வெளியிடப்பட்ட நேரம்: 08:47 (08/04/2018)

கடைசி தொடர்பு:08:47 (08/04/2018)

லைலா முதல் ஜெனிலியா வரை...தமிழ் சினிமா மிஸ் பண்ணும் ஹீரோயின்கள்...

சிறப்பாகத் தன் கரியரை ஆரம்பித்து இப்போது கோலிவுட்டுக்கு பை பை சொன்ன நடிகைகளின் பட்டியல் இதோ...

லைலா முதல் ஜெனிலியா வரை...தமிழ் சினிமா மிஸ் பண்ணும் ஹீரோயின்கள்...

நடிகர்களைவிட நடிகைகளின் பீக் டைம் குறைவு. ஆனால், சிலர் அதிலிருந்து விலகி பல வருடங்களாகியும் தன்னை அப்டேட் செய்துக்கொண்டு லைம் லைட்டிலேயே இருக்கின்றனர். சிலர் தங்களின் பீக் டைம் முடிந்த பிறகு கல்யாணம், குழந்தை என செட்டிலாகி விடுகின்றனர். சிலர் பிசினஸ், சீரியல் என ஆக்டிவாக இருக்கின்றனர். அவ்வாறு சிறப்பாக தன் கரியரை ஆரம்பித்து இப்போது கோலிவுட்டுக்கு பை பை சொன்ன ஹீரோயின்கள் பற்றி ஒரு பார்வை.

லைலா :  

கோலிவுட் மிஸ் பண்ணும் ஹீரோயின்கள் - லைலா

கேரளாவைச் சேர்ந்த லைலா, ஆரம்பத்தில் மலையாளம், தெலுங்கு என நடித்துக்கொண்டிருந்தார். பின், `கள்ளழகர்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். `முதல்வன்', `ரோஜாவனம்' என நடித்து வந்தவருக்கு `தீனா', `தில்' ஆகிய படங்கள் பாப்புலாரிட்டியைக் கொடுத்தது. பின், `நந்தா', `மெளனம் பேசியதே', `உன்னை நினைத்து' ஆகிய படங்களில் சூர்யாவுடன் இணைந்து நடித்ததன் மூலம் `சூர்யாவுக்கு நல்ல ஜோடிப்பா' என்று பெயர் வாங்கினார். பின் தெலுங்கு, கன்னடம் என நடித்து வந்தவர், பிரசன்னாவுடன் `கண்டநாள் முதல்', அஜித்துடன் `பரமசிவன்' படங்களில் நடித்தார். `திருப்பதி' படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடினார். கடைசியாக மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியா `மஹா சமுத்திரம்' படத்தில் நடித்து, பின் குடும்பம், குழந்தைகள் என பிஸியாக இருக்கிறார்.

அசின் :

ஆசின்

2001- ம் ஆண்டு மலையாளப் படத்தின் மூலம் தன் கரியரை ஆரம்பித்த அசினை, `எம்.குமரன் s/o மகாலட்சுமி' படத்தில் மோகன் ராஜா தமிழில் அறிமுகப்படுத்தினார். `ஹே... எல்லோ சுடிதார்' என்ற இவரது இன்ட்ரோவும் `மலபார்' என்று ஜெயம் ரவி கூப்பிடும் விதமும் இவருக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுத்தது. சூர்யாவுடன் `கஜினி' படத்தில் வெகுளித்தனமான கல்பனாவாக வந்தவர், `வேல்' படத்தில் `கோவக்கார கிளியே... புருவம் தூக்கிக் காட்டாதே' என்று இளைஞர்களின் மனதில் கனவுக்கன்னியாக மாறினார். அஜித்துடன் `வரலாறு', `ஆழ்வார்', விஜயுடன் `சிவகாசி', `போக்கிரி' என்று வெற்றிப்படங்களில் நடித்தவருக்கு, `தசாவதாரம்' படத்தில் உலக நாயகனுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழில் கடைசியாக `காவலன்' படத்தில் நடித்தார். அதன்பின், பாலிவுட் இவரைத் தன்வசப்படுத்தியது. 2015-ல் `ஆல் இஸ் வெல்' என்ற ஹிந்தி படத்தில் நடித்தவர், மைக்ரோ மேக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ ராகுல் சர்ந்த்வை திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார். 

கோபிகா :

கோபிகா

கேரளாவைச் சேர்ந்தவர். பரத்துடன் `4 ஸ்டூடன்ட்ஸ்' படத்தில் அறிமுகமானவருக்கு, `ஆட்டோகிராஃப்' படம் நல்ல வரவேற்பைக் கொடுத்தது. தொடர்ந்து மலையாளப் படங்களில் நடித்து வந்தாலும் அவ்வப்போது `அரண்', `கனா கண்டேன்', `தொட்டி ஜெயா', `வீராப்பு' உள்பட பல படங்களில் நடித்தார். பரத்தோடு சேர்ந்து இவர் நடித்த `எம்.மகன்' தமிழில் இவர் கரியரில் முக்கியமான படமாக அமைந்தது. கடைசியாக, தமிழில் `வெள்ளித்திரை' படத்தில் நடித்தவர், அதன்பின், சில மலையாளப் படங்களில் நடித்தார். இப்போது ஆஸ்திரேலியாவில் குடியேறி குடும்பத்தைக் கவனித்து வருகிறார்.


மாளவிகா :
 

மாளவிகா

`உன்னைத் தேடி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மாளவிகா, `ஆனந்த பூங்காற்றே', `ரோஜாவனம்', `சீனு' ஆகிய படங்களில் துணை நடிகையாக நடித்தார். மலையாளம், தெலுங்கு மொழிகளில் வாய்ப்புகள் வந்ததையடுத்து பிறமொழி சினிமாவில் பிஸி ஆனார். தமிழில், `திருட்டுப்பயலே', `நான் அவன் இல்லை' உள்ளிட்ட படங்களில் நடித்தவர், பல படங்களில் கேமியோ ரோலில் தலை காட்டினார். இவரது நடனத்தில் உருவான `கருப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு', `வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்' ஆகிய பாடல்கள் இன்று வரை எவர்க்ரீன் லிஸ்டில் இருக்கிறது. 

 மீரா ஜாஸ்மின் : 

மீரா ஜாஸ்மின்

மலையாளப் படத்தில் அறிமுகமானவுடனே, தமிழில் `ரன்' படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு இவரை அழைத்து வந்தார் இயக்குநர் லிங்குசாமி. `பாலா', `புதிய கீதை', `ஜூட்' என அடுத்தடுத்து தமிழ்ப் படங்களில் நடித்து வந்தவரை மலையாளம் மீண்டும் தன்வசப்படுத்தியது. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான `ஆயுத எழுத்து' படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்துப் புகழ் பெற்றார். அதன்பின், விஷாலுடன் `சண்டக்கோழி' இவருக்கு நல்ல பென்ச் மார்க் படமாக அமைந்தது. தொடர்ந்து மலையாளம், தமிழ் என நடித்து வந்த மீரா ஜாஸ்மின், தமிழில் கடைசியாக நடித்த படம் `விஞ்ஞானி'. மலையாளத்தில் 2016-ல்  வெளியான `10 கல்பனாக்கள்' படம் இவர் நடிப்பில் வெளியான கடைசிப் படம். இப்போது திருமணமாகி துபாயில் இருக்கிறார். சமீபத்தில் இவரது போட்டோ இணையத்தில் வைரலானது.  

ரீமா சென் :

ரீமா சென்

தெலுங்கில் அறிமுகமான ரீமா சென், `மின்னலே' படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு வந்தார். தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தவருக்குத் தமிழில் விஜயுடன் `பகவதி', விக்ரமுடன் `தூள்', விஷாலுடன் `செல்லமே' எனப் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதைச் சரியாகச் செய்துமுடித்தவருக்கு, `திமிரு', `கிரி' ஆகிய படங்கள் இவரது கரியருக்கு டாப் கியர் தட்டியது. `வல்லவன்' கீதாவை அவ்வளவு எளிதில் மறக்கமுடியாது. `ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் நடித்தவர், பின் இந்தி பக்கம் பறந்துவிட்டார். இறுதியாக, `சட்டம் ஒரு இருட்டறை' படத்தில் நடித்தார். 2012-ல் தொழிலதிபர் சிவ்கரண் சிங்கைத் திருமணம் செய்தவர், இப்போது ருத்ரவீர் சிங் எனும் ஆண் குழந்தைக்கு அம்மா. 

பூஜா :

பூஜா

இலங்கையில் பிறந்த பூஜா, பெங்களூரில் வளர்ந்தார். `ஜேஜே', `அட்டகாசம்', `உள்ளம் கேட்குமே', `ஜித்தன்', `பட்டியல்', `தம்பி' என அடுத்தடுத்து பட வாய்ப்புகளை அள்ளித்தந்தது கோலிவுட். அவ்வப்போது சிங்களத்திலும் நடித்து வந்தார். `ஓரம் போ' `துரோகி' ஆகிய படங்களில் நடித்தவருக்கு, பாலா இயக்கத்தில் `நான் கடவுள்' படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. பார்வையற்ற பெண்ணாக தன் யதார்த்த நடிப்பை வெளிப்படுத்திய பூஜா, அதற்குப் பிறகு சரியான வாய்ப்புகள் இல்லாமல் தமிழ்சினிமாவிலிருந்து விலகி இருந்தார். தமிழில் இவர் கடைசியாக நடித்த படம், `விடியும் முன்'. 2016-ல் இலங்கை வாழ் தமிழரான பிரஷன் டி வேதகன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
 

மும்தாஜ் :

மும்தாஜ்

1999-ல் `மோனிஷா என் மோனலிஷா' படத்தில் டி.ராஜேந்தர் மும்தாஜை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். `மலபார் போலீஸ்', `குஷி', `பட்ஜட் பத்மநாபன்', `வேதம்' ஆகிய படங்களில் நடித்த மும்தாஜ், கிளாமர் கேரக்டர்களுக்குப் புகழ் பெற்றவர். துணை நடிகையாகவும், கேமியோ ரோலிலும் நடித்து வந்தவர் `வீராசாமி' படத்தில் டி.ராஜேந்தருக்கு ஜோடியாக நடித்தார். பின், இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு `ராஜாதி ராஜா' படத்தில் நடித்தார். இதுவே மும்தாஜ் தமிழில் நடித்த கடைசிப் படம்.

 
ஜெனிலியா :

ஜெனிலியா

2003-ல் `பாய்ஸ்' படத்தில் ஹிரிணியாக அறிமுகமானவர், டோலிவுட்டில் தொடர்ந்து அதிக படங்கள் நடித்து வந்தார். பிறகு, தமிழில் விஜய்க்கு ஜோடியாக `சச்சின்' படத்தில் நடித்ததன் மூலம் இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தார். தெலுங்குப் படங்களில் தொடர்ந்து நடித்தவர், தமிழில் வருடத்துக்கு ஒரு படம் அல்லது இரண்டு வருடத்துக்கு ஒரு படம்... என இடைவெளி விட்டே நடித்தார். `சந்தோஷ் சுப்ரமணியம்' `ஹாஹா ஹாசினி'யையும் அவரது குறும்புகளும் நம் அனைவரையும் ரசிக்க வைத்தவை. தமிழில் கடைசியாக `வேலாயுதம்' படத்தில் நடித்தார். தன் முதல்பட ஹீரோவான ரித்தேஷ் தேஷ்முக்குடன் திருமணம் முடிந்து தற்போது மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். அவ்வப்போது பல தன்னார்வ அமைப்புகளுடன் சேர்ந்து சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார், ஜெனிலியா. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்