Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

"மகிழ்மதிக்கு மீண்டும் அழைத்துச் செல்லுங்கள் ராஜமெளலி!" #1YearOfBaahubali2

பாகுபலி... இந்த ஒற்றை வார்த்தையை சொன்னால் சின்னாளப்பட்டி முதல் சீனா வரை உள்ள அனைவருக்கும் ஞாபகம் வருவது பிரமாண்டம்தான். அந்தளவிற்கு உலகளவில் தன்னை பரிட்சையமாக்கியது பாகுபலி. அசத்தல் திரைக்கதை, பிரமாண்ட காட்சியமைப்பு என்பதோடு நில்லாமல் 'கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?' என்ற ஒற்றை கேள்வியே அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. 'பாகுபலி 2' வெளியாகி ஒரு வருடம் நிறைவானதை முன்னிட்டு அந்த கதாபாத்திரங்கள் பற்றியும் படத்தைப் பற்றியும் சின்ன ஃப்ளாஷ்பேக்.

பாகுபலி - பிரபாஸ் : 

பிரபாஸ்

அமரேந்திர பாகுபலியின் அசத்தல் என்ட்ரியே படத்தை வேற லெவலுக்கு அழைத்துச்சென்றது. போர் காட்சிகளில் தேவசேனாவுக்கு 'நா விரல், பிடித்ததும் மறுமுகம்' என்று எதிராளிகளை தாக்கும் யுக்திகளை சொல்லிக்கொடுத்து அம்பெய்தும் காட்சிகள் மாஸ் ஹிட்டானது. 'தேவசேனையை கட்டிப்போட்டு மண்டியிட செய்யுங்கள்' என்று சிவகாமி தேவி சொன்னவுடன், மின்னல் வேகத்தில் பாகுபலி மறித்து நிற்கும்போது திரையரங்குகளில் விசில் சத்தம் அதிர்ந்தது. பல்வாள்தேவனின் பட்டாபிஷேகத்தில், படைத்தளபதியாக பாகுபலியின் உடல்மொழி, வசனம், நடை என அனைத்திலும் செஞ்சுரி அடித்தார் பிரபாஸ். 'அமரேந்திர பாகுபலியாகிய நான்...'என்று பாகுபலி சொல்லும் வசனம் இந்தப் படத்தின் மாஸ் சீன்களில் முக்கியமான ஒன்று. கோட்டையைவிட்டு போகும்போதும், இறக்கும்போது தனக்கான ஸ்டைலில் 'ஜெய் மகிழ்மதி' என்று சொல்லி உயிரைவிடும் போதும் மகிழ்மதி மக்களுடன் இணைந்து படம் பார்க்கும் ஒவ்வொருவர் கண்களிலும் கண்ணீர் கசிந்தது. 

பல்வாள்தேவன் - ராணா :

ராணா

பார்வை, கோவம், பொறாமை என பார்ப்பவர்களும் கோவம் கொள்ளுமளவு வில்லத்தனத்தில் மிரட்டியிருப்பார் ராணா டகுபதி. தான் அரசனாகியும் மக்கள் பாகுபலியை கொண்டாடுகிறார்கள் என்ற கோவம், அப்பாவோடு சேர்ந்து ராஜமாதாவை தன் திட்டங்களால் ஏமாற்றும் காட்சிகளில் பல்வாள்தேவனின் நடிப்பு 'பலே'. இறந்த பிறகும் பாகுபலியை வெட்டி தன் வெறியைத் தீர்த்துக்கொள்ளும் பல்வாள்தேவன் ரோலில் அரக்ககானாகவே வாழ்ந்தார் ராணா. மகேந்திர பாகுபலியை பார்த்தவுடன் 'உன் தந்தையின் மூச்சு என்னால் நிற்கவில்லை என்ற குறை என்னை நிம்மதியாக வாழவிடவில்லையடா', 'என் கைகளால் உன் இதயத்தை பிய்த்து எரிவதற்காவே இங்கு வந்திருக்கிறாய்' என  தலைமுறை கடந்து கோவத்தை காட்டும் பல்வாள்தேவன் மகிழ்மதியின் ஆகச்சிறந்த வில்லன். 

கட்டப்பா - சத்யராஜ் : 

சத்யராஜ்

இந்த ஒரு மனிதனின் பதிலுக்காகத்தான் இரண்டு வருடம் காத்திருந்தோம். 'நாயல்லவா, அதான் மோப்பம் பிடித்தேன்' என்ற வசனத்தை பேசிவிட்டு திரும்பி பார்க்காமல் வரும்போது 'கட்டப்பா டா' என்று அவரை புகழ ஆரம்பித்தது அரங்கம். பாகுபலியுடன் இணைந்து சண்டை போடும் காட்சியிலும் கட்டப்பா சிக்ஸர் அடித்திருப்பார். மகிழ்மதிக்கு விஸ்வாசமாக இருக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக கணத்த மனதுடன் பாகுபலியை கொன்று 'என்னை மன்னித்துவிடு பாகு'  என்று அழும்போதும், 'தவறு செய்துவிட்டாய் சிவகாமி' என்று உண்மையை சொல்லி தன் ஆதங்கத்தை கொட்டும்போதும் கட்டப்பா நடிப்பில் இருக்கும் உயிர்ப்பு அவருக்கான அனுபவத்தைக் காட்டும். மொத்தத்தில் கட்டப்பா இந்த கதையின் இரும்பு மனிதன் என்றே சொல்லலாம். 

ராஜமாதா சிவகாமி தேவி - ரம்யா கிருஷ்ணன் : 

ரம்யா கிருஷ்ணன்

ராஜ நடை, சத்ரிய தர்மம் பேசும் கம்பீரம் என ஒரு தாயாகவும் நாட்டின் ராஜமாதாவாகவும் ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு அபாரமாக இருக்கும். வீரமான பெண் என்பதைத் தாண்டி ரம்யா கிருஷ்ணனை வேறொரு பரிமாணத்தில் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர். 'சிவகாமியின் மருமகளுக்கு கொஞ்சம் அகந்தை அழகுதான்', 'நீ கொல்லப்போகிறாயா நான் கொல்லவா?' என்று வசனங்களின்போது, இவர் கண்களும் பேசும். முதல் பாகத்தில் குழந்தையுடன் இவர் நிலைத்தடுமாறி வரும் காட்சியைப் பார்த்த நமக்கு இந்தப் பாகத்தில் 'உங்கள் புதிய அரசன் மகேந்திர பாகுபலி' என கைக்குழந்தையைக் காட்டும் காட்சி ஆல் டைம் ஃபேவரைட்டாக இருக்கிறது.  

பிங்களத்தேவன் - நாசர் :

நாசர்

'தாயின் நாய் வருகிறது', 'தாயை கொன்றுவிடலாமா?', 'உன் தியாகத்துக்கு இவன் கொடுக்கும் பெயர் தவறு...' போன்ற வசனங்களிலும், இந்த நாட்டை ஆள ஒரு இரும்புக்கை போதாதா? என தூணை உடைக்கும் காட்சியில் தனக்கான பலத்தையும், விரக்தியையும், வெளிப்படுத்துவதிலும் அப்ளாஸ் அள்ளினார் நாசர். தன் ராஜ தந்திரத்தால் ராஜமாதாவையே நம்ப வைத்து பாகுபலியை கொல்ல சொல்லும் போது அவர் நடிப்பில் அத்தனை யதார்த்தம். 'உயிருடன் இருக்கும் வரை அவன் எங்கிருந்தாலும் அரசன்' என்று வஞ்சகத்திலே வாழும் பிங்களத்தேவன் உண்மையில் தி கிங் மேக்கர். 

தேவசேனா - அனுஷ்கா :

அனுஷ்கா

'அழகே பொறாமைப்படும் பேரழகி' என ரம்யா கிருஷ்ணன் அனுஷ்காவை சொன்னது நூறு சதவிகிதம் உண்மை என்பது முதல் காட்சியிலேயே புரிந்துகொள்ள முடியும். 'என் வாளை அனுப்பிவைக்கிறேன். உங்கள் மகனை அலங்கரித்து என் வாளுக்கு தாலி கட்டவைத்து அவனை குந்தல தேசத்துக்கு அனுப்புங்கள். நான் பத்திரமாக பார்த்துக்கொள்கிறேன்' என்று அனைவரும் கண்டு அஞ்சும் ராஜமாதாவுக்கு எதிராக பதில் கடிதம் அனுப்பும் குந்தல தேசத்து யுவராணியாக மெர்சல் காட்டியிருப்பார். அம்பு எய்தும் காட்சிகளில் தன் திறமையையும் எய்து அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார். சேதுபதியின் விரல்களை வெட்டிய காட்சியில் 'சூப்பர் தேவசேனா' என அரங்கமே அவருக்கு ஹாட்ஸ் ஆஃப் செய்தது. 

ஹைலைட்ஸ் வசனங்கள் - மதன் கார்க்கி:

"காலம் ஒவ்வொரு கோழைக்கும் வீரனாக ஒரு கணம் கொடுக்கும். அந்த கணமிது"

"மூச்சைப் படைப்பவன் தேவன்; மூச்சை நீட்டிப்பவன் வைத்தியன்; மூச்சைக் காப்பவனே சத்ரியன்".

"சூரியன் மேற்கில் உதிக்காது; ஆனால் அதை கிழக்கில் புதைக்கலாம்"

"வஞ்சகனின் தீஞ்செயலைவிட நல்லவனின் மெளனம் மிகவும் கொடியது "

"பெண்கள் மீது கை வைத்தால் வெட்ட வேண்டியது விரல்களை அல்ல. தலையை..."

"இந்தப் பிண்டத்தின் அழுகையை நிறுத்தினால்தான் அண்டத்தில் அமைதி நிலவும். நசுக்கி விடு சிவகாமி"

"இதுவே என் கட்டளை; கட்டளையே சாசனம்" போன்ற வசனங்களில் தன் பங்கிற்கு வெளுத்து கட்டியிருப்பார் மதன் கார்க்கி. 

பாகுபலி 2

பாகுபலி 2 சுவாரஸ்யங்கள் :

  • 4K ஃபார்மெட்டில் வெளியான முதல் இந்திய திரைப்படமாக அமைந்தது.
  • இந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளை நான்கு விதமாக எடுத்து வைத்திருந்தாராம் இயக்குநர் ராஜமெளலி.
  • 2000க்கும் மேற்பட்ட நபர்களை வைத்து மகிழ்மதி சாம்ராஜ்யத்தை கட்டமைத்தார் கலை இயக்குநர் சாபு சிரில்.
  • இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளுக்காக மட்டும் 30 கோடி செலவு செய்து காட்சிப்படுத்தினார்கள். 
  • 2500க்குமான VFX காட்சிகளை வைத்தது மட்டுமல்லாமல் உலகில் பல்வேறு இடங்களில் இருந்து இதற்காக பணிபுரிந்திருக்கிறார்கள். 
  • பிரபாஸ் - ராணா இருவரும் இந்தப் படத்திற்காக 100 கிலோ வரை தன் எடையை கூட்டினார்கள். 
  • இந்தப் படத்திற்கு பிறகு பாகுபலி, கட்டப்பா கேரக்டர்களுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டது. 
  • 'பாகுபலி' படத்திற்காக ஐந்து வருடங்களாக வேறு எந்தப் படத்திலும் கமிட்டாகாமல் இருந்தார் பிரபாஸ்.

பாகுபலி 2

இது தவிர, பாடலிலும், பேக் க்ரவுண்ட் ஸ்கோரிலும் நம்மை கதைக்குள் மூழ்கடித்திருப்பார் மரகதமணி. நினைத்து பார்க்க முடியாத அளவில் சண்டை காட்சிகள் அமைத்து தேசிய விருதை தட்டிச்சென்றார் கிங் சாலமன். மகிழ்மதி சாம்ராஜ்யம், குந்தல தேசம், பிரமாண்ட போர் காட்சிகள் என விஷுவல் எஃபெக்ட்ஸில் கலக்கி தன் பங்கிற்கு படத்தை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றதில் பெரும் பங்கு கமலக்கண்ணனைச் சாரும். தான் நினைத்ததை மிக நேர்த்தியாக சொல்லி, பிரமாண்டமே பார்த்து வியந்து போகுமளவிற்கு பிரமாண்டமாக இயக்கிய இயக்குநர் ராஜமெளலி இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த படைப்பாளி என்பதில் ஐயமில்லை. 

168 நிமிடங்கள் மகிழ்மதி சாம்ராஜ்யத்திற்கு நம்மை அழைத்துச் சென்ற ராஜமெளலிக்கு பிக் சல்யூட்...

ஜெய் மகிழ்மதி!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement