Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

``போராட்டமா.. இல்லை வெயிலுக்கு ஒதுங்கினீங்களா?" - திரைத்துறையினர் போராட்டம் குறித்து இயக்குநரின் கேள்வி

தமிழ்த் திரைப்படத்துறையின் அறவழி மெளனப் போராட்டம் இரு தினங்களுக்கு முன் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. ரஜினி, கமல், விஜய் உட்பட தமிழ்த் திரையுலகத்தைச் சார்ந்த பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தின் இறுதியில் சத்யராஜ் பேச வேண்டும் என்று விரைவில் வெளிவரவிருக்கும் `அடங்காதே' படத்தின் இயக்குநர் சண்முகம் முத்துசாமி உள்ளிட்ட நூற்றிற்கும் மேற்பட்டோர் முழக்கமிட, போராட்டக்களம் பரபரப்பானது. இதுகுறித்துப் பேச, முழக்கமிட்டவர்களில் ஒருவரான இயக்குநர் சண்முகம் முத்துசாமியைத் தொடர்புகொண்டோம். 

நடிகர் சங்க போராட்டம்

``சத்யராஜ் சார் எந்தவித இரட்டை வேடமும் போடாமல் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து வர்றார். எந்த மேடையிலும் மாத்திப் பேசலை. தமிழர்களுக்கு ஒரு பிரச்னைனா, தான் ஒரு நடிகர் அப்படீங்கிறதை மறந்துட்டு வந்து நிற்கிறார். நேரடியாகவும் மறைமுகமாகவும் நிறைய போராட்டங்கள்ல கலந்துக்கிறார், உதவிகள் செஞ்சுட்டு வர்றார். எந்த ஒரு அரசியல் எண்ணமும் இல்லாம தொடர்ந்து தமிழர்களுக்கான பிரச்னைகளுக்குக் குரல் கொடுத்துட்டு இருக்கிறதுனால, அந்தப் போராட்டத்துல அவரைப் பேசச் சொன்னோம். தமிழ்த் திரையுலகத்துல மொத்தம் 25,000 பேர் இருக்காங்க. மெளனப் போராட்டம் பண்ணலாம்னு சேர்த்து முடிவு எடுக்கலை. அடையாளப் போராட்டம்கூட காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைக்கும் நடக்கும். ஆனா, உலகத்திலேயே இப்படி ஒரு போராட்டம் நடத்துறது புது வகையான போராட்டமா இருக்கு. வெயிலுக்காக இப்படிப் பண்றாங்களானு தெரியலை. எந்தப் பின் விளைவையும் ஏற்படுத்தாமல் இது என்ன போராட்டம்னு எனக்குப் புரியலை. ஒரு போராட்டம் பண்ணினால், அதைப் பார்த்து அரசு பயப்படணும், பேச்சு வார்த்தைக்கு வரணும். இந்தமாதிரி ஏதோ ஒரு பின்விளைவை ஏற்படுத்தணும். அதை மக்கள் விரும்பணும். இந்தப் போராட்டத்தின் மேல கவனம் குவியணும். அதுதான் ஒரு போராட்டம் நடத்துறதுக்கான முக்கியம் நோக்கம். 11.30 மணிக்குத்தான் சிலபேர் வர்றாங்க, 1 மணிக்குப் போராட்டத்தை முடிச்சிட்டாங்க. கேட்டா, `ஒரு மணி வரைக்கும்தான் அனுமதி கொடுத்திருக்காங்க'னு சொல்றாங்க. ஒரு மணி வரைக்கும்தான் அனுமதி கொடுக்குறாங்கனா, ஏன் போராட்டம் பண்ணணும்? ஆறு மணி வரை கொடுக்கும்போது, போராட்டம் பண்ணுங்க. அதுமட்டுமல்லாமல், அனுமதி வாங்கிட்டுதான் போராட்டம் பண்ணணும்னா, அதுக்குப் பேர் போராட்டமே கிடையாது. அவங்க சொல்றதை நாம கேட்கணும்னு அர்த்தம். அதேமாதிரி, அவங்க தண்ணி தரமாட்டேன்னு சொல்றதையும் கேட்டுக்கோங்க. 

இயக்குநர் சண்முகம் முத்துசாமி

இது அரசுக்கு எதிரான போராட்டம். அதுல எப்படி அவங்க சொல்றமாதிரி நடந்துக்கணும்? நான் பெருசா இருக்கும்னு நினைச்சு வந்தேன். இங்கே வந்தா, மெளனப் போராட்டம்னு சொல்லிட்டாங்க. மெளனப் போராட்டம்னா, வாய்ல துணியைக் கட்டி மத்திய அரசு எங்களை அடக்குதுனு அடையாளப் படுத்தியிருக்கணும். அரசாங்கத்தைக் கேட்டுதான் நாம போராட்டம் நடத்தணும்னா, நாம அரசாங்கத்தோட அடியாள்; போராளி கிடையாது. ரஜினி சார் வரும்போதே, `காவிரி வேணும்'னு பேட்டி கொடுத்துட்டு வர்றார். இந்தப் போராட்டத்தை அவங்கெல்லாம் சேர்ந்துதானே நடத்துறாங்க. அப்புறம் ஏன் மத்தவங்களைப் பேசவிடலை, மக்கள் உயிரோட இருந்தால்தான் நாம எடுக்குற படத்தைத் தியேட்டருக்கு வந்து பார்ப்பாங்க. அவங்களுக்காகத்தான் படம் எடுக்குறோம். அவங்களுக்கு ஒண்ணுன்னா, வந்து நிற்கிறதுல என்ன பிரச்னை, அவங்களுக்காகக் கேள்வி கேட்கிறதுல என்ன பிரச்னை... அது நம்மளோட தார்மிகக் கடமை. மக்கள் நல்லா இருந்தால்தான், நாம நல்லா இருக்க முடியும். இப்போ தமிழர்களுக்காக தமிழர்களின் உரிமை காக்கப்படுவதற்காக, `தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை' என பாரதிராஜா, சத்யராஜ், செல்வமணி, அமீர் என முன்னணி சினிமா பிரபலங்கள் இணைந்து தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது, மகிழ்ச்சிக்குரியது. தொடர்ந்து தமிழர்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்போம்!" என்கிறார், சண்முகம் முத்துசாமி. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement