"'சிட்டிசன்' அனுபவம், 'பாட்ஷா' வசனம் பிறந்த கதை..." - பாலகுமாரன் குறித்து சரவண சுப்பையா ஷேரிங்ஸ் | saravana subbaiah talks about writer balakumaran

வெளியிடப்பட்ட நேரம்: 20:31 (16/05/2018)

கடைசி தொடர்பு:12:47 (17/05/2018)

"'சிட்டிசன்' அனுபவம், 'பாட்ஷா' வசனம் பிறந்த கதை..." - பாலகுமாரன் குறித்து சரவண சுப்பையா ஷேரிங்ஸ்

மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் இயக்குநர் சரவண சுப்பையா. `சிட்டிசன்' பட அனுபவங்கள், `பாட்ஷா' வசனங்கள் பிறந்த கதை... எனப் பல விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்.

றைந்த எழுத்தாளர் பாலகுமாரன் நிழலில் தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையைத் தொடங்கியவர் இயக்குநர் சரவண சுப்பையா. பாலகுமாரன் பற்றிய நினைவுகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

`` `சிட்டிசன்' படம் கமிட் ஆகுறதுக்கு முன்னாடி நான் பல கம்பெனிகள்ல அப்ரோச் பண்ணப்போ, `சிட்டிசன்' படத்துக்கான டிசைன்கள்ல `வசனம்'னு பாலகுமாரன் பெயரைத்தான் போட்டிருந்தேன். அந்தச் சமயத்துல பாலகுமாரன் சார் எனக்கு நாவலாசிரியரா மட்டும்தான் அறிமுகம். அவரோடு வேலை செய்தது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம்னுதான் சொல்வேன். நிக் ஆர்ட்ஸ் கம்பெனிக்கு நான் `சிட்டிசன்' படத்துக்குக் கமிட் ஆகும்போது, அதே நிறுவனம் தயாரித்த `முகவரி' படத்துக்கு வசனம் எழுதியிருந்தார் பாலகுமாரன் சார்.  

பாலகுமாரன்

நான் `சிட்டிசன்' கதையை அவர்கிட்ட சொன்னப்போ, `இந்த மாதிரி ஒரு கதையில் எனக்கு இருக்கிற பங்களிப்பு மாதிரி இனி வேறு எந்தப் படத்திலும் கிடைக்காது'னு அவர் சொன்னது, எனக்கு ரொம்பப் பெருமையா இருந்தது. படத்தோட வசனங்களுக்காக மட்டும் 11 மாதங்கள் வேலை செஞ்சோம். பாலகுமாரன் சாருக்கு அப்போதான் பைபாஸ் ஆபரேஷன் நடந்திருந்தது. படத்தின் வசனங்கள் குறித்து எனக்கும் அவருக்கும் பல சண்டைகள் நடந்திருக்கு. படத்தின் ஆரம்பக் காட்சியில அஜித் சார் கதையை ஒரு வாக்கியத்துல சொல்லணும், அப்போதான் ரெண்டாவது முறை படத்தைப் பார்க்கிறவங்களுக்குப் புரியும்னு சொன்னேன். பெரிய போராட்டத்துக்குப் பிறகு, அவர் எழுதினதுதான், `வலை மட்டும் பின்னத் தெரிஞ்ச கிராமத்துல இருந்து வார்த்தையைப் பின்றதுக்கு ஒரு வக்கீல் வந்திருக்கான்!'ங்கிற வசனம்.

ஒரு மீனவ சமுதாயத்துல இருந்து சட்டப் போராட்டத்துக்கு ஒருத்தன் ரெடியாகிட்டான்னு சொல்ற மாதிரி இருந்துச்சு அது. `காதலன்' படத்துல வர்ற `ஆசையோ பாசமோ எதுவாகயிருந்தாலும் அஞ்சு நிமிடம் தள்ளிப்போடு, அப்புறம் முடிவு எடு!'ங்கிற ஒரு வசனம் வேணும்னு கேட்டப்போ, `வாழ்றதுக்காக சாகுற அளவுக்கு ரிஸ்க் எடுக்கத் தயார்'னு எழுதினார் பாலகுமாரன் சார். இந்த வசனம் எழுத 10 நாள் ஆச்சு!

இன்னொரு இடத்துல அஜித் மெக்கானிக் ஷெட்ல இருக்கும்போது, `அம்மா, பொண்டாட்டி தொல்லை தாங்கலைப்பா. பொண்டாட்டி பெருசா, அம்மா பெருசா?'னு ஒருத்தன் கேள்வி கேட்பான். அதுக்கு சூப்பரான ஒரு பதில் வேணும்னு சொன்னேன். `ஒரு தாயில தாரம் கிடையாது; ஆனா, ஒரு தாரத்துல ஒரு தாய் இருக்கா!'னு எழுதினார்.  

இதையெல்லாத்தையும்விட, படத்துல அத்திப்பட்டி கிராமத்துக்கு ஒரு பில்ட்அப் கொடுத்திருப்பார். நீதிபதியைக் கடத்தும்போது, `சட்டம் தாய் மாதிரி, தாய் கண்டிச்சானு அவளோட சேலையைப் பிடிச்சு இழுக்கலாமா?'னு நீதிபதி கேட்பார். அதுக்கு அஜித், `எப்படி... எப்படி... சட்டம் தாய் மாதிரி? தாயே தன் பிள்ளைகளைக் கொன்ன வரலாறு இருக்கு தெரியுமா? இது நல்லதங்காள் கதையில்ல... அத்திப்பட்டி தெரியுமா?'னு கேட்பார். பாலகுமாரன் என்கூட ஆயிரம் கேள்வி கேட்டு சண்டை போட்டாலும், விளக்கமா எழுதிட்டு வருவார். அப்படி விளக்கமா அவர் எழுதினதுதான், அத்திப்பட்டிக்குக் கொடுத்த அறிமுகம்!

``வங்க கடலுக்கு எங்க ஜனங்கமேல கொள்ளைப் பிரியம்.

வருஷா வருஷம் வந்துபோகும்.

இடுப்பளவு தேங்கும்.

ரெண்டு மாசம் தூங்கும்!"

 - இப்படித்தான், கதைக்குத் தேவையான ரசனையை அப்படியே அள்ளிக்கிட்டு வருவார். அஜித் சார் பேசுற க்ளைமாக்ஸ் வசனத்துல, `குடியுரிமையெல்லாம் பறிக்கணும்'னு எழுதி முடிச்சிட்டு, ஒரு பவர்ஃபுல்லான முடிவுக்கு வந்த பாலகுமாரன் சார் என்னைப் பார்த்து, ``இந்த இடத்துல, `இது அதிகார வர்க்கத்துக்கு ஒரு எச்சரிக்கை!'னு வெச்சுக்கலாமா?"னு கேட்டார். மிரண்டுட்டேன். வசனம் எழுதுறதோட நிறுத்திக்காம, அஜித் பேசுற வசனங்களையெல்லாம் கூடவே இருந்து கவனிச்சுக்கிட்டு இருந்தார்.

சரவணசுப்பையா

பிறகு, என் குடும்பத்துல ஒருத்தரா மாறிட்டார் அவர். எங்க அப்பாவை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். `சிட்டிசன்' சமயத்துலதான் அவர் தாடி வளர்க்கவே ஆரம்பிச்சார். ரொம்ப அதிகமாக சிகரெட் பிடிக்கக்கூடியவர். ஒரு கட்டத்துல சிகரெட்டை நிறுத்தணும்ங்கிற கட்டாயம் வரும்போது, அதையும் செஞ்சார். 

`பாட்ஷா' படத்துல ரஜினி சொன்ன, `ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி' வசனம் இப்போவரைக்கும் ஃபேமஸ். அந்த வசனத்தை, வீட்டுல இருக்கிற சின்னப் பசங்ககிட்ட `ஒரு தடவை சொன்னா கேட்கமாட்டியா, ஒவ்வொரு விஷயத்தையும் உனக்கு நூறு தடவை சொல்லணுமா?'னு சொல்வோம்ல, அதை மனசுல வெச்சுத்தான் எழுதினாராம்! 

என் கல்லூரி நாள்கள்ல ஒரு வாசகனா அவரது `மெர்க்குரி பூக்கள்', `என்றென்றும் அன்புடன்', `கரையோர முதலைகள்' புத்தகங்களைத் தீவிரமா படிச்சிருக்கேன். அவரது `பயணிகள் கவனிக்கவும்' புத்தகத்தை அவரோட கமர்ஷியல் எழுத்தின் உச்சம்னு சொல்லலாம்! இப்படி அவருடைய சமகால எழுத்தாளர்களில் ரசிகர்களுக்குத் தேவையான கலவைகளை அவருடைய எழுத்துகளில் வைத்திருந்தார்.

அவருடைய தொழிற்சாலைப் பணிநாள்களின் அனுபவம்தான், அவருடைய கதைகளில் வரும் கம்யூனிஸ சாயல்களுக்கு அடித்தளமாய் இருந்திருக்கும்னு நினைக்கிறேன். அவர் வசனம் எழுதிய `ஜென்டில்மேன்', `பாட்ஷா' மாதிரி பெரிய படங்களை மட்டுமே பேசிக்கிட்டு இருக்கோம். ஆனா, `ஜனனம்', `வேலை' மாதிரியான படங்களில் அவர் வசனங்களின் தாக்கம் ரொம்ப ஆழமா இருக்கும். ஒரு கட்டத்தில், அவர் தீவிர ஆன்மிகத்துல இறங்கிட்டார். பார்க்கிற எல்லோரும் அவரை ஒரு சித்தர் மாதிரி நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு தீர்க்கதரிசியுடன் வேலை பார்த்த ஒரு அனுபவத்தை எனக்கு அளித்தார். அவர் `எழுத்துச்சித்தர்'னு சொல்றபடியே வாழ்ந்தவர்." என்று முடித்தார், சரவண சுப்பையா.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close