Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கப்பேனா... மகனின் டாட்டூ... திரைப் பிரபலங்களின் வாழ்த்து..! - விழாவில் நெகிழ்ந்த விஜயகாந்த்! #40YearsOfVijayakanth

கலைத்துறையில் விஜய்காந்துக்கு இது 40-வது ஆண்டு. இதை தேசிய முற்போக்கு திராவிட கழகம் கொண்டாட முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகள் நடந்துவந்தன. இந்நிலையில், நேற்று (15.4.2018) காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் இந்த விழா நடைபெற்றது. கோயில், சர்ச், மசூதி என மூன்று தோரண நுழைவு வாயில் அமைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தபடி உள்ளே சென்றேன். உள்ளே போனதும், சிறுசிறு கடைகள் அதில் விஜயகாந்த் படங்கள், தே.மு.தி.க கொடிகள், கையில் கட்டும் பேண்டுகள் என திரும்பிய இடமெல்லாம் சிவப்பு, மஞ்சள், கறுப்பு என்ற இந்த மூன்று நிறங்களைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை. `யக்கா.! கேப்டன் முகம் போட்ட பேட்ச் கொடுக்கா..' என்று ஒருவர் சொல்ல, `யக்கோய்.. எனக்கு நரசிம்மா படத்துல வர்ற கேப்டன் போட்டோ வேணும்' என்று அடுத்தடுத்து அந்தக் கடைகளின் முன் பேசிக்கொண்டிருந்தனர். பாராட்டு விழாவா தே.மு.தி.க மாநாடா என்பதுபோல மக்கள் கூட்டம் அலைமோதியது. மேடையை தலைமைச் செயலகத்தைப்போல் அமைத்திருந்தார்கள். 'சொக்கத்தங்கமே!, கள்ளழகரே!, வல்லரசே!' என்று இவர் படங்களின் பெயர்கள் வைத்த கட் அவுட்டுகள் இடத்தை அலங்கரித்தன. பல ஊர்களில் இருந்து மக்கள் வந்துள்ளதால், அவர்களை மகிழ்விக்க பட்டிமன்றம் முதலிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அவர்களோ, 'அஞ்சும் அஞ்சும் பத்து, நம்ம கேப்டன்தான் கெத்து..', 'மதுரைன்னா மல்லி, கேப்டன்னா கில்லி' என 'கலக்கப்போவது யாரு' பஞ்ச்களை மேடையில் அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள். 

கேப்டன் விஜயகாந்த்

மேலும் படங்களைக் காண... 

அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்தபிறகு, 'ஹே... கேப்டன் வரப்போறார்டா... இன்னைக்கு நாம கேப்டனை பாக்காம போகக்கூடாதுடா. மச்சான் ! நீ ஃபேஸ் புக் லைவ் போடுடா. நம்ம எங்க இருக்கோம்னு நம்ம பங்காளிகளுக்கு காமிக்கலாம்' என்றபடி ஃபேஸ் புக் லைவை ஆன் செய்து கூட்டத்தைச் சுற்றிக் காமிக்கின்றனர் அந்த இளைஞர்கள். விஜயகாந்த்தின் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்க, திரைத்துறை பிரபலங்கள் ஒவ்வொருவராக வந்து மேடையில் அமர்ந்து கொண்டிருந்தனர். விஜயகாந்த் வந்தவுடன் விழா கோலாகலமாகத் தொடங்கியது. 

விழாவில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், "நட்பு, அன்பு, மரியாதை, நன்றி, மனிதம் இது எல்லாத்துக்கும் அர்த்தம் விஜயகாந்த்தான். என் மகனை நடிகனாக்கணும்னு ஆசைப்பட்டவுடனே, 'நாளைய தீர்ப்பு'னு படம் எடுத்தேன். அது சரியா போகலை. அடுத்து, அவரை எப்படியாவது நடிகனாக்கிடணும், விஜயகாந்த்தோட சேர்ந்து நடிச்சா நடிகனாகிடுவார்ங்கிற ஆசையில இவருக்கு போன் பண்ணி ஒரு அஞ்சு நிமிஷத்துல வீட்டுக்கு வர்றேன்னு சொன்னேன். ஆனா, ரெண்டு நிமிஷத்துல அவர் என் வீட்டுக்கு வந்துட்டார். 'என் மகன் ஆசைப்பட்டான். அது  சரியா போகலை. ஒரு படம் உங்களோட அவன் நடிக்கணும்'னு நான் சொன்னவுடனே, 'எப்போ எங்கேனு சொல்லுங்க கண்டிப்பா பண்ணலாம்'னு சொன்னார். சரினு எவ்ளோ கொடுக்கணும்னு கேட்டேன். ஆனா, அவர் 'அதெல்லாம் ஒண்ணும் வேணாம். தம்பி நடிகனாகட்டும் அப்புறம் பார்த்துக்கலாம்'னு சொல்லிட்டார். அந்தப் படமும் ஹிட்டாச்சு. அதுக்கு பிறகு, என் மகன் வாழ்க்கையை அப்படியே போக ஆரம்பிச்சுடுச்சு. விஜய்யின் இன்றைய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போட்டதிலே விஜயகாந்த்துக்கு பெரிய பங்கு இருக்கு. அதுமட்டுமில்லாமல், தன்கூட வேலை பார்க்குறவங்களோட வளர்ச்சியைப் பார்த்து சந்தோஷப்படுவார். என் வாழ்க்கையில் மறக்க முடியாத நபர் விஜயகாந்த். இப்போ எல்லாம் ரெண்டு படம் ஹிட்டானால் எங்கேயோ போய் உட்கார்ந்திருக்காங்க. ஆனா, 80கள்ல பார்த்த விஜய்காந்தைத்தான் இன்னைக்கும் பார்க்குறேன். நானும் நீங்களும் சேர்ந்து ஒரு படம் பண்ணணும்" என்று சொன்னவுடனே, 'நான் தயாரிக்கிறேன்' என்று தாணு சொல்ல அரங்கம் அதிர்கிறது. 

விஜயகாந்த்

அதன் பின், விஜய்காந்தைப் பற்றிய வீடியோ தொகுப்பு ஒளிபரப்பப்பட்டது. அதில் 'வானத்தைப்போல' படத்தில் வரும் பேக் க்ரவுண்ட் மியூசிக்கை கேட்டவுடன் விஜய்காந்தின் கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது. இதைத் தொடர்ந்து, லண்டனில் இருந்து இவரது மகன் சண்முக பாண்டியன் தன் அப்பாவைப் பற்றி பேசி ஒரு வீடியோவை அனுப்பி வைத்துள்ளார். அந்த வீடியோவில், 'தன் அப்பாவைப் பற்றி பேசியவர், ஒரு சர்ப்ரைஸ் வெச்சிருக்கேன் என்று விஜயகாந்த் கண்களை தன் கையில் டாட்டூவாக போட்டு அதைக் காட்டினார். எனக்கு அப்பாவோட கண் ரொம்பவே பிடிக்கும். பவர்ஃபுல்லா இருக்கும். இப்போ அவர் கண் என் வாழ்க்கை முழுக்க என்கூடவே இருக்கும்" என்று நெகிழ்ந்தார்.  

நாசர் பேசுகையில், "அவர் ஆபீசுக்குப் போனா, சாப்பாடு கிடைக்கும்னு அங்கே போய் சாப்பிட்டிருக்கேன். சாப்பிடணுங்கிறதுக்காகவே அங்கே போயிருக்கேன். திரைப்படத்துறை மாணவர்களின் கல்விக்காக அவர் 'ஊமை விழிகள்' பண்ணிக்கொடுத்தார். அந்த ஒரு படம் வரவில்லை என்றால் திரைப்படக் கல்லூரிக்கான இரும்புக் கதவு உடைக்கப்பட்டிருக்காது. நடிகர் சங்கத்துக்காகாக இவர் செய்தது ஏராளம். அதுவரை ஒன்று சேராத நடிகர்களை ஒன்று சேர்த்து கலை நிகழ்ச்சிகள் நடத்தி கடனை அடைத்து சங்கத்தை மீட்டுக்கொடுத்தார். நானும் எங்கள் நிர்வாகமும் அந்த நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறோம் என்றால் அதற்கு விஜயகாந்த்தான் காரணம். ஒவ்வொரு முறை அந்த நாற்காலியில் அமரும்போதும், விஜய்காந்த்தைப் போல செய்ய முடியவில்லை என்றாலும் அதற்கு முயற்சி செய்வோம் என்ற பொறுப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது " என்றபடி விடைபெற்றார்.  

விஜயகாந்த்

"வெவ்வேறு திசையில் அரசியல் பயணங்கள் இருந்தாலும் ஒரு நல்ல மனிதருக்காக இங்கே வந்திருக்கேன். எனக்கு வாழ்வு தந்தவர் கேப்டன். கேப்டனை பத்தி மீம்ஸ் போட்டால் அதைப் பாக்காத ஒரு ஆள் சரத்குமார்தான். ஒரு சூழல்ல பெரிய கஷ்டம் எனக்கு வந்துச்சு. அடுத்து என்ன பண்ணப்போறோம்னு தெரியலை. கேப்டனோட மேக் அப் மேன் ராஜுதான் என்னை ராஜாபாதர் தெருவுக்கு கூட்டிட்டு போனார். அவர் படத்துல நடிச்சேன். படமெல்லாம் முடிஞ்ச பிறகு, என்னை கூப்பிட்டு இந்தப் படத்துக்கு உனக்குதான் பேர் வரும்னு சொன்னார். அதை எந்த ஹீரோவும் சொல்லமாட்டாங்க. 'கேப்டன் பிரபாகரன்' பண்ணும்போது கழுத்துல அடிபட்டிருந்துச்சு. வேற ஒருத்தவங்களா இருந்தா, இன்னொரு ஆளைப் போட்டு படத்தை முடிசுட்டு போயிடலாம். ஆனா, அவர் எனக்காக வெயிட் பண்ணார். ஒரு டைரக்டர் கதை சொல்லும்போது, உடனே, எனக்கு போன் பண்ணி, 'சரத் இந்த மாதிரி ஒரு கதை இருக்கு. உங்களுக்குச் சரியா இருக்கும்'னு சொல்லுவார். இதை யாரும் பண்ணமாட்டாங்க. நம்மகூட இருக்கவனும் வளரணும்னு நினைக்கிறாரே, அதுக்காகவே அவரை எப்போவும் மறக்கமாட்டேன். பலர் நல்லவங்க மாதிரி இப்போ நடிச்சிட்டு இருக்காங்க. அவங்க நல்லவங்க கிடையாது. வீரர்கள் இருக்கும்போது களத்துக்கு வராமல் வீரர்கள் இல்லாதபோது களத்துக்கு வர்றாங்க. எதிரே பலமான படை இருக்கும்போது போருக்குப் போக வேண்டும். அந்தப் படை வலிமை இழந்தபிறகு, போருக்குப் போனால் அவன் சிறந்த வீரனாக இருக்க முடியாது. நாம் ஒன்றுபடும்போது தமிழகம் சிறப்பாக இருக்கும். உடனே, சரத்குமார் விஜயகாந்துடன் கூட்டணினு எழுதிடாதீங்க. சொல்ல முடியாது காலத்தின் கட்டாயம் இருந்தாலும் இருக்கலாம். தமிழகத்துல வெற்றிடம் இருக்குனு சொல்றாங்க. வெற்றிடம் இல்லை. முதல்ல இருக்கவங்களை அடையாளம் காட்ட தெரிஞ்சுக்கோங்க. விஜயகாந்த்தை பத்தி மீம்ஸ் போட உங்களுக்குத் தகுதி இல்லை. வாழ்க கேப்டன்’' என்று சரத்குமார் பேசும்போது, இருவருக்குமான நட்பின் ஆழத்தை உணரமுடிகிறது. 

விஜயகாந்த்

அடுத்ததாக பேசிய சத்யராஜ், "திரையுலகில் அள்ளிக் கொடுத்தவர் புரட்சித் தலைவர் என்றால், அதைச் சொல்லிக் கொடுத்தவர் புரட்சிக் கலைஞர் விஜய்காந்த். இந்தியாவில என்ன பிரச்னைன்னாலும், முதல் நன்கொடை அவருடையதாதான் இருக்கும். அதற்கு உறுதுணையா இருப்பது பிரேமலதா விஜயகாந்த்தான். ஈழத்துல போர் உச்சத்துல இருக்கும்போது, மணிவண்ணன் கதையில ஒரு நாடகத்துல நடிச்சு பெரிய தொகையை வசூல் செஞ்சு கொடுத்தார். தன் மகனுக்கு பிரபாகரனுக்கு பேர் வெச்சாரே அதுதான் கெத்து. ஒருமுறை ரோட்டுல ஒருத்தன் சங்கிலி பறிச்சுட்டு ஓடிட்டான். உடனே, காரை நிறுத்திட்டு அவனைப் பிடிச்சு, அடிச்சு சங்கிலியை வாங்கிக் கொடுத்தார். எல்லாரும் தயங்குவாங்க. ஆனா, இவர்கிட்ட அந்தத் தயக்கம் இல்லை. நான் 'வள்ளல்'னு ஒரு படம் நடிச்சேன். ஆனா, கடன் பிரச்னையில வெளிவராமல் இருந்துச்சு. அதை தெரிஞ்சுகிட்டு, உடனே வாங்க அந்த பிரச்னையை முடிச்சிடுவோம்னு சொல்லிட்டு கூட வந்தார். சக போட்டியாளர் அப்படிங்கிறதைத் தாண்டி உதவி பண்ணும் மனப்பாங்கு உடையவர். சரத் சொன்னாரு மீம்ஸ் போடுறவங்களை பத்தி, அவங்களை விடுங்க பொடிப் பசங்க. ரசிகர் மன்றங்களை எப்படி மேம்படுத்தணும், ரசிகர்களை எப்படி அரவணைக்கணும்னு சொல்லிக்கொடுத்ததே விஜிதான். இப்படி ஒரு நண்பர் எனக்கு கிடைச்சதுல நான் ரொம்ப சந்தோஷப்படுறேன்" என்றார். 

விஜயகாந்த்

இதற்கிடையில் பேசிய 'உளவுத்துறை' பட இயக்குநர், ``சினிமா நாசமாகி இருக்கு கேப்டன். நீங்கதான் இதைச் சரிசெய்யணும்" என்று கண்கலங்கியபடி கூறினார். இவரைத் தொடர்ந்து, கேப்டன் பிரபாகரன் படத்தைப் பற்றியும், விஜயகாந்த்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்தும் பேசிய செல்வமணி, ``நடிகர் சங்கத்துக்கு ஒரு வேண்டுகோள் வைக்குறேன். நாங்க எல்லோரும் சேர்ந்து நேரு ஸ்டேடியத்துல பிரமாண்டமான விழாவா நடத்தணும்னு ஆசைப்படுறோம். அவங்கவங்க படம் நடிக்கிறது எங்களோட வேலைனு நினைக்கிறாங்க. அப்போ, எங்க இண்டஸ்ட்ரினு நின்னாங்க. இப்போ அப்படியான ஹீரோ இல்லாமல் போய்ட்டாங்க. பிரேமலதா மேடமுக்கும் ஒரு வேண்டுகோள். கேப்டனை வெச்சு மூணு மாசத்துல ஒரு படம் எடுக்கத் தயாரா இருக்கேன். ஒரு வாய்ப்பு கொடுத்தா கேப்டனை வேற மாதிரி காட்டுறேன்" என்றவுடன் மக்கள் கரகோஷம் ஆர்ப்பரிக்கிறது. 

விஜயகாந்த்

``கேப்டனோட கால்ஷீட் கேட்குறாங்க. அவரோட கால்ஷீட்டை கொடுக்கலாமா?'' என்று பிரேமலதா மக்களை பார்த்துக் கேள்வி எழுப்பியவுடன், `கொடுக்கலாம் கொடுக்கலாம்' என்று கோரஸாக ரிப்ளை வந்தது. ’’செல்வமணி, எஸ்.ஏ.சி சார் சொன்னதுபோல், மீண்டும் நடிப்பார். அவருக்கும் அதுதான் ஆசை. கலைத்துறைக்கு கேப்டன் எப்போதும் உறுதுணையாக இருப்பார். கலைத்துறையைக் காப்பாற்ற என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்வார்'' என்றார் பிரேமலதா. விஜயகாந்த் பேசும் போது, "எனக்குப் பதில் என் மனைவி பேசிட்டாங்க. நான் கண்டிப்பாக கலைத்துறையை வாழவைப்பேன். கலைத்துறைக்கு உறுதுணையாக நான் எப்போதும் நிற்பேன். எனக்காக இங்கு வந்த எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி" என்று சுருக்கமாக தன் உரையை முடித்துக்கொண்டார். பின், விஜயகாந்துக்கு தங்கப் பேனா வழங்கப்பட்டது. பிரமாண்டமாக நடந்த இந்த விழா முடிய 12 மணியானாலும் விஜயகாந்த் என்னும் ஒரு மனிதருக்காக  கூட்டம் கலைந்து செல்லாமல் களைகட்டியது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்