''லைகாவிற்கும், தமிழ் ராக்கர்ஸுக்கும் என்ன தொடர்பு?" - விஷாலை குறிவைக்கும் கேள்விகள்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை விஷால் நிறைவேற்றவில்லை, தமிழ் ராக்கர்ஸைக் கண்டுபிடிப்பதாகக் கூறிய விஷால் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வைப்புநிதி 7 கோடி என்ன ஆனது என சரமாரி கேள்விகள் விஷாலுக்கு எதிராக எழுப்பப்பட்டிருக்கிறது.

''லைகாவிற்கும், தமிழ் ராக்கர்ஸுக்கும் என்ன தொடர்பு?

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷாலின் நடவடிக்கைகளை எதிர்த்து வந்த தயாரிப்பாளர்களும், விஷாலின் அதிருப்தியாளர்களுமான ராதாகிருஷ்ணன், சுரேஷ் காமாட்சி, சிவசக்தி பாண்டியன் ஆகியோர் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற சினிமா ஸ்டிரைக், சங்கத்துக்குப் புதிதாகத் தொடங்கப்பட்ட அலுவலகத்துக்கு அனுமதி.. இவையெல்லாம் பொதுக்குழு கூட்டி எடுக்கப்பட்ட முடிவுகளா? போன்ற பல கேள்விகளை முன்னிறுத்தியும், விஷால் பதவி விலக வேண்டும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகப் பொறுப்புகளில் தமிழர்கள்தாம் இருக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. 

தயாரிப்பாளர்கள் சங்கம் | விஷால்


இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் ராதாரவி, இயக்குநர் பாரதிராஜா ஆகியோர், விஷால் மற்றும் தற்போதைய சங்கத்தின் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்தனர். கடந்த டிசம்பர் மாதம் நடந்த சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தின்போதும் இதே குழு, சங்கத் தலைவரான விஷாலின் செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

``விஷால் மற்றும் அவரது நிர்வாகிகள் பதவிக்கு வந்து கிட்டத்தட்ட 14 மாதங்கள் ஆகியும் தேர்தலில் குறிப்பிட்ட எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மாறாக, தயாரிப்பாளர்களுக்கு இன்னல் தரும் வகையில் பல செயல்களைச் செய்து வருகிறார், விஷால்" எனக் கூறினார், தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன்.

நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலை எதிர்த்துப் போட்டியிட்ட ராதாரவி பேசுகையில், ``நானும் ஒரு தயாரிப்பாளர்தான். கொடுத்த வாக்குறுதிகளை ஒரு வருடத்தில் நிறைவேற்றவில்லை என்றால், பதவி விலகுகிறேன் என்று கூறியிருந்தார் விஷால். பெரிய படங்கள் 200 திரையரங்குகளில் மட்டும்தான் வெளியாகும் எனக் கூறியிருந்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் (விஷால்), இன்று தன் `இரும்புத்திரை' படத்தை 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட்டிருக்கிறார். கேபிள் டிவியிலிருந்து ஒவ்வொரு மாதமும் வரவேண்டிய 1.5 கோடி ரூபாய் இன்னும் வரவில்லை. படம் எடுப்பவர்கள் முதலாளிகள், அவர்களை படப்பிடிப்பு நடத்தவிடுங்கள். பைரஸியில் படங்களை வெளியிடும் இணையதளமான தமிழ் ராக்கர்ஸ் அட்மினைக் கண்டுபிடிப்பேன் என்று கூறினார், தலைவர். தற்போது தமிழ் ராக்கர்ஸைக் கண்டுபிடித்துவிட்டேன் என்கிறார். அது யார் என்பதைக் கூறவில்லை. இப்படி ஒரு தில்லுமுல்லு நிறைந்த நிர்வாகம் தேவையா? தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பல பிரச்னைகள் இருக்கின்றன. இந்த நிர்வாகத்தை மாற்றி, தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குத் தமிழர்களே தலைமைதாங்க வேண்டும்." என்றார். 

தயாரிப்பாளர் கே.ராஜன், ``கியூப் கட்டணம் தொடர்பாக 45 நாள்கள் நடந்த வேலை நிறுத்தத்தால், `இரும்புத்திரை' படத்துக்கு மட்டும்தான் நல்லது நடந்தது. வேறு யாருக்கும் எந்த ஒரு பயனும் இல்லை. மற்ற படங்கள் வரிசையில் இருக்க, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என்ற முறையில் பல சலுகைகளைப் பெற்று இந்தப் படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார். மேலும், துணைத் தலைவர் பதவிகளில் இருக்கும் இயக்குநர் கெளதம் மேனன், நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் இதுவரை எந்த ஒரு செயற்குழு கூட்டத்திலும் பங்குகொள்ளவில்லை. இதுவரை பொதுக்குழு கூட்டமும் நடைபெறவில்லை. இந்த நிர்வாக அமைப்பைக் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்தி, அதில் தமிழர்கள் நிர்வாகப் பொறுப்புகளுக்கு வரவேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை." என்று பேசினார். 

டி.ராஜேந்தர் பேசுகையில், ``தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட ஸ்டிரைக்கிற்கு பொதுக்குழு ஒப்புதல் இருக்கிறதா, கியூப் கட்டணத்தில் என்ன விலை குறைப்பு நடந்தது?. தமிழ் ராக்கர்ஸைக் கண்டுபிடிப்பேன் என்று கூறிய விஷால், `துப்பறிவாளன்' படத்தில் நடித்தால் மட்டும் போதாது... கண்டுபிடித்தாரா? சங்கத்தின் வைப்பு நிதியிலிருந்த 7 கோடிக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும். லைகா நிறுவனம் விஷாலுக்கு இவ்வளவு பெரிய தொகையை எதற்கு கடன் தரவேண்டும்? பொதுக்குழு கூட்டத்தில் சொன்னதுபோல் எங்கள் 18 பேர் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? `ஆம்பள' படத்தில் நடித்தால் மட்டும் போதுமா..." எனக் காட்டமாக தனது கேள்விகளை முன் வைத்தார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ``இணையப் புலனாய்வு பத்திரிகை ஒன்று தமிழ் ராக்கர்ஸும் லைகாவும் ஒன்றுதான் என விஷால் கண்டுபிடித்துவிட்டதாகவும், அதை மறைக்க விஷால் லைகா நிறுவனத்திடம் டீல் பேசியிருக்கிறார் என்றும் விளக்கமாகக் கூறியிருக்கிறது. இதுகுறித்து விஷால் மறுப்பு தெரிவிக்காமல் இருப்பது ஏன்? அப்படி இல்லையென்றால், தமிழ் ராக்கர்ஸ் யார் என்று தெரியப்படுத்த வேண்டும்!" என்றார்.

பாரதிராஜா


இறுதியாகப் பேசிய பாரதிராஜா, ``ஃபெப்சி பிரச்னையில் தொடர்ந்து 20 வருடங்களாகப் போராடி வருகிறோம். அதற்காகப் `படைப்பாளி' என்ற சங்கமும் ஆரம்பிக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் ஸ்டுடியோக்கள் இருந்தன, நிரந்தர வேலையாட்கள் இருந்தார்கள், அவர்களுக்கு யூனியன்கள் தேவைப்பட்டது. இன்று எல்லாம் மாறிவிட்டது ஒரு தயாரிப்பாளருக்கும் தொழிலாளிக்கும் உள்ள உறவு மூன்று மாதம்தான். இதில், இவரை வைத்து வேலை செய்யவேண்டும், இத்தனை நபர்களை வைத்து வேலை செய்யவேண்டும் என்று ஒரு படைப்பாளியை நிர்பந்திக்க முடியாது. பெரிய படங்களுக்கு வேண்டுமானால் இத்தகைய வரைமுறைகளைப் பின்பற்றலாம். சிறுபட்ஜெட் படங்கள் இதைப் பின்பற்றத் தேவையில்லை என்ற சட்டமும் வந்தது. ஆனால், இன்று அதுவும் மீறப்பட்டு தயாரிப்பாளரின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. யூனியன் என்ற பெயரில் எங்களிடம் எல்லா சான்றுகளையும் வாங்கிக்கொண்டுதான் படம் எடுக்கமுடியும் எனக் கூறமுடியாது. யூனியன் நிரந்தர ஸ்டுடியோக்களுக்கு மட்டுமே தவிர, தன்னிச்சையான தயாரிப்பாளர்களுக்குக் கிடையாது. ஒரு இயக்குநராக எனக்குத் தெரிந்ததை நானே செய்து படம் எடுக்கிறேன். இதற்காக அந்த யூனியனிலிருந்து ஆள் வேண்டும், இந்த யூனியனிலிருந்து ஆள் வேண்டும் என்று சொல்லமுடியுமா?

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆவதற்கு முன்புவரை, மாலை ஆறு மணிக்குமேல் ரெக்கார்டிங் செய்யக் கூடாது போன்ற பல விதிகள் மியூசிக் யூனியனில் இருந்தது. பிறகு அது எங்கே போனது? ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு படைப்பாளி. அவர் இரவு நேரங்களில் இசையமைக்கிறார். மியூசிக் யூனியன் விதிகள் எல்லாம் கால ஓட்டத்தில் கரைந்து போனது. யூனியன் இல்லாமல் வேலை செய்வது என்பது முடியாத காரியமல்ல, முடிப்போம். இது தொடர்பாக, அரசிடம் முறையிடுவோம். எல்லா அமைப்புகளுக்கும் தமிழன் தலைமையேற்பான்!" என்றார், பாரதிராஜா. 

``லைகா நிறுவனம் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் பினாமிகள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?" என்ற கேள்வி, பாரதிராஜாவிடம் முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதில் சொன்ன பாரதிராஜா, ``எனக்குத் தெரிந்தவரை அப்படியில்லை. லைகா தரப்பு என்னிடம், `ஈழத்தமிழர்கள் போராட்டம் பற்றிய ஒரு படத்தைத் தயாரிக்க முடியுமா?' என்று கேட்டார்கள். நான், `நேரம் வரும்போது சொல்கிறேன்' என்றேன். அப்படி இருக்கையில், லைகா நிறுவனம் ஈழத்தமிழர்களுக்கு எதிரியாக எப்படி இருக்க முடியும்?" எனக் கூறினார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!