வெளியிடப்பட்ட நேரம்: 09:48 (26/07/2018)

கடைசி தொடர்பு:10:48 (26/07/2018)

``எழுத்தாளர் சங்கம் எதுக்குக் கலை நிகழ்ச்சி நடத்தணும்னு கேட்டதுக்குதான் புகார்..!’’ - பிறைசூடன்

`நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. அவர்கள் சொன்ன 37 லட்சம் ரூபாய் வங்கியில் இருக்கிறது. அவர்கள் சொல்வது பொய்’ எனக் கவிஞர் பிறைசூடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தெரிவித்திருந்தார். 

``எழுத்தாளர் சங்கம் எதுக்குக் கலை நிகழ்ச்சி நடத்தணும்னு கேட்டதுக்குதான் புகார்..!’’ - பிறைசூடன்

டிகர் சங்கம், தயாரிப்பு சங்கம், டப்பிங் யூனியன், ஃபெப்சி தொழிலாளர்கள் சங்கம் எனத் தமிழ் சினிமாவில் இருக்கும் ஒவ்வொரு சங்கத்திலும் அடுத்தடுத்து சலசலப்பு ஏற்பட்டு வந்தது. அதன் தொடர்ச்சியாகத் தற்போது தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திலும் ஒரு பிரச்னை எழுந்துள்ளது. தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் அறக்கட்டளையில் இருக்கக்கூடிய பணம் கையாடல் செய்யப்பட்டதாகக் கவிஞர் பிறைசூடன் மீது இயக்குநரும் எழுத்தாளர்கள் சங்கத் தலைவருமான கே.பாக்யராஜ் புகார் கொடுத்தார். `நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. அவர்கள் சொன்ன 37 லட்சம் ரூபாய் வங்கியில் இருக்கிறது. அவர்கள் சொல்வது பொய்’ எனக் கவிஞர் பிறைசூடன் சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில் தெரிவித்திருந்தார். 

இந்தப் பிரச்னை தொடர்பாகக் கவிஞர் பிறைசூடன், ``நலிந்த எழுத்தாளர்களுக்கு பென்ஷன் கொடுக்கிறதுக்காகச் சங்கத்தில் இருக்கிறவங்ககிட்டேயும் வெளியில இருக்கிற சில நபர்கள்கிட்டேயும் கொஞ்சம், கொஞ்சமா பணம் வாங்கி, 37 லட்சத்தை வங்கியில டெபாசிட் பண்ணி வெச்சிருக்கோம். அதுலயிருந்து வர வட்டியை வைத்துதான் பல எழுத்தாளர்களுக்கு பென்ஷன் கொடுத்துகிட்டு இருக்கோம். அந்தப் பணத்தை வாங்கி அதில் ஒரு கலை நிகழ்ச்சி நடத்தலாம்னு இப்போ இருக்கிற நிர்வாகிகள் சொல்றாங்க. முதலில், `எழுத்தாளர் சங்கம் எதுக்குக் கலை நிகழ்ச்சி நடத்தணும்... அப்படி அந்தப் பணத்தில் கலை நிகழ்ச்சி நடத்தி நஷ்டம் ஆச்சுன்னா நலிந்த எழுத்தாளர்களின் நிலை என்ன ஆகும்’னு அவங்க யோசிச்சாங்களா. நஷ்டம் ஆகாதுனு அவங்க நம்புனாங்கன்னா, அவங்க காசை வெச்சு கலை நிகழ்ச்சி நடத்தி, வர லாபத்தில் அவங்க காசை எடுத்துகிட்டு, மீதம் இருக்கிற காசை சங்கத்துக்குக் கொடுக்கட்டுமே. அப்படியெல்லாம் அவங்க யோசிக்கவேயில்லை. 

பிறைசூடன்

இப்போ இருக்கிற எழுத்தாளர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கத்தின் இரண்டாவது பாகமாகத்தான் இருக்கு. எழுத்தாளர்களால் அதிக பணம் கட்டி நிரந்தர உறுப்பினர்கள் ஆக முடியாதுனு நானும் விசுவும் பொறுப்பில் இருக்கும்போது, 30,000 ரூபாய் கட்டி நிரந்தர உறுப்பினர் ஆகலாம்னு ஒரு சலுகையைக் கொண்டு வந்தோம். விக்ரமன் தலைவரா வந்ததுக்கு அப்புறம் இந்தச் சலுகையைப் பயன்படுத்தி நிறைய இயக்குநர்களை சங்கத்தில் சேர்த்து விட்டுட்டாங்க. அதுதான் இப்போ பாக்யராஜ் தலைவரானதுக்கும் காரணம்.  

பாக்யராஜ் தேர்தல்ல நின்னு, ஜெயிச்சு தலைவரானவர் இல்லை. பொதுக்குழு கூட்டி அதன் மூலம் தலைவரானவர். 1,000 நபர்கள் இருக்கும் சங்கத்தில் 500 நபர்கள் மட்டும்தாம் நிரந்தர உறுப்பினர்கள். அதில் 200 நபர்கள்தாம் அந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். அதில் 170 நபர்கள் இயக்குநர்கள். அவங்க பாக்யராஜைத்தானே தேர்ந்தெடுப்பார்கள். இப்போ சங்கத்தில் இருக்கிறவங்க எல்லாரும் தினமும் ஆபீஸ் வந்து பயணப்படி வாங்கிகிட்டு, ஆபீஸ் காசுல பிரியாணி சாப்பிட்டுட்டு போறாங்க. `இனிமேல் ஆபீஸுக்கு வரவங்களுக்குப் பயணப்படியும் சாப்பாடும் கிடையாது’னு ஓர் அறிவிப்பு விட்டுப் பாருங்க, சங்கத்துக்கு சேவை பண்ணணும்னு நினைக்கிறவங்களைத் தவிர வேற யாரும் வர மாட்டாங்க. அதே மாதிரி, `இன்று சங்கத்துக்கு வந்த பணம் இவ்வளவு, அதில் இவ்வளவு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது, இவ்வளவு கை இருப்பில் இருக்கிறது’னு தினமும் ஆபீஸ்ல எழுதிப்போடச் சொல்லுங்க பார்ப்போம். கதை திருட்டு வழக்குல ஒரு எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளர் மேல புகார் கொடுக்கிறாருன்னா, நிர்வாகிகள் அவங்க ரெண்டு நபர்கள்கிட்டேயும் சரி சமமாகத்தான் நடந்துக்கணும். இவங்க ஒரு தரப்பினர் கூட செல்ஃபி எடுத்துக்கிறது; அவங்க கார்லேயே சங்கத்துக்கு வந்து இறங்குறதுனு இருந்தா, அதில் தீர்வு எப்படி நியாயமா இருக்கும்’’ என ஆவேசமாகப் பேசினார்.

இந்தப் பிரச்னை குறித்து அமெரிக்காவில் ட்ரீட்மென்டில் இருக்கும் விசு சில ஆடியோ பதிவுகளை வெளியிட்டிருக்கிறார். அதில், `சங்க பணத்தைத் திருடினாலோ அல்லது கையாடல் செய்தாலோ மோசடி புகார் கொடுக்கலாம். அந்த 37 லட்சம் பணம் சங்கத்தின் பெயரில் வங்கியில் இருப்பது தெரிந்தே ஏன் பாக்யராஜ் புகார் கொடுத்தார். அதுவும் நான் அமெரிக்கா செல்வது அவருக்குத் தெரியும். நான் அமெரிக்காவுக்கு வந்த அடுத்த நாளே அவர் இப்படிச் செய்ய என்ன காரணம்’ எனப் பல கேள்விகளை முன்வைத்தார்.

இது தொடர்பாக பாக்யராஜிடம் பேசினோம். ``நான் எழுத்தாளர் சங்கத்தின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், சங்கத்தில் இருப்பவர்களின் குழந்தைகளின் படிப்பு செலவுக்குப் பணம் கொடுப்பதற்குக்கூட சங்கத்தில் நிதியில்லை. 37 லட்சம் ரூபாய் சங்கத்தின் அறக்கட்டளையில் இருப்பதால் எங்களுக்கு முன் நிர்வாகிகளாக இருந்தவர்களிடம் அதைப் பற்றி கேட்கலாம்னு பிறைசூடனைக் கூப்பிட்டேன். ஏன்னா, பிறைசூடனைத் தவிர மற்ற நிர்வாகிகள் யாரும் தற்போது சங்கத்தில் இல்லை. இதைப் பற்றி பிறைசூடனிடம் கேட்டபோது, `சங்கம் வேறு, அறக்கட்டளை வேறு. அறக்கட்டளையில் இருக்கும் காசை நாங்க நலிந்த எழுத்தாளர்களுக்கு பென்ஷன் கொடுக்கத்தான் வெச்சிருக்கோம். சங்கச் செலவுக்கு இதைப் பயன்படுத்தக் கூடாது’னு சொன்னார். ‘அது எப்படிங்க, கதை பதிவு செய்த காசும் புதிய உறுப்பினர்கள் சேரும்போது கொடுத்த காசும் அந்த 37 லட்சத்தோடு சேர்ந்துதானே இருக்கு’னு நான் சொன்னதும், `அந்தக் காசு எவ்வளவுனு சொல்லுங்க அதை மட்டும் திருப்பிக் கொடுத்துடுறோம். வேற எந்தக் காசும் தர முடியாது. புதிய நிர்வாகிகள் யாரும் அறக்கட்டளை நிர்வாகத்தில் தலையிட முடியாது. ஏன்னா, நாங்க விதியை அப்படித்தான் வெச்சிருக்கோம்’னு சொல்லிட்டார். 

பாக்யராஜ்

பிறைசூடன் இப்படிச் சொன்னதும், மற்ற உறுப்பினர்கள் எல்லாரும் பொதுக்குழுவைக் கூட்டச் சொல்லிட்டாங்க. நான்தான் இன்னொரு முறை அவர்கிட்ட பேசிப்பார்க்கலாம்னு பேசினேன். `உங்க கூட இருந்த மற்ற நிர்வாகிகள் யாரும் இப்போ சங்கத்தில் இல்லை. நீங்க ஒருவர் மட்டும் ஏன் தனியா இருக்கீங்க. நீங்களும் எங்க கூட வந்தா, சேர்ந்து வேலை பார்க்கலாம்னு சொன்னதும், `நான் எதுக்கு மறுபடியும் பொறுப்புக்கு வரணும். நான் சொல்ற சில ஆள்களுக்கு மட்டும் நீங்க பொறுப்பு கொடுத்தா போதும். அவங்க யாருனு நான் சொல்றேன்’னு சொல்லிட்டுப் போனார். `அப்பாடா, பிரச்னை சரி ஆகிடுச்சு. பொதுக்குழு கூட்ட வேண்டியது இல்லை’னு நான் நினைச்சுகிட்டு இருந்த சமயம், `இல்லை, இது சரி வராது’னு சொன்னார். `ஏன்’னு கேட்டதுக்கு மத்த யாருக்கும் பிடிக்கலை’னு சொன்னார். `நீங்க மட்டும்தாங்க இருக்கீங்க. வேற யார் இருக்கா’னு நான் கேட்டதும், `விசுதான் இது சரியா வராது’னு சொன்னதா சொன்னார். `விசுதான் எனக்கு உடம்பு சரியில்லை இனிமேல் என்னால சங்க வேலைகளில் கலந்துக்க முடியாதுனு சங்கத்துக்கு லெட்டர் கொடுத்துட்டாரே. அதுனாலதான் நான் உங்களை அழைச்சுப் பேசுனேன். அப்பறம் எப்படி அவர் இதைச் சொல்லுவார்’னு கேட்டதுக்கு, `இல்லை, விசு என்கிட்ட இப்படித்தான் சொன்னார்’னு சொல்லிட்டு பிறைசூடன் போயிட்டார்.

விசுகிட்ட பேசினாத்தான் இது சரியா வரும்னு விசுவுக்கு நான் ஒரு கடிதம் எழுதுனேன். அதில், `நீங்க சங்கச் செயல்பாடுகளில் கலந்துக்கிறதா இருந்தா, நானே உங்கக்கிட்ட பேசியிருப்பேனே. நீங்கதான என்னால முடியாதுனு லெட்டர் கொடுத்தீங்க. இப்போ பிறைசூடன்கிட்ட அப்படிச் சொன்னா என்ன அர்த்தம். இப்போகூட ஒண்ணும் பிரச்னை இல்லை. நீங்க சொன்னா நான் வந்து உங்ககிட்ட பேச ரெடி. உங்களுக்கு ஓகேனா எனக்கு போன் பண்ணுங்க’னு சொல்லியும் அவர் என்னைக் கூப்பிட்டுப் பேசத் தயாரா இல்லை. இதையெல்லாம் பார்த்த சங்க உறுப்பினர்கள், `நீங்க இன்னும் எவ்வளவுதான் இறங்கிப் போவீங்க. ரெண்டு தடவை பிறைசூடன்கிட்ட பேசியாச்சு, விசுவுக்குக் கடிதமும் எழுதியாச்சு. அடுத்து புகார் கொடுக்கிறதுதான் வழி’னு அவங்க சொன்னதால வேற வழியில்லாம புகார் கொடுத்தோம். அந்தப் புகாரில்கூட அவங்க மோசடி பண்ணுனாங்கனு சொல்லலை. `பணத்தை தரமாட்டேங்கிறாங்க, சேர்ந்தும் வேலை பார்க்க அவங்க தயாராகவும் இல்லை. அந்தப் பணம் இல்லாமல் சங்கத்தை நடத்த முடியாது’னு சொல்லித்தான் புகார் கொடுத்தோம். அந்தப் புகார் கொடுக்க வேண்டிய நிலைமையை இவங்கதான் உருவாக்கிட்டாங்க. 

எழுத்தாளர் சங்கத்திலிருந்து கலை நிகழ்ச்சி நடத்தணும்னு அந்த 37 லட்சத்தை நாங்க கேட்கவே இல்லை. புதிய கட்டடம் கட்டுறதுக்கு நானும் என்னோட உதவி இயக்குநர்களாக இருந்த பாண்டியராஜன், பார்த்திபன் எல்லாரும் சேர்ந்து ஒரு நிகழ்ச்சி பண்ணி காசு தர்றோம்னுதான் சொன்னேன். அதைத் தப்பா புரிஞ்சுக்கிட்டு, சங்கக் காசை எடுத்து கலை நிகழ்ச்சி பண்ணப் போறோம்னு பேசிகிட்டு இருக்காங்க’’ என்றார் பாக்யராஜ்.