Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

`` `நடிகர் செந்தாமரை, பொண்டாட்டியை ரோட்டுல விட்டுட்டார்'னு யாரும் சொல்லிடக் கூடாது!" - நடிகை கெளசல்யா

`பூவே பூச்சூடவா' சீரியலைத் தொடர்ந்து பார்த்து வருகிறவர்கள், அதில் வில்லத்தனங்களை அரங்கேற்றி வரும் யுவராணியைக்கூட மன்னித்துவிடுகிறார்கள். ஆனால், யுவராணிக்குத் தூபம் போட்டுக்கொண்டே இருக்கும் அவரின் அம்மா கௌசல்யாவை மன்னிக்கத் தயாராய் இல்லை. `கிழவிக்கு இந்த வயசுல வில்லத்தனத்தைப் பாருங்கய்யா' எனத் திட்டித் தீர்க்கிறார்கள். 72 வயதிலும் சுறுசுறுப்பாக நடித்துக்கொண்டு, மக்களிடம் திட்டும் வாங்கிக்கொண்டிருக்கிற கௌசல்யா யார் என்பது அந்த சீரியலில் உடன் நடிக்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் சிலருக்கே தெரியவில்லை.

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசனுடன் மேடை நாடகங்கள், ரஜினி, கமலுடன் அதிகளவில் படங்கள்... என ஒரு காலத்தில் பரபரப்பான நடிகராக இருந்து மறைந்த நடிகர் செந்தாமரையின் மனைவிதான் இந்தக் கௌசல்யா. சென்னை ஆழ்வார் திருநகரில் தனி ஆளாக வசித்துவரும் கௌசல்யாவின் வீட்டுக்குச் சென்றோம். வாசலில் பிரமாண்டமாக இருந்த செந்தாமரையின் புகைப்படம் நம்மை வரவேற்றது.

கௌசல்யா

 

``இறந்து 25 வருடம் ஆயிடுச்சு. ஆனா, இன்றைக்கும் நான் காலையில எழுந்தா முதல்ல வெளியே வந்து முகப்புல இருக்கிற இந்தப் போட்டோவுக்கு குட்மார்னிங் சொல்லிட்டுதான் பல் துலக்கவே போவேன். ஏன்னா, என்னைப் பொறுத்தவரை அவர் சாகலை, என்னோட வாழ்ந்துட்டுதான் இருக்கார். ஏதோ பைத்தியக்காரி மாதிரி பேசுறா கிழவினு நினைக்காத தம்பி. உண்மை அதுதான். உடம்புக்குதான் வயசாகும். மனசு இளமையானது. அதுல எண்ணம் நிரந்தரமானது" என்ற கௌசல்யா, 'அவரைப் பத்தி இன்றைக்கு இன்டஸ்ட்ரியில இருக்கிறவங்களுக்கு என்ன தெரியும்!' எனக் கேட்டுவிட்டுத் தொடர்ந்தார்.

''நான் எம்.ஜி.ஆர், நாடக மன்றத்துல இருக்க, அவர் சிவாஜி நாடகக் கம்பெனியில இருந்தார். 'சுமைதாங்கி'னு ஒரு நாடகம். அதுல நாங்க ரெண்டுபேரும் அண்ணன் தங்கையா நடிச்சோம். ஆனா, அவரை எனக்கு சுத்தமாப் பிடிக்காது. முரட்டுத்தனமா 'என்ன'னு அவர் கேட்டா, 'ம்ம்... விளக்கெண்ணெ'னு நானும் பதிலுக்கு முறைப்பேன். எங்களுக்குள்ள மோதலாவே போயிட்டிருந்ததைக் `காதல்'னு கண்டுபிடிச்சு கல்யாணம் செஞ்சு வெச்சிட்டாங்க, ஆர்.ஆர்.லலிதா. கல்யாணத்துக்குப் பிறகும்கூட எங்களுக்குள்ள முட்டல் மோதல் நீடிச்சது.

ஆனா, `திருடாதே' படம் ரிலீசான பிறகு எனக்கும் பல வாய்ப்புகள் வர, அவரும் சினிமாவுல பிஸியாகிட்டதால எங்களுக்குள்ள சண்டைபோடக்கூட நேரமில்லாம போச்சு. ஒருத்தரை ஒருத்தர் பார்க்கக்கூட நேரமில்லாம போயிட்டே இருந்ததால, அதுக்குப் பிறகு கிடைக்கிற கொஞ்ச நேரத்துல சண்டை போட்டுட்டு இருப்போம். பிறகு, பொண்ணு வந்துட்டா. நான், என் புருஷன், என் புள்ளைனு இருக்காம, மாமியார், என்னோட அக்கா, அவ பிள்ளைங்கனு கூட்டுக் குடும்பமாவே இருந்தோம். அவர் நல்லா சம்பாதிச்சுப் போட்டார்; நல்லா குடும்பத்தைக் கவனிச்சிக்கிட்டார். என்னை ராணி மாதிரி நடத்தினார்.

கௌசல்யா

உடனே வாழ்க்கையில கஷ்டமே படலையானு கேட்கக் கூடாது. அதெல்லாம் நிறையவே பட்டிருக்கோம். ஏன்னா, அவருக்குப் பொய் சொல்லப் பிடிக்காது. கட் அண்ட் ரைட்டாப் பேசுவார்; கட்சியில இருந்தார். இதெல்லாம் அவரோட சினிமா வாய்ப்புகளைக் காலி பண்ணுச்சு. எம்.ஜி.ஆர், சிவாஜியேகூட , `நாடகங்களோட இவனை நிறுத்திடணும்னுதானே நினைச்சாங்க. தவிர, தி.மு.க-வுல இருந்ததாலேயும் சிலர் இவரைக் கூப்பிடப் பயந்தாங்க. ஆனா, காசு பணத்தை வெச்சு சந்தோஷத்தை அளவிடமாட்டார். மனசளவுல என்னை ராணி மாதிரிதான் வெச்சிருந்தார். கல்யாணத்துக்குப் பிறகு நடிக்கப் போக வேண்டாம்னு சொல்லிட்டார். நானும் சரினு அவருக்கு ஆக்கிப் போட்டுக்கிட்டு, சந்தோஷமா குடும்பத்தைக் கவனிச்சுக்கிட்டு இருந்தேன். ரொம்பப் போட்டி பொறாமைகளைச் சந்திச்சுக்கிட்டே பல படங்கள்ல நடிச்சார். அதுல ரஜினி, சத்யா மூவிஸ், பாக்யராஜ்... இவங்களையெல்லாம் சும்மா சொல்லக் கூடாது. தங்களோட படங்கள்ல வெயிட்டான கேரக்டர்கள் பண்ண இவங்க தந்த இடமே இவரை மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்த்துச்சு. 

அதேபோல பாலச்சந்தரும் இவருக்குப் படங்கள் தந்து உயரே வரக் கை கொடுத்தார். ஏன் ஹீரோவாக்கூட `அந்த ஜூன் 16-ம் நாள்'ங்கிற படத்துல நடிச்சாரேப்பா!

கௌசல்யா

கடைசியில சாகுறப்போகூட அந்த உயிர் நடிச்சபடியேதான் போச்சு. 29 வருடம் அவரோட வாழ்ந்தேன். சாகுறப்போ வீடு, தோட்டம்னு எல்லாமே அவர் சேர்த்து வெச்சுட்டுதான் போனார். ஆனா, எதுவுமே எனக்குக் கிடைக்கலை; இதுதான் நிஜம். இதை நான் என்னனு வெளியில சொல்ல... `நடிகர் செந்தாமரை பொண்டாட்டியை ரோட்டுல விட்டுட்டுப் போயிட்டார்'னு அவருக்கு அவப்பெயர் கிடைக்கிறதை நான் விரும்பலை. அதேசமயம் புள்ளைங்க கைவிட்டுட்டாங்கனு என் வாயால சொல்ல விரும்பலை. உடம்புலேயும் மனசுலேயும் தெம்பு இருக்கிற வரை உழைச்சுச் சாப்பிடலாமேனுதான், இப்போ சீரியல்ல நடிக்க வந்துட்டேன். 

உண்மையிலேயே நாளைக்குச் சாப்பாட்டுக்கு என்ன வழிங்கிற நிலைமைதான். ஆனா, நான் கஷ்டப்படுறேன். எனக்கு உதவுங்கனு யார்கிட்டேயும் போய் நிற்க விரும்பலை. ஏன்... ஜெயலலிதா முதல்வரா இருந்தப்போ பொற்கிழி தர்றேன்னு கூப்பிட்டப்போகூட போகலையே நான்! அப்படிப் போனா, இறந்த பிறகு, நான் அந்த மனுஷனை அசிங்கப்படுத்துற மாதிரி ஆகிடும். அவரு கடைசியா போட்டிருந்த செருப்பை இப்போவரை வெச்சுக் கும்பிட்டுக்கிட்டு இருக்கேன். வேலை கொடுனு அதிகாரமாக் கேட்பேன். அதுக்கான சம்பளத்தை வாங்கி, பொங்கிச் சாப்பிட்டுட்டுப் போறேன். ஏதாவது நோய்வாய்ப்பட்டு படுத்துடக் கூடாதுங்கிற பயம் மட்டும் மனசுக்குள்ள இருக்கு. அதை அந்த ஆண்டவன்கிட்ட விட்டுட்டேன்'' என்றவர், 'டப்பிங் போகணும், கண்ணா கிளம்பட்டுமா' என அடுத்த வேலைக்கு ஆயத்தமானார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement