வெளியிடப்பட்ட நேரம்: 15:23 (28/06/2018)

கடைசி தொடர்பு:15:23 (28/06/2018)

"சீரியல் நடிகர்னு சொன்னாலே சினிமா வாய்ப்பு கிடைக்காது!" - சேத்தன்

சினிமாவில் கேரக்டர் ரோல் செய்துகொண்டிருக்கும் நடிகர் சேத்தன், சி.எஸ்.அமுதனின் `தமிழ்ப் படம் 2' படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்திருக்கிறார். பட அனுபவம் குறித்தும், விரைவில் இயக்குநராகவிருப்பது குறித்தும் பேசியிருக்கிறார்.

``இயக்குநர் ஆகணும்னுதான்  சினிமாவுக்குள்ள வந்தேன். ஆனா, நடிகரா வலம் வந்துக்கிட்டுருக்கேன். சீக்கிரம் என்னை இயக்குநரா பார்ப்பீங்க!'' நம்பிக்கையுடன் பேச ஆரம்பிக்கிறார், நடிகர் சேத்தன். 

``சீரியலில் உங்களைப் பார்க்க முடியலையே?" 

``சீரியல்ல நடிச்சு ஐந்து வருடம் ஆச்சு. நான் இருந்த காலத்துல சின்னத்திரையில இருந்து சினிமாவுல நடிக்கிறது பெரிய சவால். சீரியல் நடிகர்னு சொன்னாலே, பட வாய்ப்புகள் வராது. அதனாலதான் நான் சீரியல்ல நடிக்கிறதை நிறுத்தினேன். சினிமாவில் எனக்கு வாய்ப்பு கொடுத்தவர், இயக்குநர் ஜீவா. அவர் இறந்துட்டார். அவருடைய `தாம் தூம்' படம் மூலமா நான் சினிமாவுக்கு அறிமுகம் ஆனேன். சின்ன  கேரக்டர்தான். ஆனா, நான்தான் நடிக்கணும்னு உறுதியா இருந்தார்." 

`` `தமிழ்ப் படம் 2' படத்துல உங்களுக்கு என்ன கேரக்டர்?" 

``சீரியஸான கேரக்டர்கள்தாம் எப்போவும் என்னைத் தேடி வரும். ஆரம்பத்துல காமெடி கேரக்டர்களில் நடிக்கணும்னு எனக்கு ஆசை இருந்தது. அதுக்கு `தமிழ்ப் படம் 2'தான் தீனியா அமைஞ்சிருக்கு. இயக்குநர் சி.எஸ்.அமுதனுக்கு இந்த நேரத்துல நன்றி சொல்லணும். ஏன்னா, அவருடைய `ரெண்டாவது படம்' திரைப்படத்துல எனக்கு சின்ன ரோல் கொடுத்தார். அது கொஞ்சம் சீரியஸா இருந்தது. `எல்லோரும் எனக்கு சீரியஸ் ரோல்தான் கொடுக்குறாங்க. நீங்களும் அப்படியே பண்றீங்களே'னு அவர்கிட்டயே கேட்டேன். நான் சொன்னதை ஞாபகம் வெச்சிருந்தாரோ என்னவோ... `தமிழ்ப் படம் 2' படத்துல செமயா ஒரு காமெடி கேரக்டர் கொடுத்திருக்கார்."  

``சிவாவும், நீங்களும் நடிக்கும்போது, ரகளையா இருந்திருக்குமே ஷூட்டிங் ஸ்பாட்?" 

``படத்துல நான் போலீஸ் கேரக்டர்ல நடிச்சிருக்கேன். படம் முழுக்க சிவாகூட டிராவல் ஆவேன். ரொம்ப காமெடியான விஷயத்தை, ரொம்ப சீரியஸா திரையில நானும் சிவாவும் பேசிக்குவோம். ஒவ்வொரு வசனம் பேசும்போது, எங்களை அறியாமலேயே சிரிப்பு வந்திடும். பெரும்பாலான காட்சிகளுக்கு நாலைஞ்சு டேக் போனோம். படம் பார்க்கும்போது, ஆடியன்ஸுக்குப் புது அனுபவமா இருக்கும். முதல் பாகத்தைவிட இந்தப் படத்துல காமெடி சூப்பரா வொர்க் அவுட் ஆகியிருக்கு. தவிர, காமெடிகள் எல்லாம் யாரையும் புண்படுத்துறமாதிரி இருக்காது."

சேத்தன்

``அதிக காமெடி கேரக்டர்கள்ல உங்க மனைவி தேவதர்ஷினி நடிச்சிருக்காங்க. அவங்க `தமிழ்ப் படம் 2'க்கு என்ன சொன்னாங்க?"

``அவங்க காமெடி கேரக்டர்ல பிச்சு உதறுவாங்க. எனக்கு அட்வைஸ் எதுவும் பெருசா பண்ணல. ஏன்னா, என் ஆக்டிங் ஸ்டைல் அவங்களுக்கு நல்லா தெரியும். ஆனா, இந்தப் படத்துல என் நடிப்பைப் பார்க்க அவங்க வெயிட் பண்றாங்க. என் சினிமா கரியர்ல இந்தப் படம் முக்கியமா இருக்கும். நானும், மனைவியும் சினிமாவுல பிஸி. எங்க பொண்ணு, பத்தாம் வகுப்பு படிக்கிறா. நானும், தேவதர்ஷினியும் சேர்ந்து நடிக்க படங்களுக்குக் கூட்டிக்கிட்டு போய், `ரெண்டு பேர்ல யார் நல்லா நடிச்சிருக்கா?'னு கேட்டா, `ரெண்டுபேருமே நல்லா நடிச்சிருக்கீங்க!'னு விட்டுக்கொடுக்காமதான், பதில் சொல்வா!"

``இயக்குநர் சேத்தனை எப்போ பார்க்கலாம்?"

``தமிழ் மற்றும் கன்னட சினிமாவுல உதவி இயக்குநரா வொர்க் பண்ணியிருக்கேன். சில வருடங்களுக்கு முன்பே டைரக்டர் ஆகியிருக்கவேண்டியது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறதா இருந்த படத்துல இயக்குநரா கமிட் ஆனேன். சில காரணங்களால அந்தப் படம் தள்ளிப்போச்சு. இப்போ, த்ரில்லர் ஜானர்ல ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணியிருக்கேன். சில நடிகர்கள்கிட்ட கதையும் சொல்லியிருக்கேன். சீக்கிரமே என்னை இயக்குநரா எதிர்பார்க்கலாம்."

 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்