Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

“ சாந்தனு...!'', ''பிருத்வி...!’’ மகன்களை நினைத்து கலங்கிய பாக்யராஜ்-பாண்டியராஜன்

இயக்குநர் பாக்யராஜின் உதவி இயக்குநர் மதுராஜ் இயக்கும் படம் 'தொட்ரா’. பிருத்வி ராஜன் ஹீரோவாகவும் மலையாள நடிகை வீணா ஹீரோயினாகவும் நடித்துள்ள இந்தப் படத்தில், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், மைனா சூஸன், கூல் சுரேஷ் உள்பட பலர் நடிக்கின்றனர். உத்தமராஜா என்பவர் இசையமைத்துள்ளார். 

தொட்ரா

 

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பாண்டியராஜன், ஆர்.கே.செல்வமணி, பேரரசு, ஏ.வெங்கடேஷ், ​மீரா கதிரவன், ​தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ஜே.எஸ்.கே, சுரேஷ் காமாட்சி, விடியல் ராஜூ, நடிகர்கள் பரத், ஸ்ரீகாந்த், கலையரசன்,  நடிகை நமீதா, அவரின் கணவர் வீரா, போஸ் வெங்கட், லொள்ளு சபா ஜீவா, வசுந்தரா, கோமல் ஷர்மா உள்பட பலர் கலந்துகொண்டனர். 

இயக்குநர் பேரரசு பேசுகையில், ''ரசிகர்களும் தியேட்டர் உரிமையாளர்களும் கணவன் மனைவி போன்றவர்கள். ஒருவரை கோபித்துக்கொண்டு இன்னொருவர் ஊருக்குப் போனால் சீக்கிரமே திரும்பி வந்துவிட வேண்டும். இல்லையென்றால் தனித்து இருந்து கணவன் பழக்கப்பட்டு விடுவான். அப்படி போராட்டம் என்கிற பெயரில் திரையரங்குகளை நீண்ட நாள்கள் மூடி வைத்திருந்தால் போகப்போக ரசிகர்கள் சினிமா பார்ப்பதையே மறந்துவிடுவார்கள்” என்றார். 

ஃபெப்சி தலைவரான ஆர்கே.செல்வமணி பேசுகையில், ''இது, கடந்த ஐம்பது வருட காலமாகவே சினிமாவை, ஒரு தொழிற்துறையாக அங்கீகரிக்காமல், குடிசைத் தொழில் போல நடத்தி வந்ததால் ஏற்பட்ட பாதிப்பு, சமீபத்தில் நீண்ட வேலைநிறுத்தம் நடத்த வேண்டிய அளவுக்குக் கொண்டுவந்துவிட்டது. சினிமாவிலிருந்து ஆட்சிக்கு வந்தவர்களும்கூட இதை கவனிக்காமல் விட்டுவிட்டார்கள். 

ஒருவகையில் தயாரிப்பாளரும் விவசாயியும் ஒன்று. இரண்டுபேருமே அவரவர் பொருளுக்கு அவர்களே விலை நிர்ணயிக்க முடியாத சூழல். ஆனால், ஆளாளுக்கு ஒரு பக்கமாக தங்கள் போக்கில் இழுக்க ஆரம்பித்ததனால் சரியான திசையில் சினிமா செல்லமுடியவில்லை. சினிமா என்கிற இந்தக் குளத்தை சுத்தம் செய்வதற்காக வலையை வீசியபோது நிறைய திமிங்கலங்கள் மாட்டின. தயாரிப்பாளர்கள் என்கிற மீன்களைக் காப்பாற்ற, அந்தத் திமிங்கலங்களை அப்புறப்படுத்தி வேறு ஒரு இடத்தில் கொண்டு போய் விட்டுத்தான் ஆகவேண்டும். இதை தயாரிப்பாளர்கள் என்கிற மீன்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பாண்டியராஜன்

ஒரு பாடல் ஹிட்டானால், அதை வாங்கி விற்பவர்களுக்கு 30 கோடி ரூபாய் லாபம் கிடைக்கிறது. ஆனால் அதை உருவாக்கிய படைப்பாளிகளுக்கு 30 ரூபாய்கூட கிடைப்பதில்லை. நாங்கள் உருவாக்கிய அந்தப் பாடல்களை எங்கள் விழாக்களில் பயன்படுத்துவதற்கே 12 பாடல்களுக்கு 90 லட்ச ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், அந்த 12 படங்களின் பாடல்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் 90 லட்ச ரூபாய் ஆடியோ ரைட்ஸ் கொடுக்காத ஒரு நிறுவனம், ஒருநாளைக்கு ஒரு ஷோவுக்கு மட்டும் பயன்படுத்த 90 லட்ச ரூபாய் நம்மிடம் வாங்கும் அளவுக்குக் கொண்டுவந்துவிட்டது யார்? இப்படி பல ஆயிரம் கோடிகளை நம்மை வைத்து வேறு யார்யாரோ சம்பாதிக்கிறார்கள். எல்லா மாநில சினிமாவுக்கும் ஒரு வீடு, ஒரு வாசல். ஆனால் தமிழ் சினிமாவுக்கு மட்டும் ஒரு வீடு மூன்று வாசல். அதனால், யார் வேண்டுமானாலும் எந்த வழியாகவும் உள்ளே நுழையலாம் என்கிற நிலை. டைட்டில் பதிவு செய்யும் குழப்பங்கள்கூட இதனால்தான்” என்றார். 

அடுத்ததாக, இயக்குநரும் 'தொட்ரா’ பட ஹீரோ பிருத்வியின் தந்தையுமான பாண்டியராஜன் பேசுகையில், “பிருத்வி இவ்வளவு நண்பர்களைச் சேர்த்துவைத்திருப்பான் என நினைத்துப் பார்க்கவில்லை. என் கவலையெல்லாம் இன்னும் அவன் சினிமாவில் ஒரு நல்ல நிலைக்கு வரவில்லையே என்பதுதான். வெற்றி அவ்வளவு சாதாரணமாக வந்துவிடாது. உடனே வந்துவிட்டால் அதற்கு மரியாதையும் கிடையாது. எதற்கும் ஒரு நல்ல நேரம் வரவேண்டும். ஆனால், இந்தப் படத்தைப் பார்த்ததும் பிருத்விக்கு அந்த நல்ல நேரம் வந்துவிட்டது என்றே தோன்றுகிறது” என்று நெகிழ்ச்சியுடன் கூறி கண் கலங்கினார்.

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசுகையில், ''இந்தப்படத்தின் நாயகன் பிருத்வி, உடம்பை எப்படி ஃபிட்டாக வைத்துக்கொள்வது என்பதை பரத்திடமிருந்து கற்றுக்கொண்டால், காலம் முழுக்க நிலைத்து நிற்கலாம். இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டதுபோல, டைட்டில் பிரச்னை இருக்கவே செய்கிறது. சில வருடங்களுக்கு முன்பு, இயக்குநர் சங்கத்திலிருந்து எங்கள் சங்கத்திலேயே டைட்டிலைப் பதிவுசெய்து கொள்கிறோம் என வேகமாகப் புறப்பட்டார்கள். ஆனால் அதன்பின் என்ன ஆனதோ, அந்த விஷயத்தை கிடப்பில் போட்டுவிட்டார்கள். நாளையேகூட அந்த முயற்சியைத் தொடங்கி, சுமுகமான பேச்சுவார்த்தை நடத்தினால், அதற்கும் முடிவு கட்டலாம். அதற்கு நாங்கள் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம்.” என்றார்.   

பாக்யராஜ்

படத்தின் இயக்குநர் மதுராஜ் பேசும்போது, ''இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு என் குருநாதர் பாக்யராஜ் சார், 'என் பெயரைக் காப்பாற்றிவிட்டாய்’ எனக் கூறினார். இதைவிட பெரிய விருது வேறொன்றும் இருக்க முடியாது. கதாநாயகி வீணாவைப் படப்பிடிப்பின்போது அடித்துவிட்டதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றார். 

இறுதியில் பேசவந்த இயக்குநர் கே.பாக்யராஜ், ''பாண்டியராஜன் தனது மகனைப் பற்றி ரொம்பவே ஃபீல் பண்ணிப் பேசினார். அவரே ஃபீல் பண்ணினால், அவருக்கு முன்னாடி வந்த நான் என் மகன் சாந்தனுவைப் பற்றி எவ்வளவு ஃபீல் பண்ணியிருப்பேன். பத்து வருடங்களுக்கு முன் 'காதல்’ படத்தில் நடிக்கச்சொல்லி சாந்தனுவுக்குத்தான் அந்த வாய்ப்பு வந்தது. படம் நிச்சயம் ஹிட்டாகும் என நன்றாகவே தெரிந்தது. ஆனாலும் அப்போது அந்தப் படத்தில் நடிக்கும் அளவுக்கு அவருக்கான வயது இல்லை என மறுத்துவிட்டேன். அதற்குப்பின் அந்த வாய்ப்பு பரத்துக்குப் போய், படமும் மிகப்பெரிய ஹிட்டாகிவிட்டது.

யாருக்கு என்ன கிடைக்க வேண்டுமோ, அது எல்லாமே வரும் நேரத்தில்தான் வரும். அதற்காக நாம் கவலைப்பட வேண்டியதில்லை. என் உதவி இயக்குநர் என்பதற்காகவே மதுராஜுக்குப் படம் கொடுத்ததாகத் தயாரிப்பாளர் சொன்னார். அந்த வகையில் இந்தப் படத்தை நல்லபடியாக முடித்து, ஆடியோ ரிலீஸ் அளவுக்குக் கொண்டுவந்ததிலும் தயாரிப்பாளருடன் எந்தவித பிரச்னையும் இல்லாமல் படத்தை முடித்ததிலும் இயக்குநர் மதுராஜ் என் பெயரைக் காப்பாற்றிவிட்டார்” என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement