``குத்து டான்ஸுக்குத் தியரி ரெடி பண்ணப்போறோம்..!’’ - டான்ஸ் மாஸ்டர் ஷெரீஃப்

சினிமாவில் புது முயற்சிகளுக்கு என்றுமே நல்ல வரவேற்பு உண்டு. திரைப்படங்களில் எடுக்கும் புது முயற்சியைவிட சினிமா கலைஞர்களின் வாழ்க்கைகாக எடுக்கப்படும் முயற்சிகள் வரவேற்கப்படவேண்டியவை. அந்த வகையில் டான்ஸ் மாஸ்டர் ஷெரீஃப், தான் வேலை செய்யும் நடனத்துறைக்கும் தன்னோடு வேலை செய்யும் நடனக் கலைஞர்களுக்கும் உதவும் வகையில் ஒரு வித்தியாசமான முயற்சியோடு லண்டனிலிருந்து வந்திருக்கிறார். அதை பற்றி அவரிடம் பேசியதிலிருந்து...

ஷெரிஃப்

``எந்தத் துறை சம்பந்தமாகப் படிப்புக்கும் சான்றிதழ்னு ஒண்ணு கொடுக்குறாங்க. ஆனால், டான்ஸில் அது கிடையாது. டான்ஸ் கத்துக்கிறதுக்கு ஒரு யுனிவர்சிட்டி இங்கே கிடையாது; பரதநாட்டியத்துக்கு இருக்கு. ஆனால், மற்ற ஸ்டைல் டான்ஸ்களுக்கு அது இல்லை. இப்போதெல்லாம் பள்ளிக்கூடத்திலிருந்தே டான்ஸ் சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அங்க சொல்லிக்கொடுக்குற டான்ஸ் மாஸ்டர்களுக்குச் சான்றிதழ் கிடையாது. ஒரு டான்ஸ் மாஸ்டர் ஒரு ஸ்கூல்ல வேலை கேட்டுப்போனால் அவர் தகுதியான டான்ஸ் மாஸ்டரானு ஆடிக்காட்டுனாத்தான் தெரியும். ஒரு முறையான சான்றிதழ் இல்லை. அதற்குக் காரணம், இங்க டான்ஸுக்கு முறையான ஸ்கூலோ, காலேஜோ இல்லை. அதைச் செய்றதுக்காகத்தான் லண்டன் குளோபல் டான்ஸ் கவுன்சிலில் இணைந்திருக்கோம். 

முதலில் டான்ஸ் மாஸ்டர்களுக்கு டீச் பண்ணி சான்றிதழ் கொடுக்கப்போறோம். இந்தக் கவுன்சில் மூலம் டான்ஸர்களுக்கு நலஉதவி செய்றது, புது டான்ஸ் ஸ்டைல்களை உருவாக்கி அதுக்காகத் தியரி ரெடி பண்றது, குத்து டான்ஸ் போன்ற தியரி இல்லாத டான்ஸ் ஸ்டைல்களுக்கும் தியரி ரெடி பண்றதுனு பல வேலைகளை செய்யப்போறோம். டான்ஸை நாம ப்ராக்டிகலா கத்துக்குறது எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி தியரியா கத்துக்கிறதும் முக்கியம். டான்ஸை தியரியா கத்துக்கும் போது டான்ஸில் இருக்குற பல முக்கியமான விஷயங்களை தெரிஞ்சுக்கலாம். இந்த மாதிரியான ஐடியாக்கள் வர எனக்குக் காரணமா இருந்தது, `சினிமாவில் எப்படி கோரியோகிராப் பண்றது’னு நான் எழுதுற புத்தகம்தான். இதுவரை நான் கத்துக்கிட்ட விஷயங்களை வெச்சு அந்தப் புத்தகத்தை எழுதிட்டு இருக்கேன். அதை எழுதும் போதுதான் இந்த தியரி ஐடியாவும் வந்துச்சு. இந்த மாதிரி இதுவரைக்கும் இந்தியாவில் எங்கேயும் நடந்தது இல்லை; வெளிநாடுகளில் இருக்கு. ஆனால், அங்கபோய் படிக்கிறது அல்லது அவங்க வந்து இங்க சொல்லிக் கொடுக்குறதுக்கு அதிகமா செலவு ஆகும். அதனாலதான் இங்க குறைவான செலவுல பண்றோம். ஒரு ஸ்டூடென்ட் என்ன ஃபீஸ் கட்றாரோ அதைத்தான் நாங்க மாஸ்டர்கள் கிட்டேயும் வாங்குறோம்.

ஷெரிஃப்

முதலில் டான்ஸ் மாஸ்டர்களுக்கு மட்டும் சான்றிதழ் கொடுக்குற வேலைகளில் இறங்கியிருக்கோம். மாஸ்டர்கள் சான்றிதழ் வாங்கிட்டார்னா, அவர் அவங்க ஸ்டூடென்டுக்குச் சான்றிதழ் கொடுக்கலாம். டான்ஸும் ஓர் அங்கீகரிக்கப்பட்ட வேலைங்கிற நிலைமை வரணும். அதுக்காகத்தான் இந்த வேலைகள் எல்லாம் செய்றோம். கராத்தே, கிரிக்கெட் எனக் கலை, விளையாட்டு சம்பந்தப்பட்ட எல்லா கோர்ஸ்களுக்கும் சான்றிதழ் இருக்கு. ஆனால், நடனத்துக்கு அப்படி எதுவும் இல்லை. அது இனிமேல் இருக்கணும்கிறதுதான் எங்க இலக்கு.

மே 21 ம் தேதி லண்டன் பார்லிமென்ட்டில் வைத்து குளோபல் டான்ஸ் கவுன்சிலில் நாங்க 20 பேர் ஜாயின் பண்ணுனோம். இதை எப்படி இந்தியா முழுக்கக் கொண்டு போறதுன்னு ப்ளான் பண்ணிட்டு இருக்கோம். அதுபோக இந்தக் கோச்சிங்ல தியரி டைப்ல என்னென்ன சொல்லித்தரலாம்; இதுக்கு என்னென்ன சிலபெஸ் வைக்கலாம்னு முடிவு பண்ணிட்டு இருக்கோம். அதை எல்லாம் முடிவு பண்ணுனதுக்கு அப்பறம்தான் ஆள்களை சேர்ப்போம்’’ என்றார் டான்ஸ் மாஸ்டர் ஷெரீஃப்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!