``அனுராக் கேரக்டருக்குத்தான் டப்பிங் பேசப்போறோம்னு தெரியாமப் போச்சு!" - மகிழ்திருமேனி

`இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்திருக்கும் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பிற்கு டப்பிங் கொடுத்திருக்கிறார், இயக்குநர் மகிழ்திருமேனி.

``அனுராக் கேரக்டருக்குத்தான் டப்பிங் பேசப்போறோம்னு தெரியாமப் போச்சு!

`டிமான்டி காலனி' படத்துக்குப் பிறகு அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் திரைப்படம், `இமைக்கா நொடிகள்'. அதர்வா, நயன்தாரா ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தில் பாலிவுட்டின் முன்னணி இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்திருக்கிறார். டிரெய்லரில் அனுராக் நடிப்பைப் பார்த்தவர்களுக்கு, அவருடைய குரலும் கவனம் ஈர்த்திருக்கிறது. ஆனால், அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர், இயக்குநர் மகிழ்திருமேனி. அவரிடம் பேசினேன். 

மகிழ்திருமேனி

``உதவி இயக்குநராக செல்வராகவன், கெளதம் வாசுதேவ் மேனனிடம் இருக்கும் போதே டப்பிங் கொடுக்க, நடிக்க பல இயக்குநர்கள் என்கிட்ட பேசியிருக்காங்க. ஆனா, நடிப்பிலும் டப்பிங் கொடுப்பதிலும் எனக்குப் பெரிய ஆர்வம் இருந்ததில்லை. பல படங்கள் பார்ப்பேன். பிடிச்சிருந்தா, சம்பந்தப்பட்ட இயக்குநர்கள்கிட்ட போன்ல பேசி, வாழ்த்து சொல்வேன். `டிமான்டி காலனி' படம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. சினிமா கலை மட்டுமல்ல, தொழில்நுட்பமும்கூட. இதை நல்லாப் புரிஞ்சிக்கிட்டு புது இயக்குநர் ஒருவர் வந்திருக்கிறாரேனு `டிமான்டி காலனி' பார்க்கும்போது தோணுச்சு. அந்தப் படம் பத்தி உடனே இயக்குநர்கிட்ட பேசணும்னு நினைச்சேன். சில வேலைகளால முடியாமப் போச்சு.  

பிறகு ஒருநாள், இயக்குநர் அஜய் ஞானமுத்து ஆபீஸ்ல இருந்து போன். `அஜய் ஞானமுத்து சாரோட படத்துக்கு நீங்க டப்பிங் பேசுனா நல்லா இருக்கும்னு ஃபீல் பண்றார்'னு சொன்னாங்க. நான் அவர்கிட்ட பேசுறேன்னு வெச்சுட்டேன். பிறகு, அஜன் ஞானமுத்துகிட்ட 'டிமான்டி காலனி' படத்தைப் பற்றி நிறையப் பேசி, 'அஜய்.. உங்க படம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ஆனா, என்னால டப்பிங் பேசமுடியாது. ஏன்னா, எனக்கு டப்பிங் பேசுறதுக்காக மாடுலேஷன் வராது'னு சொன்னேன். அவர், `டீஸருக்கு மட்டும் வாய்ஸ் கொடுங்க'னு சொல்லிக் கூட்டுக்கிட்டு போனார். அதுவரைக்கும், படத்துல நான் அனுராக் காஷ்யப்புக்கு டப்பிங் தரப்போறேன்னு தெரியாது. 

மகிழ்திருமேனி

ஆனா, அஜய் நான்தான் டப்பிங் கொடுக்கணும்ங்கிறதுல ஸ்ட்ராங்கா இருந்தார். அவரை நேரில் போய் பார்த்தப்போ, அவர் என்கிட்ட பேசுன விதம், என்னை அணுகிய விதம்... எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதனால டப்பிங் கொடுக்கச் சம்மதிச்சேன். அவர் என்ன சொல்லிக்கொடுத்தாரோ, அதைப் பேசினேன். நான் பேசியது அவருக்குப் பிடிச்சிருந்தது. ஆனா, எனக்குப் பிடிக்கலை. இந்தப் படத்தைப் பொறுத்தவரை, குரல் மட்டும்தான் என்னுடையதே தவிர, என் மூலமா அஜய் ஞானமுத்து பேசியிருக்கார்னுதான் சொல்வேன். படத்துல முக்கியமான கேரக்டர்ல அனுராக் காஷ்யப் நடிச்சிருக்கார், அவருக்கு நான் குரல் கொடுத்திருக்கேன்னு நினைக்கும்போது, சந்தோஷமா இருக்கு. 

அனுராக் கேரக்டர்ல முதல்ல நடிக்கிறதா இருந்தது, இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன். அவரும் ஓகேனுதான் சொல்லியிருக்கார். பிறகு, அவர் படங்கள்ல பிஸி ஆயிட்டதுனால, அனுராக் என்ட்ரி ஆகியிருக்கார். என் குரலை ஏன் தேர்ந்தெடுத்தீங்கனு அஜய்கிட்ட கேட்டேன். யூ-டியூப்ல என்னோட இன்டர்வியூ பார்த்துட்டு, தேர்ந்தெடுத்ததா சொன்னார். இதுக்கு முன்னாடி நான் அவரைப் பார்த்துப் பேசியதில்லை. இந்தப் படத்தோட டப்பிங்லதான் முதல் முறையா அஜயைச் சந்திச்சேன். நல்ல இயக்குநர், இன்னும் பல உயரங்களைத் தொடுவார்.

அனுராக் காஷ்யப்

இதுவரைக்கும் எட்டு நாள் டப்பிங் கொடுத்திருக்கேன். இன்னும் ஒருநாள் பேலன்ஸ் இருக்கு. `இமைக்கா நொடிகள்' டிரெய்லரைப் பார்த்துட்டு பல நண்பர்கள் போன் பண்ணிப் பாராட்டினாங்க. இயக்குநர் அனுராக், அஜய்கிட்ட `டப்பிங் கொடுத்தவரோட வாய்ஸ் நல்லா இருக்கு'னு பாராட்டியிருக்கார். அனுராக் படங்களைப் பார்க்காத இயக்குநர்கள் இந்தியாவில் ரொம்பக் கம்மியாதான் இருப்பாங்க. டப்பிங் கொடுக்கும்போது, அவரோட நடிப்பைப் பார்த்து வியந்தேன். படமாகவும் `இமைக்கா நொடிகள்' நல்லா வந்திருக்கு. இந்தப் படத்துக்குப் பிறகு இந்திய சினிமாவே அஜய் ஞானமுத்துவைத் திரும்பிப் பார்க்கும்னு சொல்லலாம். இந்தப் படம் பெர்ஷனலாவும் எனக்கு நிறைய அனுபவங்களைக் கொடுத்திருக்கு. டப்பிங் கொடுப்பேன்னு நினைக்கவே இல்லை. ஆனா, அனுராக் நடிப்பைப் பார்த்தபிறகு, ரொம்ப ரசிச்சு, ஆர்வமா டப்பிங் கொடுத்தேன்." என்றவரிடம், அருண் விஜய் நடிப்பில் இவர் இயக்கிக்கொண்டிருக்கும் `தடம்' படத்தைப் பற்றிக் கேட்டேன்.   

arun vijay

``அருண்விஜய் நல்ல நடிகர், எனக்குச் சகோதர். எந்தக் கேள்வியும் கேட்காம, இயக்குநர் சொல்றதை செஞ்சு கொடுப்பார். என்மேலே நிறைய நம்பிக்கை வைத்திருப்பவர். இப்போ, நிறைய வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிச்சுக்கிட்டு வர்றார். அவர் இருக்கவேண்டிய இடம் வேற. அவரோட நடிப்புக்குத் தீனியா `தடையற தாக்க' இருந்தது. `தடம்' படம் அவரை அடுத்தகட்டத்துக்குக் கூட்டிக்கிட்டு போகும். படத்தோட டிரெய்லரைப் பார்க்கும்போது, ஆடியன்ஸும் அதை ஃபீல் பண்ணுவாங்க. என்மேல நிறைய மரியாதை வெச்சிருக்கிற மனிதர், அருண் விஜய். மணிரத்னம் படத்துல கமிட் ஆன விஷயத்தை அவங்க அம்மா, அப்பாவுக்குப் பிறகு என்கிட்டதான் சொல்லி சந்தோஷப்பட்டார். சீக்கிரமா, அவர் பெரிய உயரத்தைத் தொடுவார்." என்கிறார், மகிழ்திருமேனி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!