ஹீரோவுக்கு ஜோடியா நடிக்கலை... என்னதான் ஆச்சு இந்த ஹீரோயின்களுக்கு? | Unique heroine roles in tamil cinema

வெளியிடப்பட்ட நேரம்: 13:06 (21/05/2018)

கடைசி தொடர்பு:13:37 (21/05/2018)

ஹீரோவுக்கு ஜோடியா நடிக்கலை... என்னதான் ஆச்சு இந்த ஹீரோயின்களுக்கு?

ஹீரோவுக்கு ஜோடியா நடிக்கலை... என்னதான் ஆச்சு இந்த ஹீரோயின்களுக்கு?

ஹீரோவுக்கு ஜோடியா நடிக்கலை... என்னதான் ஆச்சு இந்த ஹீரோயின்களுக்கு?

ரு படத்தில் ஹீரோ, ஹீரோயின்ஸ் இருந்தும், படத்தில் அவர்களுக்குக் காதல் காட்சிகளோ, பாடல்களோ இல்லாமல் சில படங்கள் தமிழில் வந்திருக்கின்றன. இந்தப் படங்களில் ஹீரோ, ஹீரோயின் ஒருதலையாகக்கூட காதல் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் கதையின் நாயகன், நாயகிகளாக மட்டுமே படத்தில் இருப்பார்கள். அப்படித் தமிழில் வந்த சில படங்களின் தொகுப்பு இதோ... 

ஆட்டோகிராஃப்: 

ஹீரோயின் - சினேகா

’ஆட்டோகிராஃப்’ படத்தை இன்றுவரை தமிழ் சினிமா ரசிகன் மறந்திருக்கமாட்டான். பள்ளிப் பருவத்துக் காதல், கல்லூரி காலத்துக் காதல், தோழியுடன் நட்பு, தோழியின் தன்னம்பிக்கை என இந்தப் படத்தில் ரசிகனைக் கட்டிப்போட பல விஷயங்கள் இருந்தன. படத்தின் ஹீரோ சேரனுக்கு மல்லிகா, கோபிகா என இரண்டு காதலிகள் இருந்தாலும், படத்தின் ஹீரோயினாக சினேகாதான் நம் கண்ணுக்குத் தெரிவார். தனிமனுஷியாக உடல்நலம் இல்லாத அம்மாவை பார்த்துக்கொண்டு வேலைக்கும் செல்வது, தன் அம்மா இறந்த நிலையிலும், நண்பருக்குத் துணையாக இருக்கவேண்டும் என்று வேலைக்குச் செல்வது. அப்பறம் அந்த ’ஒவ்வொரு பூக்களுமே...’ பாடல் என நம் மனதில் அழுத்தமான தடத்தைப் பதித்தவர், சினேகா. இவர் ஹீரோவுக்கு ஜோடி இல்லை என்றாலும், இவரே இந்தப் படத்தின் ஹீரோயின். 

நான் கடவுள்:

ஹீரோயின்  - பூஜா

’நான் கடவுள்’ படத்தில் ஆர்யாவுக்கு அதிக முக்கியத்துவம் இருந்தாலும், பூஜா தன் பங்கிற்கு ஆடியன்ஸை ரசிக்கவும், சிரிக்கவும், அழவும் வைத்திருப்பார். 'அம்மாவை மதிக்கணும்... சரியா சாமீ?' என்று ஆர்யாவுக்கு அறிவுரை சொல்லும் இடம், 'தாயிற் சிறந்த கோயிலுமில்லை' என்று பாடும் காட்சி, தாண்டவனுக்குப் பயந்து ஓடும் காட்சி எனத் தன் நடிப்பால் மிரட்டிய பூஜா, இந்தப் படத்தில் ஹீரோவுக்கு ஜோடி இல்லை என்றாலும், இவர்தான் ஹீரோயின். 

ஆரம்பம்:

ஹீரோயின் - நயன்தாரா

பொதுவாக டாப் ஹீரோ படங்களில் காதல் காட்சிகளோ, ரொமான்ஸோ இல்லாமல் இருப்பது ஆச்சரியம். ஸ்கிரிப்ட் அப்படி இருந்தாலும், வியாபார யுக்திக்காக புரோமோ பாடலாவது ஷூட் செய்வார்கள். ஆனால், 'ஆரம்பம்’ படத்தில் அத்தகைய ஆடம்பரம் எதுவும் இருக்காது. ஹீரோ அஜித், ஹீரோயின் நயன்தாராவை எந்தக் காட்சியிலும் காதலுடன் பார்க்கமாட்டார். நயன்தாராவும் அப்படியே!. தன் நண்பனின் மரணத்திற்காக அஜித்தும், தனது அண்ணனின் மரணத்திற்காக நயன்தாராவும் எதிரிகளை எப்படிப் பழிவாங்குகிறார்கள் என்பதை மையக் கதையாக வைத்து, காதல் காட்சிகளை ஆர்யாவுக்கும் டாப்ஸிக்கும் கொடுத்திருப்பார், படத்தின் இயக்குநர் விஷ்ணுவர்தன். கமர்ஷியல் படங்களில் உப்புசப்பில்லாத கேரக்டர்களைக் கொண்ட ஹீரோயின் ரோல்களுக்கு மத்தியில், 'ஆரம்பம்’ படத்தில் நயன்தாராவை ஹீரோயின் என்று தைரியமாச் சொல்லலாம். 

தூங்காவனம்: 

ஹீரோயின் - த்ரிஷா

’தூங்காவனம்’ படத்தில் கமல்ஹாசனின் ரோலுக்கு சமமான ரோலாக த்ரிஷாவின் கதாபாத்திரம் இல்லையென்றாலும், இந்தப் படம் த்ரிஷாவுக்கு ஒரு முக்கியமான படம் என்றே சொல்லலாம். போலீஸ் அதிகாரியாக கமல்ஹாசனுடம் சண்டைபோட்டு ஸ்கோர் செய்திருப்பார். கமல்ஹாசனுக்கு இந்தப் படத்தில் ஜோடி இருந்தாலும், த்ரிஷாவே ’தூங்காவனம்’ படத்தின் ஹீரோயின். 

இரும்புத்திரை:

சமந்தா

’ஆரம்பம்’ படத்தைப் போலவே சமீபத்தில் வெளிவந்த ’இரும்புத்திரை’ படத்திலும் ஸ்கிரிப்டின் முக்கியத்துவம் அறிந்து காட்சிகளை வைத்திருப்பார், இயக்குநர் பி.எஸ்.மித்ரன். இந்தப் படத்தின் புரோமோஷனுக்காகக் காதல் பாடல்கள் வைத்திருந்தாலும், படத்தில் விஷாலுக்கும் சமந்தாவுக்கும் காதல் காட்சிகளோ, பாடல்களோ இருக்காது. ஆனால், படம் முழுக்க சமந்தா இருப்பார். 

முழுவதும் ஆண் கதாபாத்திரங்களையே மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களுக்கு மத்தியில், அவ்வப்போது இப்படி பெண்கள் கதாபாத்திரங்களுக்கும் சம பலம் கொடுக்கும் படங்கள் வரவேற்கப்பட வேண்டியவை.


டிரெண்டிங் @ விகடன்