வெளியிடப்பட்ட நேரம்: 10:52 (31/05/2018)

கடைசி தொடர்பு:10:52 (31/05/2018)

"சென்சார் போர்டின் புதிய விதிகள்... அறிவிப்புகள் மட்டும் போதுமா?" #CBFC

சென்சார் போர்டு தணிக்கைச் சான்றிதழ் மற்றும் சப்-டைட்டிலிங் குறித்து சில விதிமுறைகளை வலியுறுத்தியிருக்கிறது.

திரைப்படங்களுக்குச் சான்றிதழ் வழங்கும் சென்சார் போர்டு, திரைப்படங்களுக்குச் சில புதிய விதிகளைப் பின்பற்ற உத்தரவிட்டிருக்கிறது. தவிர, ஏற்கெனவே இருக்கும் விதிகள் சரியாகப் பின்பற்றப்படுக்கொண்டிருக்கிறதா என்பதையும் தீவிரமாகக் கண்காணிக்கவிருக்கிறது. 

இந்தியாவில் திரையரங்குகள், தொலைக்காட்சிகளில் வெளியிடப்படும் எல்லா சினிமா, விளம்பர மற்றும் ஆவணப் படங்களும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தால் நிறுவப்பட்டுள்ள மத்திய திரைப்படத் தணிக்கை வாரிய உறுப்பினர்களால் பார்க்கப்பட்டு, இந்தியன் சினிமாடோகிராஃப் ஆக்ட் (cinematograph act 1952) அடிப்படையில் சென்சார் செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

சான்றிதழ் பின்வரும் வகையில் வரையறுக்கப்பட்டுள்ளது.   

`யு' - எல்லா வயதினரும் பார்க்க உகந்த படம்.
`யு/ஏ’- 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெற்றோரின் துணையோடு மட்டுமே பார்க்க வேண்டிய படம்.
`ஏ’- 18 வயது நிறைவடைந்தவர்கள் மட்டுமே பார்க்க உகந்த படம்.

இதுதவிர, மக்கள் பார்வைக்கு அல்லாத படங்களுக்குத் தனித்துவச் சான்றிதழ்கள் (S) வழங்கப்படுகின்றன.

சென்சார் போர்டு

ஒரு படத்தை சென்சாருக்கு அனுப்பும்போது, அதற்கென வரையறுக்கப்பட்ட விதிகளைப் பின்பற்ற வேண்டும். ஒரு படம் தணிக்கைக்குச் செல்லும்முன், குறிப்பிட்ட படத்தின் மொத்த நீளத்தையும் நேர அளவில் குறிப்பிட வேண்டும். அது, டைட்டில் தொடங்கி கடைசியில் வரும் எண்ட் கிரெடிட்ஸ் வரை... அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். பின்னர், படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் இடம்பெறும் வசனம், கதாபாத்திரங்கள், கேமரா ஆங்கிள்ஸ், கேமரா அசைவுகள், பாடல் வரிகள், பின்னணி இசை மற்றும் ஒலி  உள்பட அனைத்தையும் எழுத்து வடிவில் சமர்ப்பிக்கவேண்டும். இது `சென்சார் ஸ்கிரிட்' என அழைக்கப்படுகிறது. தணிக்கை செய்யப்பட்ட ஒரு திரைப்படத்தில், எந்த ஒரு புதிய விஷயங்களையும் தணிக்கை வாரியத்தின் அனுமதியில்லாமல் சேர்க்கக் கூடாது.  

தணிக்கைக் குழுவால் அளிக்கப்பட்ட சான்றிதழைப் படத்துடன் இணைத்துத் திரைப்படங்களுக்கு 10 விநாடிகளுக்குக் குறையாமலும்,  விளம்பர மற்றும் குறும்படங்களுக்கு 3 விநாடிகளும் மக்களுக்குக் காட்டவேண்டும். தற்போது பெரும்பாலான படங்களில் மேற்சொன்ன நேர அளவில் தணிக்கைச் சான்றிதழ் காட்டுவதில்லை. இந்தக் குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்துகொண்டிருந்த நிலையில், மத்திய தணிக்கை வாரியம் அளித்த சான்றிதழை, விதிகளின்படி 10 மற்றும் 3 விநாடிகள் என்ற நேர அளவை சம்பந்தப்பட்ட திரைப்படம் / குறும்படம் / ஆவணப்படம் / விளம்பரப் படத்தின் ஒட்டுமொத்த நேரத்தோடு இணைக்க வேண்டும்' என ஆணை பிறப்பித்திருக்கிறது, மத்தியத் திரைப்பட தணிக்கை வாரியம். 

தவிர, சில படங்களுக்கு சப்-டைட்டில்களைத் தணிக்கைக்குப் பிறகே இணைக்கிறார்கள். இந்த விஷயமும் தணிக்கை வாரியத்தின் கவனத்துக்கு வந்ததை அடுத்து, `இனி சப்-டைட்டில் சேர்த்தே தணிக்கைக்கு அனுப்பவேண்டும்' என்ற உத்தரவையும் பிறப்பித்திருக்கிறார்கள். 

சென்சார் கட்

ஒரு திரைப்படத்தில் தணிக்கைக் குழு மாற்றங்களைப் பரிந்துரைத்திருந்தால், தணிக்கைச் சான்றிதழில் முக்கோண வடிவில் ஒரு முத்திரை பதிக்கப்பட்டிருக்கும். இறுதியாக, தணிக்கைச் சான்றிதழ் வழங்கும்போது, சம்பந்தப்பட்ட பரிந்துரைகளும் அதற்குப் படக்குழு மேற்கொண்ட மாற்றங்களும் உள்ளடங்கிய `கட் லிஸ்ட்’ பட்டியல் சான்றிதழோடு இணைத்து வழங்கப்படும். இந்த `கட் லிஸ்ட்' பட்டியல் ஒவ்வொரு திரையரங்குகளிலும் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும் என்ற விதி உள்ளது.

ஆனால், சென்னை போன்ற பெருநகரத் திரையரங்குகளில்கூட இதை முறையாகப் பலர் பின்பற்றுவதில்லை. தவிர, சிறு நகரம் மற்றும் கிராமங்களில் சென்சார் செய்யப்படாத விளம்பரங்கள் திரையிடப்படுகின்றன. சென்சார் சான்றிதழைத் திரையிடாத திரையரங்குகளும் உள்ளன.

கட் லிஸ்ட்

'இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தைத் போன்று முன்னணி நடிகர்கள் நடித்து 'ஏ’ சான்றிதழ் பெற்ற திரைப்படங்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்டோரை மட்டும்தான் அனுமதிக்க வேண்டும். ஆனால், திரையரங்கில் அதைச் சரியாகப் பின்பற்றுகிறார்களா என்பது தெரியவில்லை.

மேற்சொன்ன சில புதிய உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கும் சென்சார் போர்டு, தணிக்கை விதிகளையெல்லாம் முறையாகப் பின்பற்றுகிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும்!