``மிஷ்கின்கூட சண்டை போடப்போறேன்!" - 'தரமணி' வசந்த் ரவி

`தரமணி' படத்துக்குப் பிறகு நடிகர் வசந்த் ரவி கமிட் ஆகியிருக்கும் புதிய படம் குறித்துப் பேசியிருக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு வில்லனாக இயக்குநர் மிஷ்கின் நடிக்கிறார்.

``மிஷ்கின்கூட சண்டை போடப்போறேன்!

" 'தரமணி' படத்துக்கு அப்புறம் ஒரு நல்ல படத்துல நடிக்கணும்னு வெயிட் பண்ணினேன். நிறைய புதுமுக இயக்குநர்கள் என்கிட்ட கதை சொன்னாங்க. முக்கியமா, தேசிய விருது வாங்குன இயக்குநர்கள்கூட ஆபிஸூக்கு வரச்சொல்லி கதை  சொன்னாங்க. ஆனா, எனக்கு இன்னும் நல்ல கதையில் நடிக்கணும்னு தேடிக்கிட்டே இருந்தேன். அப்போதான் எனக்கு சூப்பரான ஸ்க்ரிப்ட் கிடைச்சது'' சந்தோஷமாகப் பேச ஆரம்பிக்கிறார், நடிகர் வசந்த் ரவி. புதுமுக இயக்குநர் அருண் மாதேஷ் படத்தில் நடிக்கவிருக்கும் வசந்திடம் பேசினேன்.  

வசந்த் ரவி

''படத்தோட இயக்குநர் அருணை எனக்கு ஒரு வருடமா தெரியும். அவர் என்னை சந்திச்சப்போ லவ் ஸ்டோரி ஒண்ணு சொன்னாரு. அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. அப்போ அருண், 'இன்னொரு ஸ்க்ரிப்ட்டும் இருக்கு. அந்தக் கதையை நெறைய ஸ்டார் வேல்யூ இருக்கிற ஹீரோக்களிடம் சொன்னேன். ஆனா, யாரும் பண்ணத் தயாரா இல்ல. நீ ஒருதடவை கேட்டுச் சொல்லு'னு சொன்னார். அது ஒரு ஆக்‌ஷன் ஜானர். கேட்டவுடனே இந்தக் கதையையே நாம பண்ணலாம்னு தோணுச்சு. ஏன்னா, நெறைய கதை கேட்டிருக்கேன். கேட்ட எதுவும் இதுமாதிரி அமையல. 

இந்த கதையை மிஸ் பண்ணகூடாது. நம்மகிட்ட இதுமாதிரி கதை வரவே வராதுனு தோணுச்சு. உடனே ஃபர்ஸ்ட் இந்தக் கதையை  பண்ணலாம்னு சொல்லிட்டேன். ஆனா, எனக்குள்ளே ஒரு டவுட் இருந்துச்சு. இந்தக் கதையை அருண் ஸ்டார் வேல்யூ ஹீரோவுக்காக பண்ணியிருக்கார். நமக்கு எப்படி ஸூட் ஆகும்?. இதை அவர்கிட்டயே கேட்டேன். 'இல்ல, இந்த கதை உங்களுக்கும் ஸூட் ஆகும். கண்டிப்பா பண்ணுவோம்'னு சொன்னார். ரியல் லைஃப்ல பலருக்கும் நடக்குற கதைதான். இதில் நடிக்கிறது எனக்கு ஹாப்பியா இருக்கு. 

ஃபுல் ஆக்‌ஷன் படம். அதுக்காக இப்பவே நிறைய ஸ்டண்ட் க்ளாஸுக்குப் போய்க்கிட்டிருக்கேன். ஆல்ரெடி பாக்ஸிங் கத்துக்கிட்டிருந்தேன். அதனால, நல்ல ஃபைட் பண்ணிருவேன்னு நம்பிக்கை இருக்கு. அதேமாதிரி டான்ஸ் க்ளாஸூம் போறேன். ஆனா, இந்தப் படத்துல டான்ஸைவிட ஃபைட்டுக்குத்தான் நெறைய வேலை  இருக்கு. இந்தப் படத்துல முக்கியமான வில்லன் கேரக்டரில் மிஷ்கின் சார் நடிக்கிறார். அவர்கூட நடிக்கிறதே சந்தோஷமான விஷயம். அவரை 'தரமணி' படத்தோட ரிலீஸூக்கு முன்னாடி பார்த்தேன். அப்போ அவர் 'தரமணி' படத்துல சில சீன்ஸ் மட்டும் பார்த்திருந்தார். என்கிட்ட, ''நல்லா  நடிச்சியிருக்கடா. நம்ம ஒரு படம் பண்ணலாம்'னு சொன்னார். அவர் சொன்ன வார்த்தைகள் எனக்கு எனர்ஜியா இருந்துச்சு. இப்போ அவர்கூடவே நடிக்கிறேன். சீக்கிரமா, அவர் இயக்கத்திலும் நடிப்பேன்.   

ராம் சார்கிட்ட இந்தப் படத்துல கமிட் ஆனவுடனே சொன்னேன். ரொம்பவே பாராட்டுனாரு. நல்ல ஸ்க்ரிப்டை செலக்ட் பண்ணிருக்கனு சொன்னார்.  கண்டிப்பா இந்தப் படம் ஆடியன்ஸூக்கும் பிடிக்கும்!'' என்று முடித்த வசந்த் ரவியைத் தொடர்ந்து, படத்தின் இயக்குநர் அருண் மாதேஷ் சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். 

அருண் மாதேஷ்

"என் தலைமுறையில சினிமாவுக்கு வர்ற முதல் பையன் நான். பொறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைதான். படிச்சுக்கிட்டு இருக்கும்போதே சினிமாக்குள்ளே வரணும்னு ஆசை இருந்துச்சு. படிச்சு முடிச்சவுடனே, புஷ்கர் - காயத்ரி டீம்ல சேர்ந்தேன். அவங்க எடுத்த பல விளம்பரப் படங்களில் வொர்க் பண்ணினேன். அப்புறம் தியாகராஜன் குமாரராஜா எடுத்த 'ஆரண்ய காண்டம்' படத்துல இணை இயக்குநராய் வேலை பார்த்தேன். இதற்கிடையில் சுதா மேம் எடுத்த 'இறுதிச்சுற்று' படத்துக்கு வசனம் எழுதினேன்'' - தன்னைப் பற்றிய குட்டி அறிமுகத்துடன் பேச ஆரம்பிக்கிறார், இயக்குநர் அருண் மாதேஷ். 

"என்னுடைய முதல் ஸ்க்ரிப்ட் எடுத்துக்கிட்டு மூன்றரை வருடமா நெறைய ஹீரோக்கள், தயாரிப்பாளர்களிடம் அலைஞ்சேன். யாருமே படம் பண்ண முன்வரலை. அந்த சமயத்தில்தான் வசந்த் ரவியிடம் இந்தக் கதையைச் சொன்னேன். அவருக்குப் பிடிச்சிருந்துச்சு. ஆக்சுவலா, இந்தக் கதையில் பெரிய ஹீரோ யாராவது நடிச்சா அவங்களுடைய இமேஜ்தான் ஆடியன்ஸூக்குத் தெரியும். ஆனா, சின்ன ஹீரோ நடிச்சா படத்தில் கேரக்டர் ஆடியன்ஸ் மனசுல நிற்கும். அதனால, தைரியமா இறங்கிட்டேன்.  

மிஷ்கின்

"படத்துல வில்லனா மிஷ்கின் சார் நடிச்சா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. மிஷ்கின் சாருக்கு இந்த வில்லன் கேரக்டர் கரெக்டா இருக்கும். அவருக்கும் இந்தக் கதை ரொம்பவே பிடிச்சிருந்துச்சு!" என்று  முடித்தார், இயக்குநர் அருண் மாதேஷ். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!