''அவர்மேல அவதூறு வழக்கு போடலாம்னு இருக்கேன்!" - கதை திருட்டுப் பிரச்னை குறித்து, இயக்குநர் விஜய்

'கடந்த 27- ம் தேதி வெளியான 'தியா' படத்தின் கதை, உதவி இயக்குநர் சந்திரகுமாருடையது' என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரல். இந்நிலையில், அவருடனும் இயக்குநர் விஜயிடமும் பேசினோம்.

''அவர்மேல அவதூறு வழக்கு போடலாம்னு இருக்கேன்!

'கடந்த 27- ம் தேதியன்று சாய் பல்லவி நடித்து வெளியான 'தியா' (கரு) படத்தின் கதை, உதவி இயக்குநர் சந்திரகுமாரிடமிருந்து திருடி எடுக்கப்பட்டது' என்ற பேச்சுதான் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து உதவி இயக்குநர் சந்திரகுமாரிடமும், இயக்குநர் விஜயிடமும் பேசினோம்.

''இந்தக் கதையை எப்போ எழுதுனீங்க, கதை உங்களோடதுனு தெரிஞ்சதும் என்ன பண்ணீங்க?"

''2015-ல கதை எழுதி முடிச்சு, டைட்டிலும் வெச்சுட்டேன். 'குறி', 'கரு', 'திசு' இதுதான் நான் வெச்ச டைட்டில்ஸ். இந்தக் கதையை இலங்கையைச் சேர்ந்த தயாரிப்பாளர் அன்பழகன்கிட்ட பகிர்ந்துக்கிட்டேன். ஒரு கரு கலைக்கப்பட்டால், அதனால எவ்வளவு பாதிப்பு உருவாகும் என்பதை மையமா வெச்சு, அந்தக் கருவே பேயாக வந்து, அது அழிக்கப்பட்டதற்குக் காரணமா இருந்த அத்தனை பேரையும் பழிவாங்கும்ங்கிற கதை என்னோடது. தயாரிப்பாளருக்கு இந்தக் கதை ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. கூடிய சீக்கிரம் இதைப் படமா பண்ணணும்னு சொன்னார். 27- ம் தேதி 'தியா' படம் பார்த்த உடனேயே நண்பர் ஒருவர் போன் பண்ணி, 'உன்னோட கதையை அப்படியே படமா எடுத்துருக்காங்க'னு சொன்னார். உடனே நானும் அந்தப் படத்தைப் பார்த்தேன். என் கதைக்கு, திரைக்கதையைக் கொஞ்சம் மாத்தி எழுதிப் படம் பண்ணிருக்கார், 'தியா' இயக்குநர் விஜய். மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. இதே கதையை நான் திரும்பப் படமாக எடுக்கணும்னு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். ஏன்னா, 'தியா'வோட திரைக்கதையைவிட என்னோட திரைக்கதை பெட்டரா இருக்கும்."

Chandra Kumar

''படத்தோட டிரெயிலர் பார்க்கும்போதே இது உங்களோட கதைனு தோணலையா?" 

''டிரெயிலரை வெச்சுக் கதையை எப்படிக் கணிக்க முடியும்? ஒரு காதலை ஐந்து பேர் ஐந்து விதமா சொல்லலாம். அதேமாதிரி அம்மா - மகள் பாசப்பிணைப்பையும் வெவ்வேறு திரைக்கதையால சொல்லலாம். டிரெயிலர் பார்க்கும்போது இது என்னோட கதைனு தோணலை. படம் பார்த்ததுக்குப் பிறகுதான், இன்ச் பை இன்ச் என்னோட கதைனு புரிஞ்சது!" 

'கரு' விஜய்

''யாருகிட்ட இருந்து உங்க கதை லீக் ஆகியிருக்கும்னு நினைக்கிறீங்க?" 

''இந்தக் கதையை இலங்கைத் தயாரிப்பாளர் அன்பழகன்கிட்ட சொன்னதுக்கான சாட்சி என்கிட்ட இருக்கு. நாங்க ரெண்டுபேரும் பேசுனது என் மொபைல்ல ரெக்கார்ட்ல இருக்கு. நான் இயக்குநர் ராஜகுமாரன்கிட்ட உதவி இயக்குநரா இருந்தேன். 'கண்ணுக்குக் கண்ணாக', 'இயக்குநர்' ஆகிய படங்கள்ல வேலை பார்த்திருக்கேன். ரிலீஸாகப்போற 'ஜம்பு மகரிஷி' மற்றும் 'அவள் பெயர் செந்தாமரை' ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியிருக்கேன். ராஜகுமாரன் சார்கிட்டேயும் இந்தக் கதையைச் சொல்லியிருக்கேன். அவர் என் இயக்கத்துல ஹீரோவா நடிக்கணும்னு விருப்பப்பட்டார். இவ்ளோ கஷ்டப்பட்டு கதையை உருவாக்கி என்ன பிரயோஜனம்? எல்லாமே சிதைஞ்சு போச்சு. அன்பழகன்கிட்ட இருந்துதான் இந்தக் கதை லீக் ஆகியிருக்கும்னு தோணுது. நான் லைகா நிறுவனத்திடமும், இயக்குநர் விஜயிடமும் இதுக்காக சண்டைபோட விரும்பலை. சினிமாவுல உதவி இயக்குநரோட நிலைமை இப்படித்தான் மோசமா இருக்கும்னு எல்லாருக்கும் தெரியும். இயக்குநர் கோபி நயினாருக்கும் ஆரம்பத்துல இதே நிலைமைதான். லைகா தயாரித்த 'கத்தி' அவரோட சொந்தக் கதை. இப்போ 'அறம்' படம் மூலமா அவருடைய திறமையை வெளிக்காட்டியிருக்கார். அதேமாதிரி நானும் ஒருநாள் பெரிய லெவல்ல சாதிப்பேன். இரண்டு ஆக்ஷன் கதைகளை எழுதி கைவசம் வெச்சுருக்கேன்."

விஜய்

இந்தப் பிரச்னை குறித்து இயக்குநர் விஜயிடம் பேசியபோது, ''நான் இந்தக் கதைக்கான டைட்டிலை தயாரிப்பாளர் சங்கத்துல 2013-லேயே பதிவு பண்ணிட்டேன். அப்போவே இந்தக் கதையை லைகா நிறுவனம் ஓகே பண்ணிட்டாங்க. இது என் சொந்தக் கதை. ஆனா, சந்திரகுமார் 2015-லதான் கதை எழுதினேன்னு சொல்றார். இது எந்த விதத்துல நியாயம்? இவர்மேல அவதூறு வழக்கு போடலாம்னு இருக்கேன். சந்திரகுமார் யாருன்னுகூட எனக்குத் தெரியாது. அவர் சினிமாவுல நிறைய படங்கள் பண்ணி வெற்றிபெற வாழ்த்துகள்." என்று கூறினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!