Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

'யாரும் நிறுத்தல... நாங்க தொடங்கிட்டோம்!" - 'விசில் செயலியை விளக்கிய கமல்

'அவங்களை நிறுத்தச் சொல்லுங்க; நான் நிறுத்துறேன்' - 'நாயகன்' படத்துல எங்க ஆளு பேசின டயலாக் சார் இது. குற்றம் செய்றவங்க, கொள்ளை அடிக்கிறவங்க, லஞ்சம் வாங்குறவங்க, சூழலைக் கெடுக்கிறவங்கன்னு.. இவங்க யாரும் நிறுத்துறதா தெரியலை. அதனால நம்மவர் தொடங்கிட்டார்'

மக்கள் நீதி மய்யத்தின் மொபைல் ஆப் 'விசில்' அறிமுக நிகழ்ச்சிக்கு வந்திருந்த கமல் ரசிகர் ஒருவரின் நெகிழ்வு இது.

கமல்

சென்னை ஆழ்வார்பேட்டையில் விசிலை அறிமுகப்படுத்தி பேசிய கமல், 'இது குறைகளை ஒரே நொடியில் தீரத்து வைக்கிற மந்திரக் கோல்னு சொல்லமாட்டேன். அதேபோல காவல்துறைக்கோ, அரசாங்கத்துக்கோ மாற்றா நாங்க இந்த ஏற்பாட்டை செய்யலை. சொல்லப்போனா, காவல்துறை, மீடியாவுக்கேகூட உதவுறதாவே இந்த விசில் இருக்கும். ஆனா, சாமானியர்கள் எழுப்பும் இந்த ஒலி தப்பு செய்துக்கிட்டு இருக்கிறவங்களுக்கு ஒரு அபாயச் சங்கு!'என்றார். இனி 'விசில்' குறித்து..

முதல் கட்டமாக மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த ஆப்.

மொபைலில் 'ஆப்'பை டவுன்லோடு செய்ததும், இரண்டு வழிகளில் அதைப் பயன்படுத்தும் வகையில் டிசைன் செய்திருக்கிறார்கள்.

முதலாவது, ஒரு குடிமகனாகத் தங்கள் பகுதிகளில் காணும் குற்றங்கள், குறைகளைப் பதிவு செய்யலாம். இவர்கள் 'சிட்டிசன்' என அழைக்கப்படுகிறார்கள். புகார்களுக்கு ஆதாரங்களைச் சமர்ப்பிக்க முடிந்தால் சமர்ப்பிக்கலாம். இல்லையென்றாலும் பரவாயில்லை. புகார் செய்கிறவர்கள் குறித்த ரகசியம் பாதுகாக்கப்படும்.

இரண்டாவது கேட்டகிரி சாம்பியன். சாம்பியனாகப் பதிவு செய்கிறவர்கள் கட்டாயம் மக்கள் நீதி மய்ய உறுப்பினர்களாக இருக்க வேண்டும். 'ஆப்' அட்மின்களோடு தொடர்புடைய சாம்பியன்களின் வேலை, வந்த புகாரின் உண்மைத்தன்மை குறித்து நேரடியாகச் சென்று விசாரிப்பது.

கமல்

எந்தவொரு புகார் குறித்தும் ஐந்து சாம்பியன்கள் கள ஆய்வு செய்வார்கள். அந்த ஐந்து பேரில் மூன்று பேர் புகார் உண்மை என அப்ரூவல் தந்தால் மட்டுமே புகார் அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லப்படும். யாரும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதற்காகவே இந்த அப்ரூவல் ஐடியாவாம்.

சாம்பியன்கள் அப்ரூவல் தந்துவிட்டால், அந்தப் புகார்களைச் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் எடுத்துச்சென்று தீர்வுக்கு முயற்சி செய்வார்கள்.

தங்களுடைய புகார் எந்த மட்டத்தில் உள்ளது என்பதைப் புகார் அளித்தவர்கள் டிராக் செய்து பார்த்துக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

தவிர, தமிழ்நாட்டிலுள்ள அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியலும் இந்த ஆப்பில் உள்ளது. இதன் மூலம், புகார் எந்தத் தொகுதியில் உள்ளதோ அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கவனத்துக்குச் செல்லும் எனத் தெரிகிறது.

தமிழ், ஆங்கிலம் என எந்த மொழியிலும் புகாரை அனுப்ப முடியும் என்பது கூடுதல் தகவல்.

ஒருவேளை அவசரமாகக் களையப்பட வேண்டிய புகார் என்றால், அதற்கும் ஆப்ஷன் வைத்திருக்கிறார்கள்.

அதிகபட்சம் ஒரு நிமிடத்துக்குள் ஒரு புகாரைப் பதிவு செய்துவிடலாம் என்கிறார்கள். 

நிகழ்ச்சியில் நடிகை ஶ்ரீப்ரியாவும் கலந்துகொண்டார். 'மக்களிடமிருந்து வர்ற குறைகளைக் கையில் எடுத்துப் போராட்டம் நடத்துற எண்ணம் உள்ளதா?'  எனச் செய்தியாளர் கேட்டதற்கு, 'தேர்தல் தேர்வு எழுதப் போவதற்கு முன் வீட்டுப்பாடம் படிக்கவே இந்தச் செயலி' எனத் தன் உரையை முடித்தார், கமல்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement