``ஸ்டிரைக் அறிவிப்பு தொடங்கி, புதுப்படங்கள் ரிலீஸ் அறிவிப்பு வரை... தமிழ் சினிமாவில் என்னென்ன நடந்தது?"

தமிழ்சினிமா ஸ்டிரைக் அறிவிப்பில் தொடங்கி, வழக்கம்போல மீண்டும் திரைத்துறை இயங்கும் என்ற நேற்றைய அறிவிப்பு வரை... இந்த 48 நாட்களில் இவையெல்லாம்தான் நடந்தன.

``ஸ்டிரைக் அறிவிப்பு தொடங்கி, புதுப்படங்கள் ரிலீஸ் அறிவிப்பு வரை... தமிழ் சினிமாவில் என்னென்ன நடந்தது?

கடந்த 48 நாள்களாக ஏராளமான பிரச்னைகள், பல ஆலோசனைக் கூட்டங்கள், எண்ணற்ற விவாதங்கள், செய்தியாளர் சந்திப்புகள் என லைம் லைட்டிலேயே இருந்தது, சினிமா ஸ்டிரைக். தயாரிப்பாளர் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், கியூப் நிறுவனம் எனப் பலர் சம்பந்தப்பட்ட இந்த வேலைநிறுத்த அறிவிப்பில் தொடங்கி, வழக்கம்போல மீண்டும் திரைத்துறை இயங்கும் என்ற நேற்றைய முடிவுவரை... கடந்த 48 நாள்களில் இவையெல்லாம்தான் நடந்தன.

சினிமா ஸ்டிரைக்

பிப்ரவரி 24 :  கியூப், யூ.எஃப்.ஓ போன்ற டிஜிட்டல் நிறுவனங்கள் வசூலிக்கும் அதிக கட்டணத்தைக் கண்டித்து  மார்ச் 1-ம் தேதி முதல் தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய எந்தப் புதிய திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகாது என நான்கு மொழிப் படங்களின் தயாரிப்பாளர் சங்கங்கள் கூட்டாக முடிவு செய்தார்கள். பிரச்னைக்கான பேச்சுவார்த்தையில் தயாரிப்பாளர்களுக்குச் சாதகமான முடிவுகள் எட்டவில்லை என்பதால், எடுக்கப்பட்ட முடிவு இது. 

மார்ச் 1 : தயாரிப்பாளர்கள் செலுத்தி வந்த VPF கட்டணத்தை இனி செலுத்துவது இல்லை, இதுதொடர்பாக இனி திரையரங்க உரிமையாளர்களிடம் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும், புரொஜக்டர் போன்ற கருவிகளை வைத்துகொள்ள வேண்டும். அந்தத் திரையரங்குகளுக்கு மட்டுமே திரைப்படங்களை வெளியிடுவது ஆகியவை முடிவெடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கைகளுக்கு ஆதரவு வேண்டுமாறு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ்நாடு இயக்குநர் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகளிடம் கேட்கப்பட்டது.

மார்ச் 8 : தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் பேச்சுவார்த்தை கூட்டம் சென்னை ரோகிணி திரையரங்கில் நடைபெற்றது. அதில், "தமிழகத்தில் மட்டும் உள்ள 8% கேளிக்கை வரி முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். இருக்கைகளைக் குறைக்க அனுமதிக்கவும், லைசன்ஸ் புதுப்பிக்கும் முறையை ஒரு வருடத்திலிருந்து 3 வருடமாக உயர்த்த வழிவகைசெய்ய வேண்டும், ஆகிய கோரிக்கைகளை அரசு ஏற்கெனவே ஒப்புக்கொண்ட அடிப்படையில் அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். இதுதொடர்பாக அமைச்சரை சந்தித்துப் பேச உள்ளோம். ஒருவார காலத்துக்குள் இந்த அரசாணை பிறப்பிக்காத பட்சத்தில், மார்ச் 16-ம் தேதி முதல் கோரிக்கை நிறைவேறும் வரை திரையரங்குகளை மூடுவது என முடிவெடுத்துள்ளோம்" என்றனர்.

சினிமா ஸ்டிரைக்

மார்ச் 14 : படத்துக்குத் தகுந்தாற்போல டிக்கெட் விலையை நிர்ணயிக்க வேண்டும், ஆன்லைன் டிக்கெட் கட்டணத்தைக் குறைக்க வேண்டும், திரையரங்கு டிக்கெட் விற்பனை மையங்கள் கணினி மயமாக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. மார்ச் 16-ம் தேதி முதல் சென்னையிலும் மார்ச் 23-ம் தேதி முதல் வெளியூரிலும் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தனர்.      

மார்ச் 15 :  சென்னை நகர திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தமிழ்நாடு மல்டிபிளெக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் சங்கக் கூட்டத்தில், ``மார்ச் மாதம் 16-ம் தேதி முதல் சென்னையில் திரையரங்குகளை மூடமாட்டோம். ஸ்டிரைக்கில் கலந்துகொள்ளமாட்டோம். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், ஆங்கிலம் என மற்ற மொழிப் படங்களாக இருந்தாலும், பொதுமக்களின் பொழுதுபோக்குக்காகத் திரையிடத் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்'' என்று அறிவித்தனர். 

மார்ச் 16 : திரையரங்க உரிமையாளர்கள் சார்பாக சில கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றைத் தமிழக ஆளுநரை சந்தித்து, திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் கொடுத்தனர். ``தமிழ் திரைப்படத் துறையின் நலனுக்காகவும், அதை சீரமைப்பதற்காகவும் தயாரிப்பாளர் சங்கம் எடுத்திருக்கும் முடிவுகளுக்கு நாங்கள் ஒத்துழைப்பு கொடுக்க முடிவெடுத்துள்ளோம். இந்தப் பிரச்னைகளை சரிசெய்ய அரசாங்கம் ஒரு கார்ப்பரேஷன் அமைக்க வேண்டும். தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், நடிகர்கள், தொழிலாளர்கள் என சினிமாவின் அனைத்து துறையைச் சார்ந்தவர்களும் அதில் இருக்க வேண்டும். யாருக்கும் பிரச்னை வராமல் இந்தத் தொழிலை நடத்த அரசாங்கம் வழி செய்ய வேண்டும்" என்றது, ஃபெப்சி அமைப்பு. 

விஷால்

மார்ச் 21 : தயாரிப்பாளர் சங்கம் இயக்குநர்கள் சங்கத்துடன் ஆலோசனை நடத்தியது. 

மார்ச் 22 : அபிராமி ராமநாதன் உள்ளிட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு மற்றும் கே.சி.வீரமணியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளதாகவும்,  மார்ச் 23-ம் தேதி முதல் தமிழக திரையரங்குகள் அனைத்தும் செயல்படும் என்றும் தெரிவித்தனர்.  

மார்ச் 30 : ஆன்லைன் கட்டணம், திரையரங்க டிக்கெட் கட்டணத்தை முறைப்படுத்துதல், தயாரிப்பாளர் சங்கமே படத்தை மாஸ்டரிங் செய்து தருவது, வசூலில் வெளிப்படைத்தன்மை போன்ற கோரிக்கைகளுடன், சினிமாவுக்குத் தனி வாரியம் அமைக்கவும் ஏப்ரல் 4-ம் தேதி கோட்டையை நோக்கிப் பேரணியாக செல்லத் திட்டமிட்டுள்ளோம் என்று விஷால் தெரிவித்தார்.

சினிமா ஸ்டிரைக்

ஏப்ரல் 2 : சினிமாதுறைக்குத் தனி வாரியம் அமைக்கப்படும். திரைத்துறை தொடர்பான பிரச்னைகள் முதலமைச்சர் பழனிசாமியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார். 

ஏப்ரல் 3 : ஒற்றைத் திரை (single screen) வசதியுள்ள திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுடனும்   விஷாலுடனும் சினிமாத்துறைப் பிரச்னை குறித்து ஆலோசித்தனர்.

ஏப்ரல் 7 : தயாரிப்பாளர் சங்கத்துடன் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மற்றொரு டிஜிட்டல் சர்வீஸ் புரொவைடர் நிறுவனமான ஏரோக்ஸ் டிஜிட்டல் சினிமாஸ் (Aerox digital Cinemas) நிறுவனம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தில் 50 % குறைத்து வி.பி.எஃப் கட்டணத்தை வசூலித்துக்கொள்வதாக, தயாரிப்பாளர் சங்கத்துடன் ஒப்பந்தம் போட்டது.  

மைக்ரோ ப்ளக்ஸ்

ஏப்ரல் 10 : தயாரிப்பாளர் சங்கமே சொந்தமாக 'மாஸ்டரிங்' பணிகளை மேற்கொள்ள டிசிஐ தரம் பெற்ற 2K, 4K புரொஜெக்டர்கள் மற்றும் சர்வர்கள் வழங்கிவரும் கோவையைச் சேர்ந்த மைக்ரோ ப்ளக்ஸ் நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

ஏப்ரல் 11 : ஏப்ரல் 17-ம் தேதி தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் கியூப் நிறுவனத்தினர் பங்குபெரும் முத்தரப்புப் பேச்சுவார்த்தையை நடத்த தமிழக அரசு அழைப்பு விடுத்தது. 

ஏப்ரல் 13 : ஸ்டிரைக் முடியாமல் படங்களை ரிலீஸ் செய்வது ஏற்புடையதாக இருக்காது எனத் தயாரிப்பாளர் சங்கம் திட்டவட்டமாகக் கூற, 'மெர்குரி' படம் தமிழ்நாட்டைத் தவிர்த்து உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்ய முடியவில்லை என கார்த்திக் சுப்புராஜ் வருத்தம் தெரிவித்தார்.

விஷால் - ராமநாதன் - கடம்பூர் ராஜு

ஏப்ரல் 17 : தமிழக அரசுடனான பேச்சுவார்த்தைக்குப்பின் இதுகுறித்துப் பேசிய விஷால், ``படத்தின் வசூலில் வெளிப்படத்தன்மையைக் கொண்டுவர தியேட்டர்களில் கம்ப்யூட்டர் பொருத்தப்படும், படங்களுக்குத் தகுந்தாற்போல டிக்கெட் விலை நிர்ணயிக்கப்படும், ரிலீஸ் தேதியில் ஒழுங்குமுறை பின்பற்றப்படும், ஆன்லைன் புக்கிங் வசதிக்கு தயாரிப்பாளர் சங்கமே இணையதளம் தொடங்கும் போன்ற பல முடிவுகள் எடுக்கப்பட்டன. ஒரு வாரத்துக்கு 9,500 ரூபாயாக இருந்த வி.பி.எஃப் கட்டணம் 5,000 ரூபாயாகவும், வாழ்நாள் வி.பி.எஃப் கட்டணம் 22,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும் குறைக்கப்பட்டிருக்கிறது. உறுப்பினர்களுடன் கலந்துபேசி, படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பிக்கப்படும், எந்தத் தேதியிலிருந்து படங்கள் வெளியாகும் என்று முடிவெடுக்கப்படும்" எனத் தெரிவித்தார். 

ஏப்ரல் 18 : ``ஏப்ரல் 20-ம் தேதி முதல் படப்பிடிப்புகள் நடைபெறும், படங்களும் தியேட்டரில் ரிலீஸ் ஆகும். ஜூன் மாதத்துக்குள் திரையரங்குகள் முழுவதும் கணினிமயமாக்கப்படும், தயாரிப்பாளர் சங்கமே டிக்கெட் விற்பனை இணையதளத்தைத் துவங்கும். ஸ்டிரைக் சமயத்தில் அதிகம் விவாதிக்கப்பட்ட நடிகர்கள் சம்பளம்குறித்து, நடிகர்கள் சங்கக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்'' எனத் தெரிவித்தார், விஷால்.   

பல்வேறு விஷயங்களுக்குத் தீர்வு கிடைத்திருக்கிறது. பலகோடி ரூபாய் சினிமாத்துறைக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, நீண்டகாலப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கட்டும் என ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் போராடி வென்றிருக்கிறது. புதுப்படங்கள் வழக்கம்போல ரிலீஸ் ஆகும் என்பதால், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மகிழ்ச்சிதான். ஆனா, அவங்க மைண்ட் வாய்ஸ் என்னவோ, "எல்லாம் சரி... பார்க்கிங் கட்டணத்தையும், பாப்கார்ன் கட்டணத்தையும் சீக்கிரமா குறைங்கப்பா!" என்பதுதான். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!