"பாட்டி சொல்ற திகில் கதை, அதிக சம்பளம் கேட்ட ஓவியா, ரொம்ப யோசிச்ச ஹன்சிகா..." - 'காட்டேரி' இயக்குநர் டிகே.

'காட்டேரி' படம் குறித்த பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார், இயக்குநர் டிகே. 'யாமிருக்க பயமே', 'கவலை வேண்டாம்' படங்களுக்குப் பிறகு இவர் இயக்கியிருக்கும் படம் இது.

''நாம சின்னப் பசங்களா இருக்கும்போது வீட்டுல இருக்கிற பாட்டி நமக்குக் கதை சொல்லியிருப்பாங்க. அப்போ, 'ஒரு ஊர்ல ஒரு பொண்ணு இருந்துச்சு. அது ரொம்பப் பயங்கரமான ஒன்னு. கொலுசு போட்டுக்கிட்டு 'ஜல் ஜல் ஜல்'னு நடக்கும். அதுக்குப் பயந்துக்கிட்டு நாங்க யாரும் ஆறு மணிக்குமேல வெளியே வரமாட்டோம். அதிகமா கோபப்படும். அந்தக் கோபத்தை அடக்க நாங்க அதுக்குப் பால் கொடுப்போம்'னு கதை சொன்னமாதிரி, எனக்கும் என் பாட்டி ஒரு கதை சொன்னாங்க. அதுதான், என் கதையோட தொடக்கப்புள்ளி!" - என்கிறார், இயக்குநர் டிகே. 'காட்டேரி' படம் குறித்துப் பேசினோம்.  

காட்டேரி

''படத்தோட ஷூட்டிங் சென்னையில நடந்துக்கிட்டு இருக்கு. ஒரு அட்வெஞ்சர் கதை; திகில் அதிகமா இருக்கும். ஃபேரி டேல் புத்தகம் மாதிரி இந்தப் படத்தை எடுத்திருக்கேன். முக்கியமா, வீட்டுல இருக்கிற குழந்தைகளுக்கு இந்தப் படம் ரொம்பப் பிடிக்கும். குடும்பத்தோட படத்தைப் பார்க்கும்போது பசங்க, அம்மா, அப்பானு எல்லோரும் என்ஜாய் பண்ணுவாங்க. பாட்டி சொல்ற கதையில இருக்கிற ஆர்வம், இந்தப் படத்துல இருக்கும்!

இந்தப் படத்தை 'யாமிருக்க பயமே' படத்தோட இரண்டாவது பாகம்னு பல பேர் நினைச்சுக்கிட்டிருக்காங்கல, அது உண்மை இல்ல. இந்தப் படம் அதைவிடப் பத்து மடங்கு நல்லாயிருக்கும். ரெண்டு படத்துக்கும் துளிகூட ஒற்றுமை இருக்காது. தயாரிப்பாளரோட நெருக்கடியால, அந்தப் படத்தைக் கதையே இல்லாம எடுக்கவேண்டியதா போச்சு. ஆனா, இது அப்படி இல்லை. தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா எனக்கு முழு சுதந்திரத்தைக் கொடுத்திருக்கார். அதேசமயம், 'யாமிருக்க பயமே 2' எடுக்குற ஐடியா எனக்கு இருக்கு. ஆனா, படத்தோட ரைட்ஸ் தயாரிப்பு நிறுவனம்கிட்ட இருக்கிறதால, கேட்டா  கிடைக்குமானு தெரியலை. வேறொரு இயக்குநர்கிட்ட கதையை வாங்கி 'யாமிருக்க பயமே 2'னு டைட்டில் வெச்சுக்குவாங்க. இயக்குநர்களோட கற்பனைத் திறன்தான், அவங்களோட பெரிய அடையாளம். அது என்கிட்ட இருக்கு. அதனால, கவலைப்படாம, இயங்குவேன். 

'காட்டேரி' படத்தோட செட்டுக்கு வந்தாலே, சொர்க்கத்துக்குள்ளே வந்தமாதிரி இருக்கு. நிறைய விஷயங்களைக் கத்துக்க முடியுது. எனக்கான மரியாதை, சம்பளம் எல்லாமே எனக்கு இந்தத் தயாரிப்பாளரிடம் கிடைக்குது. என் முந்தைய படத்தோட  தயாரிப்பு நிறுவனத்திடம் இது எதுவும் எனக்குக் கிடைக்கலை. முக்கியமா, என் முதல் படம் முடிஞ்சவுடனே, 'ரெண்டாவது படமும் எங்களுக்கே பண்ணுங்க'னு அவங்க கேட்டதுனாலதான், 'கவலை வேண்டாம்' படத்தையும் அதே நிறுவனத்துக்குப் பண்ணிக்கொடுத்தேன். ஆனா, ஆடியன்ஸ் பலருக்கு இப்படியொரு படம் வந்ததே தெரியாம போயிடுச்சு. படத்துக்கான புரொமோஷன் வொர்க் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து சரியா கிடைக்கலை. 

'காட்டேரி' படத்தோட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சரியா இருக்கார். ஷூட்டிங் ஸ்பாட்ல நமக்குத் தேவையானதை சரியா செஞ்சுக்கொடுக்கிறார். முக்கியமா, சொன்ன தேதியில நமக்கான சம்பளமும் வந்திடும். இந்தப் படத்துக்குக் 'காட்டேரி'னு பேர் வெச்சதே ஞானவேல்ராஜாதான். ஏன்னா, 'காட்டேரி'ங்கிற பெயருக்கு நிறைய அர்த்தம் இருக்கு. ஆனா, 'ரத்தக் காட்டேரி'ங்கிற அர்த்தத்துல இந்த டைட்டிலை வைக்கலை. 'காட்டேரி'க்கு மூதாதையர்கள்னு ஒரு அர்த்தம் இருக்கு. காட்டேரியை தெய்வமா வழிபடுற மக்களும் இருக்காங்க. நல்ல காட்டேரியும் இருக்கு; காட்டேரிங்கிற வார்த்தை பெண்களுக்கு மட்டுமில்ல, ஆண்களுக்கும் பொருந்தும்! 

காட்டேரி

ஹீரோவா வைபவ் நடிக்கிறார். எங்களுக்குக் கொஞ்சம் மெச்சூரிட்டியா, நம்ம வீட்டுப் பையன் மாதிரி இருக்கிற ஹீரோ தேவைப்பட்டதுனால, வைபவ்வைத் தேர்ந்தெடுத்தேன். ஹீரோயினா வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பாஜ்வா நடிச்சிருக்காங்க. முதல்ல கமிட் ஆனது, ஓவியாதான். ஆனா, சில காரணங்களால அவங்க நடிக்க முடியலை. ஏன்னா, பிக்பாஸ் ஷோவுக்குப் பிறகு அவங்க ரொம்ப ஃபேமஸ் ஆயிட்டாங்க. அதனால, கொஞ்சம் அதிக சம்பளமும் கேட்டாங்க. மியூட்சுவல் அன்டர்ஸ்டான்டிங்கோட 'வேணாம்'னு சொல்லிட்டேன். மற்றபடி, எனக்கும் அவங்களுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. தவிர, அந்தக் கேரக்டர்ல நடிக்க ஹன்சிகாகிட்டேயும் கேட்டோம். கதையும் கேட்டாங்க; பிடிச்சிருந்தது. ஆனா, கொஞ்சம் குழப்பத்துலேயே இருந்தாங்க. அதனால, வேணாம்னு சொல்லிட்டோம். ஏன்னா, அவங்க வைபவ்வுக்கு ஜோடியா எப்படி நடிக்கிறதுனு யோசிச்சாங்க. அதையெல்லாம் விடுங்க... இப்போ, டீம் சூப்பரா செட் ஆயிடுச்சு, போகப் போக பல நல்ல விஷயங்கள் நடக்கும். 

இந்தப் படத்தோட கதை சிட்டியில ஆரம்பிச்சு, கிராமத்தில் முடியிற மாதிரி இருக்கும். அந்தக் கிராமத்தை 'ஃபேன்டஸி' கிராமமா செட் பண்ணியிருக்கோம். கண்டிப்பா, இந்தப் படம் ஆடியன்ஸுக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும்னு நம்புறேன்!" என்று முடிக்கிறார், இயக்குநர் டிகே.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!