Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

``என்.டி.ஆர் முதல் ஷகீலா வரை... படையெடுக்கும் பயோபிக் படங்கள்.." - #BioPicMovies

ஒருவரின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. யாரைப் பற்றி படம் எடுக்கிறார்களோ அவர்களைப் பற்றி நுணுக்கமாக ஆராய்ந்திருக்க வேண்டும். அவர்களைச் சார்ந்தவர்களையும் அவருக்கு நெருக்கமானவர்களையும் சந்தித்து, அந்த நபர்களை எல்லாம் ஒரு கதாபாத்திரமாக வைத்து அவர்களுக்கான முக்கியத்துவத்தையும் அந்த இரண்டரை மணி நேரத்திற்குள் கொண்டுவர வேண்டும். இப்படிப் பல சவால்கள் பயோபிக் எடுக்கும் இயக்குநர்களுக்கு இருக்கிறது. இந்தச் சவால்களை மிக எளிதாகக் கடந்து, பல பயோபிக் படங்களை நேர்த்தியாகக் கொடுத்திருக்கிறது, ஹாலிவுட். அத்தகைய பயோபிக் படங்கள், இந்திய சினிமாவிலும் நேர்த்தியாக வெளிவரத் தொடங்கியிருக்கிறது. ஏற்கெனவே, `சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்', `எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி', `பேட் மேன்' போன்ற பல படங்கள், சிறந்த உதாரணம். இவர்களைத் தொடர்ந்து, தென்னிந்திய சினிமாவும் பயோபிக் கலாசாரத்தில் இணைந்துள்ளது. அந்தப் படங்களின் லிஸ்ட் இதோ...


என்.டி.ஆர் :  
 

என்.டி.ஆர் பயோபிக்

மறைந்த தெலுங்கு நடிகரும் முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டுவருகிறது. இதை, தேஜா இயக்குகிறார். இதில், என்.டி.ஆரின் கதாபாத்திரத்தில் அவரது மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கிறார். இந்தப் படத்தில் அவரது மனைவியாக நடிக்க வித்யா பாலனிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இந்தப் படத்தின் முதல் காட்சியாக, எம்.ஜி.ஆர் என்.டி.ஆருக்கு க்ளாப் அடிப்பதுபோல படமாக்கியுள்ளனர். இப்படத்தில், ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரான நடேந்தலா பாஸ்கர ராவ் வேடத்தில் நடிக்க பரேஷ் ராவல் ஒப்பந்தமாகியுள்ளார்.  

நடிகையர் திலகம் / மகாநதி : 
 

மகாநதி

தன் நடிப்பாலும் முகபாவனைகளாலும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து, `நடிகையர் திலகம்' என அனைவராலும் பாராட்டப்பட்டவர், நடிகை சாவித்ரி. இவர், தெலுங்கில் 147 படங்களும், தமிழில் 102 படங்களும் நடித்துள்ளார். இப்போது, இவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கத் திட்டமிட்டு படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. இதில், சாவித்ரியாக கீர்த்தி சுரேஷும் ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடித்துள்ளனர். மதுரவாணியாக சமந்தாவும், அலூரி சக்கரபாணியாக பிரகாஷ் ராஜும், நாகேஷ்வரராவாக நாக சைதன்யாவும் நடித்துள்ளனர். இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். மே 9- ம் தேதி திரைக்கு வரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

யாத்ரா :
 

மம்மூட்டி

மறைந்த ஆந்திரா முதல்வரான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மஹி.எஸ்.ராகவ் இயக்கவிருக்கிறார். இந்தப் படத்துக்கு, `யாத்ரா' எனப் பெயரிட்டுள்ளனர். இதில், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடிக்க மம்முட்டி ஒப்பந்தமாகியுள்ளார். அவரது மனைவியாக நயன்தாராவும், மருமகளாக கீர்த்தி சுரேஷும் நடிக்கவிருக்கிறார்கள். ஆந்திர மக்கள் பெருமளவு நேசித்த இவரின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுவதால்,  இவரது ஆதரவாளர்களும் அபிமானிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 
ஷகீலா :  
 

ஷகீலா - ரிச்சா சட்டா

அடல்ட் படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர், ஷகீலா. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சிறுசிறு கேரக்டர்களில் நடித்துவருகிறார். தற்போது, இவரின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட இருக்கிறது. ஷகீலா கேரக்டரில் ரிச்சா சட்டா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், அவர் தன் கதாபாத்திரத்தை மிகச் சரியாகவும் நேர்த்தியாகவும் நடிக்க வேண்டும் என்று மலையாளம் கற்றுவருகிறாராம். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை, இந்திரஜித் லங்கேஷ் இயக்குகிறார். ஏற்கெனவே, சில்க்கின் வாழ்க்கை வரலாற்றுப் படமான, `தி டர்டி பிக்சர்ஸ்' நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து, இந்தப் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

பி.டி.உஷா :
 

பி.டி.உஷா - பிரியங்கா சோப்ரா

ஏற்கெனவே, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் பயோபிக் படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா, ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற ஓட்டப் பந்தய வீராங்கனை பி.டி.உஷாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை, ரேவதி வர்மா இயக்குகிறார். 

சூர்மா : 
 

சந்தீப் சிங்

ஹாக்கி வீரர் சந்தீப் சிங்கின் வாழ்க்கை வரலாறு, `சூர்மா' என்ற பெயரில் உருவாகிறது. இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் சிங்காக தில்ஜித் தோசங் நடித்துள்ளார். இந்தப் படத்தை, இயக்குநர் ஷாத் அலி இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் டாப்ஸி நடிக்கிறார். ஜூன் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. 

இதுதவிர, கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை வரலாற்றில் ரன்வீர் சிங்கும், ஹாக்கி வீரர் பல்பிர் சிங்கின் பயோபிக்கில் அக்‌ஷய் குமாரும், துப்பாக்கி சுடுதலில் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ராவின் பயோபிக்கில், ஹர்ஷவர்தன் கபூரும் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் பயோபிக்கில் ஷ்ரதா கபூரும் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்