``அம்மாவுக்கு கிட்னி மாத்தணும்னு சொன்னாங்க... ஆனா முடியலை'' - பின்னணிப்பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரியின் மகன்

மிழ் சினிமாவில் தன் மழலைக் குரலுக்காகவே கொண்டாடப்பட்டவர்  எம்.எஸ். ராஜேஸ்வரியம்மா. 'சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா' என்று 'டவுன் பஸ்' திரைப்படத்தில் கொஞ்சிப் பாடியது இவரின் குரல்தான். காலங்கள் கடந்து இன்றும் பல கிராமப்புற டவுன் பஸ்களில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது 'சிட்டுக்குருவி' பாடல். இந்தப் பாடலை பாடிய தேன் குரலுக்குச் சொந்தக்காரர் இன்று நம்மிடையே இல்லை. 87 வயதான ராஜேஸ்வரி அம்மா, நேற்று பிற்பகல் இயற்கை எய்தினார். இன்று மாலை நாலரை மணியளவில் அவருடைய உடல் குரோம்பேட்டை மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

எம்.எஸ்.ராஜேஸ்வரி

பேச்சு சரளமாக வந்த பருவத்திலிருந்தே சிறுமி ராஜேஸ்வரிக்குப் பாட்டு என்றால் உயிர். இவருடைய குரல் வளம் பற்றி இசையமைப்பாளர் ஆர். சுதர்சனம், மெய்யப்பச் செட்டியாரிடம் சொல்ல, அவர் ராஜேஸ்வரியை தன்னுடைய கலையகத்தில் வேலைக்குச் சேர்த்துக் கொண்டார். அப்போது காரைக்குடியில் இருந்த ஏவி.எம் கலையகம் சென்னைக்கு இடம்பெயர்ந்தபோது ராஜேஸ்வரியும் சென்னை வந்தார். 'நாம் இருவர்' படத்தில் 'மகான் காந்தி மகான்' பாடலைப் பாடியதன் மூலம் தமிழ் திரையுலக ஜாம்பவான்களின் கவனத்தை தன் குரல் பக்கம் திருப்பினார். இந்தப் பாடலுக்கு முன்னாலும் சில பாடல்களைத் தமிழ் படங்களில் பாடியிருக்கிறார் என்றாலும் 'மகான் காந்தி மகான்' பாடல்தான் பின்னாளில் அவர் பல உச்சங்களைத் தொடுவதற்கு காரணமாக இருந்தது. இதைத் தொடர்ந்து 'வாழ்க்கை' படத்தில் டி.ஆர். ராமச்சந்திரனுடன் இணைந்து 'உன் கண் உன்னை ஏமாற்றினால் டடடா டடடா' என்று டூயட் பாடியவர், 'தைப் பிறந்தால் வழி பிறக்கும்' படத்தில் 'மண்ணுக்கு மரம் பாரமா', 'படிக்காத மேதையில்' படித்ததினால் அறிவுபெற்றோர் ஆயிரம் உண்டு', கைதி கண்ணாயிரத்தில் 'சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்', 'குமுதத்தில்', 'மியாவ் மியாவ் பூனைக்குட்டி' என்று தொடர்ந்து ஹிட் பாடல்களைப் பாடினார். 'களத்தூர் கண்ணம்மா'வில் சிறுவன் கமல்ஹாசன் பாடிய 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே', நாயகன் படத்தில் 'நான் சிரித்தால் தீபாவளி' பாடலில் ஒரு பகுதி என்று ஏராளமான பிரபலப் பாடல்களைப் பாடி அசத்தியவர் ராஜேஸ்வரி. 

இறுதி காரியங்களில் கவனமாக இருந்த ராஜேஸ்வரியின் மகன் ராஜ் வெங்கடஷிடம் பேசினோம். ``அம்மாவுக்கு கிட்னியில பிரச்னை இருந்துச்சு. அதுக்கு சிகிச்சை எடுத்துட்டு இருந்தாங்க. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என் தங்கை ஆர்த்தி இதே நாள், அதாவது, ஏப்ரல் 25 அன்றைக்குத்தான் இறந்தாங்க. அவளோட இழப்பை அம்மாவால தாங்க முடியலை. ரொம்ப மன அழுத்தத்தில் இருந்தாங்க. வெளியே எங்கும் வராம வீட்டுக்குள்ளேயே முடங்கிட்டாங்க. தவிர, அம்மாவுக்கு வயசும் எண்பத்து ஐஞ்சை தாண்டிடுச்சு இல்லையா... அதனால டாக்டர்ஸாலேயும் ஒண்ணும் பண்ண முடியலை. மருத்துவர்கள் கைவிரிச்சப்பவும் என் மனசு ஏத்துக்கலை. எத்தனை வயசானாலும் அம்மாயில்லையா? அம்மா போயிட்டாங்க அப்படிங்கிறதை மனசு இப்பவரைக்கும் ஏத்துக்கவே மாட்டேங்குது''  என்றவர் உடைந்து அழ ஆரம்பிக்கிறார். 

மறைந்த பின்னணிப் பாடகி ராஜேஸ்வரிக்கு ஆண் ஒன்று, பெண் இரண்டு என மூன்று பிள்ளைகள். கிட்னி ஃபெயிலியரால் அவதிப்பட்டு வந்தவருக்கு மாற்று கிட்னி பொருத்த மருத்துவர்கள் எவ்வளவோ முயன்று இருக்கிறார்கள். ஆனால், அவர் உடல் நிலை ஒரு அறுவை சிகிச்சையை தாங்குகிற அளவுக்கு வலுவாக இல்லாததால், மருந்து, மாத்திரை மூலமாகக் கடந்த இரண்டு வருடங்களாக இவருடைய உயிரைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.

காவேரியின் கணவன் படத்தில் 'மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான்' என்ற புகழ்பெற்ற பாடலை எம்.எஸ். ராஜேஸ்வரி அம்மாவுடன் இணைந்து பாடிய எல்.ஆர். ஈஸ்வரி, ''அக்கா ஃபேமஸா இருக்கிறப்போ நான் சின்னப் பிள்ளையா இந்தத் துறைக்குள்ள வந்தேன். அதனால ராஜி அக்கா என் மேல ரொம்ப பாசமா இருப்பாங்க. இப்ப அவங்க இல்லைங்கிறதையே என்னால ஜீரணிச்சுக்க முடியலை'' என்றவரால் அதற்கு மேல் பேச முடியவில்லை.

உடலுக்கு மட்டுமே மறைவைத் தந்து தன் குரலால் இன்றும், இனியும் நம்மிடையே வாழப் போகிறார் பின்னணிப் பாடகி ராஜேஸ்வரி. நிம்மதியாகச் சென்று வாருங்கள் தாயே.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!