Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

"தேசிய விருது விழாவில் நடந்தது என்ன?" - சர்ச்சைகளுக்கு செழியன் விளக்கம்

ஒவ்வோரு சினிமா கலைஞனுக்குள்ளும் 'தேசிய விருது' கனவு இருக்கும். தனது கனவு, முதல் படத்திலேயே நிறைவேறிவிட்டால் அதைவிட சந்தோஷம் வேறு எதுவும் இருக்கமுடியுமா என்ன... முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார், இயக்குநர் செழியன். ஒளிப்பதிவாளர் டு இயக்குநராக செழியன் இயக்கியிருக்கும் 'டூ லெட்' திரைப்படம், இந்த ஆண்டுக்கான தேசிய விருதுகள் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. தேசிய விருதை தனது மனைவியும், படத்தின் தயாரிப்பாளருமான பிரேமாவுடன் வாங்கி மகிழ்ந்திருக்கிறார், செழியன். 

செழியன்

ஆனால், பல்வேறு சர்ச்சைகளோடு நடந்து முடிந்திருக்கிறது, தேசிய விருதுகள் வழங்கும் விழா. டெல்லியில் நடைபெற்ற 65-வது தேசிய விருதுகள் வழங்கும் விழா, குடியரசுத் தலைவர் இல்லாமலே தொடங்கியது. விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி விருதுகளை வழங்கினார். பின்னர், தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட 11 விருதுகளை மட்டும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இதனால், இந்த விருது வாங்கும் நிகழ்ச்சியை சிலர் புறக்கணித்தனர். இதுகுறித்து செழியனிடம் பேசியபோது...

''தேசியவிருது கொடுப்பதற்கு ஒருநாள் முன்பாக ஒத்திகை நிகழ்ச்சி நடக்கும். விருது பெறுபவர்கள் எங்கே நிற்க வேண்டும், எப்படி விருதைப் பெற்றுக்கொள்ள வேண்டும்... என விழா நடக்கக்கூடிய அரங்கில் ஒத்திகை நடந்தது. அப்போது, அங்கே இருந்த ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் டைரக்டர் நிறைவாகப் பேசும்போது, 'ஜனாதிபதி பத்து நபர்களுக்கு மட்டுமே விருதுகளைக் கொடுப்பார். அதனால், மற்றவர்களுக்கு மத்திய அமைச்சர் விருதுகளை வழங்குவார். விருது வாங்கியவர்களுடன் ஜானதிபதி  குரூப் போட்டோ எடுத்துக்கொள்வார்'னு சொன்னார். இதைக் கேட்டவுடனே அங்கே இருந்தவர்கள், 'நாங்க ஜனாதிபதி கையால் விருது வாங்கத்தான் குடும்பத்துடன் வந்திருக்கோம். அப்படிச் சொல்லித்தானே எங்களைக் கூப்பிட்டீங்க. இப்போ, மத்திய அமைச்சர் விருதுகளைக் கொடுப்பார்னு சொல்வது ஏமாற்றமளிக்கிறது’ என்று சொன்னார்கள்.  

உடனே அவர், 'நான் இதுகுறித்து வேறு எதுவும் பேசமுடியாது.  அமைச்சர் ஸ்மிரிதி இராணி இப்போ வருவாங்க. நீங்க அவங்ககிட்டேயே கேளுங்க'ன்னு சொல்லிட்டார். அங்கே வந்த ஸ்மிரிதி இராணி, 'இது ஜனாதிபதி கலந்துகொள்கிற விழா. அவர் கலந்துகொள்வதால் சில விஷயங்களைத் திட்டமிடாமல் மாற்றுவது கஷ்டம். அதுக்கு, சில அரசாங்க வழிமுறைகள் இருக்கு. மொத்தம் 137 விருதுகள் இருக்கு. அனைத்து விருதுகளையும் கொடுக்க குறைந்தபட்சம் இரண்டு மணிநேரம் ஆகும். அதுக்கு, ஜனாதிபதியின் உடல்நிலை ஒத்துழைக்காது என்று அவர் கருதுவதால், 10 விருதுகளை அவர் கொடுப்பார். இதேபோல, ஏற்கெனவே ஒருமுறை நடந்திருக்கிறது. ஷங்கர் தயாள் ஷர்மா சார் ஜனாதிபதியா இருக்கும்போது, அவருடைய உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், அவருக்குப் பதிலாக வேறொருவர் விருதுகளைக் கொடுத்திருக்கிறார்'னு சொன்னாங்க. 

தேசியவிருது

'நாட்டின் முதல் குடிமகன் கையால் விருது வாங்குவதைப் பெருமையாக நினைக்கிறோம். அதனால், இந்த நிகழ்ச்சியைப் பார்க்க குடும்பத்தினருடன் வந்திருக்கிறோம்' என்று ஒருவர் சொல்ல,  உடனே அமைச்சர் ஸ்மிருதி ராணி, 'நான் உங்க உணர்வுகளை மதிக்கிறேன். ஆனால், இங்கே சில வழிமுறைகள் இருக்கு. அது எல்லாமே  ஏற்கெனவே திட்டமிட்டிருக்காங்க. அதுக்குனு ப்ரோட்டோகால் இருக்கு. அதை ஒரு அமைச்சரா என்னால் மாற்ற முடியாது. எனக்கான வழிமுறைகளின்படி இதுகுறித்து ஜனாதிபதி அலுவகலத்துக்குப் பேசுறேன்'னு  பொறுமையா சொன்னாங்க. எல்லாம் நடந்து முடிந்து இரவு ரூமுக்கு வரவே எட்டு மணி ஆகிவிட்டது. 

விருது வாங்க வந்தவர்கள் தங்குவதற்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் விழா கமிட்டி செய்திருந்தது. அசோகா ஹோட்டலில் ரூம் கொடுத்திருந்தார்கள். ரொம்பப் பெரிய ஹோட்டல் அது. ஐநூறு அறைகளுக்கு மேல் இருக்கும். அந்த வரவேற்கும் ஹாலில்தான் கூடிப் பேச முடியும். மறுநாள் காலை விருது வாங்குபவர்கள்  கூட்டமாக வரவேற்பு ஹாலில் நின்றுகொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள். 'விருது வாங்குவதுகுறித்து நாம சொன்ன விஷயங்கள் எதுவும் இன்னும் முடிவாகலைனு சொன்னாங்க’ அமைச்சர் அலுவலகத்தில் கேட்டவர்களும் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து பதில் எதுவும் வரவில்லை என்றார்கள்.

செழியன்

‘நம்  விருப்பத்தை ஜனாதிபதியிடம் எப்படித் தெரியப்படுத்துறதுனு தெரியலை. அதனால, இங்கே வந்திருக்கிற எல்லா கலைஞர்களும் கையெழுத்திட்டு, 'விழாவில் கலந்துகிட்டு எங்களோட உணர்வுகளை மதிக்கணும்னு ஜனாதிபதிகிட்ட வேண்டுகோள் வைப்போம்'னு சொன்னாங்க. அங்கிருந்த அனைத்து கலைஞர்களும் கையெழுத்துப் போட்டாங்க.  அப்போது, நேரம் 12 மணி இருக்கும். 12.30 வரைக்கும் பார்த்துட்டு மீடியா மூலமா இந்தக் கோரிக்கையை வெளிப்படுத்தப்போறோம்னு சொன்னாங்க.

அதற்குப் பிறகு, எனக்கு டெல்லி வானொலியில் நேர்காணல் இருந்ததால், நான் என் அறைக்கு வந்துட்டேன். விழாவுக்கு மதியம் 2 மணிக்கு தயாராகி வாங்கன்னு காலையிலயே சொல்லியிருந்தாங்க. அதனால, நேர்காணல் முடிஞ்சதும் விழாவுக்குக் கிளம்பி நேரடியாக விருது வழங்கக்கூடிய ஹாலுக்குப் போயிட்டோம். நான் போகும்போது, ஹோட்டல் வரவேற்பு ஹாலில் எந்தக் கூட்டமும் இல்லை. முதலில் கிளம்பிய பேருந்தில் விருதாளர்கள் கிளம்பிச்சென்றுவிட்டதாக நண்பர் ஒருவர் சொன்னார். எனவே, அடுத்த பேருந்தில் முப்பது பேர் விருது நடக்கும் இடத்துக்குக் கிளம்பிக்கொண்டிருக்க, நானும் விருது நடக்கும் இடத்துக்கு வந்துட்டேன். இதற்கிடையில் என்ன நடந்ததுனு எனக்குத் தெரியலை. விருது நிகழ்ச்சிக்குள்ளே போய்ப் பார்த்தா, நிறையா இடங்கள் காலியா இருந்தது. 

நான் உள்ளிட்ட பிராந்திய மொழிப்படங்களுக்கான விருதுகளை ஸ்மிரிதி இராணிதான் கொடுத்தாங்க. ஜனாதிபதி வந்ததும் விருது வாங்கிய கலைஞர்களுடன் போட்டோ எடுத்தார்கள். ஜனாதிபதிக்கு உடல்நிலை சரியில்லை. அவரால் 137 விருதுகளையும் கொடுக்கும் அளவுக்கு நீண்டநேரம் நிற்க முடியாதுனு சொன்னாங்க. விருது வாங்கிட்டு வெளியே வரும்போது சில டி.வி சேனல், 'நீங்க, விழாவைப் புறக்கணிக்கப்போறதா சொன்னாங்களே'னு கேட்டாங்க. 'நான் யாரிடமும் விழாவைப் புறக்கணிக்கப் போறதா சொல்லலையேனு’ சொன்னேன். 

டூ லெட்

என் குழந்தைகளுடன் இந்த விழாவுக்குச் சென்றிருந்தேன். சிறந்த தமிழ்ப் படத்துக்காக இயக்குநராக நானும், இந்த 'டூ லெட்' படத்தை தயாரித்ததற்காக என் மனைவி பிரேமாவும் விருது வாங்கினோம். முதல் படத்திலேயே இருவருக்கும் தேசிய விருது கிடைத்ததில் மகிழ்ச்சி'' என்று முடித்தார், செழியன்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement