வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (03/07/2018)

கடைசி தொடர்பு:15:00 (03/07/2018)

``அவர் ஓகே சொல்லிட்டா, `மங்காத்தா 2' ரெடியாகிடும்!" - வெங்கட்பிரபு

``அவர் ஓகே சொல்லிட்டா, `மங்காத்தா 2' ரெடியாகிடும்!

எப்போதும் பார்ட்டி ஸ்டைலில் படங்களை எடுக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு, இப்போது `பார்ட்டி' என்றே படமெடுக்கிறார். சிவா, ஷாம், சத்யராஜ், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு பிரேம்ஜி அமரன் இசை. படம் குறித்து, இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் பேசினேன். 

வெங்கட்பிரபு

``பிரேம்ஜி இசையமைக்கிற முதல் படம் `பார்ட்டி'னு சொல்லலாம். இதுக்கு முன்னாடி சில படங்களில் ரீ-ரெக்கார்டிங் வொர்க்ஸ் பண்ணியிருந்தாலும், இந்தப் படம் மற்றும் `ஆர்.கே.நகர்' படம் மூலமா முழு இசையமைப்பாளரா மாறியிருக்கார். அவனுக்கு ஒரு நல்ல பிளாட்ஃபார்ம் அமைச்சுத் தரணும்னு ஆசைப்படுற ஆள் நான். இந்தப் படங்கள்ல நல்லா வொர்க் பண்ணியிருக்கான். வித்தியாசமா ஏதாவது பண்ணலாம்னு தோணுச்சு. பார்ட்டியே பண்ணாத சூர்யாவும், கார்த்தியும் `பார்ட்டி' படத்துல, `பார்ட்டி' பாட்டு பாடுனா எப்படி இருக்கும்னு தோணுச்சு. ரெண்டுபேரையும் நான் இயக்கியிருக்கேன். `நீங்க பாடணும்'னு சூர்யா சார்கிட்ட கேட்டப்போ, `என்னடா.. என்கிட்டப்போய் பாடணும்னு கேட்குற?'னார். `நீங்க மட்டுமல்ல, உங்ககூட கார்த்தியும் பாடப்போறார். ரெண்டுபேரும் சேர்ந்து பாடுனா நல்லா இருக்கும்'னு சொன்னேன். யோசிச்சார். பிறகு, ரொம்ப அடம்பிடிக்காம, ரெண்டுபேரும் பாடுறதுக்கு ஓகே சொல்லிட்டாங்க. 

ரெண்டுபேருமே பிஸியா இருந்ததுனால, சேர்த்து வெச்சு ரெக்கார்டிங் போகலை. தனித் தனியாதான் பாடினாங்க. சூர்யா சார் பாடி முடிச்சதும், `இதைக் கேட்கிறமாதிரி இருக்கா, படிக்கிற மாதிரி இருக்கா'னு கேட்டார். அவர் ரொம்ப மெனக்கெடல் போடக்கூடிய நபர். ரெக்கார்டிங் முடிச்சு வெளியே வந்ததுக்குப் பிறகுகூட, `இந்த லைனை நான் திரும்பப் பாடட்டுமா, இன்னும் பெட்டரா இருக்கும்'னு சொன்னதோடு, திரும்பவும் பாடினார். சூர்யா சாருக்குத் தெரியும் கார்த்தி நல்ல பாடகர். அவன்கூட பாடும்போது, நாமளும் மெனக்கெடணும்னு நினைச்சார். 

கார்த்தி சூர்யாவுக்கு நேரெதிர். சூர்யா பிராக்டிஸ் பண்ணிப் பாடினார்னா, கார்த்தி ஸ்டுடியோவுக்கு வந்துதான் டியூனே கேட்டார். இசைமீது ரொம்ப ஆர்வம் கொண்ட நபர். ரொம்ப கேஷூவலா பாடிட்டார்." என்றவரிடம், சில கேள்விகள். 

பார்ட்டி

``பாடலாசிரியர் யார்?" 

`` `பம்பரக் கண்ணாலே' படத்தின் இயக்குநர் பார்த்தி பாஸ்கர் பாடல் வரிகள் எழுதியிருக்கார். எங்க அப்பாவோட பெரிய அண்ணன் பையன். என் பிரதர்தான். இந்தப் பாட்டை எங்க குடும்பப் பாட்டுனுகூட சொல்லலாம். சூர்யா, கார்த்தியோட சேர்ந்து இந்தப் பாட்டுல நானும், பிரேம்ஜியும் பாடியிருக்கோம். "

``இசையமைப்பாளரா உங்க தம்பி பிரேம்ஜி எப்படி வொர்க் பண்ணியிருக்கார்?"

``அவனை எப்போவும் ரொம்ப புஷ் பண்ணி வேலை வாங்கமாட்டேன். அவன் நல்ல இசையமைப்பாளர்னு எங்க குடும்பத்துக்கே தெரியும். எனக்குத் தேவையானதை அவன் புரிஞ்சுக்குவான். யுவன்கூட நிறைய வொர்க் பண்ணதுனால, அவனை மாதிரியே இவனும் டியூன் போட ஆரம்பிச்சுட்டான். தவிர, பிரேம்ஜிகிட்ட வேலை வாங்குறது எனக்கு ரொம்ப ஈஸி. அவன் ஒரு நல்ல இசையமைப்பாளரா வரணும்னு எங்க குடும்பம், நண்பர்கள்னு எல்லோரும் நினைக்கிறோம். ஏன்னா, அதுக்குத் தேவையான எல்லாத் தகுதியும் பிரேம்கிட்ட இருக்கு."

பிரேம் ஜி

``சிம்புகூட அடுத்த படம்?"

``ஆமா, என் அடுத்த ஹீரோ சிம்புதான். கமிட் ஆயிட்டோம். ஸ்கிரிப்ட் எழுதிக்கிட்டு இருக்கேன். படத்தோட பெயர், ஷூட்டிங் பிளான், மற்ற நடிகர் நடிகைகள் எல்லாம் இனிமேதான் முடிவெடுக்கணும்." 

``சீனியர் நடிகர்களை வைத்து `பார்ட்டி' படம் எடுத்த அனுபவம் எப்படி இருந்தது?" 

``இளம் நடிகர்களைவிட, சீனியர் நடிகர்கள்கூட வொர்க் பண்றது ஈஸியா இருக்கு. தவிர, ஷூட்டிங் ஸ்பாட்டை ரொம்ப ஈஸியா வெச்சுக்கிறாங்க. அவங்ககிட்ட என்ன வேணுமோ, அதை ஈஸியா கேட்டு வாங்கமுடியுது. அவங்களும் அதைக் கொடுக்குறாங்க. ஜெயராம், நாசர் சார்கூட ஏற்கெனவே வொர்க் பண்ணியிருக்கேன். சத்யராஜ் சார், ரம்யா மேடம்கூட முதல் முறையா வொர்க் பண்றேன். ரீடேக் வேணும்னு நான் கேட்கவேண்டிய அவசியமில்லை. அவங்களுக்குப் பிடிக்கலைனா, அவங்களே ரீ டேக் கேட்பாங்க. ரொம்ப கம்ஃபோர்டபிளா ஃபீல் பண்ணினேன். இது, ஹீரோ ஹீரோயினுக்கான படம் கிடையாது. எல்லோருக்கும் முக்கியத்துவம் இருக்கும்." 

``படத்தோட கதை?"

``படத்துக்கு முதல்ல `ஹாப்பி நீயூ இயர்'னு டைட்டில் வெச்சோம். இந்தப் பெயர்ல ஒரு இந்திப் படம் இருக்கு, அதனால மாத்திட்டோம். 2017- ம் ஆண்டு டிசம்பர் கடைசியில நடக்குற கதை இது. டிமானிடைசேசன் சம்பந்தமாவும் படத்துல நிறைய விஷயங்கள் இருக்கும். 60 நாள் ஷூட்டிங் பிஜு தீவுகள்ல நடந்தது. இதுவரை என்னோட எந்தப் படமும் ஒரே ஷெட்டியூல்ல முடிஞ்சதில்லை. ஆனா, `பார்ட்டி'யை முடிச்சிட்டோம்."

சிம்பு

``வெப் சீரிஸ் சீஸன் இது. உங்களுக்கு அப்படி ஒரு ஐடியா இருக்கா?" 

``எனக்கு ரொம்பவே ஆசை இருக்கு. ஏன்னா, வெப் சீரிஸுக்கு சென்சார் கிடையாது. நாம நினைக்கிற விஷயத்தைச் சொல்லலாம். நல்ல நல்ல கதைகளை தைரியமாப் பண்ணலாம். பலரும் என்கிட்ட வெப் சீரிஸ் பண்ணச் சொல்லி கேட்டாங்க. `கோவா' ஸ்டைல்ல இருக்கணும்னு எதிர்பார்க்கிறாங்க. இன்னொரு நபர், கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றைப் பண்ணுங்கன்னு  கேட்டார். முத்தையா முரளிதரனையும் மீட் பண்ணிப் பேசினேன். கூடிய விரைவில் அறிவிப்பு வரும்."

`மங்காத்தா 2'?

``அதை `தல'தான் முடிவு பண்ணணும். ஏன்னா, `மங்காத்தா'னாலே அஜித்னு ஆயிடுச்சு. அவர் ஓகே சொல்லிட்டா, அவருக்காக `மங்காத்தா 2' இயக்குவேன்."

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்