வெளியிடப்பட்ட நேரம்: 12:54 (24/05/2018)

கடைசி தொடர்பு:12:54 (24/05/2018)

"தூத்துக்குடிலதான் இருக்கேன்.. வீட்டைவிட்டு வெளியேகூட வரமுடியலை!" - இமான் அண்ணாச்சி

காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி தூத்துக்குடியில் நடந்துகொண்டிருக்கும் போராட்டம் குறித்துப் பேசியிருக்கிறார்.

``நான் தற்போது தூத்துக்குடியில்தான் இருக்கிறேன். எங்க சர்ச்சின் 75-வது ஆண்டுவிழாவுக்கு வந்தேன். ஆனா, வீட்டைவிட்டு வெளியே போக முடியலை. ரொம்ப வேதனையா இருக்கு!'' - விரக்தியோடு பேசத் தொடங்குகிறார், காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி. 

இமான் அண்ணாச்சி

``தூத்துக்குடிதான் என் சொந்த ஊர். எனக்கு 23 வயசு இருக்கும்போது, இந்த ஸ்டெர்லைட் ஆலை ஊருக்குள்ள வந்துச்சு. அப்போ, ஊர் மக்கள் எல்லோரும் இந்த ஆலையால் மூச்சுத் திணறல் ஏற்படும், நச்சுக் காத்து பரவும்னு எல்லாம் பேசிக்கிட்டது ஞாபகம் இருக்கு. நான் சினிமாவில் நடிக்க சென்னைக்கு வந்துட்டேன். ஆனா, அப்பப்போ ஊருக்கு வரும்போது இந்த ஆலையைப் பத்தி நிறைய விஷயங்களைக் கேள்விப்படுவேன். இந்த ஆலையால நிறையபேர் பாதிக்கப்பட்டிருக்காங்க. தூத்துக்குடி மக்கள் ரொம்ப வருடமாவே இந்த ஆலைக்கு எதிரா போராடிக்கிட்டுதான் இருக்காங்க. இப்போது நடந்துக்கிட்டிருக்கிற இந்தப் போராட்டம் இன்னும் தீவிரம் அடைஞ்சிருக்கு.  

மக்களோட இந்தப் போராட்டத்தில் நானும் கலந்துக்கிட்டேன். போராட்டத்தின் நூறாவது நாளில் நடந்தது என்னனு எல்லோருக்கும் தெரியும். இந்தப் போராட்டத்தின் 49-வது நாளில் கமல் கலந்துக்கிட்டார். அடுத்தநாள் நான் மக்களைச் சந்திச்சு, நேரடியா போராட்டத்துல கலந்துக்கிட்டேன். அப்போதும் மக்கள் அமைதியான முறையில்தான் போராடுனாங்க. போராட்டத்துல நான் கலந்துகிட்டப்போ, மக்கள் எல்லோரும் `இத்தனைநாள் போராட்டத்துல நீங்க கலந்துகிட்ட பிறகுதான், மக்கள் முகத்துல கொஞ்சம் சிரிப்பைப் பார்க்கிறோம்!'னு சொன்னாங்க. கேட்டதும், அவ்வளவு சந்தோஷமா இருந்தது.  

100-வது நாள் போராட்டத்துல மக்கள் எல்லோரும் கலெக்டர் ஆபீஸை முற்றுகையிடத்தான் போனாங்க. அது, இப்படியொரு கலவரமா மாறும்னு யாருமே எதிர்பார்க்கலை. நியாமான பிரச்னைக்காகப் போராடுற மக்களை நோக்கி, துப்பாக்கியால் நெஞ்சில் சுடுறது எவ்வளவு கேவலமான செயல் தெரியுமா? பத்துக்கும் மேற்பட்டோர் இறந்திருக்காங்க. கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் வெடி, தண்ணீர் பீச்சிறதுனு எதைவேணாலும் செஞ்சிருக்கலாம். கலவரம் நடக்கிற இடத்துல பொதுவா அதைத்தான் பண்ணுவாங்க. கட்டுக்கடங்காம போகும்போதுதான், வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுடுவாங்க. அப்படியும் கூட்டம் அடங்கலையா... காலுக்குக் கீழே சுடுவாங்க. இதுதான் நடக்கும். தண்டனைக் குற்றவாளியாகவே இருந்தாலும், காலுக்குக் கீழேதான் சுடணும். ஆனா, போலீஸ்காராங்க ஏன் நெஞ்சுல சுட்டாட்டாங்க. இதுக்கு அவங்க பதில் சொல்லியே ஆகணும். 

ஸ்டெரைட் ஆலை

இந்தத் துப்பாக்கிச் சூடு கண்டனத்துக்குரிய செயல். போராட்டக் களத்தில் இருந்த மக்கள் சிலரிடம் நேற்று பேசினேன். மக்கள் கூட்டத்திலிருந்து யாருமே போலீஸைத் தாக்கலைனு சொன்னாங்க. கலெக்டர் ஆபீஸை முற்றுகையிடுவது மட்டும்தான் மக்களோட நோக்கம். அதை அனுமதிச்சிருந்தா, போராட்டக்காரர்கள் கண்ணியமாகத்தான் நடந்திருப்பாங்க. ஒரு இடத்தில் மக்களை மடக்கி, இனி போகக் கூடாதுனு சொன்னப்போதான், கலவரமா மாறியிருக்கு. இதுக்கு உயர் பதவியில இருக்கிற அதிகாரிகள்தாம் பதில் சொல்லணும். என் அண்ணன் பொண்ணு தூத்துக்குடியிலதான் இருக்காங்க. அவங்க யாருமே வீட்டை விட்டு வெளியே வரமுடியலைனு சொல்றாங்க. 101-வது நாளும் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கு. அப்போ, அசம்பாவிதங்கள் நடக்காம இருக்கிறதுக்காகச் சுட்டோம்னு சொன்னவங்க, நேத்து எதுக்காகச் சுட்டாங்கனு தெரியலை. இது ஒரு கேவலமான செயல்!  

உயிரை அழிக்க நினைக்கிற ஸ்டெர்லைட் ஆலை அங்கே இருக்கக் கூடாதுனுதான் மக்கள் நினைக்கிறாங்க. கலவரத்தை உண்டாக்கணும்னு மக்கள் நினைக்கிறதில்லை. உயிரிழந்த குடும்பங்களுக்குப் பத்து இலட்சம் நிவாரணம்னு முதல்வர் அறிவிப்பு வருது. இது எவ்வளவு கேவலமான பேச்சு. மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் வீட்டுக்கு வந்த பிறகு இந்த அறிவிப்பு வரலாமே. நம்ம குடும்ப உறுப்பினர்கள் நம்மளைவிட்டுப் பிரிந்துவிட்டால் நம்ம மனநிலை எப்படியிருக்கும். கலவரம் அடங்கிய பிறகு இந்த நிவாரணத் தொகையை அறிவித்திருக்கலாம். கலவரம் நடந்த அன்னைக்கே அறிவிக்க என்ன காரணம்னு தெரியலை. 

இந்த ஆலையை மூடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இத்தனை உயிரிழப்புகள் நடந்திருக்கு. அதுக்கு மரியாதை கொடுக்கும் விதமா, இந்நேரம் அந்த ஆலையை மூடியிருக்கவேண்டாமா. இது கேவலத்தின் உச்சம்!'' ஆதங்கத்துடன் முடித்தார், இமான் அண்ணாச்சி. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க