‘’ ‘என்னங்க... இப்படி ஆகிட்டீங்க’னு தியாகராஜனைக் கட்டிப்பிடிச்சு அழுதார் ரஜினி..!’’ - கலைஞானம் #RIPThiyagarajan | Kalaignanam speaks about devar films Thiyagarajan

வெளியிடப்பட்ட நேரம்: 15:02 (03/07/2018)

கடைசி தொடர்பு:15:02 (03/07/2018)

‘’ ‘என்னங்க... இப்படி ஆகிட்டீங்க’னு தியாகராஜனைக் கட்டிப்பிடிச்சு அழுதார் ரஜினி..!’’ - கலைஞானம் #RIPThiyagarajan

கதாசிரியர், வசனகர்த்தா, இயக்குநர், தயாரிப்பு எனப் பன்முகம் கொண்டவர் ரஜினியை முதன்முதலாக ஹீரோவாக `பைரவி' படத்தில் அறிமுக செய்தவர் கலைஞானம். அவருக்கும் தேவர் குடும்பத்துக்கும் ஆரம்பகாலத்திலிருந்தே நெருக்கம். அவரிடம், சமீபத்தில் மறைந்த இயக்குநரும், தேவரின் மருமகனுமான தியாகராஜன் குறித்துப் பேசினோம். 

தியாகராஜன், ரஜினி

``மறைந்த சாண்டோ சின்னப்பா தேவருக்கு அவரது மகன்களை பட்டதாரியாக்கிப் பார்ப்பதற்கு ஆசை. அப்போது தன் பெரிய மகளுக்கு மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருந்தார். வழக்கமாக மாப்பிள்ளை வீட்டார்தான் பெண் வீட்டாருக்கு நிபந்தனை விதிப்பார்கள். தேவரோ வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பவரைத் தேடிக்கொண்டிருந்தார். பொள்ளாச்சியில் பட்டதாரி மணமகன் இருக்கிறார் என்று சொன்னார்கள். அவர்தான் தேவர்வீட்டு மாப்பிள்ளையான தியாகராஜன். சினிமா எடிட்டராக இருந்த தன் தம்பி எம்.ஏ. திருமுகத்தை டைரக்டராக்க வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் தேவர் ஃபிலிம்ஸ் சினிமா கம்பெனியையே உருவாக்கினார், சின்னப்பாதேவர். ஆரம்பத்தில் எம். ஏ.திருமுகத்திடம் உதவி டைரக்டராக வேலை பார்த்தார் தியாகராஜன். ஒரு கட்டத்தில் அண்ணன், தம்பிகளுக்கிடையே மனஸ்தாபம் வந்து பிரிந்தனர். அதன்பின் `வெள்ளிக்கிழமை விரதம்' என்று தேவர் ஃபிலிம்ஸ் படங்களை இயக்க ஆரம்பித்தார், தியாகராஜன். தேவர் மனம் கோணக் கூடாது என்பதற்காக யானை, பாம்பு போன்ற பிராணிகளை மையமாக வைத்து சினிமாவை இயக்கினார். உண்மையில் தியாகராஜனுக்கு அதில் அறவே விருப்பம் இல்லை. 

ஒருநாள் கேஷூவலாக `என்னய்யா அடுத்ததா என்ன மிருகத்தை வெச்சுப் படத்தைத் தயாரிக்கலாம்' என்று தேவர் என்னிடம் கேட்டார். `எங்க ஊர்ல சொந்தக்காரர் ஒருத்தர் பெரிய கொம்பு கொண்ட முரட்டு ஆட்டை வளர்த்துக்கிட்டு இருக்கார். அதை வெச்சிப் படமாக்கலாம்' என்று நான் சொன்னவுடன் தேவருக்கு மனம் கொள்ளாத மகிழ்ச்சி. தியாராஜனுக்கு என்மேல் பயங்கர கோபம். அவருக்கு சமூகக் கதைகளையே இயக்க வேண்டும் என்பது ஆசை. அப்போது புதுப்படத்துக்குக் கதையை தயாரிப்பதற்காகக் குற்றாலத்தில் 40 நாள்கள் தங்கி கதை, விவாதம் செய்வோம். ஆடு கதையின்மேல் கோபமாக இருந்ததால் `குற்றாலத்துக்கு வரமாட்டேன்...' என்று சொல்லி விட்டார் தியாகராஜன். அதன்பின் சமாதானமாகி சிவக்குமார், ஶ்ரீப்ரியா நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் உருவான திரைப்படம்தான் `ஆட்டுக்கார அலமேலு'. தமிழகத்தில் திரையிட்ட அத்தனை இடங்களிலும் 175 நாள்கள் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது. அதன்பிறகு பிராணிகள் கதை மேல் தியாகராஜனுக்கு இருந்த கோபம் மறைந்தது. அவரே `கோமாதா குலமாதா' என்று மாடுகளுக்கான படங்களை இயக்கினார்.

கலைஞானம்

தியாகராஜன் இயல்பாகவே கூச்ச சுபாவம் கொண்டவர். கதாநாயகிகளிடம் நடிக்கப் போகும் காட்சியை விளக்கும்போதுகூட முகத்தை நேருக்கு நேர் பார்த்துப் பேசமாட்டார்; குனிந்தபடியேதான் வசனத்தைச் சொல்லிக்கொடுப்பார். தியாகராஜனின் இந்தக் குணாதிசயம் ரஜினிக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அதனால்தான் `தாய்மீது சத்தியம்', `தாய் வீடு' என்று ஏழுபடங்களில் தியாகராஜன் இயக்கத்தில் நடித்தார். ரஜினியின் இளையமகள் செளந்தர்யாவின் திருமண வரவேற்பில் நான்தான் தியாகராஜனையும் அவரது மனைவியையும் ரஜினியிடம் அழைத்து நினைவூட்டினேன். `எப்படி இருந்த நீங்க ஏன் இப்படி ஆயிட்டீங்க...' என்று தியாகராஜனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கல்யாண வீடு என்றுக்கூட பாராமல் கதறி அழ ஆரம்பித்து விட்டார், ரஜினி. ஒருநாள் என்னை அழைத்த ரஜினி `தேவரின் மகன்கள், தியாகராஜன் போன்றவர்கள் ஒருவருக்கொருவர் மனஸ்தாபம் இல்லாமல் இருக்கச் சொலுங்கள். நான் தேவர் குடும்பத்துக்கு ஒரு படத்தில் நடித்துக்கொடுக்கிறேன்' என்று சொன்னார். அதன்பின்னர் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் சிங்கப்பூர் சிகிச்சைக்குப் போய்விட்டார். இப்போது தியாகராஜன் இறந்த செய்தியை ரஜினி மன்றப் பொறுப்பாளர் சுதாகர் வாயிலாக ரஜினிக்குத் தெரிவித்தேன்.

நல்ல வசதியோடு வாழ்ந்த தியாகராஜன் வாழ்க்கையில் அவரது மகன் ஆரம்பித்த `தட்சனா ஃபைனான்ஸ்' என்கிற சிட்பண்ட் பெரிய இடியைக் கொடுத்தது. அவர் சேர்த்து வைத்திருந்த அத்தனை சொத்துகளும் பறிபோயின. சென்னை ராமபுரத்தில் உள்ள சிறிய வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். கடந்த  4 மாதங்களுக்கு முன்பு ஒரு இந்தி சேனல் `ஆட்டுக்கார அலமேலு' பாணியில் ஆடு கதையை  டிவி சீரியலாக இயக்கும் பொறுப்பை தியாகராஜனுக்குக் கொடுத்திருந்தது. தமிழிலும், இந்தியிலும் ஒளிபரப்ப திட்டமிட்டு இருந்த அந்த சீரியலுக்கு ஆடு ஒன்றை வைத்து பலநாள்கள் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்தார். நானும் அவருக்கு உதவியாக இருந்தேன். திடீரென்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தேவரின் மகன் எனக்கு போன்செய்து, மாப்பிள்ளை இறந்துவிட்டதாக அழுதுகொண்டே சொன்னார். ஒரு காலத்தில் மணக்கோலத்தில் மாலையுடன் தேவர் வீட்டில் மாப்பிள்ளையைப் பார்த்தேன், அன்று பிணக்கோலத்தில் சடலமாய் கிடந்தவருக்கு இறுதி மாலையை அணிவித்துவிட்டு வந்தேன்’' என்று கலங்கினார், கலைஞானம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்