"ஒரு பெரிய ஹீரோ கதை கேட்டப்போ, `காட்ஃபாதர்' மாதிரி தோணும்போது சொல்றேனுட்டேன்!" - பாலாஜி சக்திவேல்

உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து படம் எடுக்கக்கூடிய இயக்குநர் பாலாஜி சக்திவேல் தனது புதியப் படம் `யார் இவர்கள்' குறித்து பேசியிருக்கிறார்.

புதுமுகங்களை வைத்துப் படம் எடுப்பது, இயக்குநர் பாலாஜி சக்திவேல் ஸ்டைல். முதல் படமான `சாமுராய்' தவிர்த்து, `காதல்' படத்திலிருந்து இதையே ஃபாலோ செய்கிறார். சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது `யார் இவர்கள்' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அவரிடம் பேசினேன். 

பாலாஜி சக்திவேல்

``உங்களுடைய முதல் படம் `சாமுராய்' பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோனு உருவான படம். ஆனா, அதற்குப் பிறகு நீங்க எடுத்த படங்கள் எல்லாம் லோ பட்ஜெட் படங்கள்தாம்... என்ன காரணம்?" 

``உண்மையைச் சொல்லணும்னா, இயக்குநர் ஷங்கருடைய `ஜென்டில்மேன்' படத்துல வொர்க் பண்ணி முடிச்சதும், மூணு பெண் கேரக்டர்களை மையப்படுத்தி ஒரு படம் எடுக்கலாம்னுதான் முடிவு பண்ணேன். கதை கேட்ட தயாரிப்பாளர்கள், `ஷங்கரோட பிளாக் பஸ்டர் படத்துல வொர்க் பண்ணிட்டு, ஒரு ஹீரோவை வெச்சுப் படம் எடுக்கலைனா எப்படி?'னு கேட்டாங்க. சின்ன பட்ஜெட்ல என்னால படம் பண்ண முடியாதுனு நினைச்சாங்க. `சாமுராய்' படத்தைப் பார்த்தாலே தெரியும். பெண்ணோட கதைதான் முக்கியத்துவமா இருக்கும். ஹீரோவோட கதை வேறயா இருக்கும். ரெண்டையும் ஒண்ணா இணைச்சு அந்தப் படம் எடுத்தேன். அதுதான் நான் பண்ண தவறு. அப்படி இணைச்சிருக்கக் கூடாது. எனக்குக் `காதல்' மாதிரியான படங்கள் பண்ணணும்னுதான் ஆசை. பெரிய ஹீரோவுக்குப் படம் பண்றதுக்குக் கதைக்களமும் சூழலும் அமையணும். ஆனா, என் கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் அந்தச் சூழல் இல்லை.

தவிர, புதுமுகங்களை வெச்சுப் படம் பண்றது எனக்கு வசதியா இருக்கு. எந்தவொரு சமரசமும் இல்லாம பண்ண முடியுது. பெரிய ஹீரோக்களோட படம் பண்ணும்போது சில விஷயங்களுக்கு காம்ப்ரமைஸ் ஆகவேண்டிய சூழல் வருமோனு நான் பயப்படுறேன். அதனாலேயே என் கவனம் புதுமுகங்களை நோக்கியே இருக்கு. `யார் இவர்கள்' படத்திலேயும் புதுமுகங்கள்தாம் நடிச்சிருக்காங்க. படத்துல எல்லோருக்கும் தெரிஞ்ச முகம்னா, வக்கீல் கேரக்டர்ல வர்ற வினோதினி மட்டும்தான்!" 

``தொடர்ந்து பெண் கேரக்டர்களையே முன்னிலைப்படுத்திப் படம் எடுக்க என்ன காரணம்?" 

`` `ஆண் எழுத்தாளர், பெண் எழுத்தாளர் வேறுபாடு என்ன?'னு ஒரு எழுத்தாளர் என்கிட்ட கேட்டார். `அதென்ன ஆண் எழுத்தாளர், பெண் எழுத்தாளர்... எழுத்தாளர்னு சொல்லுங்க போதும்'னு சொல்லிட்டேன். அதேமாதிரி, என்னையும் `பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற இயக்குநர்'னு முத்திரை குத்திடாதீங்க. ஆணும் பெண்ணும் சேர்ந்ததுதானே உலகம்!" 

``உங்க படங்களுக்குப் பெரும்பாலும் நா.முத்துக்குமார்தான் பாடல்கள் எழுதுவார். அவரோட இழப்பு உங்களை எந்தளவுக்குப் பாதிச்சிருக்கு?" 

``நா.முத்துக்குமாரை நான் ரொம்பவே மிஸ் பண்றேன். ஏன்னா, அவர் எனக்குக் கவிஞர் மட்டுமல்ல, நல்ல நண்பர். அவர்கிட்ட ஒரு கதையைச் சொன்னா, அதைப் பத்தி சரியா ஜட்ஜ் பண்ணி கருத்துச் சொல்வார். நானும் அவரும் நிறையப் பயணப்பட்டிருக்கோம். அது சாதாரண பயணமா இருக்காது. நிறைய மனிதர்களை, அற்புத ஆன்மாக்களை எனக்கு அவர் அறிமுகப்படுத்துவார். அவருக்கும் எனக்குமான பயணம் தடைபட்டது பெரிய இழப்புதான். `ரா ரா ராஜசேகர்', `யார் இவர்கள்' இந்த ரெண்டு படத்துக்கும் அவரோட உதவியாளர் லலிதானந்த் பாடல்கள் எழுதியிருக்கார்."

யார் இவர்கள்

``உங்க குருநாதர் ஷங்கர்...?"

``நேற்றுகூட அவரைச் சந்திச்சுப் பேசினேன். `காதல்'ல இருந்து இப்போவரை எங்க உறவு அப்படியேதான் இருக்கு. நான் ஒரு இயக்குநரா வலம் வந்தாலும், அவருடைய உதவியாளர்னு சொல்லிக்கிறதுல எனக்குப் பெருமைதான். அவருடைய நண்பர்னு சொல்லிக்க, இன்னும் பெருமை. ஏன்னா, `காதல்' படத்தோட கதையைப் பல தயாரிப்பாளர்கள்கிட்ட சொன்னேன். எல்லோருமே `க்ளைமாக்ஸை மாத்துங்க'னு சொன்னாங்க. எனக்கு உடன்பாடு இல்லாததால, ஸ்கிரிப்டைக் கையில வெச்சுக்கிட்டு சுத்திக்கிட்டு இருந்தேன். அப்போ, `உன் படத்தை நான் எடுக்குறேன்டா'னு என்மேல நம்பிக்கை வெச்சவர், ஷங்கர்."

``பார்ட் 2 படங்களுக்கான டிரெண்ட் இது. உங்களுக்குப் பெரிய அடையாளத்தைக் கொடுத்த `காதல்' படத்தோட இரண்டாம் பாகத்தை எடுக்குற ஐடியா இருக்கா?"

``எனக்கு பார்ட் 2, பார்ட் 3 இந்த மாதிரி படங்கள் எடுக்க விருப்பம் இல்லை. ஆனா, காதலை மையப்படுத்திய கதைகளைப் படமெடுப்பேன். அது `காதல்' படத்தோட சீக்வென்ஸா இருக்காது, இரண்டாம் பாகமா இருக்காது. ஏன்னா, `காதல்' உண்மைச் சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட படம். இரண்டாம் பாகம் எடுத்தா, அது கற்பனைக் கதையா இருக்கும்!"  

``புதுமுகங்கள் உங்க கதைக்குப் பொருத்தமா இருப்பாங்கனு சொல்றது ஓகே... பெரிய ஹீரோக்கள் உங்களைத் தேடிவந்து அப்ரோச் பண்ணலையா?" 

``ஒரு பெரிய ஹீரோ அணுகினார். என் முதல் படம் `சாமுராய்' சில காரணங்களால சரியா போகலை. ஆனா, அந்தமாதிரி விஷூவல்ல ஒரு படம் பண்ணா நல்லா இருக்கும்னு கேட்டார். அவர்கிட்ட, ``இந்தப் படமே இமேஜ்ங்கிற ஒரு விஷயத்துக்காகப் பண்ணது. மத்தபடி, எனக்கு அப்படியான படங்கள் எடுக்க வராது. ஹாலிவுட்ல `காட்ஃபாதர்' மாதிரியான ஒரு கதை எனக்குத் தோணுபோது, கண்டிப்பா உங்ககூட படம் பண்றேன்!"னு சொல்லிட்டேன்." 

பாலாஜி சக்திவேல்

``தூத்துக்குடி சம்பவத்தை வைத்துப் படம் பண்ணலாம்னு எண்ணம் வந்ததா?"

``இந்தக் கேள்வி மூலமா என்னை அடையாளப்படுத்துறீங்க. எல்லோரும் பண்ணுவோம், பண்ணனும்னு நினைக்கிறேன். ஆனா, பாருங்க... கடைசியில நான்தான் பண்ணுவேன் (சிரிக்கிறார்). அப்படிப் பண்ணா, ஏற்கெனவே சொன்ன கலைப் படைப்பாகத்தான் பண்ணுவேன். `இது தூத்துக்குடிச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட படம்'னு அடையாளப்படுத்தமாட்டேன்."

`` `ரா ரா ராஜசேகர்' பட ரிலீஸ் தள்ளிப்போக என்ன காரணம்?" 

`` `வழக்கு எண் 18/9' படத்துக்குப் பிறகு நான் எடுத்த படம் இது. லிங்குசாமி சாரோட பணப் பிரச்னையாலதான் ரிலீஸ் கொஞ்சம் லேட் ஆகுது. பிரச்னைகள் நீங்கி சீக்கிரமே இந்தப் படம் வரும்னு நம்புறேன். சாதியப் பிரச்னைகளை வலிமையா பேசுற படம் இது. இந்தச் சமூகத்தில் சாதியும், அரசியலும் பின்னிப் பிணைந்த ஒண்ணு. இதை யாருமே மாத்த முடியாது. ஆனா, இதற்கான மாற்றம் கண்டிப்பா வந்தே ஆகணும். பலபேர் இதைப் பேசாம கடந்துபோறாங்க. நான் கடந்துபோக விரும்பலை. இந்த நவீன உலகத்துலகூட சாதிப் பிரச்னைகள் தீரலை. ஆதிகாலத்துல தொடங்கி, சமீபத்துல நடந்தேறிய சங்கர் கொலை வரை... பார்த்துக்கிட்டே இருக்கோம். இந்தப் பிரச்னையை ஒருத்தன் படங்கள்ல பேசலைனா, அவன் உண்மையான கலைஞனே இல்ல!" 

`` `ரா ரா ராஜசேகர்' படம் ரிலீஸ் ஆகாமல் இருக்கும் நிலையில், வேறொரு படத்தை இயக்கும்போது உங்க மனநிலை எப்படி இருந்தது?"  

``இதை நான் எப்படிப் புரியவைக்கிறதுனு தெரியலை... வயித்துல இருக்கிற குழந்தை குறைப் பிரவசத்துல இறந்துட்டா, அழுதுட்டு விட்டுடலாம். ஆனா, குழந்தை இன்குபேட்டர்ல இருக்கும்போது, இன்னொரு குழந்தை பிறந்து, அந்தக் குழந்தைக்குத் தாயால நிம்மதியா பால் கொடுக்க முடியுமா... அப்படி ஒரு மனநிலையில இருக்கேன். ஆனா, இந்தப் படம் எப்போ ரிலீஸ் ஆனாலும் ஓடும்ங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு."

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!