``நான் அரசியல்வாதி இல்லைங்க... ஸ்டேட் கவர்ன்மென்ட்னா என்ன?’’ - கமிஷனர் ஆபீஸில் சிம்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடந்த போராட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கைதான நடிகர் மன்சூர் அலிகானின் நிலைகுறித்து சென்னைக் காவல்துறை ஆணையரைப் பார்த்து ஆலோசிக்க வந்தார், நடிகர் சிம்பு.

``நான் அரசியல்வாதி இல்லைங்க... ஸ்டேட் கவர்ன்மென்ட்னா என்ன?’’ - கமிஷனர் ஆபீஸில் சிம்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், மத்திய அரசைக் கண்டித்தும், ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என்றும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்லாவரத்தில் நடந்த போராட்டத்தில் நடிகர் மன்சூர் அலிகான் கலந்துகொண்டார். அவர்மீது அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தது, பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தது உள்ளிட்ட ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுவிக்காததைக் குறித்த காரணம் தெரிந்துகொள்ள, நடிகர் சிம்பு, காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார்.   

சிம்பு

``நமக்காகப் போராடிய எனது அண்ணன் மன்சூர் அலிகானை எந்த அடிப்படையில் கைது செய்துள்ளார்கள் எனக் கேட்டுத் தெரிந்துகொள்ளவே வந்தேன். என்னுடன் `செக்கச் சிவந்த வானம்' படத்தில் நடித்துவரும் மன்சூருக்கு இரண்டு வாரம் முன்புதான் சிறுநீரகக்கல் அறுவை சிகிச்சை நடந்து முடிந்திருக்கிறது. இந்தக் கைதுக்குப் பிறகு அவர் வீடு திரும்பிவிட்டார் என்ற நினைப்பில்தான், அவருடைய மகனுக்குப் போன் செய்தேன். `மற்றவர்களை ரிலீஸ் செய்தது மாதிரி அவரை ஏன் ரிலீஸ் செய்யவில்லை... அப்பா ஏழு நாள்களா சிறையில்தான் இருக்கிறார். அறுவை சிகிச்சை முடிந்து முழுவதும் குணமடைவதற்கு முன் சிறைக்குச் சென்ற அவர் உயிரோடு இருக்கிறாரா என்றுகூட தெரியவில்லை' என்றார்.

இதைக்கேட்டு என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால்தான், நான் இங்கு வந்தேன். அவரை விடுதலை செய்யச்சொல்லி நான் மனுகொடுக்க வரவில்லை. அப்படி அவர் பேசியது தவறு என எண்ணினால், நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அதேபோல் வன்முறையைத் தூண்டும் வகையில் பலர் இங்கு பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களையும் காவல்துறையினர் கைது செய்யும் வகையில் மக்கள் புகார் கொடுக்கவேண்டும்!" என்று கூறிவிட்டு, காவல்துறை அலுவலகத்திற்குள்ளே சென்ற சிம்பு, இணை ஆணையரைச் (உளவுத்துறை) சந்தித்து, நடிகர் மன்சூர் அலிகான் குறித்துக் கேட்டறிந்தார். 

சிம்பு


அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``முக்கியமான அதிகாரிகளைச் சந்தித்தேன், மன்சூர் அலிகானை கைது செய்ததைப் பற்றியும், அதற்கான காரணங்களைப் பற்றியும் அனைத்துத் தகவல்களையும் கூறினார்கள். அதேநேரத்தில், நடிகர் மன்சூர் வரும் புதன்கிழமை ரிலீஸ் செய்யப்படுவார் என்றும் கூறியுள்ளனர். தவிர, மன்சூரை அவரது குடும்பத்தினர் சிறையில் சென்று பார்க்க ஏற்பாடு செய்துதரப்படும் என்று உறுதி அளித்துள்ளனர். புதன்கிழமைக்குப் பிறகும் அவர் வெளிவரவில்லை என்றால், அதன்பிறகு, மேற்கொண்டு என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று பேசலாம். இன்று காலை காவல்துறையால் அப்புறப்படுத்தப்பட்ட ரசிகர்களும், விடுதலை செய்யப்படுவார்கள் என்று காவல் துறையினர் உறுதி அளித்தனர்" என்றார்.

காவிரி மேலாண்மை பிரச்னையில் மத்திய அரசின் நிலைப்பாடு, மாநில அரசுகளின் கைது நடவடிக்கையைப் பற்றிய கேள்விக்கு, ``எனக்கு மாநில அரசு, மத்திய அரசு பற்றித் தெரியாது. சிம்புவை அரசியல்வாதியாகவே பார்க்கிறீர்கள். மாநில அரசு என்றாலே எனக்கு என்னவென்று தெரியாது." என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார், சிம்பு.

முன்னதாக, நடிகர் சிம்பு, ஆணையரைச் சந்திப்பதாக நேற்று வீடியோ பதிவை வெளியிட்டிருந்ததைத் தொடர்ந்து, சிம்பு வருவதற்கு முன்னரே அவருடைய ரசிகர்கள் ஆணையர் அலுவலகத்திற்கு வரத் தொடங்கினர். மேலும் ரசிகர்கள் சூழக்கூடும் என்பதால், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காவல்துறை ஆணையர் அலுவலகத்தின் முன் நடிகர் கூல் சுரேஷ் தலைமையில் திரண்ட சிம்பு ரசிகர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!