Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

''இவனா இப்படினு ரீ-என்ட்ரி கொடுக்குறேன் இருங்க..." - 'ராசாத்தி' சாம் ஆண்டர்சன் அப்போ இப்போ கதை - 8

 

appo ippo

 இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

''நான் நடிச்ச 'யாருக்கு யாரோ' படத்தில் இடம்பெற்ற பாட்டு 'ராசாத்தி'. அந்தப் பாட்டை பலரும் கிண்டலடித்தனர். ஆனா, இன்னைக்கு நான் நிறைய படங்களில் நடிச்சு ஃபேமஸ் ஆனதுக்கு அதுதான் காரணம்'' என்கிறார், நடிகர் சாம் ஆண்டர்சன். 'பத்து எண்றதுக்குள்ள' படத்துக்குப் பிறகு தமிழ்சினிமாவை விட்டு விலகியிருக்கும் சாம் ஆண்டர்சன் என்ன செய்து கொண்டிருக்கிறார்? அவரிடம் பேசினேன். 

சாம் ஆண்டர்சன்

''நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஈரோடு. என் வீட்டுல நான்தான் மூத்த பையன். எனக்குப் பிறகு ஒரு தம்பி இருக்கான். அம்மா, அப்பா ரெண்டுபேரும் வேலை பார்க்குறாங்க. ஸ்கூல் படிச்சு முடிச்சதும், காலேஜ்ல இன்ஜினீயரிங் படிக்கணும்னு ஆசைப்பட்டு படிச்சேன், மெக்கானிகல் இன்ஜினீயரா வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்போ, சொந்தமா ஏதாவது பிசினஸ் பண்ணலாம்னு தோணுச்சு. ஏற்கெனவே கொரியர் கம்பெனியில வேலை பார்த்த அனுபவம் இருந்ததுனால, சொந்தமா கொரியர் கம்பெனி ஆரம்பிச்சேன். எங்க தாத்தாவுக்கு, 'பேரன் சினிமாவுல நடிக்கணும்'னு ரொம்ப ஆசை. எனக்கு அப்படி எதுவும் தோணுனதில்லை. தவிர, வீட்டுல பெரியப்பா ஒருத்தரும் சினிமாமேல ரொம்பக் காதலோட இருப்பார். கொஞ்சம் பணம் சேர்ந்தாலே, இதைவெச்சுப் படம் தயாரிப்போமானு நினைப்பார். நல்ல தயாரிப்பாளரா சினிமாவுல வலம் வரணும்னு அவருக்கு ஆசை. 

 நான் எப்போவும்போல கொரியர் பிசினஸை மட்டும் பார்த்துக்கிட்டு இருந்தேன். அந்த நேரத்துலதான், 'யாருக்கு யாரோ' படத்தை எங்க பெரியப்பாவே ஸ்க்ரிப்ட் எழுதித் தயாரிச்சு இயக்க ரெடி ஆனார். என்னையும் அவரோட மேனேஜரா பக்கத்திலே வெச்சுக்கிட்டார். அக்கவுன்ட்ஸ் சம்பந்தப்பட்ட எல்லா வேலையையும் பார்த்துக்கிட்டிருந்தேன். அப்போ, அவர் எடுக்கப் போற படத்துக்காக புதுமுக ஹீரோ, ஹீரோயினுக்கு ஆடிஷன்ஸ் வெச்சார். பலபேர் கலந்துக்கிட்டாங்க. ஆனா, வந்தவங்க எல்லோரும், 'எவ்வளவு சம்பளம்; டூயட் சாங் இருக்கா?'னுதான் கேட்டாங்க. அதனால, இவங்க யாரும் படத்துல நடிக்க செட் ஆகமாட்டாங்கனு எங்க பெரியப்பாவுக்குத் தோண... என்னையைவே ஹீரோ ஆக்கி 'ஆக்‌ஷன்' சொல்ல ஆரம்பிச்சுட்டார். 

தலைவா

ஆக்சுவலி, நான் நடிக்க வந்தது தற்செயலா நடந்தது. நான் ஹீரோவா ஆகணும்னு கனவுலகூட நினைச்சதில்ல. என் முதல் படத்தின்போது எப்படி நடிக்கணும், எப்படி டயலாக் பேசணும், எப்படி ஃபைட் பண்ணனும்னு எதுவும் தெரியாது. படத்துல 'ராசாத்தி' பாட்டு செம ஃபேமஸ் ஆச்சு. அந்தப் பாட்டை சென்னையில மொட்டை வெயில்ல ஷூட் பண்ணோம். பெரியப்பா பட்ஜெட் பத்தாதுனு சொல்லிட்டதுனால, நடன இயக்குநர்னு யாரையும் ஃபிக்ஸ் பண்ணிக்கலை. 'சரி, நாமளே ஆடுவோம்'னு டான்ஸைப் போட்டேன். அந்தப் பாட்டு, அப்பவே யூடியூப் வைரல். எல்லாம் எதுக்கு... நான் போட்ட அந்த டான்ஸுக்குக் கிடைச்ச ரெஸ்பான்ஸ்! அந்தப் பாட்டுக்காக என்னைக் கலாய்க்கிறவங்க அதிகம். அதையெல்லாம் பெருசா எடுத்துக்கமாட்டேன். 

இதுக்குப் பிறகுதான் எனக்கு 'தலைவா', 'பிரியாணி', 'கோலி சோடா' வாய்ப்புகள் கிடைச்சது. 'விஜய் சார்கூட நடிக்கணும்'னு சொன்னப்போ, எனக்கு ஒரே ஷாக்கிங். அதுவரை என்கிட்ட பாஸ்போர்ட் இல்ல... 'ஜெர்மனியில் ஷூட்டிங், பாஸ்போர்ட் எடுங்க'னு சொன்னாங்க. எடுத்தேன். எனக்கும் விஜய் சாருக்குமான காட்சிகளை ஆஸ்திரேலியாவுல ஷூட் பண்ணாங்க.

அந்த சீன் எடுக்கும்போது, காலையில எட்டு மணிக்கு சிட்னியில இறங்கினேன். அங்கே, ஒரு இடத்துல 'தலைவா' ஷூட்டிங் போய்க்கிட்டு இருந்துச்சு. விஜய் சாரைப் பார்த்துட்டு, என்னால 'இது நிஜம்தானா'னு நம்பவே முடியலை. சேர்ல ஒரு ஓரமா உட்கார்ந்து, விஜய் சார் நடிக்கிறதைப் பார்த்துக்கிட்டே இருந்தேன். ஏ.எல்.விஜய் சார் என்கிட்ட வந்து பேசினார். அப்புறம் விஜய் சாரும் எனக்குக் கை கொடுத்துப் பேசினார். 'தலைவா' படம் மட்டும் பிளான் பண்ன மாதிரி ரிலீஸ் ஆயிருந்தா, என் ரீச் வேற லெவல்ல இருந்திருக்கும். 

வெங்கட்பிரபு சாரோட 'பிரியாணி' படத்துல நடிச்சேன். வெங்கட்பிரபு சார் என்கிட்ட, 'பயப்படாத... உனக்கு என்ன தோணுதோ, அதைப் பண்ணு'னு சொன்னார், நடிச்சேன். யூடியூப்ல என் வீடியோக்களையெல்லாம் பார்த்துட்டுதான், விஜய் மில்டன் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்.  

சினிமாவுல எனக்கு ஏதாவது சந்தேகம்னா, மிர்ச்சி சிவாவுக்கு போன் பண்ணிக் கேட்பேன். அவர்தான், எனக்கு சரியானதைச் சொல்வார். என் நலம் விரும்பி அவர். இன்னும் நான் கல்யாணம் பண்ணிக்கலை; சினிமாவுல நிலையான இடம் பிடிச்சுட்டு கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன். நல்ல கேரக்டர்ல நடிக்கக் கதை கேட்குறேன். 'இவனா இப்படி ஒரு படத்துல நடிக்கிறான்'னு எல்லோரும் ஆச்சர்யப்படுற மாதிரி ஒரு ரீ-என்ட்ரி சீக்கிரமே கொடுப்பேன். அதுவரைக்கும் வெயிட் பண்ணுங்க!"- நம்பிக்கையுடன் முடிக்கிறார், நடிகர் சாம் ஆண்டர்சன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement