வெளியிடப்பட்ட நேரம்: 17:37 (17/07/2018)

கடைசி தொடர்பு:17:37 (17/07/2018)

தியேட்டர்களில் வெளி உணவுகள்... மகாராஷ்டிரா நடைமுறை தமிழகத்தில் சாத்தியமா?

ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து வெளி உணவுகளைத் திரையரங்குகளுக்குள் எடுத்துச் செல்ல மகாராஷ்டிர அரசு அனுமதியளித்திருக்கிறது. தமிழகத்தில் இது சாத்தியமா?!

தியேட்டர்களில் வெளி உணவுகள்... மகாராஷ்டிரா நடைமுறை தமிழகத்தில் சாத்தியமா?

கஸ்ட் முதல் தேதியிலிருந்து வெளி உணவுகளைத் தியேட்டர்களுக்குள் எடுத்துச் செல்ல மகாராஷ்டிர அரசு அனுமதியளித்திருக்கிறது. இதனையடுத்து தமிழக அரசும் அப்படி ஒரு முடிவை எடுக்குமா? என்ற கேள்வி திரையரங்குக்குச் செல்லும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் திரையரங்குகளுக்கு வரும் பொதுமக்கள், வெளி உணவுகளை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை.

இதனால், திரையரங்குகளில் விற்கப்படும் உணவுகளை மட்டுமே வாங்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இரண்டு, மூன்று மடங்கு அதிகம் இருக்கும் விலைப் பட்டியல் திரையரங்குக்குச் திருப்பூர் சுப்பிரமணியன்சென்று படம் பார்க்கும் அனுபவத்தைத் தருவதில்லை. அது ஓர் ஆடம்பரமாகவே மாறியிருக்கிறது. தண்ணீர் எடுத்துச் செல்வதற்குக்கூட பல திரையரங்குகளில் அனுமதியில்லை. இப்படி ஒரு சூழலில்தான், மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ``மக்கள் கொண்டு வரும் உணவுப் பொருள்களை திரையரங்குகளுக்குக் கொண்டுவரக் கூடாது என எப்படித் தடை விதிக்கலாம்?" என  மகாராஷ்டிரா அரசுக்குக் கேள்வியை முன் வைத்தது நீதிமன்றம். இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கும் விதமாகத்தான், ``ஆகஸ்ட் 1-ம் தேதியிலிருந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள திரையரங்குகளுக்குள் வெளி உணவுகளை எடுத்துச்செல்லலாம்!" என அனுமதி அளித்திருக்கிறது, அம்மாநில அரசு.  

தவிர, ``இதைத் தடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். திரையங்குகளில் விற்கப்படும் உணவுப் பொருள்களுக்குக் கூடுதல் விலை நிர்ணயிக்க எந்த விதியும் இல்லை. ஒரே பொருளுக்கு இரண்டு விலை எப்படி நியாயமாகும்? மாநில அரசு மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்களுடன் பேசி உணவுப் பொருள்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்!” என அறிவித்திருக்கிறார், மகாராஷ்டிரா மாநில உணவுத்துறை அமைச்சர் ரவீந்திர சவான்.  

தமிழகத்தில் இருக்கும் திரையரங்குகளில் வெளி உணவுகளை அனுமதிப்பது குறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகி திருப்பூர் சுப்பிரமணியன் பேசும்போது, ``இது ஏற்புடையது அல்ல. வெளி உணவுகளை அனுமதிப்பதில் வருவாய் இழப்பு என்பதைத்தாண்டி, இந்த நடைமுறை சாத்தியமானால் பல நிர்வாகச் சிக்கல்கள் ஏற்படும். மேலும், எல்லாத் திரையரங்குகளும் ஒரே மாதிரியான விலையை நிர்ணயிப்பதில்லை. ஒவ்வோர் ஊருக்கும் தகுந்தமாதிரிதான் விலைப்பட்டியல் இருக்கிறது. விலைக்கு ஏற்ற தரம் இருக்கிறதா என்பதுதான் முக்கியம். தவிர, படம் பார்க்க வரும் ரசிகர்கள், அவரவர் கையிருப்புக்கு ஏற்ப திரையரங்குகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

வெளி உணவுகளை அனுமதிப்பதில் இருக்கும் முதல் சிக்கல், திரையரங்குகளுக்கு ஏற்படும் சுத்தமின்மை. எல்லாத் திரையரங்குகளும் தற்போது ஏசி வசதியோடு இயங்குகிறது. அதனால், வெளி உணவுகளின் வாசம் எல்லோருக்கும் பரவும் நிலை இருக்கிறது. தண்ணீர் பாட்டில்களை அனுமதிக்கும்போது, நூற்றுக்கு ஐந்து பேர் அதில் மதுவைக் கலந்து எடுத்து வருகிறார்கள். இப்படிப் பல ஆண்டுகளாக இருந்த விஷயங்களை மாற்றி, எல்லோருக்கும் ஒரேமாதிரியான மனநிலையோடு படம் பார்க்கும் அனுபவத்தைக் கொடுத்து வருகிறோம்." என்கிறார். அவரிடம் சில கேள்விகள்...

தியேட்டர்
 

``வெளி உணவுகளை திரையரங்குகளுக்குக் கொண்டுவரக் கூடாது என்ற கட்டாயம், தியேட்டரில் உணவுப் பொருள்களை அதிக விலைக்கு விற்பதற்கா?" 

``அப்படியில்லை. ஏற்கெனவே சொன்னதுபோல, சென்னை ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கில் பாப்கார்ன் விலையும், சத்யம் திரையரங்கில் விற்கும் பாப்கார்ன் விலையும் ஒன்றல்ல. தவிர, இரண்டும் விலைக்குத் தகுந்த தரத்தில்தான் இருக்கும். தவிர, தியேட்டர் பராமரிப்புப் பணிகளுக்காகப் பல நபர்களைப் பணியில் அமர்த்தியிருக்கிறாம். ஒரு திரையரங்கில் பதினாறு மணிநேர ஷிஃப்டில் இரண்டு நபர் வேலை பார்க்கவேண்டும் ஒவ்வொரு ஷோ முடிவிலும், தொடக்கத்திலும் மட்டும்தான் இவர்களுக்கு வேலை. அதற்காக இவர்களுக்குச் சம்பளம் குறைவாகக் கொடுக்க முடியாது இல்லையா? ஃபோரம் மால், எக்ஸ்பிரஸ் அவென்யூ போன்ற இடங்களில் ஒரு மல்டி பிளெக்ஸ் திரையரங்கை நடத்த, கேன்டீன் வருமானங்களே பெரிதும் உதவுகின்றன. தவிர, மின்சாரக் கட்டணம், திரையரங்கப் பராமரிப்புச் செலவு, சம்பளம் எனப் பல செலவினங்களை சமாளிப்பது கடுமையான விஷயமாகத்தான் இருந்து வருகிறது."  

``டிக்கெட் விலையை  அரசு நிர்ணயித்ததுபோல அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையை நிர்ணயிக்க முடியுமா?"

``திரையரங்குகளில் விற்கும் உணவுப் பொருள்களின் வருவாய் கிடைக்கிறதென்றால், திரையரங்குகளின் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்திருக்க வேண்டுமே!. ஆனால், இன்று நலிந்துவரும் தொழில்களில் சினிமா திரையரங்குகளும் ஒன்று. இந்த உணவுப் பொருள்களின் வருவாயையும் வைத்துக்கொண்டுதான் திரையரங்குகள் இயங்குகிறது. உணவுப் பொருள்களின் விலையையும் அரசே நிர்ணயித்தால், ரசிகர்களுக்குத் திரையரங்குகள் அளித்துவரும் தரத்தில் பாதிப்பு இருக்கும்." 

தியேட்டர்

``வெளி உணவை அனுமதிப்பதால் அதிக மக்களைத் திரையரங்குக்கு வரவைக்கலாம்... இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?" 

``இதை யாருக்கு நல்ல திட்டம் என்று சொல்லமுடியும்? உணவுப் பொருள் என்ற பெயரில் மது அருந்திவிட்டு அரங்கில் பிரச்னை செய்தால், படம் பார்க்கும் அனைவருக்கும் பாதிப்புதானே?! கடந்த பத்து ஆண்டுகளாகப் பல திரையரங்குகளின் தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அவை அனைத்தும் ஃபேமிலி ஆடியன்ஸுக்கு வசதி செய்துகொடுக்கும் நோக்கில்தான் செய்யப்படுகிறது. அப்படி இருக்கும் நிலையில், இது எப்படி ரசிகர்கள் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் செயல்படும் விஷயமாகும்? மக்களைத் திருப்திபடுத்தும் நல்ல படங்கள் தொடர்ந்து வந்தால், திரையரங்குகள் தானாக நிறையும். தவிர, மக்கள் வருகையை அதிகப்படுத்தும் நோக்கில்தான் இங்கு ஃபிளக்சிபிள் டிக்கெட் ரேட்டிங் (Flexible Ticket Rating) முறையைக் கொண்டுவர அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். அதாவது, மேட்னி மற்றும் நைட் ஷோ இரண்டுக்கும் குறைந்தபட்ச டிக்கெட் விலையும், மற்ற காட்சிகளுக்கு அரசு விதித்த அதிகபட்ச டிக்கெட் விலையைத் தாண்டாமல் இருக்கும்படி திட்டமிட்டு, இந்தக் கோரிக்கையை வைத்துள்ளோம். அரசு எங்களைப் பணித்துள்ள விஷயங்களில் ஏதேனும் குறையிருந்தால், அதை சுட்டிக்காட்டுங்கள்... திருத்திக்கொள்கிறோம்."