Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

``ரெண்டாவது படத்தை சஸ்பென்ஸா முடிச்சிட்டேன்; இது மூணாவது படம்!" - `மூடர்கூடம்' நவீன்

விஜய் ஆண்டனி படங்களில் அவருக்கு கெட்டப் சேஞ்ச் வைக்கிறாரோ இல்லையோ, கண்டிப்பாக படங்களின் பெயர்களை மட்டும் வித்தியாசமாக இருக்கும். 'அண்ணாதுரை' படத்துக்குப் பிறகு விஜய் ஆண்டனி நடித்திருக்கும் திரைப்படம், 'காளி'. ரிலீஸுக்கு ரெடியாக இருக்கும் இப்படத்தைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனி நடிக்கவிருக்கும் புதிய திரைப்பட அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 'மூடர்கூடம்' நவீன் இயக்கவிருக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டனி நடிக்க, 'அம்மா கிரியேஷன்ஸ்' சிவா தயாரிக்கவிருக்கிறார். படம் குறித்த அப்டேட்ஸ் குறித்துத் தெரிந்துகொள்ள, இயக்குநர் நவீனிடம் பேசினேன். 

மூடர்கூடம் நவீன்

'' மூடர்கூடம் படத்துக்குப் பிறகு ஏன் இவ்ளோ லேட்னு எல்லோரும் கேட்குறாங்க. ஆனா, நான் ரெண்டாவது படத்தை எப்போவோ எடுத்து முடிச்சிட்டேன். படம் சென்சாருக்குப் போகப்போகுது!" என சர்பிரைஸ் கொடுத்துப் பேசத் தொடங்குகிறார், நவீன். 

"என் ரெண்டாவது படத்தோட அப்டேட்ஸ் யாருக்கும் தெரியாது. ஏன்னா, அது கொஞ்சம் சஸ்பென்ஸாவே இருக்கட்டும்னு வெச்சிருந்தேன். முக்கியமா, இந்தப் படத்துல ஹீரோயினா நடிச்சிருக்கிற 'கயல்' ஆனந்திகிட்டேயும், 'இந்தப் படம் பத்தி யார்கிட்டேயும் வாயைத் தொறக்கக்கூடாது'னு ரொம்ப ஸ்ட்ரிக்டா சொல்லியிருந்தேன். நான் சொன்னதை அப்படியே ஃபாலோ பண்ணாங்க, கயல் ஆனந்தி. இந்தப் படத்தோட ஹீரோவா துரதிர்ஷ்டவசமா நானே நடிச்சிட்டேன். 

இதுவரைக்கும் எந்தப் படத்துலேயும் பார்க்காத கயல் ஆனந்தியை இந்தப் படத்துல பார்க்கலாம். ரொம்ப ஸ்டைலிஷான பிக்பாக்கெட் திருடியா இந்தப் படத்துல நடிச்சிருக்காங்க. இந்தப் படத்தோட ஷூட்டிங் முழுக்க முழுக்க வெளிநாடுகளில்தான் நடந்துச்சு. யுரோப்புல படத்தோட முக்கியமான காட்சிகளைப் படமாக்கியிருக்கோம். அதுவும் கப்பல், ரெயில்வே ஸ்டேஷன், ஏர்போர்ட்னு முக்கியமான காட்சிகளை லைவ் லொகேஷன்லேயே ஷூட் பண்னோம். ரொம்ப சவாலா இருந்தது, இந்தப் படம். முக்கியமான வில்லனா தயாரிப்பாளர் நந்தகோபாலன் நடிச்சிருக்கார். மத்தப்படி படத்துல நிறைய புதுமுகங்கள் இருப்பாங்க. 

ஃபேன்டஸி த்ரில்லர் ஜானர்ல எடுத்திருக்கோம். படத்தைப் பத்தி இவ்ளோ சொல்லிட்டேன். ஆனா, படத்தோட டைட்டில் மட்டும் என்னனு கேட்காதீங்க. அதை மட்டுமாவது சஸ்பென்ஸா வெச்சிருக்கிறேன். அதுக்காக, ரொம்ப பில்ட்அப் பண்றேன்னு நினைச்சுடாதீங்க. எல்லோருக்கும் தெரிஞ்ச ஈஸியான டைட்டில்தான் வெச்சிருக்கேன்'' இடைவெளி இல்லாமல் தன் இரண்டாவது படம் குறித்து சொல்லிமுடித்தார், நவீன்.  

விஜய் ஆண்டனி

"என் முதல் படத்துக்குப் பிறகு நிறைய ஹீரோக்கள் என்னைக் கூப்பிட்டு கதை கேட்டாங்க. அந்த சமயத்துல ரெண்டாவது படத்துல நான் பிஸியா இருந்ததுனால அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்த முடியலை. தவிர, அப்போ என் ரெண்டாவது படத்தோட சவுண்ட் டிசைனிங் வேலையும், விஜய் ஆண்டனியோட 'காளி' பட சவுண்ட் டிசைனிங் வேலையும் ஒரே ஸ்டூடியோவுல போய்க்கிட்டு இருந்துச்சு. ரெண்டு படத்துக்கும் சவுண்ட் டிசைனர், விஜய் ரத்தினம்தான்.

அப்போ விஜய் ஆண்டனிகிட்ட, ஸ்டூடியோவில் இருந்த சிலர், 'நவீன் சார் படம் செம்மயா வந்திருக்கு. வேற லெவல்ல, ஃபுல்லா ஃபாரீன் லொக்கேஷன்ல படமாக்கியிருக்காங்க'னு எக்கச்சக்கமா புகழ்ந்து பேசியிருக்காங்க. அப்போதான், விஜய் ஆண்டனி சாருக்கு டக்குனு அடுத்த படம் என்கூட பண்ணலாம்னு தோணியிருக்கு. உடனே, எனக்கு போன் பண்ணிப் பேசினார். ரெண்டுபேரும் நேரில் சந்திச்சுப் பேசினோம். விஜய் ஆண்டனி ரொம்ப கம்போர்ட் ஜோன்ல இருக்கக்கூடிய ஹீரோ.

அவரை இதுக்கு முன்னாடி நான் மீட் பண்ணிப் பேசுனது இல்லை. ஆனா, ஃபர்ஸ்ட் டைம் பேசுனப்போவே ரொம்ப க்ளோஸா பேசினார். ஏதோ ரொம்பநாள் பழகுன பழக்கம் மாதிரி இருந்துச்சு. முக்கியமா, விஜய் ஆண்டனி தன்னிலை உணர்ந்த மனிதர். அவரோட இடம் என்னனு அவருக்கு நல்லாவே தெரியும். ஒரு கிரியேட்டருக்குக் கொடுக்கவேண்டிய சுதந்திரத்தை அவர் புரிஞ்சு வெச்சிருக்கார். இயக்குநர்களுக்கு அது எப்பவுமே முக்கியம். இதுதான் விஜய் ஆண்டனியோட மிகப்பெரிய பலம்னு நினைக்கிறேன். அதனாலேயே, அவர்கூட சேர்ந்து வொர்க் பண்ணும்னு எனக்குத் தோணுச்சு. ஒரு ஆக்‌ஷன் ஸ்கிரிப்ட் சொன்னேன்; அவருக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது.  

என் ரெண்டு படத்தையும் நான்தான் தயாரிச்சேன். இதுவரைக்கும் தயாரிப்பாளர்கிட்ட கதை சொல்ல ரொம்ப அலைஞ்சதில்லை. ஆனா, இந்தப் படத்தை டி.சிவா தயாரிக்கிறார். என் ஸ்கிரிப்ட் தெரிஞ்ச நண்பர் ஒருத்தர், சிவா சார்கிட்ட வொர்க் பண்றார். அவர்தான், 'இந்தக் கதையை சிவா சார்கிட்ட சொல்லிப் பாருங்க. கண்டிப்பா அவருக்குப் பிடிக்கும்'னு சொன்னார். ஆக்‌ஷன் த்ரில்லர் கதை அவருக்கும் பிடிச்சிருந்தது. கதையைக் கேட்டு முடிச்சதும்,  'இந்த ஸ்க்ரிப்ட்டைப் பெருசா பண்ணனும்ப்பா!'னு சொன்னார், சிவா சார்.  

வழக்கமா நான் எடுக்குற படத்துல என்னோட ரெகுலர் டெக்னீஷியன் டீமைதான் பயன்படுத்துவேன். விஜய் ஆண்டனி ஹீரோவா நடிக்கிற படங்களில் அவரே இசையமைப்பாளராக இருப்பார். ஆனா, எங்க கூட்டணியில உருவாகப்போற படத்துல மட்டும் இது நடக்கலை. மியூசிக் டைரக்டரா 'மூடர்கூடம்', 'கொளஞ்சி' படங்களுக்கு மியூசிக் பண்ண நடராஜன் சங்கரன்தான் கமிட் ஆகியிருக்கார். விஜய் ஆண்டனியும் இதுக்கு ஓகே சொல்லிட்டார்.

இந்தப் படத்துல ஆக்‌ஷனுக்கு ரொம்ப முக்கியத்துவம் இருக்கு. அதனால, பெரிய ஃபைட் மாஸ்டர் ஒருத்தரைக் கமிட் பண்ணலாம்னு இருக்கேன். ரொம்ப சீரியஸான விஜய் ஆண்டனியை இந்தப் படத்துல பார்க்கலாம். சேம் டைம்... ஹீரோயினுக்கும் படத்துல மிக முக்கியமான கேரக்டர் இருக்கு. ஹீரோவுக்கு சமமான கேரக்டர்னுகூட சொல்லலாம். விஜய் ஆண்டனிக்கு ஜோடியா அக்‌ஷரா ஹாசன் நடிச்சா நல்லா இருக்கும்னு எதிர்பார்க்கிறோம். அவங்க வேற ஒரு படத்துல கமிட் ஆகியிருக்காங்க. அந்தப் படத்தோட ஷூட்டிங் செட்டியூல் முடிஞ்சதுக்குப் பிறகு, இந்தப் படத்துல நடிக்க வைக்கலாம்னு பிளான். இன்னும் எதுவும் முடிவு பண்ணலை.

இதுவரைக்கும் ஹீரோயின் யார்னு கன்ஃபார்ம் ஆகலை. ஜூலையிலதான் படத்தோட ஷூட்டிங் பிளான் பண்ணியிருக்கோம். இந்தப் படத்துக்காகவும் ஃபாரின் போறோம். இன்னொரு ஷெட்யூல் கொல்கத்தாவுல பிளான் பண்ணியிருக்கோம். மலேசியா, யூரோப்புனு கலர்ஃபுல் லொக்கேஷன்ஸ் பிடிச்சிருக்கோம். இதெல்லாமே படத்துக்குத் தேவையானதா இருக்கிறதுனால பண்றோம். தவிர, படத்தை தமிழ், தெலுங்கு, இந்தினு மூணு மொழிகள்ல ரிலீஸ் பண்ணலாம்னு பிளான் இருக்கு. அதனால, மற்ற மொழிகள்ல பிரபலமா இருக்கிற யாராவது இந்தப் படத்துல வில்லனா நடிச்சா நல்லா இருக்கும்னு யோசிச்சு வெச்சிருக்கோம். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, கூடிய சீக்கிரம் முழு அறிவிப்பும் வரும்!" சந்தோஷமாக சிரிக்கிறார், இயக்குநர் நவீன். 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement