"அந்த `குச்சி குச்சி ராக்கம்மா’ பாட்டு எதுக்கு?" - இயக்குநர்களின் `பாலுமகேந்திரா' நினைவுகள் | Disciples of Balu mahendra shared their working experience on the inaugural function of balu mahendra library

வெளியிடப்பட்ட நேரம்: 15:32 (16/04/2018)

கடைசி தொடர்பு:17:41 (16/04/2018)

"அந்த `குச்சி குச்சி ராக்கம்மா’ பாட்டு எதுக்கு?" - இயக்குநர்களின் `பாலுமகேந்திரா' நினைவுகள்

பாலுமகேந்திரா நூலக தொடக்கவிழா சென்னை கவிக்கோ மன்றத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் நடிகை ரோகிணி, நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் ராம், விஜய், வெற்றிமாறன், சுப்ரமணிய சிவா, மீரா கதிரவன், எழுத்தாளர் பாமரன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். நூலக அமைப்பாளர் அஜயன் பாலாவை வாழ்த்தியும், இயக்குநர், ஒளிப்பதிவாளர் அமரர் பாலுமகேந்திரா உடனான அவர்களது நினைவுகளை விழாவில் பகிந்துகொண்டனர்.

பாலுமகேந்திரா நூலக தொடக்க விழா, சென்னை கவிக்கோ மன்றத்தில் சமீபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் நடிகை ரோகிணி, நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் ராம், விஜய், வெற்றிமாறன், சுப்ரமணிய சிவா, மீரா கதிரவன், எழுத்தாளர் பாமரன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். நூலக அமைப்பாளர் அஜயன் பாலாவை வாழ்த்தியும், இயக்குநர், ஒளிப்பதிவாளர் அமரர் பாலுமகேந்திராவுடனான அவர்களது நினைவுகளை விழாவில் பகிர்ந்துகொண்டனர். 

இயக்குநர் பாலுமகேந்திரா

விழாவில் முதலில் பேசிய இயக்குநர் விஜய், "ராம், வெற்றிமாறன் மாதிரி நானும் பாலுமகேந்திரா சாரிடம் உதவி இயக்குநராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஏனெனில், அவரின் உதவி இயக்குநர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

இயக்குநர் விஜய்

'மதராசப்பட்டினம்' படம் பார்த்தவுடன் பாலுமகேந்திரா சாரிடமிருந்து ஒரு லெட்டர் வந்தது. "நேரில் வா, சந்தித்துப் பேசுவோம் திரைப்படங்கள் பற்றி" என்று இருந்தது. அந்த லெட்டரை பெரிய பொக்கிஷமாக இன்னும் வெச்சிருக்கேன். நேரில் போனேன்... அங்கு ராம்,  வெற்றிமாறன் இருந்தார்கள். சினிமாவில் அடுத்து என்னவெல்லாம் செய்யலாம் என்று,  சினிமாவிற்குள் புதிதாக வந்த ஒரு 25 வயது ஆள் மாதிரிப் பேசினார்.  பிறகு, பப்ளிக் ஃபண்டிங்கல ஆளுக்கு  இரண்டு படம் பண்ண வேண்டும்; ஒரு பேங்க் மாதிரியான அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினார். இப்போது பேசுற பல விஷயங்களுக்கு அப்போதே விதையாய் இருந்தவர், பாலு சார். 75 வயது ஆனபோதுகூட அப்போதும் தான் சினிமாவில் சாதிப்பதற்கு இன்னமும் நிறைய இருக்கு என நினைத்தவர். அவருடன் சினிமா குறித்துப் பேசினால் பேசிக்கொண்டே இருக்கலாம். மாமனிதன் பாலுமகேந்திரா இறந்திருக்கலாம், ஆனால், பாலா, ராம், வெற்றிமாறன் ஆகியோர் மூலமாக இன்னமும் அவர் இயக்குநராக நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்."  என்று முடித்தார். 

இயக்குநர் மீரா கதிரவன்

இயக்குநர் மீரா கதிரவன் பேசுகையில், "பாலுமகேந்திரா சார் அலுவலகமே ஒரு நூலகமா இருக்கும். அவரே ஒரு நூலகம்தான். என்னுடைய 'மழை வாசம்' சிறுகதையை சீனுராமசாமி மூலம் அறிந்த பாலுமகேந்திரா சார், என்னை அழைத்துப் பாராட்டினார். எனது சிறுகதையைத் தொலைக்காட்சி தொடருக்காகப் பயன்படுத்திக்கொள்கிறேன் என்றார்.  நான் லோகிதாஸிடம் உதவி இயக்குநராக இருந்தேன். அப்போது, "மீரா இருக்கிறாரா?" என்று கேட்க,  தமிழ் குறைவாக அறிந்திருந்த லோகி சார் ஹீரோயின் என்று தவறாக  நினைத்துக்கொண்டு, "மீரா ஜாஸ்மீன் ஷூட்டிங் போயிருக்கு" என்று கூறியுள்ளார். பின்னர்தான், அவர் என்னை விசாரிக்கிறார் என்று தெரிந்துகொண்டு, போனை  என்னிடம் தந்தார், லோகி சார். பாலுமகேந்திரா சாரின் படங்களின் திரைக்கதைகளைப் புத்தமாக எழுதித்தரச் சொன்னார். அந்தப் புத்தக வெளியீட்டு விழாவில், எனது உதவி இயக்குநர் மீரா கதிரவன் என முதன்முறையாக பாலு சார் சொன்னது எனக்குப் பெருமையாக இருந்தது." என்றார்.

இயக்குநர் சுப்ரமணிய சிவா அவரைப் பற்றி பேசிக் கலகலத்தார். "பாலுமகேந்திரா உலகத்தில் நான் நேரடியாக வாழ்ந்ததில்லை. அவரை நான் ஆறு முறை சந்தித்திருக்கிறேன். தஞ்சையிலிருந்து இங்கு வந்துவிட்டேன். எப்படியாவது பாலு சாரிடம் சேர முடிவுசெய்து, அவர் வாக்கிங் செல்லும்போது அவரை ஃபாலோ செய்ய ஆரம்பித்தேன்.

இயக்குநர் சுப்ரமணிய சிவா

அவருக்கும் எனக்கும் ஒரு பத்து அடி இடைவெளி இருக்கும். அப்படித்தான் நடந்து வருவேன். ஒருநாள் நெஞ்சில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு,  'ஐயா, உங்களிடம் உதவி இயக்குநராகச் சேர வேண்டும்' என்று கேட்டுவிட்டேன். அவர், 'என் படம் என்ன பார்த்திருக்க?'னு கேட்டார். 

நமக்கு தெரிந்தது, 'மூன்றாம் பிறை'தானே? அதனால், 'மூன்றாம் பிறை' என்றேன். அவரோ, "மூன்றாம் பிறையா... வேற என்ன படம் பார்த்திருக்க.. இந்த வீடு, சந்தியா ராகம்...?" என இழுத்தார். நான் அப்படியே பார்த்தேன். நமக்கு அந்த மாதிரி படங்களைத் தேடுற அறிவு இல்லை. பாலு சார், 'என்னென்ன புத்தகம் படிப்ப?'னு கேட்டார். நான், 'சுஜாதா, புளிய மரத்துக் கதை' என்றேன். 'நீ இன்னும் நிறைய படிக்கணும், தேடணும்' என்றார்.

'திருடா திருடி' படம் எடுத்த பிறகு அவருக்குப் போட்டுக் காட்டினேன். 'நீ இன்னும் நல்லா எடுத்திருக்கலாம்'னு சொன்னார். 'யோகி' பட ஆடியோ ரிலீஸுக்கு அவரைக் கூப்பிடப் போனேன். அப்போ, 'நீ சினிமாவுல இருக்கலாம். ஆனா, நீ நிறைய படிக்கணும்'னு சொல்லி எனக்கு ஒரு புத்தகத்தைக் கொடுத்து, 'நீ உன் மாணவர்களையும் புத்தகங்கள் வாசிக்க வைக்கணும்'னு சொன்னார். அவர் கூறியதுதான், இன்றுவரை எனது அலுவலகத்தில் புத்தகங்கள் வாசிப்பும் அதைப்பற்றி விவாதிப்பதும் பழக்கமாக இருக்கிறது" என்று முடித்தார்.

இயக்குநர் ராம்

இயக்குநர் ராம் பேசுகையில், "மட்டகளப்பில் இருந்து கிளம்பி, புனேவில் சினிமாவை ஒரு பரிபூரணக் கல்வியாகக் கற்ற முதல் தமிழன் பாலுமகேந்திராவாகத்தான் இருக்க முடியும். எங்களுக்கு மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவிலிருக்கும் பலருக்கு சினிமா மொழியைக் கற்றுத்தந்தவர், அவர்தான். இயக்குநர் மகேந்திரனின் முதல் படத்தின் சினிமா மொழி அவருடையதுதான், மணிரத்னத்தின் முதல் சினிமா அவரிடமிருந்துதான் தொடங்கியது. தமிழ் சினிமாவுக்கு, 'சினிமா' என்ற கலையைக் கலையாகக் கற்றுத்தந்த ஒளிப்பதிவாளர், இயக்குநர் படத்தொகுப்பாளர் பாலுமகேந்திரா.

அவர் சொன்ன இலக்கியப் பரிட்சயம் என்பது, அவரது திரைப்படங்களில் இருந்தது. அவருடைய பெயரில் நூலகம் அமைப்பது சரியான விஷயம். அவரை சந்திப்பவர்களிடம் அவர் புத்தகங்களைத்தான் படிக்கச் சொல்லியிருக்கிறார். அவருக்கு 'கற்றது தமிழ்' படத்தைப் போட்டுக் காட்டும்போது, 'ஆசியாவின் மிகச்சிறந்த ஐந்து படங்களில் ஒன்று' என்றும், பிறகு 'தங்கமீன்கள்' பார்த்துவிட்டு 'கேவலமான படம்' என்றும் சொன்னார். அவருக்கு 'தரமணி'யைவிட 'பேரன்பு' படத்தைக் காட்ட முடியவில்லை என்றுதான் வருத்தம். படித்தவர்கள் சினிமாவுக்கு வேண்டாம் என்று சொன்ன காலகட்டத்தில், சினிமா மேடைகளில் இலக்கியத்தைப் பற்றிப் பேசியது அவர் மட்டும்தான். தன்னால் ஒரு அரசியல் படம் எடுக்க முடியவில்லையே என்று அவர் வருத்தப்பட்டதுண்டு. ஆனால், அவர் எடுத்த உச்சகட்ட அரசியல் படம், 'வீடு'. மட்டக்களப்பிலிருந்து சென்னைக்கு வந்து பாஸ்போர்ட் இல்லாமல் ஒரு அகதியாகவே இங்கே வாழ்ந்தவர் பாலுமகேந்திரா" என்றார் ராம்.  

இயக்குநர் ரோகிணி

ரோகிணி பேசுகையில், "பாலு சார் ஒரு சினிமா கலைஞன் மட்டுமின்றி, தன்னைச் சுற்றி இருப்பவர்கள் உலகத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், உலகத்திற்காக வாழவேண்டும் என்பதை ஆசைப்பட்டவராக, போதித்தவராக, வழிகாட்டியவராக இருந்தார். அவர் பேசும் வார்த்தைகளில் ஒன்றுகூட தேவையற்ற வார்த்தையாக இருக்காது. அவருக்குள் இருக்கும் எடிட்டர், வார்த்தைகளைப் பார்த்துப் பார்த்து வெளிவிடுவார். ஸ்கிரிப்டிலேயே எடிட் செய்ய வேண்டும் என்ற ஒரு விஷயத்தையும் அவர் கடைப்பிடித்து வந்தவர். வார்த்தைளையும், சிந்தனைகளையும் தேர்ந்தெடுத்து உபயோகிப்பவராகவே இருந்தார். 'பாம்பே' ரிலீஸான சமயம் அவரிடம் பேசும்போது, "நிலத்தைப் பற்றி பேசும்போது, ஒரு பிரச்னையைப் பற்றிப் பேசும்போது, 'குச்சிகுச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்' பாட்டு வேண்டுமா?" என்ற விமர்சனத்தோடுதான் அவர் பேசினார். நீங்கள் ஏன் உங்கள் நிலம் சார்ந்த பிரச்னைகள் பற்றிப் படம் எடுக்கவில்லை... என்ற கேள்விக்கு, 'என்னால் எடுக்க முடியவில்லை' என மிகவும் வருத்தப்பட்டார். அவர் இருந்திருந்தால், ஒரு நூலகத்தைத்தான் விரும்பியிருப்பார்." என்றார்.

எழுத்தாளர் பாமரன், பாலுமகேந்திராவுடனான தன் நினைவுகளைப் பகிர்கையில், "2006-ல் ஒரு நாள் பாலா போன் செய்து, 'தோழரே அப்பா கோவை வர்றார்; ஒரு மாசம் ட்ரீட்மென்ட்' என்றார். ஒரு மாத காலம் அவரோடு இருந்த பாக்கியத்தைப் பெற்றேன். ஒருநாள் சிகிச்சை மையத்தில் யாருக்கும் தெரியாமல் தலையில் ஸ்கார்ஃப் ஒன்றைக் கட்டிக்கொண்டு வெளியே படம் பார்க்கச் சென்றார். 'திருட்டுப் பயலே' படத்தைப் பார்த்துவிட்டு, அவர் புலம்பித் தள்ளிவிட்டார். அவருக்கு மீண்டும் முதலிலிருந்து சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது" எனச் சபையைக் கலகலப்பாக்கினார். 

எழுத்தாளர் பாமரன்

தொடர்ந்து பேசிய அவர், "மட்டக்களப்பு என்றவுடன் பாலுமகேந்திரா அவங்க அப்பாவைப் பற்றிப் பேசிய ஒன்று என் நினைவுக்கு வருகிறது. பாலுமகேந்திரா காதலிக்கும் விஷயம் தெரிந்துபோக, அவரது அப்பா சைக்கிளை எடுத்துக்கொண்டு அந்த பெண் வீட்டுக்கு முன் நிறுத்தி, டயரில் உள்ள காற்றைப் பிடுங்கிவிட்டு, அந்தப் பெண் வீட்டில், 'மகளே காற்று அடிக்கும் பம்பு இருக்கா?' எனக் கேட்டிருக்கிறார். அவரைப் பார்த்துவிட்டு வந்து பாலுமகேந்திராவிடம், 'மகனே நீ பார்த்த பெட்டை வடிவாகத்தான் இருக்கிறாள்' என்றாராம். அந்த ஒரு மாதம் அவர் பேசிய புத்தகங்கள், படங்கள் எனப் பொக்கிஷமாக என்னில் பல விஷயங்கள் உள்ளன" என்றார்.

வெற்றிமாறன் பேசுகையில், அவர் "ஃபாதர் ராஜநாயகத்திடம் பாலுமகேந்திரா 'நல்லா தமிழ் தெரிந்த பசங்களை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்; யாராவது இருந்தால் சொல்லுங்கள்" என்றுகூற, ஃபாதர் என்னிடம் இதைச் சொன்னார். "எனக்குத் தமிழ் தெரியும்; நான் போய் பார்க்கிறேன்" என்றேன். பாலு சாரை பார்த்துப் பேச ஆரம்பித்தேன். "தமிழில் என்ன படிச்சிருக்க" என்றார். நான், 'தமிழ்ல ஏதும் படித்ததில்லை' என்றேன். 'நான் எப்படி உன்னை சேர்த்துக்கொள்ள முடியும், நான் தமிழ் இலக்கியம் படித்தவர்தான் வேண்டும் எனக் கேட்டிருந்தேன். சரி, இங்கிலீஷில் என்னென்ன படிச்சிருக்க?' என்றார். நான் சொல்லிக்கொண்டே இருந்தேன். என்ன பிடித்தது என்று தெரியவில்லை, என்னை உதவியாளனாகச் சேர்த்துக்கொண்டார்.

வெற்றிமாறன்

'மோகமுள்' புத்தகத்தை எடுத்துக் கொடுத்து, "இதைப் படித்துவிட்டு சேப்டர் வாரியாக 'சினாப்சிஸ்' எழுதிட்டு நாளைக்கு வா' என்றார். நான் ஒருவாரம் கழித்து எடுத்துச்சென்றேன். அதை ஓரமாக வைத்துவிட்டு, இன்னும் நான்கு புத்தகங்களை எடுத்துக்கொடுத்து 'சினாப்சிஸ்'  எழுதச் சொன்னார். நாம் இப்படி எழுதுவதை அப்படியே தூக்கிப் போட்டுடுவார். நமக்கு அதுதான் ரொம்பக் கஷ்டமா இருக்கும். மூன்று வருடம் கழித்து எப்போவாவது ஒரு புக் தேடும்போது கசங்கி, மங்கிப்போய் இந்த சினாப்சிஸ்கள் கையில் சிக்கும். இன்னும் கொஞ்சம் தேடினால் 15 வருடத்துக்குமுன் அறிவுமதி எழுதியது கையில் சிக்கும். அந்த சினாப்சிஸ்கள் அவருக்கு அல்ல; நமக்கான பயிற்சி என்று  பின்புதான் தெரிந்தது.     

அதுபோல, புக் வாங்கச் செல்லும்போது அவர் இரண்டு மூன்று காப்பி இருந்தாலும் புத்தகங்களை அள்ளிப் போட்டுக்கொண்டே இருப்பார். நான், 'சார் இது ஏற்கெனவே இரண்டு இருக்கு' என்றால், 'நான் எனக்கு மட்டுமா வாங்குகிறேன். எல்லாருக்காகவும் சேர்த்துத்தான் வாங்குகிறேன்' என்பார். அவரிடம் இருக்கும் புத்தகங்களில், எல்லாப் புத்தகங்களையும் அவர் படித்ததில்லை. அதைப் பற்றிக் கேட்டால், 'எல்லா புக்கையும் படிக்கணும்னு அவசியம் இல்லை; ஆனால், புக் இருக்கணும். அப்போதான், எப்போ தேவையோ எடுத்து படிக்க முடியும். உங்களுக்கு வேணும்னா, நீங்களும் படித்துக்கொள்ளலாம்' என்பார். ஆனால், ரேக்கில் பூட்டி வைத்துக்கொள்வார். நாம் புத்தகம் கேட்டால், அவர் கையிலிருக்கும் புத்தகத்தைக் கொடுத்து, 'படி' என்பார்!" என சிரித்துக்கொண்டே தொடர்ந்தார்.

"ஒரு ஆசனாக,  அவர் நம்மை நாமே அறிந்துகொள்ளச் செய்வார். அதனால்தான் அவருடைய உதவி இயக்குநர்கள் யாரும் ஒருவர்போல இன்னொருவர் படம் எடுக்க மாட்டார்கள். புத்தகங்களைப் பற்றிய ஆர்வம் அதிகம் உடையவர். நிறைய உதவி இயக்குநர்கள் அவருடன் வேலை செய்யவில்லை என்றாலும், புத்தகத்தைப் பற்றி மணிக்கணக்கில் பேசுவார்கள். அவரை அரங்கில் பார்க்க புத்தகங்கள் பெரிய யுக்தியாக இருந்தன" என்று முடித்தார்.

சத்யராஜ்

இறுதியாகப் பேசிய சத்யராஜ், "எல்லாப் பிள்ளைகளையும் உருப்புட வைத்த தகப்பன் பாலுமகேந்திரா என்று கவிதை பாடப்பட்டது. அவர் அவருடைய பிள்ளைகள் மட்டுமின்றி,  பிற பிள்ளைகளையும் உருப்புடச் செய்தார். அவருடைய இயக்கத்தில் நான் நடித்ததில்லை. நான் அவர் ஒளிப்பதிவு செய்த 'உறங்காத நினைவுகள்' படத்தில் நடித்தேன். அப்படி நடிக்கும்போதே நடிப்பதற்கான எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தார். 'உறங்காத நினைவுகள்' படத்துக்குப் பிறகு அவர் 'மூடுபனி', 'மூன்றாம் பிறை' எனப் பல படங்கள் எடுத்துக்கொண்டே போனார். கமலுடன் நான் நடிக்கும்போதெல்லாம், 'நீங்கள் பாலும்கேந்திராவுடன் ஒருபடம் நடிக்க வேண்டும்' எனச் சொல்லிக்கொண்டே இருப்பார். அப்படி ஒருநாள் பாலுமகேந்திரா போன் செய்தார். 'சத்யராஜ் நாம படம் பண்ணனும்'னு சொன்னார். பல காரணங்களால் அந்த வாய்ப்பு அமையவில்லை. அவருடைய படத்தில் நடித்து அவரது பாராட்டுகளைப் பெற வேண்டும் என்று எண்ணியிருந்தபோதுதான், தங்கர் பச்சான் இயக்கத்தில் நான் நடித்த 'ஒன்பது ரூபாய் நோட்டு' படத்தைப் பார்த்துவிட்டு என்னை ஆறத்தழுவி பாராட்டினார். அவர் கண்கள் கலங்கியிருந்தது. அது உண்மையான பாராட்டு எனப் புரிந்துகொண்டேன். எனக்கு அதைவிடப் பெரிய விருது வேறெதும் கிடையாது" என்று நெகிழ்ந்தார், சத்யராஜ்.

இவர்களது ஒவ்வோரு பகிர்வும் பாலுமகேந்திரா என்ற மகா கலைஞன் எப்படி வாழ்ந்தார் என்பதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. 


டிரெண்டிங் @ விகடன்