வெளியிடப்பட்ட நேரம்: 13:09 (09/07/2018)

கடைசி தொடர்பு:19:36 (09/07/2018)

`` `கண்டாங்கி..', `வெரசா..' எது விஜய்க்குப் பிடிக்கும் தெரியுமா?" - பாடலாசிரியர் பார்வதி #VikatanExclusive

`கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்...', `வெரசா போகயில..' உள்ளிட்ட பாடல்களை எழுதியவர், பார்வதி. சினிமா வாய்ப்பு முதல் திருமணம் வரை... பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்!

`` `கண்டாங்கி..', `வெரசா..' எது விஜய்க்குப் பிடிக்கும் தெரியுமா?

`வெரசா போகையிலே...' பாடல் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர், பார்வதி. ``சினிமாவுல எந்தப் பின்புலமும் எனக்குக் கிடையாது. அப்படி இருக்கும்போது சினிமா வாய்ப்புகளைத் தேடிப்போறது ரொம்பக் கஷ்டம். என்ன நடந்தாலும் அதை ஏத்துக்கணும். தோல்விகளைப் பழகிக்கணும்னு நினைச்சேன். சினிமாவுல என்ட்ரி ஆகுறது ஈஸி. அதைத் தக்க வெச்சுக்கிட்டு இயங்குறதுதான் கஷ்டம்." - என்கிறார், பார்வதி. இவர் எழுதிய அத்தனை பாடல்களும் ஹிட். `திருமணம் எனும் நிக்காஹ்' படத்தில் `கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்...', `அமரகாவியம்' படத்தில் `ஏதேதோ எண்ணம் வந்து...' போன்ற பாடல்கள் இசையுலகில் இவருக்கான அங்கீகாரத்தை இன்னும் அழகாக்கின. தற்போது, காஜல் அகர்வால் நடிக்கும் `பாரீஸ் பாரீஸ்' படத்துக்கு பாடல் எழுதிக்கொண்டிருக்கும் பார்வதியைச் சந்தித்தோம்.  

பாடலாசிரியர் பார்வதி

`` `வெரசா போகையிலே...' உங்க முதல் பாடல். அதைக் கேட்டு,  நடிகர் விஜய் எப்படி ரியாக்ட் பண்ணார்?"

`` `கண்டாங்கி...' பாடல் அவர் பாடியிருந்தாலும், `வெரசா போகையில...' பாட்டுதான் அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்துனு இமான் சார்கிட்ட சொல்லியிருந்தார். என்னைப் பார்க்க விரும்புறதாகவும் சொல்லியிருந்தார். இதுதவிர, இயக்குநர் முருகதாஸ் சார், `காஷ்மோரா' இயக்குநர் கோகுல் இவங்க ரெண்டுபேரும் இந்தப் பாடலுக்காக என்னைப் பாராட்டுனாங்க. `கண்ணுக்குள் பொத்திவைப்பேன்...' பாடலுக்காக `ஆந்திரா மெஸ்' இயக்குநர் ஜெய், இலங்கை வானொலி அப்துல் ஹமீது ரெண்டுபேரும் பாடல் வரிகள் ரொம்ப தனித்துவமா இருக்குனு சொன்னாங்க. கவிஞர் அறிவுமதி ஐயாகிட்ட `வல்லினம்' படத்துல நான் எழுதியிருந்த `நகுலா...' பாடலை வாசிச்சுக் காட்டினேன். இடைவிடாம, பத்து நிமிடம் அந்தப் பாடலைப் பற்றிப் பாராட்டினார். `இந்த பாடல் வரிகளைப் படிக்கும்போது ரொம்பப் பெருமையா இருக்கு'னு சொன்னார்."

``முதல் திரைப்பட வாய்ப்பு பற்றி..."

`` `வல்லினம்' படத்துல வர்ற `மாமன் மச்சான்..' பாடலுக்கு ராப் எழுதினதுதான், முதல் திரைப்பட வாய்ப்பு. இது பலருக்குத் தெரியாது. அந்தப் பாடல் ரொம்ப நீளமா இருக்குனு ராப் பகுதியை கட் பண்ணிட்டாங்க. ஆரம்பத்துல ராப் எழுதமுடியுமானு எனக்குச் சந்தேகம். அதை ஒரு சவாலா எடுத்துக்கிட்டு எழுதினேன். ஆனா, அது வெளியாகலைனு நினைக்கும்போது கொஞ்சம் கவலையா இருக்கு."

பாடலாசிரியர் பார்வதி

``நடிக்க வாய்ப்புகள் வந்ததுனு கேள்விப்பட்டோம்..."

``Aids Prevention And Control அமைப்புக்காக புஷ்கர் காயத்ரி இயக்கத்துல ஒரு விளம்பரப்படத்திலும், Tamilnadu Aids Control Society-க்காக ரோகிணி இயக்கிய ஒரு குறும்படத்திலும் நடிச்சிருக்கேன். எய்ட்ஸ் விழிப்பு உணர்வு ஏற்படுத்தணும்ங்கிற நோக்கத்துல எடுக்கப்பட்ட இந்த இரு முயற்சிகளுக்கும் பலபேர் பாராட்டுகளைத் தெரிவிச்சிருந்தாங்க. சின்னப்பிள்ளை அம்மாளோட அரசு சாரா சுய உதவிக் குழுவுக்காக `விதை நெல்லு' என்ற ஒரு முழுநீளப் படத்திலும் நடிச்சிருக்கேன்.  

கல்லூரி காலங்கள்ல எழுத்தாளர் ஞானி சாரோட நாடகங்கள்ல நடிச்சிருக்கேன். சில பெர்ஷனல் காரணங்களுக்காக, ஒருகட்டத்துல நடிக்கிறதை நிறுத்திட்டேன். ஆனா, கடந்த ஒரு வருடமா மறுபடியும் நடிக்கிறதுக்கான வாய்ப்புகள் நிறைய வருது. `பாரீஸ் பாரீஸ்' படத்துக்குப் பாட்டு எழுதும்போது, இயக்குநர் ரமேஷ் அரவிந்த் ஒரு கேரக்டர்ல நடிக்கச் சொன்னார், மறுத்துட்டேன்." 

``பாடலாசிரியர் ஆகுறதுக்கு முன்னாடி என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க?"

``முதுகலை ஆங்கிலமும் எம்.ஃபில் மாஸ் கம்யூனிகேஷனும் படிச்சிருக்கேன். விளம்பரத் துறையில ஒரு காப்பி ரைட்டராக வேலையைத் தொடங்கினேன். விளம்பரப் படங்களுக்கு வாசகங்கள் எழுதுற வேலை. அப்புறம் நிகழ்ச்சித் தொகுப்பாளரா பொதிகை டி.வி-யில சில வருடங்கள் வேலைபார்த்தேன். `நம் விருந்தினர்' நிகழ்ச்சியில தினமும் ஏதாவது ஒரு பிரபலத்தைப் பேட்டி எடுக்கணும். `எல்லை கவர்ந்தவர்கள்' என்ற இன்னொரு நிகழ்ச்சிக்கும் தொகுப்பாளரா இருந்தேன். அகில இந்திய வானொலி நிலையத்துலேயும் நிகழ்ச்சித் தொகுப்பாளராக வேலைபார்த்திருக்கேன். தவிர, `ரோட்டரி நியூஸ்' பத்திரிகையில துணை ஆசிரியரா இருந்திருக்கேன். இந்தமாதிரி, எனக்கு என்னல்லாம் பிடிக்குமோ அதை மட்டும் தேர்ந்தெடுத்து வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். இப்போ கவிதைகள், பாடல்கள்னு ஒருபடி முன்னேறியிருக்கேன்னு சொல்லலாம்." 

பாடலாசிரியர் பார்வதி

``ஆரம்பத்துல நிறைய பாடல்கள் எழுதிக்கிட்டு இருந்தீங்க. இப்போ வாய்ப்புகள் குறைஞ்சிருக்கு... என்ன காரணம்?" 

``எல்லோருக்கும் ஆரம்பம் கஷ்டமாதான் இருக்கும். ஆனா, எனக்கு ஆரம்பத்துல சுலபமாகவும், அதுக்குப் பிறகு சினிமாவுல நிலைத்து நிற்கிறது பெரும் சவாலாகவும் இருக்கு. இசையமைப்பாளர்கள் பலர் பெண் பாடலாசிரியர்களை நம்பி வாய்ப்புகள் தர்றதில்லை. பொதுவாக இசை விமர்சனங்களில் இசை, பாடல் காட்சிகள், ரிதம், தாளம்னு எல்லாத்தையும் குறிப்பிட்டுவிட்டு, பாடல் வரிகளுக்குப் பெருசா யாரும் விமர்சனம் பண்றதில்லை. முதல்முறையா ஒரு பத்திரிகையில `நகுலா...' பாடல் வரிகள் பற்றி சிலாகித்து எழுதியிருந்தது என்னை சந்தோஷத்துல ஆழ்த்தியது."

``குடும்பம் பற்றி..."

``அப்பா மின்சார வாரியத்துல வேலை பார்த்துக்கிட்டு இருக்கார். அம்மா இல்லத்தரசி. நான் சினிமாவுல பாடல் எழுத ஆரம்பிச்சப்போ, எனக்கு ரொம்ப சப்போர்ட்டிவா இருந்தது, அம்மாதான். அண்ணன், இங்கிலாந்துல மனநல மருத்துவரா இருக்கார். தங்கச்சி மான்டிசரி ஸ்கூல்ல டீச்சர். `வெரசா போகையில...' பாட்டு எழுதுனதுக்குப் பிறகு, பலரும் என்கிட்ட `நீங்க மதுரையா'னு கேட்டாங்க. ஆனா, நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான்.  

இப்போ தீவிரமா மாப்பிள்ளை தேடிக்கிட்டு இருக்காங்க. கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கிறது ரொம்ப சவாலான விஷயமா இருக்கு. நிறைய பேர் பசங்களுக்குத்தான் பொண்ணு கிடைக்க மாட்டேங்குதுனு சொல்றாங்க. ஆனா, பொண்ணுங்களுக்கு மாப்பிளை கிடைக்கிறதும் கஷ்டமாதான் இருக்கு." 

Lyricist Parvathy

``தமிழ், ஆங்கிலம் இரண்டையுமே திறம்படக் கையாளுறது குறித்துச் சொல்லுங்க..."

``நான் ஆங்கிலப் பட்டப்படிப்பு படிச்சதுக்கு அப்புறம்தான் தமிழ்ல எழுத ஆரம்பிச்சேன். பாடலாசிரியர் ஆனதுக்குப் பிறகு ஆங்கிலம் பேசுறதும், எழுதுறதும் குறைஞ்சு போச்சு. போன்ல, `ஹலோ வணக்கம்'னு சொல்றது தொடங்கி, `நன்றி'னு முடிக்கிற வரை அத்தனையும் தமிழ்ல பேசுறதுனால, ஆங்கிலப் புலமை கொஞ்சம் குறைஞ்சிருக்குனுகூட சொல்லலாம். `சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்'னு சொல்றதை, இப்போ நான் உணர்றேன். 

ஃப்ரீயா இருக்கும்போது நிறைய எழுதி அதைப் பத்திரப்படுத்தி வெச்சுக்குவேன். சின்ன வயசுல பஸ் டிக்கெட்டுக்குப் பின்னாடி எழுதுறது தொடங்கி, டைரி எழுதுற வரை... இருக்கிற அத்தனை கவிதைகளையும் வெச்சுருக்கேன். அவற்றை அப்பப்போ எடுத்துப் படிக்கிறதும் உண்டு. பாடல்கள் எழுதுறப்போ இந்தக் கவிதைகளை நான் பயன்படுத்திக்குவேன்." - தன் கைகளில் இருக்கும் டைரியைப் புரட்டியபடி நன்றி கூறுகிறார், பார்வதி. 

 


டிரெண்டிங் @ விகடன்