``தமிழ்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் `காலா' டிக்கெட் விற்பனை மந்தம்தான்!" - வெளிநாட்டு விநியோகஸ்தர்

`காலா' படப் பிரச்னைகள் குறித்த கட்டுரை.

``தமிழ்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் `காலா' டிக்கெட் விற்பனை மந்தம்தான்!

நாளை காலா ரிலீஸாகிறது. ரஜினி படம் ரிலீஸாகிறது என்றாலே ஆரவாரத்துக்குப் பஞ்சம் இருக்காது. ஒரு நடிகராக ரஜினிகாந்த் உச்சமும்  படைத்த சாதனைகளும் பல. ஆனால், அவரின் சமீபத்திய சில நிலைப்பாடுகள் புரியாத புதிராக இருந்து வருகிறது. 

காலா

தூத்துக்குடியில், `யார் நீங்கள்?' எனக் கேட்ட இளைஞரிடம், `நான்தான்பா ரஜினிகாந்த்' என ரஜினி பதில் சொன்னது இந்திய அளவில் டிரெண்ட்! தூத்துக்குடியில் உற்சாகத்துடன் இறங்கிய ரஜினி, சென்னைக்குத் திரும்பியவுடன் உக்கிரமானார். போராடியவர்களை சமூக விரோதிகள் என்று சொன்னது, `போராட்டம் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாகும்', `எல்லாம் எனக்குத் தெரியும்', `வேற ஏதாவது கேள்வி இருக்கா?' என இவரின் பேச்சு தமிழக மக்களிடையே அதிர்வலைகளை உண்டாக்கின. இதனைத் தொடர்ந்து, அவரின் `காலா' படம் நாளை (7.6.18) உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் நிலையில், காவிரிப் பிரச்னையில் கர்நாடகாவுக்கு எதிராக ரஜினி பேசியதால், அங்கு `காலா' படத்தை திரையிடக் கூடாது என்று பல்வேறு அமைப்பினர் தியேட்டரை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றர். மீறி படத்தைத் திரையிட்டால், தியேட்டர்கள் தாக்கப்படும், படம் பார்க்க வரும் மக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறி ஆகும். இதை மனதில் வைத்துக்கொண்டு, கர்நாடக திரைப்பட வர்த்தக சம்மேளனம் இந்த விஷயத்தைக் கவனமாக அணுகியது. குறிப்பிட்ட தேதியில் படம் ரிலீஸ் ஆகாவிட்டால், கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்படும்.

அதனால், கர்நாடகாவில் `காலா' படத்தைத் தடையில்லாமல் வெளியிட வேண்டும் என்றும் படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு அதற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் நடிகரும், `காலா' படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ``படத்தை கர்நாடகாவில் வெளியிட்டே ஆகவேண்டும் என யாரையும் வற்புறுத்த முடியாது. `காலா' திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும்" எனக் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டார்கள். இதனைத் தொடர்ந்து, ``கர்நாடகாவில் படம் ரிலீஸ் ஆகவில்லை என்றால் எனக்கு வரும் நஷ்டத்தை நான் பார்த்துக்கொள்கிறேன். காவிரிப் பிரச்னையிலிருந்து பின்வாங்கப்போவதில்லை" எனக் கூறியிருக்கிறார், ரஜினி. கர்நாடகாவில் நாளை 130 தியேட்டர்களில் `காலா' ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில், குறித்த நேரத்தில் திரையிடப்படுமா என்பது நாளைதான் உறுதியாகும்.  

காலா

தவிர, வெளிநாடுகளிலும் `காலா' ரிலீஸ் ஆவதில் பிரச்னைகள் இருந்தன. `ரஜினி மட்டுமல்ல, தமிழர்களுக்கு எதிராகச் செயல்படும் எந்த நடிகர்களின் படங்களையும் ரிலீஸ் செய்யமாட்டோம்' என அறிவித்தார்கள், நார்வே விநியோகஸ்தர்கள். இதுதொடர்பாக, நார்வே, டென்மார்க் முதலிய நாடுகளில் தமிழ்ப் படங்களை வாங்கி வெளியிடும் வசீகரன் என்பவரிடம் பேசினோம். ``தமிழ்ப் படங்களை வாங்கி நார்வே, ஸ்வீடன், டென்மார்க் ஆகிய நாடுகளில் விநியோகிக்கும் வேலையைச் செய்துகொண்டிருக்கிறோம். ரஜினியின் `கபாலி' படத்தை நாங்கள்தாம் விநியோகம் செய்தோம். ஆனால், `காலா' படத்தை நாங்கள் வாங்கவில்லை. காரணம், தூத்துக்குடி சம்பவத்துக்குக் கருத்துத் தெரிவித்த ரஜினி, மக்களை சமூக விரோதிகள் என்றும், போராட்டத்தினால் தமிழ்நாடே சுடுகாடு ஆகும் என்றும் பேசியது கண்டனத்துக்குரியது. அவர் அரசியல் செய்வதாக நினைத்து, பிற்போக்காகப் பேசி வருகிறார். இப்போதே இவரது நடவடிக்கைகள் இப்படி இருக்கிறது என்றால், நாளை அவர் கையில் தமிழ்நாட்டைக் கொடுத்தால் என்னெவெல்லாம் நடக்குமோ? என்ற எண்ணம் வருகிறது.  நான் இலங்கையில் வாழ்ந்த ஈழத் தமிழர். 

தமிழ்நாட்டில் சிலகாலம் இருந்திருக்கிறேன். தமிழக மக்களின் மனநிலை எனக்கு நன்றாகத் தெரியும். போராட்டக்களத்தில் மக்களை இழப்பதன் வலி ஈழத்தில் இருந்த எங்களுக்கு நன்றாகவே தெரியும். வழக்கமான ரஜினியாக இருந்திருந்தால், நாங்கள் இங்கு அவர் படத்தை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றிருப்போம்.  அவரது நடவடிக்கை வழக்கத்துக்கு மாறாக இருப்பதால், இங்குள்ள தமிழர்கள் அனைவரும் படத்தைப் புறக்கணிக்கிறோம்.  அவர்கள் இங்குள்ள தெலுங்கு மக்கள் மூலமாகப் படத்தை ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள். ஆனால், `காலா' படத்துக்கான டிக்கெட்டுகள் இங்கே குறைவாகவே விற்கப்பட்டிருக்கின்றன" என்றார். 

மற்ற மாநிலங்களிலும் நாடுகளிலும்தாம் `காலா' ரிலீஸுக்குப் பிரச்னை என்றால், தமிழ்நாட்டிலும் பிரச்னைகள் தொடர்கின்றன. அரசு அறிவித்த தொகையைவிட அதிகத் தொகையாக இருக்கிறது எனக் காரணம் சொல்லி, சென்னையில் கமலா, உதயம் ஆகிய தியேட்டர்களில் `காலா' படம் வெளியாகாது என அறிவித்தார்கள். `அதிகக் கட்டணம் வசூலிக்க விநியோகஸ்தர் தரப்பு சொன்னது. பொது மக்களிடம் அதிகமாகக் கட்டணம் வசூலிக்க முடியாது. எனவே, படத்தைத் திரையிடமாட்டோம்' எனக் கூறியுள்ளனர். மற்ற திரையரங்குகள், தியேட்டர்கள்  ஒப்புக்கொண்ட விதிமுறைகளை இவர்கள் ஏற்கவில்லை என வுண்டர்பார் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மதுரையில் ஏழு தியேட்டர்களில் மட்டும்தான் `காலா' ரிலீஸ் ஆக இருக்கிறது. எல்லாம் சாதாரண திரையரங்குகள்! 

ரஜினி

இந்தளவுக்குக் `காலா' படத்துக்குத் தமிழ்நாடு உட்பட கர்நாடகா, வெளிநாடுகள் என எல்லா இடங்களிலிருந்தும் எதிர்ப்புகள் குவிகின்றன. ஆனால் ரஜினியோ, ``நான் எதிர்பார்த்ததைவிடக் குறைவாகத்தான் எதிர்ப்புகள் வந்திருக்கிறது" எனக் கூறியிருக்கிறார். படம் ரிலீஸில் பிரச்னைகள் இருந்தாலும், நாளை `காலா' வெளியாவது உறுதிதான்.


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!