வெளியிடப்பட்ட நேரம்: 20:49 (04/07/2018)

கடைசி தொடர்பு:20:49 (04/07/2018)

’ ‘உழைப்பாளி’ ஷூட்டிங்கில் ரஜினிக்கு உதவியாளர், மேக்கப்மேன்னு யாரும் கிடையாது..!’’ - வெங்கட்ரமண ரெட்டி #25YearsOfUzhaippali

எம்.ஜி.ஆர் நடித்த `எங்க வீட்டு பிள்ளை', 'நம்நாடு' போன்ற படங்களைத் தயாரித்த பாரம்பர்யமிக்க விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் ரஜினி நடித்த `உழைப்பாளி' படத்தை தயாரித்தது. பழம்பெரும் தயாரிப்பாளர் நாகி ரெட்டியாரும் அவரின் வாரிசு வெங்கட்ரமண ரெட்டியும் சேர்ந்து தயாரித்தனர். 

உழைப்பாளி

பி.வாசு இயக்கத்தில் உருவான 'உழைப்பாளி' திரைப்படத்தில் ரஜினியுடன் ரோஜா, சுஜாதா, ராதாரவி, கவுண்டமணி ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் 25 வது ஆண்டை நினைவுபடுத்தியும் பெருமைபடுத்தும் விதமாகவும் அவரைச் சந்தித்து ஷீல்டு ஒன்றை அவருக்கு பரிசாகக் கொடுத்திருக்கிறார்கள் ரஜினி ரசிகரான ஶ்ரீதரும் தமிழ் சினிமா பத்திரிகை தொடர்பாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான பெரு.துளசி பழனிவேல். 

அப்போது 'உழைப்பாளி' படத்தின் நினைவுகளையும் ரஜினி குறித்தும் 'வீரம்', 'பைரவா' தயாரித்த வெங்கட்ரமண ரெட்டி பேசினார். ''1992-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் படைப்பாளிக்கும் ஃபெப்சிக்கும் போராட்டம் உச்சகட்டத்தில் நடந்துகொண்டு இருந்தது. ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12-ம் தேதி அன்று 'உழைப்பாளி' படத்தின் பூஜை போடப்பட்டது. எங்கள் ஸ்டூடியோவில் சிவப்புக் கம்பளம் விரித்து ரஜினி சாருக்கு ராஜமரியாதை கொடுத்து வரவேற்றோம். பூஜைக்கு வந்திருந்த ரஜினியின் கைகளில் அப்பா நாகி ரெட்டியார் தங்கக் காசுகளைக் கை நிறைய அள்ளிக்கொடுத்து மகிழ்ந்தார். எங்கள் புதுப்பட பூஜையில் எல்லோரும் மகிழ்ச்சியோடு இருந்தாலும், ரஜினி மட்டும் பயங்கர டென்ஷனோடு இருந்தார்.  'சார், எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் ரிலாக்ஸா நடியுங்கள்' என்று எடுத்துச் சொல்லியும் அவரது டென்ஷன் குறைந்தபாடில்லை. ஃபெப்சி ஸ்டிரைக் என்பதால் ரஜினி சாருக்கு உதவியாளர், மேக்கப்மேன்  என்று எதுவுமே கிடையாது. 'உழைப்பாளி' படத்தின் பல காட்சிகள் நடுரோட்டில் படமாக்கப்பட்டது. அப்போதெல்லாம் ரஜினி சாரே அவருக்கு மேக்கப் போட்டுக் கொண்டார். அதுபோல மைசூரில் படப்பிடிப்பு நடந்தபோது கட்டாந்தரையில் துணிவிரித்து படுத்துக் கிடந்தார். 

வெங்கட்ரமண ரெட்டி

ரஜினியை ஸ்பெஷல் கேர் எடுத்து கவனிக்க முடியவில்லையே என்று அப்பா நாகிரெட்டியாருக்கு ரொம்ப வருத்தம். நாங்கள் ஆறு மாதம்  'உழைப்பாளி' படத்தில் பணியாற்றியபோது அவர் செய்த ஒவ்வொரு செயலும் அவர் மீதுள்ள மரியாதையை அதிகமாக்கிக்கொண்டே போனது. 'உழைப்பாளி' படத்தின் படப்பிடிப்பை கஷ்டப்பட்டு நடத்தி ஒருவழியாகப் படத்தை ரிலீஸ் செய்தோம். அதன் பின்னர் ரஜினி எங்களை சந்தித்தபோது, ' உங்க பேனர்ல இன்னொரு படம் சேர்ந்து பண்ணுவோம்' என்று சொன்னது இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது. முதன்முதலாக 'உழைப்பாளி' படத்துக்காகத்தான் இசைஞானி இளையராஜா லைவ்வாக இசையமைத்துக் கொடுத்தார்; அதுவும் மறக்க முடியாத ஒன்று. 'உழைப்பாளி' 1993-ம் வருஷம் ஜூன் மாதம் 24-ம் தேதி ரிலீஸானது. இப்போது வெள்ளிவிழா ஆண்டை தொட்டு இருக்கிறது என்பதை நினைத்துப் பார்க்கும்போது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. 25 ஆண்டுகள் ஆனாலும் மறக்காமல் என்னைத் தேடிவந்து நீங்கள் நினைவூட்டி பெருமைபடுத்தும்போது ரஜினி சார் பெற்றிருக்கும் ரசிகர்களை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது'' என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார் விஜயா புரொடக்‌ஷன்ஸ் வெங்கட்ரமண ரெட்டி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்