Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’’ ‘கோலி சோடா’ல நான் சந்தித்த பிரச்னை ‘கோலி சோடா 2’ல இல்லை..!’’ - விஜய் மில்டன்

’’என்னுடைய முதல் படம் ரிலீஸான தேதியை வைத்துப் பார்த்தால், நான் சினிமாவுக்கு வந்து 20 வருடங்கள் ஆச்சு. ஆனால், நான் ஒன்பதாவது படிக்கும்போதே என் அப்பா எடுத்த படத்தில் உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். இத்தனை வருடங்களில் இந்த சினிமா எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது; ஆனால், அது முக்கியமில்லை. நான் இந்த சினிமாவுக்கு என்ன கொடுத்திருக்கிறேன் என்பதுதான் முக்கியம். அப்படிப் பார்த்தால், 'காதல்’, ‘வழக்கு எண் 18/9’ என சில நல்ல படங்களின் ஒளிப்பதிவாளராக நான் இருந்ததில் எனக்குப் பெருமை. ’காதல்’ படம் இல்லைன்னா, விஜய் மில்டன் இல்லை. இந்த 20 வருடங்களில் தமிழ் சினிமா பல மாற்றங்களைச் சந்தித்துவிட்டது. இப்போது அறிமுகமாகும் இயக்குநர்களோடு நானும் சேர்ந்து படம் இயக்குவது சந்தோஷமான அனுபவம்தான்!’’ - பாஸிட்டிவ் எனர்ஜியோடு பேச ஆரம்பித்தார், விஜய் மில்டன். ’கோலி சோடா 2’ படத்தின் வேலைகளில் பிஸியாக இருந்தவர், சுவாரஸ்யமான பதில்களால் நம் கேள்விகளை வரவேற்றார்.  

கோலி சோடா

’கோலி சோடா’ முதல் பாகத்திலிருந்து இந்தப் படம் எந்தளவுக்கு மாறுபட்டதா இருக்கும்...?

’’ ‘கோலி சோடா’ல நான் ஃபேஸ் பண்ண பிரச்னை, அந்தப் பசங்களுக்கு 14 வயது என்பதுதான். அவங்களை மையமா வெச்சு எடுக்கிற படமா இருந்ததுனால, பல விஷயங்களை என்னால் சொல்ல முடியலை. ஒரு சண்டைக் காட்சியா இருந்தாலும் சின்னப் பசங்க எப்படி சண்டை போடுவாங்களோ அப்படித்தான் பண்ண வேண்டியிருந்தது. வசனங்களும் அப்படித்தான்; அவங்களோட ஸ்டேஜுக்கு ஏற்றமாதிரிதான் எழுதவேண்டியிருந்தது. அதுக்காக எல்லாத்தையும் குறைவா சொன்னால் வீரியம் இல்லாமலும் போயிடும். இந்த ரெண்டையும் பேலன்ஸ் பண்ண ரொம்ப கஷ்டப்பட்டேன். ஆனால், இந்தப் படத்தின் முக்கியமான கதாபாத்திரங்களுக்கு வயது அதிகம் என்பதால், என்னால் இறங்கி அடிக்க முடிந்தது; காதல் காட்சிகள் வைக்க முடிந்தது. 

முதல் பாகத்தில் நாலு பசங்களும் ஒண்ணா இருப்பாங்க. அவங்க நாலு பேருக்கும் ஒரே வில்லன்; ஒரே பிரச்னைதான். இந்தப் படத்தில் மூணு பேரு; வெவ்வேறு வில்லன்கள். ஆனால், ஒரேவிதமான பிரச்னைகள். அந்தப் படத்தில் கோயம்பேடு மாதிரி, இந்தப் படத்தில் வடசென்னையைக் கதைக்களமா வெச்சிருக்கேன். வடசென்னைனு சொல்லவே பயமா இருக்கு. ஏன்னா, ரெகுலரா வர்ற படங்கள் மாதிரினு நினைச்சுக்கிறாங்க. இந்தப் படத்தில் வடசென்னையோட கதையை நான் சொல்லலை. அந்தக் களத்தில் இந்தப் படம் நடக்குற மாதிரிதான் சொல்லியிருக்கேன்.’’

கெளதம் மேனனை எப்படி நடிப்புக்கு ஓகே சொல்ல வெச்சீங்க...?

’’இந்தப் படத்தோட ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணதும் என்னோட சில நண்பர்கள்கிட்ட சொன்னேன். கதையைச் சொல்லும்போதே இந்தக் கதாபாத்திரத்தில் கெளதம் மேனன் நடிச்சா நல்லாயிருக்கும்னு சொன்னேன்; நக்கலா சிரிச்சாங்க. ஏன்னா, அது நடக்காதுனு அவங்களுக்குத் தெரியும். எனக்கும் கெளதமுக்கும் எந்தவிதத்திலும் நேரடி அறிமுகம் இல்லை. ஏதோ ஒரு நிகழ்ச்சியில, " ‘காதல்’ படம் ஓடுனதுக்கு முக்கியமான காரணம், அந்தப் படத்தோட ஒளிப்பதிவுதான்!"னு சொல்லியிருக்கார். இவ்வளவுதான் எங்களோட பழக்கமே. இந்தப்படம் ஆரம்பிச்சதும் முதல் முறையா ஆடியோ டீஸர் பண்ணலாம்னு முடிவு பண்னேன். அதுக்கான வசனம் ரெடி பண்ணிட்டு இதில் யாரைப் பேச வைக்கலாம்னு யோசிக்கும்போது, கெளதம் மேனன்தான் ஃபைனலா எங்க மனசுல வந்தார். அப்புறம் லிங்குசாமி மூலம் கெளதம்கிட்ட பேசச் சொல்ல, அவரும் ஓகே சொல்லிட்டார். 

கோலி சோடா

முதலில் இந்த ஆடியோ டீஸர் எப்படி வொர்க் அவுட் ஆகும்னு கெளதமுக்கு ஒரு குழப்பம் இருந்தது. ஆடியோ டீஸர் ரிலீஸாகி சரியா போகலைனா, அதுக்கு வீடியோவும் பண்ண முடியாது. அதனால கெளதம் யோசிச்சார். மத்தவங்களும் வேணாம்னு சொன்னாங்க. என்னோட கரியர் ஆரம்பிச்சதுல இருந்து, எந்த விஷயத்தை ஒருத்தர் வேணாம்னு சொல்றாங்களோ... அதைத்தான் நான் பண்ணுவேன். அப்படித்தான் இந்த ஆடியோ டீஸர் ரிஸ்க்கையும் எடுத்தேன். நான் எதிர்பார்த்த மாதிரி, மத்தவங்க எதிர்பார்க்காத மாதிரி அந்த ஆடியோ டீஸர் ஹிட்டாச்சு. கெளதமுக்கும் ஹேப்பி!. 

கெளதம் ஹேப்பி மூடுல இருந்த சமயத்தில்தான் இந்தப் படத்தில் அவருக்கு ஒரு ரோலும் இருக்குனு சொன்னேன். 'விளையாடாதீங்க, எனக்கு நடிக்க வராது. என்னோட படத்துல அப்பப்போ தலை காட்டுவேன். அதோட சரி’னு சொன்னார். அப்பறம் அவரை ஒருவழியா நடிக்க ஒப்புக்க வெச்சு, கெளதம் மேனனின் கெட்டப்பை மாத்துனோம். கெளதம் மேனன்னு சொன்னதும் நமக்கு க்ளீன் ஷேவ் பண்ண அவரோட முகம்தான் மனசுல வரும். அப்படியிருக்கக்கூடாதுனு சொல்ல, ஃபுல்லா தாடி, மீசை வளர்த்து வேற ஒரு லுக் காட்டினார். 
தமிழ் சினிமாவை வேற ஒரு தளத்துக்கு எடுத்துட்டுப்போற இயக்குநர்கள் மேல எனக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கு. அப்படி ஒரு இயக்குநரான கெளதம் மேனனோடு வொர்க் பண்ணது மறக்க முடியாத அனுபவம்.’’

கோலி சோடா

சமுத்திரக்கனியோட ரோல் இந்தப் படத்துக்கு எந்தளவு முக்கியம்...?

’’ஒரு மாலையில் எத்தனை விதவிதமான பூக்களை கோத்திருந்தாலும், அந்த மாலை கட்டப்பட்ட நார்தான் முக்கியமானது. அந்த மாதிரியான ஒரு கேரக்டர்தான்  ஏடிஎம். இந்தக் கேரக்டரை முதல் பாகத்தில் சீதா பண்ணினாங்க. இரண்டாம் பாகத்தில் இந்தக் கேரக்டரை சமுத்திரக்கனிக்குக் கொடுத்திருக்கேன். 'அப்பா’ படம் ஹிட்டாகி, ’ஆண் தேவதை’ படத்தில் அவர் கமிட்டான சமயத்தில்தான் இந்த கதையை அவர்கிட்ட சொன்னேன். 'அப்பா’, ’ஆண் தேவதை’னு ஹீரோவா நடிச்சுக்கிட்டு இருந்தவர்கிட்ட, வயசான ஆள் மாதிரி நடிக்கணும்னு சொல்றதுக்கே ஒரு மாதிரிதான் இருந்துச்சு. ஆனால், சமுத்திரக்கனி எதையும் யோசிக்காம ‘ஓகே நடிக்கிறேன்'னு சொன்னார். 'ஷூட்டிங் எப்போ’னு கேட்டவர், சம்பளத்தைப் பத்திப் பேசவே இல்லை. படத்தோட ஷூட்டிங் முடிஞ்சு, இந்தப் படம் வியாபாரம் ஆனதுக்குப் பிறகு, நானே ஒரு தொகையை அவருக்கு சம்பளமா கொடுத்தேன். அதுவரை அவர் சம்பளத்தைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசவே இல்லை. 

சமுத்திரக்கனிக்கு இந்தக் கேரக்டர் ரொம்பவே செட்டாகியிருக்கு. பொதுவா அவரோட படங்களில் ஆக்ரோஷமா வசனங்கள் பேசுற மாதிரிதான் பார்த்திருப்போம். இந்தப் படத்தில் அதிக தோல்விகளைச் சந்திச்சு அதனால ஏற்பட்ட அனுபவத்தை வைத்து ஹீரோ மூணு பேரையும் வழிநடத்துற சாதுவான கேரக்டர் அவருக்கு!’’

கோலி சோடா

அந்த மூன்று ஹீரோக்கள் யார்...?

’’ 'கடுகு’ படத்துல அனிருத் கதாபாத்திரத்தில் நடிச்ச என் தம்பி பரத் சீனியும் ஒரு ஹீரோ. ’கடுகு’ படத்தில் வேற ஒரு நடிகர் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தை வேற வழியில்லாம அவனை நடிக்க வெச்சேன். நல்லாவும் நடிச்சிருந்தான். சரி, இந்தப் படத்திலும் ஒரு ரோல் கொடுக்கலாம்னு அவனையும் நடிக்க வெச்சுட்டேன். இன்னொருத்தர், வினோத். அவர் லிங்குசாமியின் அண்ணன் பையன். ரொம்ப இயல்பா நடிச்சிருக்கார். பேஸ்கட் பால் விளையாடுற ஒரு இளைஞன் கதாபாத்திரத்துக்கு, நேஷனல் பேஸ்கட் பால் பிளேயர் இசக்கி பரத் நடிச்சிருக்கார். ’கடுகு’ படத்தில் நடிச்ச சுபிக்‌ஷா, சுசீந்திரனின் ’ஏஞ்சலினா’ படத்தில் நடித்திருக்கும் க்ரிஷா அப்புறம் ரக்‌ஷிதா; இவங்கதான் இந்த மூணு பேருக்கும் ஜோடியா நடிக்கிறாங்க. மலையாளத்தில் நடிகராகவும் எழுத்தாளராகவும் ஃபேமஸா இருக்கிற செம்பன் ஜோஸ், இந்தப் படத்தில் மெயின் வில்லனா நடிச்சிருக்கிறார். நடிகர்களுக்கு அடுத்தபடியா இந்தப் படத்துக்கு முக்கியமான பில்லரா இசையமைப்பாளர் அச்சுவும், ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தரும் இருப்பாங்க. மலையாளத்தில் ஃபேமஸா இருந்த இசையமைப்பாளர் ராஜாமணியின் மகன், இந்த அச்சு. தமிழ்ல இன்னும் அவருக்கு ஒரு நல்ல பிரேக் கிடைக்கலை. கண்டிப்பா அது இந்தப் படத்தில் நடக்கும்னு நம்புறேன். 'கோலி சோடா’ முதல் பாகத்தோட சண்டைக்காட்சிகள் மாதிரியே இந்தப் படத்திலும் லைவ் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைச்சிருக்கார், சுப்ரீம் சுந்தர்.’’

தயாரிப்பாளரா ஒரு படத்தை எடுத்து, வெளியிடுவதில் என்னென்ன சிக்கல்கள் இருக்கு...?

’’இது ரொம்ப ட்ரையான டாப்பிக். ஏன்னா, எல்லாத் தயாரிப்பாளர்களும் ஒரே மாதிரிதான் புலம்பிட்டு இருக்கோம். புலம்புனா எதுவும் நடக்காது என்பதுதான் நிதர்சனம். இதுக்கு ஒரு தீர்வு இருந்தால்தானே அதைநோக்கி ஓட முடியும். இப்போ நாம ஒரு ட்ரான்ஸாக்‌ஷன் பீரியட்ல இருக்கோம். இன்னும் ஒரு ரெண்டு, மூணு வருடத்துல உங்க ஸ்மார்ட் போன்தான் ஸ்கிரீன். 1000 படம் பார்த்துட்டு இருந்த தியேட்டர்ல எப்படி 300 பேருக்கும் குறைவா வர ஆரம்பிச்சாங்களோ, அதேமாதிரி பெரிய ஸ்கிரீன்ல படம் பார்த்துட்டு இருந்த நீங்க இனிமேல் மொபைல்லேயே எல்லாப் படத்தையும் தரமான குவாலிட்டியில பார்க்கப்போறீங்க. விரிச்சுவல் ரியாலிட்டி எல்லாம் வந்துடுச்சுன்னா, கண்ணுகிட்டேயே படம் பார்க்கலாம். இப்படி ஃபுல்லா டிஜிட்டலுக்கு மாறிட்டு இருக்கு சினிமா. மக்களும் அதுக்கு ஏற்றமாதிரி மாறிட்டு வர்றாங்க. இதுல என்ன சிக்கல்னா, இந்த வசதிகள் எல்லாம் இனிமேல்தான் வரப்போகுது. நாம அந்த டிரான்சிஷன் பீரியட்ல சிக்கிக்கிட்டோம். இதெல்லாம் சரியாகுற வரை சிரமங்கள் இருக்கத்தான் செய்யும்.’’

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்