" 'அப்பாவி' நயன்தாரா, 'ஆர்.ஜே' ஜோதிகா, 'போட்டோகிராஃபர்' ஆண்ட்ரியா..." - ஆன் தி வே 'ஹீரோயின்' படங்கள்

ஹீரோயினை மையப்படுத்திய படங்கள் தமிழ்சினிமாவில் அதிகரித்திருக்கிறது. அடுத்தடுத்து வரவிருக்கும் படங்களின் பட்டியல் இது.

தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை மையப்படுத்திய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருதால், பல அறிமுக இயக்குநர்களும் கதாநாயகிகளை மையப்படுத்தி திரைக்கதை எழுதுவதை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள். பல முன்னணி கதாநாயகிகளை எளிதாக அணுகுவதற்கு 'வுமென் சென்ட்ரிக்' படங்கள் சிறந்த வழியாக இருக்கிறது. நயன்தாரா, ஜோதிகா, ஹன்சிகா மற்றும் ஆண்ட்ரியா எனப் பல முன்னணி நடிகைகள் இதுபோன்ற கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். `ஆன் தி வே'யில் இருக்கும் ஹீரோயினை மையப்படுத்திய படங்களின் பட்டியல் இதோ! 

`கோலமாவு கோகிலா'  

விஜய் டிவியின் சூப்பர்ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்குச் சொந்தக்காரரான நெல்சனின் முதல் வெள்ளித்திரை படைப்பு, `கோலமாவு கோகிலா' சுருக்கமாக `கோகோ'. ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களின் டிரேட் மார்க்கான நயன்தாரா, இதில் கிராமத்துப் பெண்ணாக நடித்துள்ளார். எப்போதுமே ஹீரோயினை மையப்படுத்திய படங்கள் என்றாலே, கதாநாயகிகள் ஒன்-வுமன் ஆர்மியாகக் களத்தில் இருக்கும் பிரச்னைகளைச் சமாளிப்பார்கள். `கோகோ'வும் அப்படிப்பட்ட ஒரு படம்தான். ஓர் அப்பாவியான மிடில் கிளாஸ் பெண்ணின் கடினமான வாழ்க்கையை இப்படத்தில் பதிவு செய்திருக்கிறார்களாம். இப்படத்தில் நயன்தாராவின் கெட்அப்பை பார்த்தால், `நயன்தாராவுக்கு வீட்டுப் பணிப்பெண் கேரக்டரோ?' என்ற கேள்வி எழுகிறது. தவிர, காமெடிக்கும் இப்படத்தில் அதிக ஸ்கோப் இருக்கிறது. நயன்தாராவுக்குத் தங்கையாக ஜாக்குலின், அம்மாவாக சரண்யா பொன்வண்ணன், அப்பாவாக ஆர்.எஸ்.சிவாஜி எனப் பலர் நடித்திருப்பதால், சென்டிமென்டிற்கும் இடம் இருக்கிறது. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் ரிலீஸ் ஆகவிருக்கிறது, `கோகோ'. 

'ஹீரோயின்' படங்கள்

`காற்றின் மொழி':

வித்யா பாலன் நடித்து கடந்த ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படம், `துமாரி சுலு'. இல்லத்தரசியாக இருக்கும் வித்யா பாலனுக்கு எஃப் எம் ஒன்றில் ஆர்.ஜே வேலை கிடைக்கிறது. நைட் ஷோ ஒன்றில் ஹஸ்கி வாய்ஸில் பேசும் ஆர்.ஜே வேலை அது. இதற்கு அவரது கணவரும் உறவினர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவிக்க, சுலு அவற்றையெல்லாம் எப்படி சமாளிக்கிறார், அவரது வாழ்க்கையை வண்ணமயமாக்க என்னென்ன செய்கிறார், தன்னை எப்படி முன்னிலைப்படுத்திக்கொண்டு அடையாளப்படுத்திக்கொள்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை. சாதாரண குடும்பப் பெண்ணாக சுவாரஸ்யமில்லாத வாழ்க்கை வாழும் பெண்களுக்குப் பெரும் உத்வேகம் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது, இப்படத்தின் திரைக்கதை. இப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகவிருப்பதுதான், `காற்றின் மொழி'  திரைப்படம். ராதாமோகன் இயக்க, ஜோதிகா நடிக்கும் இப்படத்தில், ஜோதிகாவுக்கு ஜோடியாக விதார்த் நடிக்கிறார். படப்பிடிப்பு வருகிற ஜூலை மாதத்தில் தொடங்குகிறது.  

வுமென் சென்ட்ரிக் படங்கள்

`கா':

`கா' என்றால் இலக்கியத் தமிழில் `காடு' என்று அர்த்தமாம். மேற்குத் தொடர்ச்சி மலை, மூணார், அந்தமான் எனக் காடுகள் சூழ் பகுதியில் படப்பிடிப்பை நடத்திவருகிறார்கள், `கா' படக்குழுவினர். இப்படத்தில் வைல்ட் லைஃப் போட்டோகிராஃபராக நடிக்கும் ஆண்ட்ரியா, தனியாகக் காட்டில் மாட்டிக்கொண்டு, அதிலிருந்து மீண்டு வருவதுதான் கதை. இதில், அவர் சந்திக்கும் சவால்களை க்ரைம் திரில்லர் ஜானரில் திரைக்கதை அமைத்திருக்கிறார், இயக்குநர் நாஞ்சில். சுருக்கமாக, தமிழில் பியர் க்ரில்ஸின் லேடி வெர்ஷனாக நடிக்கிறார் ஆண்ட்ரியா என்றுகூட சொல்லலாம். ஆண்ட்ரியா தவிர, முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் இளவரசு நடித்திருக்கிறார்.  

Kaa Movie

ஹன்சிகா நடிக்கும் பெயரிடப்படாத படம் :

அறிமுக இயக்குநர் ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிக்கும் படம். இதற்கு டைட்டில் இன்னும் வைக்கப்படவில்லை. முதல் முறையாக ஹீரோயினை மையப்படுத்திய கதையில் நடிக்கிறார், ஹன்சிகா. இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கி, இந்தியா, மொரீஷியஸ், ஜார்ஜியா ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கிறது. அன்றாட வாழ்க்கையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மையப்படுத்தி உருவாகவிருக்கும் இப்படத்தில், சிறு சிறு கேரக்டர்கள் அதிக அளவில் இடம்பெறவிருக்கிறதாம். 

Untitled Movie of Hansika

முன்னணி நடிகைகளான இவர்களைத் தவிர, நந்திதா, வரலட்சுமி சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட நடிகைகளும் ஹீரோயினை மையப்படுத்திய கதைகளில் நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!