``பேரறிவாளன் விடுதலைக்கு உதவுவேன் என்றார் ராகுல் காந்தி!" - பா.இரஞ்சித் | director pa.ranjith meet with congress president rahul gandhi

வெளியிடப்பட்ட நேரம்: 19:24 (12/07/2018)

கடைசி தொடர்பு:19:49 (12/07/2018)

``பேரறிவாளன் விடுதலைக்கு உதவுவேன் என்றார் ராகுல் காந்தி!" - பா.இரஞ்சித்

`காலா’ படத்தின் இயக்குநர் இரஞ்சித், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சில நாள்களுக்கு முன் சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பில் நடந்தது குறித்து இங்கே பேசியிருக்கிறார்.

``பேரறிவாளன் விடுதலைக்கு உதவுவேன் என்றார் ராகுல் காந்தி!

யக்குநர் பா.இரஞ்சித்திடம், `அரசியல்வாதியா நீங்கள்' என்றால், 'ஆம்' என்றுதான் பதில் சொல்வார். திரைப்படங்கள் மக்களுக்கான பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், மக்களுடைய அரசியல், மக்களுடைய வாழ்க்கை, மக்களுடைய தேவைகள் குறித்துப் பேசுவதாக இருக்க வேண்டும் என்பது இரஞ்சித் படங்களின் பிரதான நோக்கம். ரஜினிகாந்த் நடிக்க இரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'காலா' திரைப்படம் பல நேரெதிர் விமர்சனங்களைப் பெற்ற நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி - இயக்குநர் இரஞ்சித் சந்திப்பு முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. 

'காலா' படத்தைப் பாராட்டி ட்வீட் செய்திருந்தார் ராகுல் காந்தி. இந்திப் பதிப்பில் வெளியான 'காலா' திரைப்படத்தைப் பார்த்து வியந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு இயக்குநர் இரஞ்சித்தை அழைத்துப் பாராட்டி மகிழ்ந்திருக்கிறார். தமிழ்நாட்டில் இருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் 'காலா' படத்தைப் பற்றி கருத்து கூறாமல் மெளனம் சாதிக்கும் நிலையில், ரஞ்சித்தை டெல்லிக்கு வரவழைத்து ராகுல்காந்தி பேசியது காங்கிரஸ் கட்சி வட்டாரத்திலும் தமிழ் சினிமாவிலும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. இந்நிலையில், இந்தச் சந்திப்பின் பின்னணி குறித்து இரஞ்சித்திடமே பேசினோம். 

ராகுல் காந்தி - பா.இரஞ்சித்

''கடந்த 10-ம் தேதி எங்களை சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கியிருந்தார், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி. முதலில் 'காலா' படத்தை இந்தியில் பார்த்து ரசித்திருக்கிறார். பிறகு, வேறு என்னென்ன படங்களை நான் இயக்கியிருக்கிறேன் என்று விசாரித்திருக்கிறார். 'மெட்ராஸ்', 'கபாலி' படங்களையும் பார்த்திருக்கிறார். 'காலா' படத்தின் கதைக்களம், வசனங்கள் அவரைப் பெரிதும் ஈர்த்திருக்கிறது. 'நம் நாட்டில் ஏற்படும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் அடிப்படைக் காரணமே சாதி, மதப் பிரச்னைதான். அதை தீர்த்துவிட்டால் எல்லாமே சரியாகிவிடும்' என்று தனது கருத்தைச் சொன்னவர் என் கருத்தையும் கேட்டார்.

நானும் சமூகம் குறித்த இன்றைய இந்தியாவில் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பட்டியலிட்டுச் சொன்னேன். எல்லாவற்றையும் கவனித்துக் கேட்டுக்கொண்டார். 'காலா' படத்தைப் பற்றி முதலில் பேசியவர், 'மெட்ராஸ்', 'கபாலி' படங்களைப் பற்றியும் பேசியது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.  

முதலில் எங்களுக்கு 10-ம் தேதி மதியம் 2.30 மணி முதல் 3.30 மணி வரை... அதாவது,  ஒருமணி நேரம் மட்டுமே சந்தித்துப் பேச ஒதுக்கியிருந்தார். உண்மையில், நாங்கள் பேசிக்கொண்டே இருந்தோம். எங்கள் பேச்சு 4.30 மணியைக் கடந்தும் நீடித்தது. அதுவரை எங்களிடம் முகமலர்ச்சியோடும் சமூக அக்கறையோடும் பேசிக்கொண்டிருந்தார் ராகுல் காந்தி. டெல்லியில் பேசி முடித்துவிட்டுக் கிளம்பும்போது, 'சார், உங்கள் அப்பா ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேட்டரி வாங்கிக் கொடுத்த காரணத்துக்காகப் பேரறிவாளன் கடந்த 27 ஆண்டுகளாகச் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். தயவுசெய்து அவர் விடுதலை பெறுவதற்கு நீங்கள் உதவி செய்யுங்கள்!' என்று அவரிடம் ஒரு வேண்டுகோள் வைத்தேன். நான் சொன்னதைக் கேட்டவர், 'எங்களில் யாருக்கும் பேரறிவாளன் விடுதலையாகக் கூடாது என்கிற எண்ணம் கிடையாது. விரைவில் அவர் சிறையிலிருந்து விடுதலையாவதற்கு என்ன உதவி செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள், அதைச் செய்து கொடுப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்!' என்றார். அவர் இப்படிச் சொன்னது, நெகிழ்வாக இருந்தது" என்கிறார் இயக்குநர் இரஞ்சித்.

இந்தச் சந்திப்பின்போது, இயக்குநர் பா.இரஞ்சித் உடன் நடிகர் கலையரசனும் இருந்தார்.     

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close