Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

"சினிமா ஸ்டிரைக் விவகாரம்... பன்னீர்செல்வம் மற்றும் ஆர்.கே.செல்வமணியின் வாட்ஸ்அப் ஆடியோ மோதல்!" #CinemaStrike

தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் ஃபெப்சி அமைப்பின் வேலைநிறுத்தம் காரணமாக மார்ச் மாதம் தொடங்கி, இன்றுவரை... புதிய தமிழ்ப் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. கடந்த வாரம் தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஆகியோரிடையேயான பேச்சுவார்த்தை எந்த ஒரு சுமுக முடிவும் எட்டப்படாமல் முடிந்தது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளரும், சென்னை ரோகிணி திரையரங்க உரிமையாளருமான பன்னீர்செல்வம், சங்க உறுப்பினர்களுக்கு வாட்ஸ்அப்பில் ஆடியோ பதிவு ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.

அதில், “இரண்டு தினங்களுக்குமுன் தயாரிப்பாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடியவில்லை. எப்படியும் வெற்றி நம் பக்கம்தான் வரும். யாரும் வி.பி.எஃப் கட்டணத்தைக் கட்டவேண்டாம். அது நம் வேலையல்ல!” என்று சொல்லியிருந்தார். இதையடுத்து, ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்ட ஆடியோ மெசேஜில், பன்னீர்செல்வத்துக்கு கியூப் தொடர்பாக சில கேள்விகளைக் கேட்டிருக்கிறார்.  

அதில், “தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் அவர்களுக்கு... இப்போது உங்கள் சக தியேட்டர் உரிமையாளர்களுக்கு, வி.பி.எஃப் கட்டணம் என்பதில் வி.பி.எஃப் கட்டணம் மட்டுமல்ல, ப்ரொஜெக்டருக்கான கட்டணமும் சேர்ந்துதான் உள்ளது என்பதை உங்களது சங்க உறுப்பினர்களிடம் சொல்லியிருக்கீங்களா? 

செல்வமணி

சில திரையரங்க உரிமையாளர்கள்... அதாவது, சத்யம் சினிமாஸ் போன்ற திரையரங்குகள் தயாரிப்பாளர்கள் கியூப் நிறுவனத்துக்குத் தரும் வி.பி.எஃப் கட்டணமான 22,000 - 27,500 ரூபாயை அந்தத் தியேட்டர்காரங்களே வாங்கிக்கிறாங்களே, அதை நீங்கள் மற்ற திரையரங்க உரிமையாளர்களிடம் சொல்லியிருக்கீங்களா? 

கியூப் சினிமா நிறுவனம் தயாரிப்பாளர்களிடம் வாங்கும் வி.பி.எஃப் கட்டணத்தில் 80% தொகையை குறிப்பிட்ட சில தியேட்டர் உரிமையாளர்களுக்கு மட்டுமே கொடுக்கிறார்களே... அதை நீங்கள் கேட்டதுண்டா? 

தியேட்டர் உரிமையாளர்கள் சிலர் எங்களிடம், ‘நாங்களே சொந்தமாக புரொஜெக்டர் வாங்கி வைத்திருக்கிறோம். ஆனால், இதுவரையிலும் எங்களிடம் கியூப் நிறுவனம் ஒரு பைசாகூட கொடுக்கவில்லை’ என்று சொல்கிறார்கள். கியூப் நிறுவனம் உங்களது சங்கத்தில் பலருக்கு இந்தத் தொகையைத் தராமல் இருக்கிறது என்பதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? 

இப்போது கியூப் நிறுவனம் தியேட்டர்களில் வைத்திருக்கும் புரொஜெக்டர்களின் விலை என்ன, இதுவரையில் எவ்வளவு ரூபாய் தயாரிப்பாளர்கள் அதற்கான பணம் செலுத்தியிருக்கிறார்கள்? அந்தத் தொகையைக் கணக்கிட்டால், இந்நேரம் கியூப் வழங்கிய புரொஜெக்டர்கள் திரையரங்குகளுக்குச் சொந்தமாகவே ஆகியிருக்கும் அல்லது அந்தத் தொகையைத் தாண்டியிருக்குமே... இதை என்றாவது உங்கள் சங்கத்தில் இருக்கும் திரையரங்க உரிமையாளர்களிடம் சொல்லியிருக்கிறீர்களா? 

நீங்கள் இப்போது உங்களது உறுப்பினர்களிடம், ‘வி.பி.எஃப் கட்டணத்தைக் கட்டாதீர்கள்' என்று சொல்கிறீர்களே... கியூப் நிறுவனம் தியேட்டர் உரிமையாளர்களிடம் ஒப்பந்தம் செய்யும்போது ஒரு பொதுச்செயலாளராக, அவர்களது ஒப்பந்தத்தை நீங்கள் வாங்கிப் படித்துவிட்டு, 'கையெழுத்துப் போடலாமா, வேண்டாமா?' என்று யோசித்திருக்கிறீர்களா... அல்லது அதை முழுமையாகப் படித்ததுண்டா?  

இதுமாதிரியான ஒரு அடிமை சாசனத்தில் சட்டரீதியாக மீளமுடியாத அளவுக்கு ஓர் ஒப்பந்தத்தை எழுதிக்கொடுத்து, உங்களது சங்க உறுப்பினர்கள் மாட்டிக்கிறாங்களே... அவங்களை நீங்கள் காப்பாற்ற முயற்சி எடுத்ததுண்டா? அது தவறான ஒருதலைப்பட்சமான ஒப்பந்தம் என்று நீங்கள் என்னைக்காவது கியூப் நிறுவனத்திடம் கேட்டதுண்டா? 

‘இனிமேல் அந்த அக்ரிமென்ட்டில் கையெழுத்துப் போடும்போது என்கிட்ட ஒரு வார்த்தை கேளுங்க’ என்று திரையரங்க உரிமையாளர்களிடம் நீங்கள் சொல்லியிருக்கீங்களா? 

“இதுவரைக்கும் தவறான முறையில் அக்ரிமென்ட் போட்டுட்டாங்க. இனிமேல் ஒப்பந்தம் போடும்போது, அதைப் படிச்சுப் பார்த்துட்டு சரியான முறையில் இருக்கிற மாதிரி அக்ரிமென்ட் போடுவோம்”னு சொல்லியிருக்கீங்களா? 

கியூப் நிறுவனம் அளிக்கும் புரொஜெக்டரின் விலை என்ன என்பதை, இதுவரை சக திரையரங்க உரிமையாளர்கள் யாரிடமாவது சொல்லியிருக்கிறீர்களா?  

கியூப் நிறுவனம் தருவதாகச் சொல்லும் 40 - 50 சதவிகித விளம்பர வருவாய் தியேட்டர் உரிமையாளர்களுக்குச் சரியாகச் சென்று சேர்கிறதா என்பதை எப்போதாவது சோதனை செய்திருக்கிறீர்களா? ஏனெனில், பல திரையரங்க உரிமையாளர்கள் என்னிடம், 'விளம்பர வருவாயில் தங்களுக்கு எந்தப் பங்கும் வரவில்லை' என்கிறார்கள். சில திரையரங்க உரிமையாளர்களுக்கு மட்டும் விளம்பரக் கட்டணத்தில் கொஞ்சமாகக் கொடுத்துவிட்டு, மற்ற உறுப்பினர்களுக்கு கியூப் நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொடுக்காமல் இருக்கிறீர்களே, ஏன்?  

சங்கத்தில் இருக்கும் சக திரையரங்க உரிமையாளர்களுக்கு எந்தவித நன்மையும் செய்யாத நீங்கள், சங்கப் பதவியில் இருந்துகொண்டு இப்போது, ‘பணம் கட்டாதீங்க... பணம் கட்டாதீங்க’னு சொல்லும்போது தமிழ் சினிமா துறை நல்லா இருக்கக்கூடாது என்று நினைக்கிறீங்களா, இல்லை கியூப் நிறுவனம் மட்டும் நல்லா இருக்கட்டும்னு நினைக்கிறீங்களா?  

தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்துறதுல வேகமா இருக்குற நீங்க, 'நமக்கு சம்பந்தமே இல்லாத கியூப் சினிமாகிட்ட இவ்வளவு பணம் சேருது. ஏழு லட்சம் ரூபாய் மதிப்புள்ள புரொஜெக்டருக்கு இதுவரைக்கும் 25 லட்சம் ரூபாய் வரையிலும் வசூல் பண்ணியிருக்காங்க. ஆனால், அந்த புரொஜெக்டர் இதுவரை திரையரங்க உரிமையாளர்களுக்குச் சொந்தமாகவில்லையே என்ற உண்மையை உணர்ந்திருக்கீங்களா?  

இப்போது 10 சதவிகித திரையரங்க உரிமையாளர்கள் கியூப் புரொஜெக்டரை சொந்தமாக வாங்கியிருக்கீங்க. ஒருவேளை, தயாரிப்பாளர்கள்கிட்ட வசூலித்த பணத்தை நியாயமாக தியேட்டர் உரிமையாளர்கள் கணக்கில் வரவு வைத்திருந்தால், தமிழ்நாட்டில் இருக்கும் எல்லாத் தியேட்டர்களிலும் சொந்த புரொஜெக்டர்கள் இருக்கும் நிலை வந்திருக்குமே... அதை ஏன் நீங்கள் செய்யவில்லை? 

என, திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பன்னீர் செல்வத்தை சரமாரியான கேள்விகளால் துளைத்து எடுத்திருக்கிறார், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. தவிர, கியூப் நிறுவன இயக்குநர் செந்திலுக்கும் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

"கியூப் நிறுவனம் மூலம் தயாரிப்பாளர்கள் தரும் கட்டணத்தில் 80 சதவிகித தொகை திரையரங்க உரிமையாளர்களுக்குக் கொடுக்கப்படுகிறது என்றால், அதை சிலருக்கு மட்டும் அளிப்பது என்ன நியாயம். பாபநாசத்தில் எனது நண்பர் ஒருவரது திரையரங்கத்துக்கு இதுவரை எந்தத் தொகையும் வரவில்லை என்கிறார். புரொஜெக்டர்களுக்கு ஆகும் தொகை தவணையாக மாறுகிறது என்கிறீர்களே...தயாரிப்பாளர்களிடம் வாங்கும் பணத்தை தவணையாக எடுத்துக்கொள்கிறீர்களா? யாருக்குக் கொடுத்த பொருளுக்கு யாரிடம் தவணை வாங்குகிறீர்கள்? இதைத் தயாரிப்பாளர்களிடம் சொன்னதுண்டா? இத்தனை நாளாக இதை வி.பி.எஃப் என்றுதானே கூறினீர்கள். இப்போதுதான் இ.எம்.ஐ எனப்படும் தவணை விஷயத்தைக் கூறுகிறீர்கள். யாரிடம் தவணை வாங்குறீங்க, யாருக்குப் பணம் திருப்பி தர்றீங்க இதெல்லாம் சொல்லலாமே செந்தில்" என்றும். 

" உண்மையில் திரையரங்கு உரிமையாளர்களோ, தயாரிப்பாளர்களோ மேல் தப்பு கிடையாது. நடுவே நீங்கள்தான் எங்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் என நினைக்கிறேன். திரையரங்கு உரிமையாளர்கள் மீது அன்பு கொண்ட நீங்கள் ஏன் அவர்களுடன் பயப்படும் வகையில் அக்ரீமென்ட் போடுகிறீர்கள். திரையுலகுக்கு நன்மை செய்ய தயாரிப்பாளர்களில்கொஞ்சம் பேர், திரையரங்க உரிமையாளர்களில் சிலரென கையில் வைத்துக்கொண்டு. மற்றவர்களை ஏமாற்றுவதாக எண்ணுகிறேன். நீங்களே சொல்லாத வரையில் இதுதான் உண்மையாக இருக்கும். திரைத்துறைக்கு நன்மை செய்யவேண்டுமென நினைத்தால் அனைவரும் பயன்பெறக்கூடிய ஒரு திட்டத்தைக் கொண்டு வாருங்கள்.அமெரிக்கா, ஐரோப்பாவும் தமிழ் சினிமாவும் ஒன்றல்ல நாம் இங்கிருக்கும் நிலைமைக்கு ஏற்றமாதிரி தொழில் செய்வோம்."  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement