``வைரல் வீடியோ, ஆச்சர்யப்பட்ட கமல், கிடைக்கப்போற பெரிய வாய்ப்பு!" - ராகேஷ் உன்னி

சமூக வலைதளங்களின் லேட்டஸ்ட் வைரல் மனிதர், ராகேஷ் உன்னி. `விஸ்வரூபம்' படத்தில் இடம்பெற்ற `உன்னைக் காணாத...' பாடலை இவர் பாடிய வீடியோ இணையத்தில் செம வைரல்.

``வைரல் வீடியோ, ஆச்சர்யப்பட்ட கமல், கிடைக்கப்போற பெரிய வாய்ப்பு!

கடந்த இரண்டு நாளாக சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வருபவர், ராகேஷ். `விஸ்வரூபம்' படத்தில் இடம்பெற்ற `உன்னைக் காணாத...' பாடலை இவர் பாடிய வீடியோ, வைரலாகி வருகிறது. சினிமாவைச் சேர்ந்த இசைப் பிரபலங்கள் பலரும் இவரைத் தொடர்புகொள்ள முயற்சி செய்கின்றனர். குறிப்பாக, பாடகர் சங்கர் மகாதேவன் மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரான். ட்விட்டரில் இவரது வீடியோ வைரலாகி வரும் நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் இவரது போன் நம்பரை ட்விட்டரில் ஷேர் செய்திருக்கிறார்...  ராகேஷ் உன்னியிடம் பேசினேன்.  

``எனக்கு சந்தோஷமா இருக்கு. என்னோட பாட்டு வீடியோ பார்த்துட்டு நிறைய பேர் பாராட்டுறாங்க. வாழ்க்கையில மறக்க முடியாத சம்பவம் நடந்திருக்கு" மலையாளத் தமிழில் பேச ஆரம்பித்தார், ராகேஷ் உன்னி. 

ராஜேஷ் உன்னி

``என் சொந்த ஊர் கேரளா பக்கத்துல நூராநாடு. தமிழ் அவ்வளவாப் பேச வராது. ஆனா, பேசுனா புரிஞ்சிக்குவேன். பத்தாவது வரைக்கும் படிச்சிருக்கேன். பத்தாவது ஃபெயில். சின்ன வயசுல இருந்து பாடுறது பிடிக்கும். அதுக்குக் காரணம், என் அம்மா. அவங்க வீட்டுல பாடிக்கிட்டே இருப்பாங்க. அவங்க பாடுறதைக் கேட்டே வளர்ந்தேன். அப்பா கூலித் தொழிலாளி, அம்மா வீட்டு வேலை செய்யறாங்க. நானும் மர வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். மரத்தை வெட்டி, வண்டியில தூக்கிப் போடுற வேலை. வேலைக்கிடையில அடிக்கடி பாடுவேன். எனக்கு சங்கர் மகாதேவன் சார்தான் குரு. அவரோட பாட்டுப் பாடாம, கேட்காம இருக்கவே மாட்டேன். டி.வி., ரேடியோனு எல்லா இடத்துலேயும் அவருடைய பாட்டைக் கேட்பேன். சங்கர் மகாதேவன் எனக்கு அவ்வளவு இஷ்டம். 

`விஸ்வரூபம்' படத்தைப் பத்துத் தடவை பார்த்திருக்கேன். உலகநாயகன் கமல் சாருடைய நடிப்பு ரொம்பப் பிடிக்கும். அவருக்காகத்தான் இத்தனை தடவை பார்த்தேன். `உன்னைக் காணாது..' பாட்டுல கர்நாடக மியூசிக்கா வரும். பாட்டு கிளாஸுக்கெல்லாம் நான் போனதில்லை. ஆனா, ஒரு பாட்டைக் கேட்டா, அதை அப்படியே பாடுவேன். இந்தப் பாட்டையும் வேலைக்கு இடையிலதான் பாடிக்கிட்டு இருந்தேன். என்கூட வேலை பார்க்கிற ஒருத்தர் அதை வீடியோ எடுத்தார். அதை, அவங்க தங்கச்சி ஃபேஸ்புக்ல போட்டுட்டாங்க. அது அப்படியே வைரல் ஆயிருச்சு. இந்த வீடியோவைப் பார்த்துட்டு சங்கர் மகாதேவன் சார் என்கிட்ட பேசினார். எனக்கு சந்தோஷமா இருந்துச்சு. அவர் இப்போ லண்டன்ல இருக்கார். மும்பையில இருக்கிற அவருடைய ஆபீஸ்ல மீட் பண்ணலாம்னு சொல்லியிருக்கார். இதைவிட வாழ்க்கையில் என்ன வேணும். எனக்கு வாய்ப்பு கொடுக்குறேன்னும் சொல்லியிருக்கார். இதுக்கு அப்புறம் என்னோட கஷ்டங்கள் தீர்ந்தா சரி. ரொம்ப ஏழ்மையான குடும்பம் நாங்க. வாய்ப்பு கிடைச்சா தமிழிழும் பாடுவேன்" என்று கூறியிருந்தார், உன்னி. ஆனால் அதன்பின் நேற்று நடந்த விஷயங்கள் வாவ் ரகம்!

ராகேஷ் உன்னி

நாம் இவரிடம் பேசிய பிறகு, கமல் இவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அதுகுறித்துப் பேசிய ராகேஷ் உன்னி, ``கமல் சாரோட பெர்சனல் செக்கரெட்டரி எனக்கு போன் செய்து, கமல் சார் என்னைப் பார்க்க விரும்புறதாச் சொன்னார். கேட்டதுமே, சென்னைக்கு டிரெயின் பிடிச்சு வந்துட்டேன். நேத்து முழுக்க அவரோட அலுவலகத்துலதான் இருந்தேன். என்னோட ஒரு மணிநேரம் செலவழிச்சார், கமல் சார். சங்கீதம் படிச்சிருக்கீங்களானு விசாரிச்சார். நான் இல்லைனு சொன்னதும், ஆச்சர்யப்பட்டார். உங்களுக்கு எந்த உதவியா இருந்தாலும், என்கிட்ட கேளுங்கனு சொன்னதோட, அவரோட அடுத்தபடத்துல எனக்கு ஒரு வாய்ப்பு தர்றேன்னு சொல்லியிருக்கார். திரையில அவரைப் பார்த்து பிரமிச்சிருக்கேன். அவரை நேர்ல சந்திச்சது, அவ்வளவு சந்தோஷம். மனசுக்கு நிறைவா இருக்கு!" என்கிறார், ராகேஷ் உன்னி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!