Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"விஷாலை சந்தித்தோம். கியூப் நிறுவனத்திற்கு மாற்று வரும்!" - திரையரங்க உரிமையாளர் சத்யசீலன்.

தமிழ் சினிமாவில் நடந்துவரும் வேலை நிறுத்தம் குறித்துப் பல்வேறு பேச்சு வார்த்தைகளும், வாக்கு வாதங்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன. தயாரிப்பாளர் சங்கம், ஃபெப்சி ஒருமித்த குரலில் இந்த வேலை நிறுத்தத்தை நடத்தி வருகிறார்கள். கியூப் கட்டணம், தியேட்டர் டிக்கெட் விற்பனையை கணினி மயமாக்குவது குறித்து தயாரிப்பாளார் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்துடன் நடந்த பேச்சு வார்த்தை தோல்வியடைந்த நிலையில், சில திரையரங்க உரிமையாளர்கள் மட்டும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் `சிங்கிள் ஸ்கிரீன்' தியேட்டர் உரிமையாளர்கள். சங்கத்தைத் தவிர்த்து, இவர்கள் விஷாலைச் சந்திக்கக் காரணம் என்ன என்பதை, சந்திப்பில் இருந்தவரும் கும்மிடிப்பூண்டி ராஜேஸ்வரி திரையரங்க உரிமையாளருமான சத்யசீலனைத் தொடர்புகொண்டோம்.

சத்யசீலன்

``தயாரிப்பாளர்கள் கட்டும் வி.பி.எஃப் கட்டணத்தில் கியூப் நிறுவனம் குறிப்பிட்ட சில திரையரங்க உரிமையாளர்களுக்கு 70% - 80%  கொடுத்து வருவதாக கியூப் நிறுவனமே தற்போது தெரிவித்துள்ளது. இந்தத் தொகை திரையரங்கு உரிமையாளர்கள் வட்டத்திலுள்ள முக்கியஸ்தர்கள் மற்றும் சங்கத்தின் பொறுப்பாளர்கள் சிலரைக் கைக்குள் வைத்துக்கொள்ளும் விதமாக கியூப் நிறுவனம் செய்துள்ளது. கிட்டத்தட்ட1150 திரையரங்குகள் தமிழகத்தில் உள்ளது. வெறும் மல்டிபிளெக்ஸ் மற்றும் காம்ப்ளக்ஸ் திரையரங்குகள் என 100 திரைகளுக்கு மட்டும் இந்தத் தொகையைத் தந்திருக்கிறார்கள். நாங்கள் இத்தனை காலமாக இது விளம்பர வருவாய் என்று நினைத்து வந்தோம். ஆனால், இது சொந்தமாக புரொஜெக்டர்கள் வாங்கியுள்ள திரையரங்குகளுக்கு மட்டும் தருவதாக கியூப் நிறுவனத்தினர் கூறுகிறார்கள். கியூப் நிறுவனம் மூன்று விதமாகச் செயல்பட்டு வருகிறது. டிஜிட்டல் புரொஜெக்டர்கள் சப்ளை செய்வது, சப்ளை  செய்யும் இயந்திரங்களுக்கு ஃபைனான்ஸ் தருவது, ஃபைனான்ஸுக்கான வட்டி மற்றும் முதலீட்டை எடுக்க திரையரங்குகளுக்கு விளம்பரங்கள் கொண்டு வருவது ஆகியவை.   

முதல் போட்டு ஒருவர் புரொஜெக்டர் வாங்கி வைப்பதும், அதே புரொஜெக்டரை ஃபைனான்ஸ் முறையில் வைத்தாலும் மூன்று வருடங்களுக்குப் பிறகு நமக்கே சொந்தம். விளம்பரங்களிலிருந்து வரும் 70% வருவாயை இந்தப் புரொஜெக்டர்களுக்கான ஈ.எம்.ஐ என்றுதான் வாங்கிக்கொண்டனர். பின்னர் வி.பி.எஃப் என வசூலிக்கும் தொகையைக் குறிப்பிட்ட சில நபர்களுக்கு மட்டும் தந்துவிட்டு, மற்ற தியேட்டர் உரிமையாளர்களுக்குத் தராமல் விட்டுவிட்டார்கள். இதன்மூலம் கியூப் நிறுவனம் திரையரங்க உரிமையாளர்களை ஏமாற்றி வருகிறது என்பதைத் தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டுபிடித்துள்ளது. திரையரங்க உரிமையாளர்கள் வேறு எந்த டிஜிட்டல் தொழில்நுட்ப நிறுவனத்தை அணுகினாலும், லாக்கிங் பீரியட் என்ற ஒரு ஷரத்தை அக்ரீமென்ட்டில் போட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறது கியூப் நிறுவனம். ஒரு காலத்தில் இப்படிப் படம் போடும் திரையரங்குகளுக்குப் படங்களின் பிரதிகளைக் கொடுக்காமல் இருந்தது கியூப். அதை பல போராட்டத்துக்குப் பிறகுதான் மாற்றினோம். 

கியூப் நிறுவனத்துக்கு மாற்றாக ஏதும் நிறுவனம் இருக்கிறதா?

நாங்கள் விஷாலைச் சந்தித்த நாளன்று சில புரொஜெக்டர் சப்ளை நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தினோம். அவர்கள் வி.பி.எஃப் கட்டணம், லீஸ் என எதுவும் கூறவில்லை. விளம்பர கான்ட்ராக்ட் வருவாயில் 50% மட்டும் கேட்டுள்ளனர். இது ஒரு நல்ல திருப்பமாக அமையும் என்று நம்புகிறோம்.

தியேட்டர்களிடமிருந்து கணக்கு வழக்குகள் சரியாக வருவதில்லை எனத் தயாரிப்பாளர் சங்கம், டிக்கெட் விற்பனையக் கண்காணிக்க கணினி மயமாக்கும் முயற்சியை எடுப்பதாகக் கூறுகிறார்களே? 

இந்த டிக்கெட் கணக்குகளை கணினி மயமாக்குவது நல்ல விஷயம்தான். ஆனால், இதில் திரையரங்க உரிமையாளர்களை மட்டும் குறை சொல்லக் கூடாது. ரஜினி, அஜித், விஜய் நடிக்கும் படங்களுக்கு மட்டும்தான் இந்தக் கணக்கு குளறுபடியாகிறது. ஒரு பெரிய படம் வருகிறது என்றால், ரசிகர்களின் ஆர்வம் காரணமாக முதல் மூன்று நாள்கள் டிக்கெட்டுகளை அதிக விலையில் வாங்குகிறார்கள். அதற்கேற்றார்போல டிக்கெட்டுகளை விலை வைத்து விற்க வேண்டும் எனத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள்  தியேட்டர் உரிமையாளர்களிடம் ஒரு வாய்மொழி ஒப்பந்தம் போட்டுதான் வியாபாரம் பேசுகிறார்கள். இது அரசாங்கத்தின் டிக்கெட் விலை நிர்ணயத்தினை மீறி செயல்படுவதுதான். தவறை செய்யத் துணிந்தபின் முழுமையாவே செய்யலாம் என ஏகத்துக்கும் விலையேற்றி பிரீமியம் விலைக்கு விற்கப்பட்டது. `கபாலி' படத்தின் பல காட்சிகளை ஐடி நிறுவனங்களுக்குச் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனமே விற்றது குறிப்பிடத்தக்கது. சிறுபட்ஜெட் மற்றும் ஆவரேஜான திரைப்படங்களுக்கு இந்த நிலை இல்லை. இதைத் தடுக்கத்தான் இந்தக் கணினி மயமாக்கும் முயற்சியைத் தயாரிப்பாளர்கள் சங்கம் எடுக்கவிருக்கிறது. தவிர,  நாங்களும் மினிமம் கியாரன்டி எனும் வியாபார முறையை மாற்றி, முன்பணம் செலுத்திப் படத்தை ஓட்டும் முறையைக் கொண்டுவரக் கேட்டிருக்கிறோம். விஷால் கொண்டு வரும் திட்டங்கள் மூலம் வெளிப்படைத்தன்மை வரும்.    

ஃபெப்சி தலைவர் செல்வமணி, உங்கள் சங்கத்தின் செயலாளர் பன்னீர் செல்வம் இருவருக்கும் இடையேயான வாட்ஸ் அப் வாக்கு வாதம் குறித்து?        

நான் மேலே குறிப்பிட்டவற்றைத்தான், ஆர்.கே.செல்வமணி அவர்கள் தனது ஆடியோவில் கேட்டிருந்தார். அவர் கேட்டிருந்தது 100% சரியான கேள்விகள். 

கியூப் சினிமா விவகாரம்

கியூப் நிறுவனத்திலிருக்கும் இவ்வளவு பிரச்னைகளைச் சங்கத் தலைமையிடம் முறையிட்டீர்களா?

எங்கள் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அண்ணாமலை, சங்கத்தின் மேன்மையைப் பார்ப்பவர். எனினும் எங்கள் சங்கத்தில் இந்த குரூப் லீஸ் கன்ஃபார்மிங் முறை என்ற வகையில் 30 - 40 திரையரங்குகளை சொற்ப வாடகை கொடுத்து லீஸுக்குச் சிலர் நடத்தி வருகிறார்கள். அவர்களது ஆதிக்கம் சங்க முடிவுகளில் அதிகமாக இருக்கிறது. மேலும், சினிமாவில் இயங்கும் எந்தச் சங்கமும் அந்தச் சங்க உறுப்பினர்களின் மேம்பாட்டுக்கு உதவுவதில்லை. எல்லாச் சங்கமும் கட்டப்பஞ்சாயத்து செய்துவருகிறது. அதுபோலதான் எங்கள் சங்கமும் நடந்து வருகிறது.            

தமிழ் சினிமாவின் எதிர்காலத்தை முழுக்க முழுக்க மனதில் வைத்து இந்தச் சங்கங்கள் செயல்பட்டு, விரைவில் இந்த வேலை நிறுத்ததை கைவிடும் என்று எதிர்பார்த்திருப்போம்!      

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்