில் நானும் நடித்திருந்தோம். 'கலியுகக் கண்ணன்' ரீ-மேக்கில் தேவிகா நடித்த மாமியார் வேஷத்தில் ஜெயந்தி மேடமும், ஜெயசித்ரா வேடத்தில் நானும் நடித்தோம். இதுமாதிரி ஏகப்பட்ட படங்களில் நாங்கள் சேர்ந்து நடித்துள்ளோம். சினிமாவைத் தாண்டி நாங்கள் அடிக்கடி சந்தித்து மனம்விட்டு பேசிக்கொள்வோம்.

நான் கன்னடத்தில் 1700 எபிசோட் கொண்ட ’அமிர்தவர்ஷினி' என்கிற  சீரியலை எடுத்தேன். அதில் எனது அம்மா வேடத்தில் ஜெயந்திமேடம் நடித்தார். முதலில் கெஸ்ட் ரோலில் நடிக்க வைப்பதாகச் சொன்னார்கள் ' மேடம் எவ்ளோ பெரிய நடிகை. அபிநயத் தாரகை என்றழைப்பட்டவர்.  அவருக்குப்போய் கெஸ்ட் ரோலா’ என்று சண்டை போட்டேன். அதன்பிறகு ஜெயந்தி மேடம் நிறைய காட்சிகளில் வருகிற மாதிரி கதையை மாற்றி அமைத்தனர்.  ஜெயந்தி மேடத்துக்கு ஒரேயொரு மகன்; பெயர் கிருஷ்ணகுமார். அவர்தான் மருத்துவமனையில் இருந்து கவனித்துக் கொண்டு இருக்கிறார். உறுதுணையாக ஜெயந்தி மேடத்தின்  தம்பி குடும்பத்தினரும் இருக்கிறார்கள். வழக்கமாக எங்களைப் போன்ற நடிகைகளுக்கு அம்மா, அப்பா, சித்தப்பா, சித்தி, அக்கா, தங்கை என்று எல்லா உறவுகளையும்விட உடல்நிலை சரியில்லாதபோது  எங்களோடு நடித்தவர்கள் முகத்தை பார்த்திவிட்டால் மனசுக்குள் ஒரு புத்துணர்ச்சி, உடம்புக்குள் ஒரு உற்சாகம் வரும். அதை வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத பாச உணர்வு. ஏனென்றால் நாங்கள் அந்தக் காலத்தில் இருந்து பொறாமை இல்லாமல் உடன்பிறந்த சகோதரிகளாகவே பழகி வருகிறோம்.

ஜெயந்தி

மார்ச் 28-ம்தேதி மாலை ஜெயந்தி மேடத்தை மருத்துவமனையில் பார்த்தேன். அவருக்கு பொருத்தி இருந்த வென்டிலேட்டரை  நீக்கிவிட்டனர். முன்பு மார்பில் உறைந்திருந்த சளியால் அவதிப்பட்டு வந்தவ,ர் இப்போது கொஞ்சம் சீராக மூச்சுவிடுகிறார்.  கண்களை மூடிகிடந்த அவருடைய அருகில் சென்று  காதோரமாக,  'காதோடுதான் நான் பாடுவேன்'  என்று அவருடைய பிரபல பாடலை பாடினேன்; மெல்ல கண்விழித்து சிரித்தார். பின்னர் தலையணையை உயரமாக்கி அதில் சாய்ந்து உட்கார வைத்தனர்.  அவரிடம் பழைய கதைகளை சொல்லி சிரிப்பு வரவழைத்தேன்; கஷ்டப்பட்டு சிரித்தார். 'நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் கார், பங்களா எல்லாம் சொத்துக்களே அல்ல, உங்களுக்காக நிறையபேர் பிரார்த்தனை செய்கின்றனர். அதுதான் உண்மையான சொத்து’ என்று சொன்னேன். ’உங்களுக்கு உடல்நிலை சரியானதும் சென்னைக்கு அழைச்சுப்போய் நம்மோடு நடித்தவர்களை சந்திக்க வைக்கப்போகிறேன்’ என்று சொன்னபோது, 'நிஜமாவா' என்று கண்களை திறந்து ஆச்சர்யமாக பார்த்தார். சீக்கிரம் அவரை அழைச்சுட்டு சென்னைக்கு வருவேன்’’ என்றார் ஹேமா செளத்ரி. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Related Tags

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement