Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

"மார்பிள் பிசினஸ் பண்றேன், 18 வருடமா நடிக்க வெயிட்டிங்!" - 'கடலோரக் கவிதைகள்' ராஜா

 

''என் உண்மையான பெயர், வெங்கடேஷ். படத்துக்காக என் பெயரை மாத்துனது பாரதிராஜா சார். அதுவும் படத்துக்கான பிரஸ் மீட் நடந்துக்கிட்டு இருக்கும்போது, 'வெங்கடேஷ் தமிழ் பெயர் மாதிரி இல்லைடா... வேற பெயர் ஏதாவது சொல்லு, வெச்சிடுவோம்!'னு கேட்டார். 'பரத்'னு நான் சொல்ல, 'இல்லைடா பரத் நல்லாயில்லை. என் பெயர்ல பாதியை வெச்சிக்கோ. ராஜாதான் இனி உன் பெயர்'னு சொல்லி, எல்லோருக்கும் என்னை ராஜாவாக அறிமுகப்படுத்தினார், பாரதிராஜா'' - தன் பெயர்க் காரணத்தோடு உரையாடலைத் தொடங்குகிறார், 'கடலோரக் கவிதைகள்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ராஜா.  

அப்போ - இப்போ ராஜா

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

``நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். வசதியான குடும்பத்தில் பிறந்ததால சின்ன வயசுலே இருந்து கஷ்டத்தை அவ்வளவாகப் பார்த்தது இல்லை. அப்பா பிசினஸ் பண்னார். அம்மா ஹவுஸ் ஒஃயிப். சென்னை நியூ காலேஜ்ல படிச்சேன். சீனியர் நடிகர் சுரேஷ் என் காலேஜ் மேட். ஸ்கூல், காலேஜ் படிக்கும்போது சினிமாவுல நடிக்க வரணும்னு ஆசைப்பட்டதே இல்லை. சினிமாவும், நானும் எப்போதும் ரொம்ப தூரமாதான் இருந்தோம். 

 என் சொந்தக்காரங்க பல பேர் சினிமாவுல இருந்தாங்க. தெலுங்கு நடிகர் வெங்கடேஷோட அப்பா ராமநாயுடு, என் சொந்த சித்தப்பா. தெலுங்கில் நிறைய படங்களைத் தயாரித்திருக்கிறார். அவர்தான் என்னை சினிமாவுக்கு அழைத்து வந்தார்னு சொல்லலாம். ஏன்னா, 'நீ பார்க்க அழகாக இருக்கடா... படத்துல நடி'னு சொன்னது அவர்தான். அப்போ நான் காலேஜ் படிச்சுக்கிட்டு இருந்தேன். அப்போவே என்னை ஸ்டண்ட், டான்ஸ் கிளாஸ்னு எல்லாத்துலேயும் சேர்த்து விட்டார், சித்தப்பா. நானும் படிச்சுக்கிட்டே இதையெல்லாம் பண்ணிக்கிட்டு இருந்தேன். சித்தாப்பா என்னை தெலுங்கு சினிமாவில் அறிமுகப்படுத்தணும்னு ஆசைப்பட்டார். நானும் தெலுங்கு படம்தான், என் முதல் படமா இருக்கும்னு நினைச்சேன். அந்த நேரத்தில் என் உறவினர் வேணு தயாரிப்பில் பாரதிராஜா சார் படம் இயக்குவதாக இருந்தது.

அந்தப் படத்துக்கான கதை விவாதம் போய்க்கிட்டு இருந்த சமயத்துலதான், பாரதிராஜா சார், 'என் படத்துக்குப் புதுமுக ஹீரோ வேணும்'னு கேட்டிக்கிட்டு இருந்தார். வேணு என்னை பாரதிராஜா சார்கிட்ட அறிமுகப்படுத்தினார். அப்போ, நான் காலேஜ் முடிச்சிருந்தேன். என்னைப் பார்த்தவுடனே பாரதிராஜா, 'இவ்வளவு நாள் எங்கேடா இருந்தான்'னு சொல்லிட்டு, 'என்னடா பண்ணப்போற'னு கேட்டார். 'மும்பை போகப் போறேன் சார். சித்தாப்பா அங்கே நடிக்கிறது எப்படினு கத்துக்கச் சொல்லியிருக்கார்'னு சொன்னேன். உடனே பாரதிராஜா சார், 'நடிப்பெல்லாம் சொல்லிக்கொடுத்து வர்றது இல்ல. அது இயல்பாவே வரும். நீ இதுக்காக மும்பை வரைக்கும் போகணும்னு அவசியம் இல்ல. நீ என்கூட வந்துடு. என் படத்துல நீ நடிக்கிற. நாளைக்கு ஷூட்டிங், கரெக்ட் டைமுக்கு வந்திடு!'னு சொல்லிட்டுப் போயிட்டார்.  

raja

எனக்கு இரவு முழுக்கத் தூக்கமே வரலை. அடுத்தநாளே ஆந்திராவுக்குப் போயிட்டோம். ஷூட்டிங் ஆரம்பமாச்சு. அந்தப் படம்தான், 'கடலோரக் கவிதைகள்'. படத்தோட முதல் ஷெட்யூல் ஆந்திராவிலும், இரண்டாவது ஷெட்யூல் நாகர்கோவிலிலும் நடந்துச்சு. ஒரு நடிகனிடம் எப்படி நடிப்பை வாங்கணும்னு அவருக்குத் தெரியும். 'கடலோரக் கவிதைகள்' படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே நான் நடிச்ச இரண்டாவது படம் ரிலீஸ் ஆயிடுச்சு. பிறகு ரொம்ப பிஸியா நடிக்க ஆரம்பிச்சேன். என் சினிமா பயணத்தில் நல்ல இயக்குநர்கள், நல்ல நடிகர்கள்கூட வொர்க் பண்ணிட்டேன். என் வாழ்க்கையில முக்கியமான இடம் பாரதிராஜா சாருக்கு இருக்கு. அவருடைய 'கருத்தம்மா' படம் எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துச்சு. பெண்களை மையப்படுத்திய இந்தக் கதையிலும், எனக்கான கேரக்டரை ரொம்ப ஸ்ட்ராங்கா வடிவமைச்சிருப்பார், பாரதிராஜா சார்.

பாலுமகேந்திரா சார் இயக்கிய 'சதிலீலாவதி' படத்துல நடிச்சேன். கமல் சார் தயாரிச்சு நடிச்சார். முதலில் இந்தப் படத்தை ஹியூமர் ஜானர்ல இல்லாம, சீரியஸா எடுக்கலாம்னுதான் பிளான் பண்ணோம். கமல் சாருக்கு கெஸ்ட் ரோல், எனக்கு நெகட்டிவ் ரோல்னு முடிவு பண்ணியிருந்தாங்க. ஆனா, கதையைக் கொஞ்சம் மாத்திட்டாங்க. கமல் சாரும், 'இதை சீரியஸான படமா இல்லாம, காமெடி படமா எடுக்கலாம்'னு சொன்னார். அதனால, 'இந்தப் படத்துல நடிக்கலை, என் கேரக்டர் வலுவா இல்லை'னு சொன்னேன். பாலுமகேந்திரா சார்தான், 'முக்கியத்துவத்தைவிட, அனுபவம் ரொம்ப முக்கியம். நீ பண்ணு'னு சொல்லிட்டார். அவர் பேச்சை மீறினா, நல்லா இருக்குமா.. நடிக்க ஒப்புக்கிட்டேன்.

ராஜா

வைரமுத்து சார் சினிமாவுக்காக எழுதுன முதல் பாட்டு இடம்பெற்ற படமும், நான் நடிச்ச 'கேப்டன் மகள்' படம்தான். குஷ்பூக்காக 'எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று' பாட்டு எழுதியிருந்தார், வைரமுத்து. இந்தப் பாட்டு இப்போவரை ஃபேவரைட். ரஜினி சார்கூட 'மாப்பிள்ளை'யில சேர்ந்து நடிச்சேன். பிறகு, 'அருணாச்சலம்' படத்திலும் நடிச்சேன். விக்ரமன் சாருடைய முதல் படம் 'புது வசந்தம்'ல நாலு ஹீரோக்கள்ல ஒருத்தரா நடிச்சேன். 

பிஸியா நடிக்கும்போது கல்யாணம் நடந்தது. 1993-ம் வருடத்துல என் கல்யாணம் நடந்தது. எங்களுக்கு இப்போ ஒரு பையன், பொண்ணு இருக்காங்க. அழகான குடும்பம், வாழ்க்கை சந்தோஷமா போய்க்கிட்டு இருக்கு. வித்தியாசமான ரோலில் நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, அந்தமாதிரி கேரக்டர்ஸ் எதுவும் வராததுனாலதான் சினிமாவுக்கு கொஞ்சம் பிரேக் கொடுத்துட்டேன். சினிமாவுல நடிச்சு 18 வருடம் ஆச்சு. ஆனா, சினிமாவுல இருக்கிற நண்பர்கள்கூட பேசிக்கிட்டுதான் இருக்கேன். இப்போவும் நடிக்க வாய்ப்புகள் வருது. வித்தியாசமான கதைனும் சொல்றாங்க. என் மனசுக்கு அது வித்தியாசமான ரோலா படமாட்டேங்குது. வரும்போது வரட்டும்னு காத்திருக்கேன். ஏன்னா, மார்பிள் பிசினஸ்ல நான் பிஸி. எந்தக் குறையும் இல்லாத அந்த பிசினஸ் நல்லாப் போகுது!" என்கிறார், ராஜா.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement