'ஜி.வி.க்கு 3டி படம்... சிம்புவுக்கு ஒரு ஆக்‌ஷன் கதை': திடுக் ஆதிக் ரவிச்சந்திரன்

'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தைத் தொடர்ந்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அடுத்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படம் குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார், ஆதிக் ரவிச்சந்திரன்.

'ஜி.வி.க்கு 3டி படம்... சிம்புவுக்கு ஒரு ஆக்‌ஷன் கதை':  திடுக் ஆதிக் ரவிச்சந்திரன்

ஜி.வி.பிரகாஷ் நடித்த 'த்ரிஷா இல்லனா நயன்தாரா', சிம்பு நடித்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படங்களை இயக்கியவர், ஆதிக் ரவிச்சந்திரன். முதல் படத்தைவிட, 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் இவருக்கு 'செம' அடையாளம். சிம்புவுக்கு மூணு கெட்டப், பெரிய பில்ட்அப்... என ரிலீஸான இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், படத்துக்குக் கிடைத்த எதிர்மறை விமர்சனங்கள், வசூலும் கைகொடுக்காத சூழல் காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது. இந்நிலையில், மீண்டும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். அவரிடம் பேசினோம்.  

ஆதிக் ரவிச்சந்திரன்

'' 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படம் முடிச்சதுமே பண்ணலாம்னு நினைச்ச படம் இது. வித்தியாசமான ஜானர்ல ஒரு படம் பண்ணனும்னு எனக்கு ஆசை. அது இந்தப் படம் மூலமா நிறைவேறப்போகுது. யெஸ்... ஜி.வி.பிரகாஷ் நடிக்கப்போற இந்தப் படம் 3டி படமா உருவாகப்போகுது!" - உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார், ஆதிக்.

''வழக்கமான லவ் ஸ்டோரியா இல்லாம ஒரு ஃபேண்டஸி காதல் படமா இது இருக்கும். இளைஞர்களுக்குப் பிடிச்ச படமாவும் இருக்கும். 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' பண்ணும்போதே, ஜி.வி என்கூட இன்னொரு படம் பண்ணனும்னு ஆசைப்பட்டார். எனக்கும் அவர்கூட வொர்க் பண்ணும்போது ஒரு கம்ஃபோர்ட் ஜோன் கிடைக்கும். அவர் தொடர்ந்து பிஸியா இருந்ததுனால, பண்ணமுடியலை. இப்போ பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டோம்.  

இந்தப் படத்துல மூணு கெட்டப்ல வர்றார், ஜி.வி. அவருக்கு ஜோடியா மூணு ஹீரோயின்ஸ் நடிக்கப்போறாங்க. 'அனேகன்' படத்துல நடிச்ச அமைரா தஸ்தூர், சஞ்சிதா ஷெட்டி அப்புறம் ஒரு புதுமுக நடிகை இந்தப் படத்துல நடிக்கிறாங்க. இந்தப் படத்தைப் பொறுத்தவரை, மூணுபேருமே ஹீரோயின்ஸ்தான். 

இந்தக் காலத்துல உண்மையான காதலைப் பார்க்கிறது ரொம்பக் கஷ்டம்னு நினைக்கிறேன். ஒரு பையன், ஒரு பொண்ணை மட்டும் லவ் பண்ற காலமெல்லாம் இல்லவே இல்ல. ஸ்கூல் படிக்கும்போது ஒரு லவ், காலேஜ் படிக்கும்போது ஒரு லவ், வேலைக்குப் போகும்போது இன்னொரு லவ்... இப்படித்தான் இருக்காங்க. இப்படி எக்கச்சக்கமான காதல்களைக் கடந்துவர்ற ஒரு பையனா, ஜி.வி நடிக்கப்போறார். அதனாலதான், படத்துக்கு இத்தனை ஹீரோயின்ஸ் தேவைப்பட்டாங்க. 

ஹீரோவா நடிக்கிறதோட, படத்துக்கு ஜி.வியே மியூசிக் பண்றார்.  எடிட்டிங், ரூபன். ஒளிப்பதிவாளர், அபிநந்தன் ராமானுஜம். இந்தப் படத்தோட கதையை அபிநந்தன்கிட்ட சொன்னதுமே, 3டி வேலைகளுக்காக நிறைய விஷயங்களைத் தேடிப்பிடிச்சு கத்துக்கிட்டார். படத்துக்கான ப்ரீ ப்ரொடக்‌ஷன் வேலைகளுக்காக மட்டும் நிறைய நேரம் செலவு பண்ணியிருக்கோம். ரொம்ப நல்ல டெக்னிகல் டீம் இந்தப் படத்துல இருக்காங்க. கண்டிப்பா ஆடியன்ஸுக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்குற முடிவோட இருக்கோம்." என்றவர், தொடர்ந்தார்.

சிம்பு

''கற்பனையைக் கொட்டி எழுதுற கதையை அப்படியே திரைக்கதையா மாத்துறது இயக்குநருக்குச் சவாலான வேலை. அந்த சவாலைக் கடந்துட்டோம். வித்தியாசமான தலைப்போட, கூடிய சீக்கிரம் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகும். முழுக்க சென்னையிலேயே படத்தை ஷூட் பண்ண பிளான் பண்ணியிருக்கோம். படத்துக்குப் பெரிய வில்லனே, ஹீரோவோட வாய்தான்! இந்த கான்செஃப்டை மையமா வெச்சுதான் படத்தோட திரைக்கதை எழுதியிருக்கேன். ஏன்னா, இன்றைய காதலர்களுக்கு 'வாய்'தான் பெரிய பிரச்னை. தேவையில்லாத நேரத்துல தேவையில்லாத விஷயங்களைப் பேசி பிரச்னை ஆக்கிடுவாங்க." என்றவரிடம், சில கேள்விகள்.

 '' 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தின் சர்ச்சைகளில் இருந்து எப்படி வெளியே வந்தீங்க?"

''கொஞ்சம் கஷ்டமாதான் இருந்துச்சு. ஆனா, வெளியே வந்துதானே ஆகணும். தோல்வியிலிருந்து நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். என் ப்ளஸ், மைனஸ் என்னனு அந்தப் படம் கொடுத்த அனுபவம் மூலமா தெரிஞ்சுக்கிட்டேன். என்னோட மைனஸ் எல்லாத்தையும் பிளஸ்ஸா மாத்திக்கிட்டேன். அந்த விஷயங்கள்ல இருந்து வெளியே வர்றதுக்காகவே என் டீமோட ஒரு டூர் போயிட்டு வந்தேன். அப்பா எனக்கு எப்பவுமே சப்போர்ட், என் கோ-டைரக்டர் அவர்தான். அவரும் அந்த டூர்ல கூட இருந்தார். ஒரு பாசிடிவ் எனர்ஜியோட திரும்ப வந்திருக்கேன்!" 

''சிம்புகூட மறுபடியும் வொர்க் பண்ற ஐடியா இருக்கா?" 

''கண்டிப்பா! சில தவறான புரிதல்கள் எங்களுக்குள்ள இருந்தது. இப்போ, சரியாயிடுச்சு. ரெண்டுபேரும் அடிக்கடி பேசிக்கிட்டுதான் இருக்கோம். அவருக்கும் ஒரு கதை ரெடி பண்ணி வெச்சிருக்கேன். அது, 'AAA' படத்தோட இரண்டாம் பாகமா இருக்காது. இது ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர். சிம்புகிட்டேயும் கதை சொல்லிட்டேன். இந்தப் படம் குறித்த அறிவிப்பும் கூடிய சீக்கிரம் வெளியாகும்!" நம்பிக்கையுடன் முடித்தார், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!