" ‘மேக்கப் இல்லாமலே அழகாதான இருக்கீங்க'ன்னார் ரஜினி சார்..!" - ‘சிங்கப்பூர்’ சுகன்யா

நடிகை சிங்கப்பூர் சுகன்யா காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்...

சுகன்யா, ‘பறந்து செல்ல வா’ படத்தின்  மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். சுகன்யா என்றால் இங்கு ‘சின்னக் கவுண்டர்’ சுகன்யாவே ஞாபகத்துக்கு வருவதால், இவர் ‘சிங்கப்பூர்’ சுகன்யா அல்லது சுகன்யா ராஜா. ‘சரவணன் மீனாட்சி’ உள்ளிட்ட சில சீரியல்களிலும் நடித்திருந்தவருக்கு ஓவர்நைட்டில் கிடைத்தது ‘காலா’ வாய்ப்பு. படத்தில் ரஜினியின் மருமகளாக வருகிறார். ஷூட்டிங் முடிந்த உடனேயே சிங்கப்பூருக்குக் கிளம்பி விட்டவர், ரிலீசுக்கு சில நாட்களுக்கு முன் சென்னை திரும்ப இருக்கிறாராம்.

சுகன்யா

‘’திண்டுக்கலைப் பூர்வீகமா கொண்டது எங்க ஃபேமிலி. அப்பா சிங்கப்பூர் வந்து செட்டிலாகிட்டதால இங்க வந்துட்டோம்.  ஆனா என்னோட சினிமா ஆசை மறுபடியும் என்னை தமிழ்நாட்டை நோக்கி இழுத்துட்டே இருக்கு. ஆசைக்கு ஏதுங்க அளவு?, ஹீரோயின் கனவெல்லாம் கூட இருக்கு. ஆனா  ’இவங்க நல்லா நடிப்பாங்களே’னு சொல்ற மாதிரி ஒரு பேரு எடுக்கணும்கிறதுதான் என்னோட உடனடி டார்கெட். அதுக்கான முயற்சியிலதான் சென்னைக்கும் சிங்கப்பூருக்குமா பறந்துட்டே இருக்கேன்’’ என்றவரின் பேச்சு ‘காலா’ பக்கம் திரும்பியது..

‘’சின்ன வயசுல ‘ஒளியும் ஒலியும்’ நிகழ்ச்சியில தலைவர் பாட்டு போடலைன்னு வீட்டுல டிவியை உடைச்சவ நான். அந்தளவு ரஜினி ரசிகை. அதனால ‘காலா’ வாய்ப்பை காலத்துக்கும் மறக்க மாட்டேன். முதன் முதலா அவரை ஷூட்டிங் ஸ்பாட்டுல  சந்திச்சப்ப, டிவியை உடைச்ச அந்த விஷயத்தையே சொன்னேன். பலமாச் சிரிச்சவர், ‘கலர் டிவியா ப்ளாக் அண்ட் ஒயிட்டா’ன்னார். ‘டக்’னு அப்படிக் கேட்பார்னு நினைக்கலை.  எனக்கே என்ன டிவின்னு ஞாபகத்துல இல்லை. அதேபோல 1992ல் அவர் சிங்கப்பூர் வந்திருந்தப்ப அவரோட நின்னு போட்டோ எடுத்திருந்தேன். அந்த ஃபோட்டோ எப்படியோ மிஸ் ஆயிடுச்சு. சரியா 25 வருஷம் கழிச்சு அவரோட நடிக்கவே சான்ஸ். கடவுளோட கருணைதான் இது. ‘காலா’ ஆடிசன் போனப்ப அது ‘காலா’ன்னே தெரியாது. ‘கபாலி 2’ன்னு தான் கூப்பிட்டாங்க.

 சுகன்யா

’காலா’ ஷூட்டிங் நாட்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாதவை. தலைவரோட பேச்சு, சிரிப்பு, ஸ்டைல், அவர் டயலாக் பேசறது எல்லாத்தையுமே பக்கத்துல நின்னு ரசிச்சேன். திரையில அவரைப் பார்க்கறப்ப வர்ற விசில் சத்தத்துக்கு அவர் எவ்வளவு உழைக்கிறார்னு கூட இருந்து பார்க்கறவங்களுக்கு மட்டுமே தெரியுது.

படத்துல சில கேரக்டர்களுக்கு அவ்வளவா மேக்-அப் இருக்காது. எனக்கும் அப்படியே. ஆனா ஒரு ஃபேமிலி சாங் சீனுக்கு மேக்-அப் போட வேண்டி வந்தது. அந்த சீன்ல என்னைப் பார்த்தவர், ‘மேக்-அப்’ இல்லாமலேயே அழகாதான இருந்தீங்க’ன்னார். தலைவரோட ஹீரோயின்ஸ் கூட எத்தனை பேர் அவர்கிட்ட இருந்து இந்த வார்த்தைகளைக் கேட்டிருப்பாங்கன்னு தெரியலை. அன்னைக்கு நான் அடைஞ்ச் சந்தோஷத்துக்கு அளவே இல்லை.

ஆகஸ்ட் 22 ஷூட்டிங் ஸ்பாட்ல என்னோட பிறந்தநாளை சிம்பிளா செலிபிரேட் பண்ணிட்டிருந்தேன். திடீர்னு எனக்கு எதிர்ல இருந்து தலைவர் வந்துட்டிருந்தார். என்னைக் கடந்து எங்கேயோ போகப் போறார்னு நினைச்சேன். எங்கிட்ட வந்தவர், ‘மெனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் தி டே’ன்னு வாழ்த்தினார். அதுக்குப் பிறகே என்னோட பிறந்த நாள் அவருக்குத் தெரிஞ்சிருக்குங்கிறது எனக்குத் தெரிஞ்சது.

எனக்கு கேக் ஊட்டி விட்டவர், பரிசா ஒரு ருத்ராட்சை தந்தார். இமயமலைக்கெல்லாம் போயிட்டு வர்றவர்கிட்ட இருந்து அதை வாங்கினதை பெரிய பாக்கியமாக் கருதுறேன். அன்னைக்கே அந்த ருத்ராட்சை என் கழுத்துலயும் ஏறிடுச்சு. உண்மையிலேயே இதை அணிஞ்ச பிறகு என்னை நான் வேற லெவல்ல உணர்கிறேன்’’ என்கிற சுகன்யா, ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினராகும் முடிவில் இருக்கிறாராம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!