வெளியிடப்பட்ட நேரம்: 19:09 (29/05/2018)

கடைசி தொடர்பு:19:09 (29/05/2018)

"கபாலீஸ்வரன் வெர்சஸ் கரிகாலன்... ஒற்றுமைகளும், வித்தியாசங்களும்!" #KabaliVsKarikalan #Kaala

`கபாலி' ரஜினிக்கும் `காலா' ரஜினிக்கும் உள்ள ஒற்றுமைகள், வித்தியாசங்கள் பற்றிய ஒரு பார்வை.

காலா... இந்த வார்த்தைதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் சென்சேஷன். ரஜினி நடிப்பில், பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துகொண்டிருக்க, தற்போது படத்தின் டிரெய்லரை வெளியிட்டிருக்கிறது படக்குழு. `காலா' படத்தின் ஹீரோ கரிகாலனுக்கும் இரண்டு வருடத்துக்கு முன் வெளியான `கபாலி' படத்தின் ஹீரோ கபாலீஸ்வரனுக்கும் இருக்கும் ஒற்றுமைகளையும், வித்தியாசங்களையும் பார்ப்போம். 

காலா ரஜினி

காஸ்ட்யூம்:  

தன் மனைவி குமுதவள்ளியின் பேச்சுக்குப் பிறகு படம் முழுக்க கோட் சூட்டுடன் மாஸ் காட்டியிருப்பார் கபாலீஸ்வரன். ஆனால், 'காலா'வில் பிளாக் & பிளாக் வேட்டி சட்டையில் அசால்ட் செய்திருக்கிறார், கரிகாலன். அதேபோல, இருவருமே வெள்ளைத் தாடியை வருடிக்கொண்டு வசனம் பேசுகின்றனர். வட்ட வடிவ கண்ணாடி போட்டுக்கொண்டு டயலாக் பேசினார், கபாலி. சதுர வடிவக் கண்ணாடி அணிந்துகொண்டு ஜீப்பில் கெத்தாக உட்கார்ந்திருக்கிறார், காலா.  

வசனங்கள்:

'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...', 'கபாலிடா...' போன்ற வசனங்கள் `கபாலி'யில் இருந்தாலும் `காலா'வின் `க்யாரே... செட்டிங்கா...?' என்ற வசனம் ஓவர் நைட்டில் உலகளவில் வைரலானது. `கபாலி'யில் இருந்த `காந்தி கோட் கழட்டியதுக்கும் அம்பேத்கர் கோட் போட்டதுக்கும் பின்னாடி ஒரு அரசியல் இருக்கு' போன்ற அரசியல் வசனங்களுக்கு நிகராக இப்படத்தில், 'நம்ம உடம்புதான் நமக்குப் பெரிய ஆயுதம்... கூட்டுங்கடா மக்கள...’, 'நிலம் உங்களுக்கு அதிகாரம்; எங்களுக்கு வாழ்க்கை’ போன்ற வசனங்கள் ஆழமான அரசியல் பேசுகின்றன. 

குடும்பம்:

தன் மனைவி உயிருடன் இருக்கிறாரா என்பதே தெரியாமல் இருக்கும் கபாலி, இறுதியில் மனைவி - மகளைக் கண்டுபிடித்து அவர்களோடு அன்பாக இருப்பார். அவருக்கு நேரெதிர் இந்தக் கரிகாலன். மனைவி, மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகள் எனக் கூட்டுக் குடும்பத்தில் வாழ்கிறார், கரிகாலன். 'கபாலி'யில் காதலித்த பெண்ணையே திருமணம் செய்துகொண்டு வாழ்வார். இதில் காதலி வேறு; மனைவி வேறு.
 

காலா

கார்: 

ஜெயிலிலிருந்து கபாலி வெளியே வரும்போது, "உங்களுக்குப் பிடிச்ச பழைய பென்ஸ்தான். ஆல்டர் செஞ்சு கொண்டு வந்திருக்கேன்" என்று ஜான் விஜய் சொல்வார். மேலும், அந்தக் கறுப்பு பென்ஸ் கார் பல ஆக்‌ஷன் சீக்வென்ஸில் இடம் பெற்றிருக்கும். பென்ஸ் நம்பர் WT 3265. 'காலா'வில் கறுப்பு ஜீப்பில் கரிகாலன் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்திருப்பதுதான், படத்தின் ஃபர்ஸ்ட் லுக். காலாவோடு சேர்த்து ஜீப்பும் வைரலானது. ஜீப் நம்பர் MH 01 BR 1956. 

கதைக்களம்: 

மலேசியாவில் நடக்கும் கேங் வாரோடு, அங்குள்ள தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் கேங் லீடராகக் கபாலி இருப்பார். இந்தப் படத்தில் மும்பை தாராவி பகுதியில் வாழும் தமிழ் மக்களின் தலைவனாகவும், அவர்களை அழித்து நிலத்தை ஆக்கிரமிக்க நினைக்கும் அதிகார வர்க்க தாதாவுக்கு எதிராக நிற்கும் ஹீரோவாகவும் கரிகாலன் வருவார் எனத் தெரிகிறது. 

பிஜிஎம் :

கபாலியில் நடந்து வரும்போது 'நெருப்புடா நெருங்குடா' பாடலின் பிஜிஎம் இடம்பெற்றிருந்தது. அதேபோல, 'ஒத்ததல ராவணா', 'செம வெயிட்டு' ஆகிய பிஜிஎம்களோடு காலா என்ட்ரி ஆகவிருக்கிறார். இருவரின் பிஜிஎம்களின் இறுதியில் வரும் அந்த விசில் மியூசிக் மேலும் ஒருபடி பலம் சேர்த்து மாஸ் கூட்டுகிறது.    

காலா

'கபாலி' படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றபின் டிரெய்லர் வரும் என எதிர்பார்த்த சமயத்தில், அதற்குப் பதில் 'நெருப்புடா' பாடலின் டீஸரை வெளியிட்டது படக்குழு. ஆனால், 'காலா'வின் மிரட்டும் டீஸரை வெளியிட்ட படக்குழு, தற்போது படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. படத்தின் டீஸர் வேற லெவலில் இருந்ததால், டிரெய்லருக்கு அதீத எதிர்பார்ப்பு இருந்தது. அரசியல் வசனங்கள் இருந்தாலும் டீஸரில் இருந்த பவர், மாஸ், க்ளாஸ் எல்லாம் டிரெய்லரில் மிஸ்ஸிங்தான். 

கரிகாலனின் மொத்த ரெளடித்தனத்தையும் பார்க்க ஜூன் 7 வரை வெயிட்டிங்! 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க