Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

எத்தனையோ ஹீரோயின்கள் இருக்கும்போது எங்களுக்கு ஏன் உங்களை பிடிச்சிருக்கு த்ரிஷா? #HBDTrisha

த்ரிஷா...

இந்த மூன்று எழுத்துக்கு கோலிவுட் மட்டுமல்லாமல் இந்திய சினிமா முழுவதும் தனி இடம் இருக்கிறது. ஹீரோயின்கள் உச்ச நட்சத்திரங்களாக வருவது சிரமம். அப்படி வந்தாலும் தன்னை லைம் லைட்டிலேயே வைத்திருப்பது என்பது மிகவும் சவாலான காரியம். அதனை தன் நடிப்பினாலும் திறமையாலும் ஜஸ்ட் லைக் தட் என டீல் செய்து இன்றளவும் தனக்கான ஒரு இடத்தை பிடித்து கேஷுவலாக இருக்கிறார் த்ரிஷா. 90’ஸ் கிட்ஸ் சினிமா பார்க்கத் தொடங்கியபோது தன் கரியரைத் தொடங்கிய த்ரிஷா அவர்களுடன் இணைந்தே வளர்ந்தார் என்றே சொல்லலாம். அவர்கூடவே அவரது க்ராஃபும் வளர்ந்தது. 

த்ரிஷா

1983ல் சென்னையில் பிறந்தவர், சர்ச் பார்க்கில் ஸ்கூலிங் முடித்து எத்திராஜ் கல்லூரியில் பிபிஏ படித்தார். படிக்கும்போதே மாடலிங்கில் ஆர்வம் அதிகமாக, 1999ல் மிஸ் சேலம், மிஸ் மெட்ராஸ் போன்ற போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர், 2001ல் மிஸ் இந்தியா போட்டியில் ப்யூட்டிஃபுல் ஸ்மைல் (Beautiful Smile) விருதை தட்டிச் சென்றார். அந்த சமயத்தில் 'ஜோடி' படத்தில் சிம்ரனுக்கு தோழியாக நடித்த த்ரிஷா, பின்னாளில் இப்படி ஒரு தனித்துவம் வாய்ந்த கதாநாயகியாக உயர்ந்து நிற்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அதனைத் தொடந்து, இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் 'லேசா லேசா' படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், அந்தப் படம் வெளிவருவதற்கு முன், 'மெளனம் பேசியதே', 'மனசெல்லாம்'  ஆகிய படங்கள் மூலம் ஹீரோயினாக கோலிவுட்டில் தடம்பதித்த த்ரிஷா, 'யாருடா இந்த பொண்ணு. சூப்பரா நடிக்குது..' என்றளவுக்கு 'சாமி' படத்தில் புவனாவாக மக்கள் மனதில்  இடம் பிடித்தார். கல்லூரி மாணவியாக, அன்பான மனைவியாக த்ரிஷாவின் நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிம்புவுடன் 'அலை', தருணுடன் 'எனக்கு 20 உனக்கு 18' அடுத்தடுத்து பட வாய்ப்புகள் த்ரிஷாவைத் தேடி வந்தன. பிரபாஸுக்கு ஜோடியாக நடித்த 'வர்ஷம்' இவரை டோலிவுட்டிலும் அடையாளம் காட்டியது. அதன் பின், தமிழில் விஜய்யுடன் நடித்த 'கில்லி' இவரை வேற லெவலுக்கு அழைத்துச் சென்றது என்றே சொல்லலாம். தனலட்சுமியாகவே வாழ்ந்த த்ரிஷாவின் நடிப்பும் நடனமும் அப்படிப் போடு போடுவென படத்திற்கு பலம் சேர்த்தது. 

த்ரிஷா

இதனைத் தொடர்ந்து 'திருப்பாச்சி', 'ஆதி', 'குருவி' என அடுத்தடுத்தப் படங்கள் விஜய்யுடன் நடித்து ஹிட் கொடுத்தார். விஜய் - த்ரிஷா காம்போ என்றாலே படம் நிச்சயம் ஹிட்தான் என்று சொல்லுமளவிற்கு கொடிக்கட்டி பறந்தார். சூர்யாவுடன் 'ஆறு' படத்தில் 'பாக்காத என்னை பாக்காத' என காதலில் நம்மை கரையவிட்டவர், 'உனக்கும் எனக்கும்' படத்தில் கிராமத்து பெண்ணாக வரும் இவர், அண்ணன் மீது காட்டும் பாசம், ஜெயம் ரவியுடனான காதல் என நடிப்பில் கலக்கினார். சந்தோ......ஷ் என கூப்பிடும் இவரது மாடுலேஷன் சந்தோஷ் என பெயர் வைத்திருக்கும் அனைவருக்கும் சமர்ப்பணம். ரவி தேஜா, பிரபாஸ், கோபிசந்த் ஆகியோருடன் த்ரிஷா நடிப்பதைப் பார்த்த டோலிவுட், சிரஞ்சீவி, நாகர்ஜுனா, வெங்கடேஷ் என சீனியர் ஸ்டார்களுடன் நடிக்கவும் வாய்ப்பு கொடுத்தது. தனக்கு அமைந்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்தி டோலிவுட்டிலும் கனவுக் கன்னியாக ஜொலித்தார். அஜித்துடன் 'கிரீடம்' படத்தில் திவ்யாவாக யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார். 'கில்லி'யில் 'தனலட்சுமிடா...என் சாமிடா...என் செல்லம்டா' என்ற முத்துப்பாண்டி பிரகாஷ்ராஜுக்கு மகளாக 'அபியும் நானும்' படத்தில் நடித்து அந்தக் கதையை  சோலோவாக தாங்கிச்சென்றார். அந்தப் படத்திற்கு பின் எல்லா அப்பாக்களும் தங்கள் மகளை அபியை போலவே பார்க்க ஆரம்பித்தனர். 'வா வா என் தேவதையே' பாடல் இன்று வரை மகள்களை பெற்ற அப்பாக்களின் காலர் ட்யூனாக இருக்கிறது. 

த்ரிஷா

சிட்டி சப்ஜெக்ட், வில்லேஜ் சப்ஜெக்ட் என நடித்த வந்த த்ரிஷாவுக்கு 'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் ப்ளாக் பஸ்டராக அமைந்தது. ஜெஸ்ஸியை ரசிக்காதவரோ பிடிக்காதவரோ இருக்கவே முடியாது. அன்று கார்த்திக் மனதில் மட்டுமல்ல அனைவரின் மனதும் ஜெஸ்ஸி ஜெஸ்ஸி என்றுதான் சொல்லியது, சொல்லிக்கொண்டிருக்கிறது. அந்தளவுக்கு காதலும் காதல் நிமித்தமுமாக கதையில் மூழ்கி ஜெஸ்ஸியாகவே வாழ்ந்த த்ரிஷாவுக்கு லட்சம் லைக்ஸ். தன் அறிமுக ஹிந்தி படத்திலேயே அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்து முடித்த கையோடு, தமிழிலும் 'மன்மதன் அம்பு', 'மங்காத்தா', 'என்றேன்றும் புன்னகை' என பிஸியாகவே இருந்தார். 'என்னை அறிந்தால்' படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க தயங்கிய த்ரிஷா, கதையை கேட்டபின் ஹேமானிகாவாக நம்மை கவர்ந்தார். அதில் உடை, முகபாவனைகள், மெச்சூர்டு காதல் என அனைத்திலும் த்ரிஷா தன் க்ளாசிக் நடிப்பில் அசத்தியிருப்பார். இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசனுடன் நடித்த 'தூங்காவனம்' த்ரிஷாவுக்கு 50வது படம். பின், 'அரண்மனை 2' , 'நாயகி' மாதிரியான ஹாரர் ஜானரிலும் நடித்த த்ரிஷா, 'கொடி' படத்தில் அழகிய ருத்ராவாக வந்து இறுதியில் ருத்ரதாண்டவம் எடுத்து நெகட்டிவ் ரோலில் மிரட்டினார். மலையாளத்தில் நிவின் பாலியுடன் இவர் நடித்த 'ஹே ஜூட்' பயங்கர ஹிட். இன்னும் 'கர்ஜனை', 'சதுரங்க வேட்டை 2', '96', ‘மோகினி’ என அடுத்தடுத்து இவரது நடிப்பில் ஏகப்பட்ட படங்கள் வெளிவர காத்திருக்கிறது. 

த்ரிஷா

நாய்குட்டிகள் என்றால் த்ரிஷாவுக்கு கொள்ளை பிரியம். அதே போல், பல ஊர்களுக்குச் சென்று அங்குள்ள உணவுகளை சாப்பிடுவதை த்ரிஷா வழக்கமாக வைத்திருக்கிறார். இப்போது யுனிசெஃப் அமைப்பின் தூதராகவும் செயல்பட்டு வருகிறார். ஜெயலலிதாவின் பயோ பிக்கில் நடிப்பது த்ரிஷாவின் ஆசை என்று அவரே சொல்லியிருக்கிறார். ஜெயலலிதா மேல் அதீத மரியாதையும் நேசமும் கொண்ட த்ரிஷா, தான் ஜெயலலிதாவிடம் விருது வாங்கும் போட்டோவைத்தான் ட்விட்டர் கவர் போட்டோவாக வைத்திருக்கிறார். இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் வெற்றியின் சீக்ரெட் என்ன என்று கேட்டால் ஒரே வார்த்தையில் பதில் வரும். அந்த வார்த்தை 'அம்மா' என்பதுதான். 

த்ரிஷா

சினிமாவில் ஓரிரு படங்கள் நடித்துவிட்டு மின்னல் வேகத்தில் காணாமல் போகும் ஹீரோயின்கள் மத்தியில் இத்தனை ஆண்டுகளாக திரைத்துறையில் தன்னை நிரூபித்து, மென்மேலும் மெருகேற்றிக் கொண்டிருக்கும் த்ரிஷா, தன்னம்பிக்கைக்கு சிறந்த உதாரணம் எனலாம். சிம்ரனின் தோழியாக திரையில் அறிமுகமாகி இன்று சின்சியர் மற்றும் சீனியர் ஹீரோயினாக வளர்ந்து நிற்கும் த்ரிஷா, சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு இருக்கும் பல பெண்களுக்கு  ரோல் மாடலாக இருந்து வருகிறார் என்றால் அதற்கு காரணம், அவரது திறமையும் பொறுமையும்தான். ஒவ்வொரு கதையையும் கவனமாக தேர்ந்தெடுத்து 19 ஆண்டுகள் சினிமாவில் ஹீரோயினாகவே தன் முத்திரையைப் பதித்து தனக்கென்று ஓரிடத்தைப் பிடித்த தனித்துவ நாயகிக்கு ஹாட்ஸ் ஆஃப்..! 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா...!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement